இந்தியா இஸ்லாமிய எதிர்ப்பு இனப்படுகொலையை நோக்கி செல்கிறதா?
இந்தியத் தலைவர்கள் தங்களது வெளிநாட்டுப் சுற்றுப் பயணங்களின் போது மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதை மிகவும் விரும்புகிறார்கள். இது, உலக அரங்கில் இந்தியா அமைதி மற்றும் அன்பின் உறைவிடம் என்ற பொதுக் கருத்துக்கு ஏற்பவும், உலக அரங்கில் பொறுப்புள்ள ஜனநாயகமாகவும் திகழும் அதன் பிம்பத்தை உயர்த்திக் காட்டவும் உதவுகிறது. ஆதலால், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய பிரதமர் நரேந்திர மோடியிடம் காந்தியும் அவரது கொள்கைகளும் அதிகமாக வெளிப்பட்டன.
கடந்த செப் 24 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”அகிம்சை, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையே இப்போதையே தேவையாக உள்ளன.சொல்லப்போனால் முன்னைக்காட்டிலும் இப்போதுதான் அவசியப்படுகிறது ” என்றார்.
”பிற்போக்கு சிந்தனையும் தீவிரவாத அச்சுறுத்தலையும் இவ்வுலகம் எதிர்கொண்டுவருவதாக தனது ஐநா சபை உரையின்போது கவலை தெரிவித்த மோடி தனது நாட்டின் ஜனநாயக மாண்புகளை அடிக்கோடிட்டுக் காண்பித்தார். தனது கருத்தை மேலும் உறுதிப்படுத்த இந்தியாவுக்கு, ”அனைத்து ஜ்னநாயகங்களுக்கும் தாய்” என்று புதிய அடைமொழி ஒன்றையும் வழங்கினார்.
யாருக்கும் அதன் பொருள் என்னவென்று புரியவில்லை. அதில் தனது 12 வயது மகனின் மரணத்தை புரிந்துகொள்ள முயலும் ஒரு இந்தியத் தாயும் அடக்கம். மோடி அமெரிக்காவில் இந்தியாவின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒரு சிறுவன் காவல்துறையினரால் தவறுதலாகச் சுடப்பட்டு இறக்கிறான்.
பிரம்மப்புத்திரா நதிக்கரையில் அமைந்திருந்த அந்த தொலைதூர கிராமத்திற்கு ’ஹசினா பானோவை பேட்டியெடுக்கச் சென்ற செய்தியாளர்களிடம், ”அவர்கள் என் மகனைக் கொன்றுவிட்டார்கள்”, என்பதை மட்டும் திரும்பத் திரும்ப அழுகையினூடே கூறிக்கொண்டிருந்தார். வங்காள இஸ்லாமிய மக்களை அவர்களது கிராமத்திலிருந்து காலிசெய்து ,அவ்விடத்தை அசாமிய இந்துக்களுக்கு வழங்க முற்பட்டது. அசாமிய இந்துக்களே இம்மண்ணின் பூர்வகுடிகள் என அசாமிய அரசு கூறுகிறது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஷேக் ஃபரித் என்ற அந்த 12 வயது சிறுவன் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைகிறான். இதில் முரணான செய்தி என்னவென்றால் ஃப்ரிக் இறப்பதற்கு சற்று முன்னர் தான் அம்மண்ணில் அவனது பூர்வீகத்தை நிறுவும் தேசிய அடையாள அட்டையை அஞ்சல் அலுவலகத்திலிருந்து பெற்று வந்திருந்தான்.
ஒரு சிறுவனது இத்தகைய மரணம் தேசிய அவமானமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசின் தொடர் வெளியேற்ற நடவடிக்கைகள் இதைவிட கொடூர சம்பவங்களுக்கு இட்டுச் சென்றது. ஃபரீதின் அண்டை வீட்டிலுள்ள மொய்னுல் ஹோக், கிராமத்தின் 5000 பேர்களது வீடுகளோடு தன் வீடும் தகர்க்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள இயலாதவராக மிகுந்த கோபத்துடன், கட்டையை எடுத்துக் கொண்டு போலீசாரை நோக்கி ஓடுகிறார்.போலீசோ பெரும் பட்டாளத்துடன் கையில் துப்பாக்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர்.போலீஸ் நினைத்திருந்தால் மொய்னுல் ஹோக்கை சாதரணமாக கட்டுப்படுத்தியிருக்கலாம்.ஆனால் என்ன செய்தார்கள்?மொய்னுல் அருகே வரவிட்டுசுட்டுக் கொன்றார்கள்.
இந்தக் கொடூர நிகழ்வு அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகின.போலீசுடன் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த இந்துத்துவ ஒளிப்படக் கலைஞர் பிஜாய் பனியா போலீசோடு சேர்ந்துகொண்டு, குண்டடி பட்டு அசைவற்று கீழே கிடந்த மொய்னுல் மீது மாறி மாறி லத்தியால் அடித்து எம்பி குதிக்கிறார்.இவை யாவுமே வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்திய அரசால் ஊட்டி வளர்க்கப்பட்டுவருகிற இந்துத்துவ வெறியின் தற்போதைய முகம் தான் பனியா. மோடியின் பாரதிய ஜனதா கட்சியானது , பொய் செய்திகள், வெறுப்புப் பேச்சுக்கள், பண்டைய மதச்சண்டைகளைக் கிளருதல், இஸ்லாமியர்களை அன்னியர்களாக பாவித்தும், வளைந்து கொடுக்கும் ஊடகங்களை பயன்படுத்துதல், முற்போக்குக் குரல்களை முடக்குதல், இந்துத்துவக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, மக்கள் தொகையில் 84% இந்துக்களும் வெறும் 14% மட்டுமே இஸ்லாமியர்களும் வாழும் ஒரு நாட்டில், இந்துக்கள் பெரும் ஆபத்தில் இருப்பது போன்ற கருத்துருவை உருவாக்கிவிட்டார்கள்.
. ஹிந்து கத்ரே மெய்ன் ஹே (இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்) என்ற முழக்கத்தை இன்று வலதுசாரிக் குழுக்கள் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.
இதன் விளைவாக, பல இந்துக்கள், இஸ்லாமியர்கள்தான் இந்தியாவின் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை போல பார்க்கிறார்கள்.
2014 இல் மோடி பதவியேற்பதற்கு முன்பாக, வறுமை, பொருளாதார வளர்ச்சிக் குறைவு, ஊழல் உள்ளிட்டவையே நாடு எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனையாக நாட்டு மக்கள் கருதினார்கள்.
இப்பிரச்சனைகளை சரி செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியே மோடி ஆட்சி அதிகாரத்த்திற்கு வந்தார்.. ஆனால் பொருளாதாரம் மென் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில்,உண்மையான பிரச்சனை பற்றின மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், பொறுப்புக்கூறலிருந்து தப்பிக்கவும், பா.ஜ.க மேலும் மேலும் தனது வெறுப்பரசியலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து வெல்ல, அது தொடர்ச்சியாக இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிரிகளாக்கும் வேலைகளையும், இஸ்லாமியர்களை இந்நாட்டின் சாத்தான்களாகக் கட்டமைக்க இன்னும்வெளிப்படையான பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களையே பெரிதும் விரும்புவார்கள், இந்துக்களின் மக்கள் தொகையைவிட இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமாக வேண்டும் என்ற நோக்கில் மிக அதிகமாக குழந்தைகளைப் பெற்று கொண்டு அதன் மூலம் இஸ்லாமிய அரசை நிறுவ முயல்கிறார்கள மற்றும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் பர்ப்புரை நடைபெறுகிறது. இதுபோன்று முன்பு இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டமும் பசுவதை தடுப்புச் சட்டம் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைக்கே உதவியுள்ளன. இஸ்லாமிய சிறு வியாபாரிகளும் தொழிலாளர்களும், இஸ்லாமிய வணிகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் இந்துதுவக் குழுக்களின் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய சமூக ஊடங்களை பார்த்தோமென்றால், இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களை கூறிகொள்கிறவர்கள், இஸ்லாமியர்களைப் படுகொலை செய்யச் சொல்லி அறைகூவல் விடுக்கிற காணொளிகளால் நிறைந்துள்ளது.சொல்லப்பானால் இனி இவை ஒரு செய்தியாக கூட கருதப்படாத நிலைக்கு சென்று அன்றாட நிகழ்வாக மாறிவிடும் போல.
உயர் பதவிகள் வகிக்கும் இந்து மேலாதிக்கவாதிகள் தங்களது வெறுப்புப் பேச்சுக்களுக்கு பெரும்பாலும் கைது செய்யப்படுவதே இல்லை. இந்துப் பெண்களுடன் இருப்பது அல்லது மாடுகளை வண்டியில் கொண்டு செல்வது உள்ளிட்ட ”குற்றங்களுக்காக” இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுவது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில், பார்ப்பதற்கு இஸ்லாமியரைப் போல இருப்பது ஒன்றே அவரைத் தாக்குவதற்குப் போதுமான காரணமாகிவிடுகிறது. மோடியே தனது தேர்தல் பிரச்சாரங்களில், ”வன்முறையை ஏற்படுத்தும்” மக்களை ”அவர்கள் அணியும் ஆடைகளை வைத்தே அடையாளம் காணலாம்” எனக் கூறியது இங்கு நினைவு கூறத் தக்கது.
அசாமில் இஸ்லாமியர்கள் வேட்டையாடப்படுவது துவக்கம் மட்டும்தான்
ஆனால் பனியாவின் கொடுஞ்செயலுக்குப் பின்னுள்ள வரலாறு இந்தியா வெறுப்பு எனும் படுகுழிக்குள் இறங்கியதற்கு முன்னிருந்தே தொடர்கிறது. அசாமில்,இறந்துபோன இஸ்லாமியர் ஒருவரது சடலத்தின் மீது பனியா நடத்திய வெறியாட்டமானது, இஸ்லாமியர்களை அன்னியர்கள்போன்றும் மோசம் விளைவிக்கக்கூடியவர்கள் போன்றதொரு கருத்தை நிலைப்பெறுச்செய்கிறது.
”அந்நியர்கள்” அதிக அளவில் கூடியேறி பூர்வகுடிகளை ஓரங்கட்டிவிடுவார்கள் என்ற பயம், பிரித்தானியர்கள் அம்மாநிலத்தின் வளமான காடுகளை அழித்து தேயிலை மற்றும் இன்னபிற தோட்டங்களை அமைக்கத் துவங்கிய காலத்திலிருந்தே அம்மாநில மக்களின் மனங்களில் ஊறிப்போயுள்ளது. அவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டபோது, வளமான விவசாய நிலங்களைத்தேடி அருகில் மக்கள் தொகை அதிகமிருந்த பெங்காலி விவசாயிகள் குடிபெயரத் தொடங்கினர்.
அசாமிய பூர்வகுடிகளின் அதிருப்தியை அதிகப்படுத்தும் வகையில், இந்த இடப்பெயர்வானது சமீபகாலங்கள் வரை, அத்துணைக்கண்டத்தில் வன்முறை தலைவிரித்தாடிய பிரிவினை, பொருளாதாரத் துயரங்கள், அரசியல் நிலையற்றதன்மை, போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்காளதேசத்திலிருந்து அசாமிற்கு தொடர்ந்து வருகிறது. பருவநிலை காரணங்களாலும், வெள்ளம் பாதிக்கக்கூடிய கழிமுகப்பகுதியான வங்காளதேசத்திலிருந்து தொடர்ச்சியாக இடப்பெயர்வு நடந்து வருகிறது.
மோடியின் எழுச்சியால், அசாமியர்களுக்கு அசாமியர் அல்லாத மொழி பேசுவோர் மீதான வரலாற்று ரீதியிலான வெறுப்பானது, இந்து தேசியம், அந்நியர் வெறுப்பு, தேசபக்தி ஆகியவற்றின் ஆபத்தான கலவையாக மாறியுள்ளது. ஒரு இஸ்லாமியரது பிணத்தின் மீது ஏறி மிதிக்கும் செயலானது தற்போது தேசபக்திக்கான நியாயத்தையுடையதாகக் கொள்ளப்படுவதால்தான் புகைப்படக் கருவியில் பெருமையாக பதிவு செய்யப்படுகிறது. பனியாவைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவை காக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஹோக்கின் மரணத்திற்குப் பின் காவலர்கள் பனியாவை கட்டியணைக்கும் காட்சிகளும் அக்காணொலியில் இடம்பெற்றுள்ளது. அவரது செயல்பாடு, மோடி எவ்வாறு வரலாற்றை ஒரு கருவியாகவும், வெறுப்பை பெருமைக்குரிய ஒன்றாக மாற்றியும், அதனை ஊக்கப்படுத்தவும் செய்துள்ளார் என்பதை உணர்த்துகிறது.
அசாம் மோடியின் மாபெரும் பரிசோதனைக்கூடமாகும். அங்கு அவர் இஸ்லாமியர்களின் குடியுரிமையை நிரூபிக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளார் – உண்மையான இந்தியர்களைப் பிரிக்கும் இந்த முயற்சியானது, பின்னர் இந்தியா முழுமைக்கும் மேற்கொள்ளப்படும். பா.ஜ.க இதனை “வங்காளதேச இஸ்லாமியர்களை” வெளியேற்றும் நிகழ்வு என்று மட்டுமே வர்ணித்தாலும், இந்திய இஸ்லாமியர்கள் என்பதற்கு பதிலாகவே அவ்வாறு கூறுகின்றனர். இதுபோன்ற மிகப்பெரிய அளவில் ஒரு நாடு குறிப்பிட்ட மக்கள் தொகுப்பினருடைய குடியுரிமைப் பறித்த நிகழ்வு இதற்கு முன் 1982இல் மியான்மரில் ரோஹிங்கியா மக்களின் மீது நடைபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு மியான்மரில் பெரும் படுகொலைகளும் ரோஹிங்கியர்கள் வெளியேற்றப்படுவதும் அங்கு நிகழ்ந்தது.
மேலும் இது வெறும் துவக்கம்தான். அண்டை மாநிலமான பிகாரில், ”சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை”ப் பற்றி தகவல் தருமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு இதுகுறித்து உடனடியாக “விழிப்புணர்வு” ஏற்படுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாகக் கூடியேறியவர்களுக்கான தடுப்பு முகாம்களை அமைத்திடக் கோரும் அம்மாநில உயர்நீதிமன்றம், “சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவதென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், தேச நலனை உள்ளடக்கியதாகவும்” குறிப்பிட்டுள்ளது. பிகாரில் வாழும் 1 கோடியே 70 இலட்சம் முஸ்லிம்கள் ஆபத்தின் விளிம்பில் உள்ளனர். பிகாருக்கு அடுத்துள்ள, வங்காளதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள, கிட்டத்தட்ட 2 கோடியே 50 இலட்சம் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தில், ஆட்சிக்கு வந்தால், அசாம் போலவே அங்கும் குடியுரிமை சரிபார்க்கும் நடவடிக்கையை செய்யப்போவதாக பா.ஜ.க வாக்குறுதி கொடுத்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தின் மாநில முதல்வர் சமீபத்தில், அரசு மானியம் அளிக்கும் உணவுப் பொருட்களை இஸ்லாமியர்கள் பதுக்குவதாகக் குற்றம் சாட்டினார். அசாம் மாநிலத்தோடு, உத்தரப் பிரதேச அரசும் இரண்டு குழுந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அம்மாநில அதிகாரிகள் வளர்ச்சிக்கு எதிராகக் காட்டும் அதிகப்படியான மக்கள் தொகை பெருக்கத்திற்கு இஸ்லாமியர்களே காரணம் காட்டப்படுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் குறைந்து வருகிறது.
ஆனால் உண்மை தற்போது முக்கியமில்லை. இஸ்லாமியர்களை மனிதர்களுக்கும் கீழானவர்களாகக் கட்டமைக்க முயலும் ஆளும் கட்சியின் முயற்சிகளுக்கு உண்மை வளைந்து கொடுக்கிறது. நாசி ஜெர்மனியில், யூதர்கள் ”எலிகள்” என்று அழைக்கப்பட்டது போல, 1990களில் ருவாண்டாவில் டுட்சிக்கள் ”கரப்பான்பூச்சிகள்” என்று அழைக்கப்பட்டது போல, பா.ஜ.க.வினர் இந்திய இஸ்லாமியர்களை, இந்துக்களுக்கு அவர்களது சொந்த மண்ணில் கிடைக்க வேண்டியவற்றை கிடைக்கவிடாமல் செய்யும், அம்மண்ணின் வளங்களை அரித்துத் திண்ணும் “கரையான்”களென அழைக்கின்றனர்.
அழிக்கப்படும் காந்தியின் மரபு
எந்த மதச்சார்பற்ற குடியரசின் அடிப்படைகளைப் பாதுகாக்க காந்தி மாய்ந்தாரோ, அதன் அடிப்படைகள் வேகமாக காலி செய்யப்பட்டுவருகிறது. மோடி காந்திக்கு மரியாதை செலுத்திவரும் அதேவேளையில், பா.ஜ.க. தலைவர்கள் காந்தியைக் கொன்ற, இந்து மதவெறியனான கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்கிறார்கள். மோடியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் “துரோகிகளை” சுட்டுக் கொல்லவும், படுகொலைகளை நிகழ்த்தவும் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கின்றனர். இவ்வாறு பேசுவதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக மேலும் பதவி உயர்வுகளைப் பெறுகின்றனர். மோடி கூட, கடந்த 2002இல் அவர் முதலமைச்சராக இருந்தபோது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்காததும் அவரது ஆதரவாளர்கள் அவரைக் கொண்டாடுவதற்கு ஒரு காரணம். அப்படுகொலையின்போது பல நூறுபேர் கொல்லப்பட்டார்கள், பல ஆயிரம்பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
குறிப்பாக, அசாம் மாநில முதல்வர் ,காவல்துறை நடத்திய வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிக்காதது மட்டுமல்லாது, ஃபரீத் மற்றும் ஹோக்கினது கொலைகளை சிறுமைப்படுத்தினார். 3 நிமிடங்கள் ஓடிய காணொளியில், ஹோக்கின் மரணம் ”வெறும் 30 நொடிகள்தான்” எனவும் கூறினார். மேலும், அவர் வீடுகளை அகற்றும் பணியை தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில், 4 மசூதிகளின் இடிபாடுகளின் புகைப்படங்களையும் பெருமையாகப் பகிர்ந்தார்.
உலகெங்கிலும், பைடன்கள் இன்னும் காந்தியைப் பற்றிப் பேசிகொண்டிருக்கையில், இந்தியாவிலோ முன்னுதாரணங்கள் மாறிவிட்டன. பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க விடயங்களும் மாறிவிட்டன. பேரணிகளில் இனப்படுகொலை வெளிப்படையாகக் கோரப்படுகின்றன. நண்பர்களுக்குள்ளும் குடும்பத்தினருக்கும் இயல்பாக நடைபெறும் அரசியல் உரையாடல்களில் இனத்தை “தூய்மைப்படுத்துதலுக்கான” தேவை குறித்து பேசப்படுகிறது. சமூக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் வாக்கியங்களின் இடையில் வைக்கப்படும் புள்ளிகளைப் போல கொலை மிரட்டல்கள் வைக்கப்படுகின்றன.
அக்டோபர் 2, காந்தியின் பிறந்தநாள் அகிம்சைக்கான சர்வதேச தினமாக மிகப்பிரபலமான முறையில் கொண்டாடப்பட்டது. 1948 இல் நடைபெற்ற அவரது படுகொலை குறித்து இரண்டு புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், கர்நாடகாவில், ஒரு இந்துப் பெண்ணைக் காதலித்ததற்காக இஸ்லாமியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் செயலை இந்துத்துவ அமைப்பு ஒன்று செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்றைய இந்தியாவில்,தினமும் கோடி வழிகளில் காந்தி கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். பிஜாய் பனியா இந்த எரிகிற தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்!
கட்டுரையளர் – டெபாசிஸ் ராய் செளத்ரி
மொழிபெயர்ப்பு – பாலாஜி
கட்டுரை மூலம்:
https://time.com/6103284/india-hindu-supremacy-extremism-genocide-bjp-modi/