கே.பி பூங்கா குடியிருப்புகளில் மக்கள் குடியேற அனுமதி – மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றி ! – நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கே.பி. பூங்கா குடியிருப்புகளில் குடிநீர், லிஃப்ட் இணைப்பு வசதியுடன் தற்போது வழங்கப்பட்டு, அனைவரையும் குடியேற அனுமதித்துள்ள வாரியத்தின் அறிவிப்பை ‘நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு’ வரவேற்க்கிறது.
சென்னையில் உள்ள கே.பி பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது இந்நிலையில் 1.50 பங்களிப்பு தொகை வழங்கினால் தான் வீடுகள் ஒப்படைக்கப்படும் என குடிசை மாற்று வாரியம் அறிவித்தது. மேலும் கட்டிடத்தின் கட்டுமான தரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் போராட்டங்கள் தொடங்கியது. இதில் ‘கே.பி பூங்கா குடியிருப்பு மக்கள் கமிட்டி’ மற்றும் ‘நகர்ப்புற குடியிருப்பு நில வுரிமைக் கூட்டமைப்பில்’ உள்ள அமைப்புகளும் இணைந்து பல கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தினோம். இதன் விளைவாக இது பற்றிய செய்திகளும் வெளிவரத் துவங்கின.
இதற்கிடையில் செப் 5 அன்று மாநில அளவிலான பிரச்சாரம் மற்றும் போராட்டமும் நடத்தப்பட்டது.
ஆனால் அரசும் வாரியமும் அதைக் கண்டுகொள்ளாத நிலையில் கடந்த 17.09.21 அன்று கே.பி பூங்காவில் காவல் துறையின் கெடுபிடிகளை தாண்டி மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
28.09.21 அன்று ‘சென்னை மாநகரப் பூர்வகுடி – ஏழை, எளிய மக்களின் வாழ்விட உரிமை தொடர்பான கோரிக்கை பட்டியல்’ ஒன்றை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக செய்தி மூலம் வெளியிட்டோம்.
கே.பி பூங்கா, வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் மற்றும் பெரம்பூர் ரமணா நகர், கெளதமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி 21.10.21 அன்று ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தினோம். இதில் பல்வேறு மக்கள் இயக்கங்கள் பங்கேற்று கண்டனத்தை பதிவுசெய்தனர்.
மேலும் ‘நகர்பற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை இயக்குனர் கோவிந்தா ராவ் அவர்களை 02.11.2021 அன்று சந்தித்து இது குறித்து முறையிட்டோம்.
இந்நிலையில் கே.பி பூங்கா ABCD குடியிருப்புகளில் குடியேறுவது குறித்து வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவரும் குடியேற அனுமதி அளித்துள்ளது. இது தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் வெற்றியாகும்.
அதே நேரம் நகர்புற குடியிருப்பு நிலவுரிமை தொடர்பாக நாங்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
போராட்டத்தில் துணை நின்ற அனைத்து மக்கள் மற்றும் அமைப்புகளுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி!
தமிழக அரசே! நகர்பற வாழ்விட மேம்பாட்டு வாரியமே!
* ரூ.1.50 லட்சம் கோரும் அரசாணையை உடனடியாக ரத்து செய்திடு!
* ஐ.ஐ.டி அறிக்கைப்படி அனைத்து பணிகளையும் உடனே செய்து முடி!
* கட்டிடத்தின் பராமரிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்!
* வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் மற்றும் பெரம்பூர் ரமணா நகர் குடியிருப்புகளை மக்களுக்கு உடனடியாக வழங்கிடு!
நகர்ப்புற குடியிருப்பு – நிலவுரிமைக் கூட்டமைப்பு.
8015472337, 8939136163, 9500056554 , 9384448044