ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்

16 Nov 2021

சமூகத்தின் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மக்களான கடைக்கோடி பழங்குடிகள் மீதான அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத ஒடுக்குமுறையை உரக்கப்பேசிய திரைப்படம் ஜெய்பீம். அதிகாரமற்றவர்களின் வரலாற்று உண்மைக்கு உயிர்கொடுத்த இயக்குனர் ஞானவேல், தயாரித்த ஜோதிகா, சூர்யா விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1993ல் கடலூர் மாவட்டம், முதனை கிராமத்தின் பழங்குடி குறவர், இருளர் மக்கள்  பொய் வழக்கில் பட்ட சித்தரவதைகள். ராஜாக்கண்ணுவை அடித்துக்கொன்ற கொலையை மறைத்த காவல்துறையின் மோசடியை அம்பலப்படுத்தும் உண்மை வரலாறே ஜெய்பீம் திரைக்கதையின் கருவாக அமைந்திருக்கிறது.

செய்த கொலைக்கு பேரம் பேசும் ஊழல்வாதிகளின் முன்பு, “நாங்க தோற்றாலும் பரவாயில்லை ஆனால் கொலைகாரன் பணத்தில் சாப்பிடுவது தற்கொலைக்கு சமம் என மிரட்டலை துச்சமென மிதித்துவிட்டு நிமிர்ந்து நடக்கிறார் செங்கேணி. காக்கிச்சட்டைகளின் லத்தியும் பூட்சும் மிளகாய் தூளும், மின்சாரக்கம்பியும் பதம் பார்த்ததில் வழிந்தோடும் ரத்தக்காயங்களோடு, இறுதிவரை திருட்டை ஒத்துக்கொள்ள மறுத்து, “நாங்கள் நேர்மையாக உழைத்து வாழும் கூட்டமடா“ என சுயமரியாதையோடு உறுதியுடன் நின்ற காரணத்திற்காக லாக்கப்பில் கொல்லப்படுகிறார் ராஜாக்கண்ணு.

தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் வெளிவராத இன்னும் பல தலித்,பழங்குடி கிராமங்கள், ராஜாக்கண்ணு, பார்வதிகள் இருக்கிறார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை, நக்சலைட் தேடுதல்வேட்டை பெயரில் அரசின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடைபிணமாய் நடந்தே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். வாச்சாத்தி போன்று திருட்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்களை பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் நடந்த சாத்தான்குளம் லாக்கப் படுகொலையை நினைவூட்டுகிறது. சட்டத்தின் முன் காவல் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதோ அரிதினும் அரிது. மனித உரிமை மீறலும் படுகொலைகளும் அதிகம் நடப்பதே சித்ரவதைக்கூடமான காவல்நிலையத்தில் தான் என்பதை தளி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கல்பனா சுமதி, சிதம்பரம் பத்மினி, சென்னை சாந்தி, மணிப்பூர் மனோரமா, சட்டீஸ்கர் சோனிசோரி சல்வாசூடும் பழங்குடிகள் என ஏராளமானவர்கள் சந்தித்த வன்கொடுமைகளே இதற்குச் சாட்சி.

2011ல் திருக்கோவிலூர் பழங்குடி இருளர் பெண்கள் லட்சுமி, ராதிகா, வைகேஸ்வரியை நாம் மறந்திருக்க முடியாது.17 வயது லட்சுமி கர்ப்பிணி என்று பாராமல் 3 காவல் துறையினர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர போராடினார் பழங்குடி மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள தோழர் பேரா. பிரபா கல்விமணி. மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து துணிந்தால் மட்டுமே அந்த உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. இயக்கம்தான் மக்களுக்கு பாதுகாப்பு அரண்.  அம்மக்களுக்கு அரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தோழர் கோவிந்தன் இருந்துள்ளார். தன்னை அர்ப்பணித்து நீதிக்காக நின்றிருக்கிறார். தோழர் சந்துருவின் சட்டப்பணி போற்றப்பட வேண்டியது. பழங்குடிகளின் பிரச்சனைகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து அதில் இறுதிவரை உறுதியோடு ஒரு போராட்டத்தை நடத்தி அவற்றில் பல வெற்றி தோல்விகளை சந்தித்துவரும் அனுபவம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்டு என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை. இதுபோல் முகம் தெரியாத பலர் பல இயக்கத் தோழர்கள் உழைக்கும் வர்க்க மக்களுக்கு  சமூக மாற்றத்திற்கு ஏதோ ஒரு வடிவத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அர்ப்பணிப்பை காட்சியாக்கி காக்கிச்சட்டையின் திமிர்தனத்தை தோலுரித்த திரைப்படம் ஜெய்பீம்.

ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி பாத்திரத்திற்கு காரணமான பழங்குடிப்பெண் பார்வதி அம்மா இன்று பேசுபொருளாகியுள்ளார்.பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் சமூகத்தின் மாற்றத்திற்கும் மக்களை தட்டி எழுப்பும் கருவியாகவுமான கலைப்படைப்புகள் உருவாக வேண்டும். இன்று வளர்ந்துவரும சாதிவெறி – மதவெறி காவி பாசிஸ்டுகளை முறியடிக்க பல முற்போக்கு படைப்புகள் வெளிவர வேண்டும்.

சாதிவெறி மதவெறி கும்பலுக்கு சவாலாக ஒரு சண்டையை நடத்திக்கொண்டிருக்கும் கலை நாயகர்கள் சூர்யா ஜோதிகா வை வாழ்த்துவோம். துணை நிற்போம்.

 

  • ரமணி

 

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW