காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.

01 Dec 2021

கடந்த  நவம்பர் 21 அன்று  காசுமீரைச் சேர்ந்த முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு குர்ரம் பர்வேசு அவர்களை ஊபா(UAPA) சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு முகமை(NIA) கைது செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக வழக்கு சோடிக்கப்பட்டு, இந்திய தண்டனை சட்டம் 120B, 121, 121A ஆகிய பிரிவுகளிலும் ஊபாவின் பிரிவுகள் 17,18,18B, 38, 40 வழக்குப் போடப்பட்டுள்ளது. உலகறிந்த பிரபல மனித உரிமை செயல்பாட்டாளர் மீது  அரசு தொடுத்துள்ள சட்டவகையிலான வன்முறை இதுவாகும்.

திரு குர்ரம் பர்வேசு ஜம்மு காசுமீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் (JKCCS)முக்கிய ஒருங்கிணைப்பாளர், வலிந்து காணாமலாக்கப்படுவதற்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் நிறுவனர்.

ஜம்மு காசுமீரில் ’பயங்கரவாத தடுப்பு’ என்ற பெயரில்   இந்திய அரசு நிகழ்த்துகின்ற  மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படுதல் உள்ளிட்ட பன்ன்னாட்டுச் சட்டமீறல்களை ஆவணமாகவும் அறிக்கையாகவும் வெளியிடுவதில் காசுமீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் மூலமாக முனைப்பாக செயல்படுபவர் குர்ரம் பர்வேசு. சுமார் இருபது ஆண்டுகளாக ஓய்வறியா அறிவுஜீவியாக, காசுமீர் பள்ளத்தாக்கில் நிகழ்கிற கொடுமைகளை உலகறியச் செய்துவருகிறார். அரசின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி வருகிறார். இவர் அங்கம் வகிக்கின்ற இந்த அமைப்பின் செயல்பாட்டை, அறிக்கைகளை கவனத்தில் கொண்டு,மனித உரிமை செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிற உயரிய ராப்டோ விருது(Rafto) 2017 ஆம் ஆண்டில்  JKCCS க்கு வழங்கப்பட்டது.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்ற குர்ரம் பர்வேசை,மாநாட்டுக்கு செல்லவிடாமல்  தில்லி விமான நிலையத்தில் வைத்து சட்ட விரோதமாக கைதுசெய்து சுமார் 76 நாட்கள் சிறையில் அடைத்தது இந்திய அரசு. பின்னர் இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி குர்ரம் பர்வேசை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

அரசியல் அமைப்பு சட்டத்தை சற்றும்  மதித்திடாத மோடி அரசு தற்போது மீண்டும் குர்ரம் பர்வேசை கைது செய்துள்ளது. இக்கைது நடவடிக்கை காசுமீர் பள்ளத்தாக்கில் பாசக அரசு மேற்கொண்டு வருகிற மனித உரிமை மீறல்கள் வெளியே தெரியாமல் தடுப்பதை நோக்கமாக  கொண்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசின்   வன்முறை நடவடிக்கைக்கு உள்நாட்டு சனநாயக ஆற்றல்கள், அரசியல் கட்சிகள்  மற்றும் பன்னாட்டு அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், ஐநா மன்றம், பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம்(Amnesty International)  உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள்  கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளன.

”குர்ரம் பர்வேசு, ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரே அன்றி  பயங்கரவாதியல்ல” என ஐநாசபையின் மனித உரிமை பாதுகாப்பிற்கான  சிறப்பு அறிக்கையாளர் மேரி லாவ்லர் இந்திய ஒன்றிய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிப்புகளை ஒடுக்குவதற்கு சட்டத்தை தவறாக மோடி அரசு பயன்படுத்துவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ்  குர்ரம் பர்வேசு கைதை விமர்சனம் செய்கிறது.

பர்வேசு வீட்டில் சுமார் நான்கு மணிநேரம் சோதனை செய்த அதிகாரிகள் முதலில் சாதாரண விசாரணை எனக் கூறி பர்வேசை அழைத்து சென்றதாகவும் பின்னர்,அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் எங்களுக்கு தகவல் கொடுத்தார்கள் என பர்வேசின் சகோதரர் திரு சேக் சாரியார் கூறியுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் சிவில் சமூக அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து பேசிய  இந்திய பாதுகாப்புதுறையின் தலைமை ஆலோசகர் அஜித் தோவலின் கருத்தையும் குர்ரம் பர்வேசின் கைதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

முன்னதாக பீமா-கோரேகான் வழக்கை சோடித்து சமூக செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்டே உள்ளிடோர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ள  மோடி அரசு அதன் தொடர்ச்சியாக மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித்தையும் பத்திரிகையாளர் சித்திக் கப்பானையும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளது. இப்போது காசுமீர் மனிதவுரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேசு கைது செய்யப்பட்டுள்ளது இந்திய அரசின் பாசிசப் போக்குக்கு எதிரான செயல்பாட்டாளர்களின் குரல்களை ஒடுக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 2019 ஆகஸ்ட் 5 அன்று சிறப்பு பிரிவு 370 ஐ செயலிழக்கச் செய்து, சம்மு காசுமீரை உடைத்து அதை ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றியது இந்திய அரசு. அதை தொடர்ந்து ஓராண்டு காலத்திற்கு காசுமீரில் சுமார் 4000 பேர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்(PSA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.  இப்போது வரை சட்டப்பேரவைக் கூட இல்லாமல் ஆளுநர் ஆட்சி நடந்துவருகிறது. காசுமீரில் இருந்து தன் விருப்பத்திற்கு தலையாட்டக் கூடிய பொம்மை தலைவர் ஒருவரை பாசக அரசால் உருவாக்க முடியவில்லை. இப்போது குர்ரம் பர்வேசு போன்றோர் மீது இந்திய அரசு குறிவைத்திருப்பது காசுமீர் மக்கள் மீதான பெரும் படுகொலைகளுக்கான தயாரிப்போ என்ற அச்சம் ஏற்படுகிறது.

குர்ரம் பர்வேசு தமிழ்நாட்டுக்கு 2010 இலும் 2017 இலும் காசுமீர் நிலைமை பற்றி உரையாற்றுவதற்கு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் என்ற வகையில் தமிழ்நாட்டு சனநாயக ஆற்றல்களிடையே ஒரளவுக்கு அறிமுகம் உள்ளவர். இந்த இக்கட்டான வேளையில் காசுமீர் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து எங்கள் தோழமையை வெளிப்படுத்துகிறோம்.

மோடி – அமித் ஷா தலைமையிலான இந்திய ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறையால காசுமீர் மக்களை ஒருநாளும் வெற்றிக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆகவே இந்த கூட்டறிக்கையின் வாயிலாக, திரு. குர்ரம் பர்வேசு மீது புனையப்பட்டுள்ள ஊபா உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அவ்வழக்குகளைத்  திரும்பப்பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

 

வைகோ, எம்.பி., பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

முனைவர் தொல்.திருமாவளவன், எம்.பி., தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

தி.வேல்முருகன், எம்.எல்.ஏ., தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

நெல்லை முபாரக், மாநிலத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.

கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

கு. இராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்

தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய  பேரியக்கம்.

பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பேராசிரியர் அ.மார்க்ஸ், தேசிய தலைவர், NCHRO

முகமது சேக் அன்சாரி, தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

பொழிலன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி

அரங்க. குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

வெற்றிவேல்செழியன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

கே.எம். செரீப், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

வழக்கறிஞர் மனோகரன், மத்தியக் கமிட்டி, இகக (மா-லெ) செந்தாரகை

தி. துரை சித்தார்த்தன், பொதுச்செயலாளர், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி

கண. குறிஞ்சி, தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

அ.சபீர் அகமது, மாநில ஒருங்கிணைப்பாளர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

செந்தில்,  ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

1-12-2021

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW