இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு
(டெல்லியை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்கள் அலிஷான் ஜாஃப்ரி மற்றும் ஜாபர் ஆஃபக் “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு எழுதிய கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு – சர்ஜோன்)
டெல்லியில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தவும் படுகொலை செய்யவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த பேரணி இந்தியாவின் தேசிய தலைநகர் பகுதியிலும் ஹரியானாவிலும் கடந்த மூன்று மாதங்களில் நாங்கள் கண்காணித்த ஐந்தாவது நிகழ்வு. மேலும் இத்தகைய நிகழ்வுகளை ஒரு சில பொதுவான நபர்கள் ஒருங்கிணைத்ததையும் , பெருங்கூட்டம் கூட அனுமதித்ததையும் , காவல்துறையின் குறுக்கீடு இல்லாமல் இருந்ததையும் காண முடிந்தது .
புதுடில்லி: “யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி ,முஸ்லிம்கள் எழுச்சி பெற நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். நாங்கள் எங்கள் இளைஞர்களை தட்டியெழுப்புகிற வேலையை செய்துவருகிறோம். நாங்கள் முல்லாக்களை கல்லறைகளிலிருந்து வெளியேற்றி அவர்களை வேரடி மண்ணோடு அழிப்போம் . ஏப்ரல் 2வரை பொறுங்கள்,பிறகு பாருங்கள் ஒன்று முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும் அல்லது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓட வேண்டும் என்ற நிலைமையை உருவாக்குவோம்”
இந்து ராஷ்ட்ர தளம் என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவரும், தீவிர இந்துத்துவா சாமியாருமான யதி நரசிங்கானந்தின் நெருங்கிய உதவியாளரான பிங்கி சவுத்ரி 8 ஆகஸ்ட் 2021 அன்று இந்திய தலைநகரில் இந்து தேசியவாத பேரணியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி இது.
இவர் இதைக் கூறி ஐந்து நாட்களுக்குப் பிறகு காவல்துறையினரால் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்.
“பிரிட்டிஷ் நலன்களுக்காக” உருவாக்கப்பட்ட “222 கறுப்பு சட்டங்களை” ஒழிப்பதற்காக அழைக்கப்பட்டு சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட பேரணி தேசிய கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் இது முஸ்லிம் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் பேச்சுக்களை, காவல்துறையினரின் தலையீடின்றி, பேசுவதற்கான தளமாக மாறியது. மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு , வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்களை கைது செய்யவும் அச்சுறுத்தவுமே காவல்துறையினரின் ஆர்வம் காட்டினர் .
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நடைபெறுகிற ஆறாவது இஸ்லாமிய விரோத நிகழ்ச்சி இதுவாகும்.தேசிய தலைநகரிலும் ஹரியானாவில் இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுகிற இந்த நிகழ்ச்சிகளில்,மேற்கு உத்திரபிரதேசத்திலுள்ள வலதுசாரி குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.இவர்களது பேச்சுகள் அனைத்துமே மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலையும், வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் அறைகூவல் விடுப்பவையாகும்.
இந்த பேரணிகளின் காணப்பட்ட பிற பொதுவான அம்சங்களாக : பொதுவான தூண்டுதல்காரர்கள்/ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறையினரின் தலையீடின்மை ,தொற்றுநோய் பரவலின் போது கூட்டங்களை அனுமதித்தது ஆகியவை இருந்தன; இவை அனைத்தும் பொது அமைதியை சீர்குலைப்பதற்கு எதிரான இந்தியாவின் சட்டங்களை மீறியதாக முன்னாள் அதிகாரிகள் கூறினர்.
முக்கிய ஒருங்கிணைப்பாளரான , உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளருமான அஷ்வனி உபாத்யாய், இனப்படுகொலைக்கான அழைப்பிலிருந்து தன்னை தூரப்படுத்தி கொண்ட போதும், பேரணியின் பங்கேற்று அவர் பேசியது வருமாறு
“காஷ்மீரில் 1990ல் என்ன நடந்ததோ (காஷ்மீர் பண்டிதர்களுக்கு ), அவை அனைத்தும் 2021ல் வங்காளத்தில் மீண்டும் நடந்தது (மே 2021 சட்டசபை தேர்தலுக்குப் பிறகான வன்முறையைக் குறித்து ), ஆனால் காஷ்மீரைப் போலவே , வங்காளத்திலும் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள். இவர் இதை கூற அவரைச் சுற்றி, மக்கள் ” தேஷ் ட்ரோஹியோன் கோ பாசி டோ (துரோகிகளைத் தூக்கிலுடுங்கள் ) ” என்று கோஷமிட்டனர் .
இவரது பேச்சுக்கு எழுந்த பரவலான எதிர்ப்பையடுத்த,ஒரு நாள் கழித்து உபாத்யாய் கைது செய்யப்பட்டார்.ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
உபாத்யாய் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளை பட்டியலிடுகிறது 1860, 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), 260 (போலி அரசாங்க முத்திரையை பயன்படுத்தல் ), 269 (உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று பரவ வழி வகுக்கும் கவனக்குறைவான செயல்களில் ஈடுபடுதல் ); மேலும் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் , 1897 பிரிவு 3 (பிரிவு 188 கீழ் குற்ற தண்டனை)மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டத்தின், 2005 பிரிவு 51b (அரசாங்கம் கொடுத்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க மறுப்பது ) ஆகிவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சட்ட வல்லுனர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், காவல்துறையினர் 295 ஏ (வேண்டுமென்றே மதத்தை அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபடுதல் ) மற்றும் 153A (பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் ) ஆகியவற்றையும் சேர்த்திருக்க வேண்டும் .
“இது ஏதோ திடீரென ஏற்பாடு பேரணி அல்ல.மாறாக பல வாரங்களுக்கு முன்பாகவே நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகும்.ஆகவே குற்றவியல் சட்டம் பிரிவு 144 (நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதைத் தடைசெய்தல்) பின்னணியில் போதுமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு அத்தகைய கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அமைப்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பது காவல்துறையின் கடமை.”என்று உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் விக்ரம் சிங் கூறினார். மேலும் காவல்துறையின் உத்தரவை மீறி “பங்கேற்பாளர்கள் ஒன்றுகூட முயன்றிருந்தால் காவல்துறையினர் அவர்களைக் கலைத்திருக்க வேண்டும், ஆனால் அதுவும் நடக்கவில்லை.” என்கிறார்.
“அவர்கள் (காவல்துறையினர் ) அதிக முனைப்புடன் இருந்திருக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற பொறுப்பற்ற வகுப்புவாத வெறுப்பில் ஈடுபடும் எவரையும் கைது செய்திருக்க வேண்டும்” என்று சிங் கூறினார். “பிரிவு 295A ஐ காவல்துறை அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லும் ஆர்வலர்களுடன் நான் உடன்படுகிறேன். அதை இப்போது கூட அமல்படுத்தலாம். அமல்படுத்தாமல் இருப்பதை விட தாமதமாக அமல்படுத்துவது சிறந்தது தான் . அவர்களில் சிலருக்கு ஜாமீன் கிடைத்ததிருப்பது வேதனையான செய்தி . ஜாமீன் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது அவர்களை மிகச் சாதரணமாக தப்பிக்க வகை செய்கிறது.
சமூக செயல்பாட்டாளர்களான ஷப்னம் ஹஷ்மி மற்றும் அனி ராஜா ஆகியோர் எஃப்.ஐ.ஆரில் பிரிவு 295 ஐ சேர்க்க வலியுறுத்தி,கடந்த 9 ஆகஸ்ட் 2021 அன்று, டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கடிதமொன்றை எழுதினர், .
“இந்தியாவின் தலைநகரில் சட்டம் ஒழுங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது ஆனால் டெல்லி காவல்துறையோ அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது ” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடுகின்றனர்.
“ஒருவேளை இஸ்லாமியர்கள் இவ்வாறு வகுப்புவாத கோஷங்களை எழுப்பியிருந்தால் , இந்நேரம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்” என “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹஷ்மிகூறுகிறார்.
மேலும் “டெல்லியில் நகராட்சித் தேர்தலும் அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கும் சூழலில், நிலைமை இன்னும் மோசமடையப் போகிறது” எனவும் தெரிவித்தார்.
‘முஸ்லிம்கள் வெட்டப்படும்போது …’
தீபக் பல்த்வா என்ற இந்துத்துவா ஆதரவாளர் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்திலிருந்து நான்கு நாட்கள் ரயிலில் பயணம் செய்து “தேசத்தைப் பாதுகாக்கவும் பெருமைப்படுத்தவும்” டெல்லிக்கு வந்துள்ளதாக “ஆர்டிகள் 14″ செய்தி தளத்திற்கு கூறினார். தனது முதல் பெயரை மட்டும் தெரிவித்த ஹரியானாவைச் சேர்ந்த சுனில், சீனாவை போல் இந்தியாவிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை என்று கூறினார்.
தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் வெறிபிடித்த கும்பலாக மாறிய அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக கோஷங்களை முழங்கினர் . ” ஜப் முல்லே கட்டே ஜாயேங்கே, தாவல் ராம் ராம் சில்லயெங்கே (முஸ்லிம்கள் வெட்பட்டு போது, அவர்கள் ராம் ராம் என்று கூறுவர் )” . இதைத் தொடர்ந்து மற்றொரு முழக்கமும் வந்தது: ” சுவரோ கி கரோ விடை , இந்து இந்து இந்து இந்து பாய் பாய் ” (பன்றிகளுக்கு [முஸ்லிம்கள்] விடைகொடுங்கள் இந்துக்கள் எல்லாம் சகோதரர்கள்).
அப்போது கும்பலில் இருந்து ஒருவர் குறுக்கிட்டு ” சுரோ கி விடை நஹி அப் சுரோ கி கதாய் கர்னி ஹோகி. ஜிந்தா நஹி சோட்னே ஹைன் (விடைகொடுப்பது இல்லை, இப்போது பன்றிகளை வெட்ட வேண்டும். உயிருடன் விடாதீர்கள்).” என கூறினார்.
பேரணி முடிந்தபின் ,வலதுசாரி யூடியூபர், சந்தீப் தேவ் உடனான நேரடி நிகழ்ச்சியில் தோன்றிய உபாத்யாய் இந்த எதிர்ப்புக்கள் உண்மையில் இஸ்லாமிய எதிர்ப்பு தான் என்பதை தெளிவுபடுத்தினார்: “அனைவரும் புற்றுநோய் பற்றி பேசுகிறோம் . ஆனால் இந்த நோயை குணப்படுத்த யாரும் வழி சொல்வதில்.நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள்தோறும் அவுரங்கசீப்களும் பாபர்களும் பிரந்துகொண்டிருக்கும்போது (முகலாய )அவுரங்கசீப் மற்றும் பாபரை பற்றி பேசி என்ன பயன் ?”
வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் தொடர் நிகழ்வுகள்
டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஆறு பேரில் குறைந்தது மூன்று பேர் இஸ்லாமியி விரோதத்தை தூண்டிவிட்ட வரலாற்றைக் கொண்டவர்கள் ஆவார்கள்.ஆனால் அவர்கள் மேல் இதுவரை உறுதியான எந்தவித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாறாக பொதுவெளியில் அங்கீகாரம் பெறுகின்றனர்.
தலைமறைவாக உள்ள சவுத்ரி, ஜனவரி 6, 2020 அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களைத் தாக்கிய ஆயுதக் கும்பலை வழிநடத்தியதற்கு பொறுப்பேற்றவர் . அவரது மற்ற செயல்கள்:
2014 ஆம் ஆண்டில் ,தலைநகரை நிர்வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை சூறையாடியதற்காக சவுத்ரி கைது செய்யப்பட்டார் .
ஏப்ரல் 2021 இல் , ஓக்லாவில் இருந்து தில்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) இன் சட்டமன்ற உறுப்பினரான அமானதுல்லா கானின் தலைக்கு 51 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்ததோடு இந்திய முஸ்லிம்களை அழிக்க போவதாகவும் அச்சுறுத்தினார்.
ஜூலை 2021 இல் , உ.பி.யின் காஜியாபாத்தில் இருக்கும் அனைத்து மசூதிகளையும் முஸ்லிம்களையும் அழிப்பதாக சவுத்ரி அச்சுறுத்தினார் . “கோஷத்தை சத்தமாக எழுப்புங்கள், அது விதர்மிகள் மற்றும் கடுவாக்களுக்கு ஒரு செய்தி செல்லும். அவர்களின் கண்களை பிடுங்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். அவர்களை முடித்து கட்டும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
சவுத்ரி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றி , ஜந்தர் மந்தரில் முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவர்களுக்கு ஆதரவாக பேசினார் . இந்த கட்டுரையை வெளியிடும் நேரம் வரை டெல்லி போலீசார் அவரை கண்டுபிடிக்கவில்லை.
டெல்லி போலீஸ் காவலில் உள்ள மற்ற இரண்டு நபர்கள், தீபக் சிங் ஹிந்து மற்றும் வினோத் ஆசாத் ஆகிய இருவரும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழும் இந்துத்துவா வன்போராட்டங்களில் அடிக்கடி பங்கேற்றவர்கள்
ஃபேஸ்புக்கில் ஷர்மாவுக்கு 14,000 பின்தொடர்பவர்களும், சிங்குக்கு சுமார் 50,000 பேரும் உள்ளனர்.அதை அவர்கள் முஸ்லீம் எதிர்ப்பு போராட்டங்களில் இந்துத்துவா ஆதரவாளர்களைத் திரட்ட பயன்படுத்துகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது மூன்று முறையாவது, ஆசாத் டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக மற்றும் பொருளாதார புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 30 ஜனவரி 2021 அன்று, சர்மாவும் ஹிந்துவும் போராட்டக்காரர்களுக்கு டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு “தகுந்த பதில்” அளிக்குமாறு அழைப்பு விடுத்தனர்; அதை தொடர்ந்து சிங்கு எல்லையில் மோதல் வெடித்தது.
“நமது பிரச்சினை என்னவென்றால், இந்த துரோகிகள் பிரச்சனைகளை உருவாக்கும் போது நாம் கோழைகளைப் போல் வேடிக்கை பார்க்கிறோம்” என்று விவசாயிகளைப் பற்றி ஹிந்து கூறினார் . “நான் 30 நிமிடங்களில் அங்கு செல்வேன். இன்று எல்லா தேசியவாதிகளும் ஒன்றுபட வேண்டிய நேரம் . டெல்லி எரிமலையின் மேல் அமர்ந்திருக்கிறது;கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த கலவரம் போல அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் . இன்று நாம் தேசத்துரோகத்தின் தீப்பொறியை அடக்கவில்லை என்றால் நாளை அது நம் நகரத்தை எரித்துவிடும்.”
இது அவர்களின் நெருங்கிய நண்பர் ராகினி திவாரி , “ஜஃப்ராபாத்தை போல் மீண்டும் செய்வேன்” என்று மிரட்டிய மூன்று வாரங்களுக்குப் பிறகு நடந்தது. ராகினி திவாரி புதுடெல்லியின் ஜஃப்ராபாத்தில் 2020-ல் நடந்த முஸ்லீம்-விரோதக் கலவரத்தின் போது கலவர கும்பலை வழிநடத்தி ஊக்குவித்ததாக கூறப்பட்டது . அவர் கற்களை எறிவது படமாக்கப்பட்ட போதும் கைது செய்யப்படவில்லை.
அண்மையில் கடந்த 18 ஜூன் 2021தில்லியில் சாலையோர இஸ்லாமிய வியாபாரிகள் பலர் வலதுசாரி குழுக்களால் தாக்கப்பட்டனர். இவர்கள் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த ரோஹிங்கியாக்கள் என அழைத்த அக்கும்பல் அவர்களின் வண்டிகளை சூறையாடி அடித்து உதைத்து நாசம் செய்தனர்.இதில் பலத்த காயமடைந்த ஒரு வியாபாரி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு உயிர் தப்பினார் .
தில்லி பேரணியின் முன்னோட்டமாக, நாம் முன்பு குறிப்பிட்டதை போல், வட இந்தியாவில் ஜூன் 2021 முதல் அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் 25 வயதான முஸ்லீம் உடற்பயிற்சியாளர் ஆசிப் கான் படுகொலைக்கு பின் முஸ்லீம் எதிர்ப்பு மகா பஞ்சாயத்(பெரும் பேரணிகள்) நடத்தப்பட்டன .
இந்திரி, ஹரியானா, 30 மே 2021
நிகழ்வு: உடற்பயிற்சியாளர் கான் கொல்லப்பட்ட பிறகு இந்து தேசியவாதக் குழுக்களின் தலைவர்களால் ஏற்பாடு செய்த பேரணி.
அவர்கள் கூறியதவாது : “இந்த இந்திரி பஞ்சாயத்து, ஒரு சிறிய பஞ்சாயத்து. இங்கு இஸ்லாமியர்களால் எனது இந்துசகோதரர்களுக்கு தொல்லை நேர்ந்தால்,நாட்டு மக்கள்அனைவரும் இந்த கிராமத்திற்கு வருவார்கள் ” என அண்டை மாவட்டமான பரிதாபாத்திலிருந்து பேரணிக்கு வந்த இந்துத்துவ ஆதரவாளர் பிட்டு பஜ்ரங்கி “தி ஒயர்” செய்தி தளத்திற்கு கூறினார்.மேலும் “தற்போது, டெல்லியிலிருந்து மட்டுமே மக்கள் கூடினர் . ஆசிப்பை 72 ஹூர்களுக்கு (சொர்க்கத்தின் அழகியப் பெண்கள்) அனுப்ப அவரை கொன்றவர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளனர். நாங்கள் அவர்களின் குடும்பத்துடன் நிற்கிறோம்” என்றார்.
“நாங்கள் இப்போது அவர்களை (முஸ்லிம்களை) கொலை செய்யவும் கூடாதா?பாகிஸ்தானின் குழந்தை யாரேனும் இங்கிருந்தால், அவர்கள் கையை உயர்த்த வேண்டும், ”என்று பஜ்ரங்கி கூறினார். “முஸ்லிம்கள் யாருடைய சகோதரர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் கசாப்புக்காரர்கள். ”
ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவரும் பாஜக செய்தித் தொடர்பாளருமான சூரஜ் பால் அமுவும் பேரணியில் உரையாற்றினார். “எங்கள் கவுரவத்திற்கு களங்கம் ஏற்பட்டால் , உங்களின் பிறக்காத குழந்தைகளை கூட உங்களின் வயிற்றில் விடமாட்டோம்” என்று அவர் முஸ்லிம்களைக் நோக்கி கூறினார்.
காவல்துறை என்ன செய்தது: பேரணியால் எதிர்ப்பலை கிளம்பிய பிறகு “அமுவின் வீடியோவின் உண்மைத்தன்மையை” விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜர்னியா NDTV இடம் கூறியதாவது : “இந்த வைரல் வீடியோவை நாங்கள் கவனித்துள்ளோம், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மாவட்டத்தில் நடைபெற்ற எந்த மகாபஞ்சாயத்தும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறவில்லை .”
உத்தம நகர், டெல்லி, 18 ஜூன் 2021
நிகழ்வு: இந்துத்துவ ஆதரவாளர்கள் முஸ்லீம் பழ விற்பனையாளர்களை “ரெடி (கை வண்டி) ஜிஹாத்” என்று குற்றம் சாட்டி அடித்தனர் . இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜிகாதி பழ விற்பனையாளர்களால் வன்முறை மற்றும் அத்துமீறல் என்று கூறி அதை எதிர்த்து அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பிரதான சாலையை மறித்தனர்.
என்ன கூறப்பட்டது: அவர்களில் ஒருவர் முஸ்லீம் பழ விற்பனையாளர்களை “தங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடை புற்றுநோய்கள் ” என்று அழைத்தார்.
” எங்கள் ஒற்றுமையைக் காட்ட நாங்கள் அனுமன் சாலிசாவை ஏற்பாடு செய்கிறோம் ” என்று ஷர்மா உத்தம நகர் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்பு கூறினார் . “அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) இப்போது அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்றார்.
காவல்துறை என்ன செய்தது: ரிஸ்வான் மீதான தாக்குதலின் எஃப்.ஐ.ஆரில் இது வகுப்புவாத வெறுப்பால் உந்தப்பட்டதாகக் குறிப்பிடாத காவல்துறையினர் சாதாரண தாக்குதலாக குறிப்பிட்டனர், யாரும் கைது செய்யப்படவில்லை .
பட்டோடி, ஹரியானா, 4 ஜூலை 2021
நிகழ்வு: லவ் ஜிஹாதிற்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்த பேரணியில், 4 ஜூலை 2021 அன்று புது தில்லி மாணவர்கள் ஆர்ப்பாட்டதில் துப்பாக்கி சூடு நடத்தி பின்னர் நான்கு மாதங்களில் பிணையில் வெளி வந்த நபர் முதன் முதலாக ஜப் முல்லே காடே ஜெயங்கே, ராம் ராம் சில்லயேங்கே என்ற முழக்கத்தை எழுப்பினார் மேலும் முஸ்லீம் பெண்களை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தார்.
என்ன கூறப்பட்டது : ” அகர் பாரத் ஹமாரி மாதா ஹை, தோ பாகிஸ்தான் கே ஹம் பாப் ஹைன், அவுர் யே பாகிஸ்தான் … கோ ஹம் யஹான் கே கரோன் மெய் கிராயே பார் மக்கன் நஹின் டெங்கே … கோ கோ தேஷ் சே நிகலோ, யே பிரஸ்தவ் பாஸ் கரோ (இந்தியா என்றால் எங்கள் தாய், நாங்கள் பாகிஸ்தானின் தந்தை, நாங்கள் பாகிஸ்தானியர்களுக்கு இங்கு வாடகைக்கு வீடுகளை கொடுக்க மாட்டோம் … அவர்களை இந்த நாட்டிலிருந்து அகற்றுங்கள், இந்த திட்டத்தை நிறைவேற்றுங்கள்) என்று கர்னி சேனா தலைவர் சுராஜ் பால் அமு கூறினார்.
பல வார சமூக ஊடக எதிர்பலைக்கு பிறகு, ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மற்றவர்கள் மீது பகையை ஊக்குவித்தல் மற்றும் பிற மதத்தை அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
துவாரகா, டெல்லி: 6 ஆகஸ்ட் 2021
அமைப்பாளர்கள் கூறியது : ’அனைத்து துவாரகா குடியிருப்பாளர்கள் சங்கம்’ தென்மேற்கு டெல்லி புறநகரின் பிரிவு 22 ல் ஹஜ் ஹவுஸ் கட்டுவதற்கான நில ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதை அடுத்து தில்லி பேரணிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஹிந்து மற்றும் ஆசாத் ஆகிய இருவரும் ஒரு கூட்டத்தைத் திரட்டினர்.
அந்த கடிதத்தில் ஹஜ் ஹவுஸ் “சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் அமைதியை” சீர்குலைக்கும் என்று கூறியுள்ளது.
ஒரு வீடியோவில், டெல்லியில் வசிக்கும் அகில் பெஸ்வால் கூறினார்: “பெஹ்லே ஹஜ் ஹவுஸ் பனாயெங்கே, யஹான் பே வோ பனாயெங்கே மதரஸா, வஹான் பெ பான் ஜயேகி மஜார், டீயர் தீர் ஜமீன் கப்ஸா, ஆகே டெட் சாவு, உன்கே பஞ்ஜயேகேனே சத்தார் அசி, அவுர் மேர் கே ஹார் சப் கே ஓர் பாக்தே நாசர் ஆஆகே (முதலில் அவர்கள் ஒரு ஹஜ் ஹவுஸை உருவாக்குவார்கள், பிறகு அவர்கள் ஒரு மதரஸா காட்டுவார்கள் , பிறகு கல்லறை, 150 பேர் வருவார்கள் 70-80 வரை குழந்தை பெறுவார்கள் , பிறகு மெதுவாக நிலத்தை பிடுங்குவார்கள் , அவர்கள் அனைவரும் கைகளில் கல் வைத்திருப்பார்க்ள , இறுதியில் நீங்கள் ஓட நேரிடும் ).
“நீங்கள் (இந்துக்கள்) இப்போது ஒன்று சேராவிட்டால், ஒரே இரவில் ஐந்து லட்சம் பேர் காஷ்மீரை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதைப் போல, நீங்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று பெஸ்வால் கூறினார்.
போலீசார் என்ன செய்தார்கள் அல்லது சொன்னார்கள்: “நாங்கள் வீடியோக்களை ஆய்வு செய்தோம், அதில் வெறுப்பு பேச்சு எதுவும் இல்லை, வெறுப்பு பேச்சு வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று பெயர் குறிப்பிடாத மூத்த போலீஸ் அதிகாரி “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு கூறினார் .
“வெறுப்பு பேச்சு என்றால் என்ன என்பதை அறிய நாங்கள் சட்டரீதியான கருத்துக்களைக் கேட்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார். “நீங்கள் ஒரு பொது அறிக்கையை வெறுப்பு பேச்சு என்று கருத முடியாது. அவர்களின் முக்கிய குறையாக, அங்கு ஒரு ஹஜ் ஹவுஸ் கட்டப்படக்கூடாது; அதற்கு பதிலாக, அவர்கள் நிலத்தில் ஒரு மருத்துவமனை அல்லது கல்வி நிறுவனத்தை கட்ட வேண்டும் என்று கோரினர்” என்றார் .
மோடிஜி இந்து ராஷ்டிரத்திற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும்
டெல்லி பேரணியில், முக்கிய குறிக்கோள் தெளிவாகத் தெரிந்தது: ஒரு இந்து ராஷ்டிரம், ஒரு இந்து நாடு உருவாக்கம்; மற்றும் முஸ்லிம்களை பயமுறுத்துவது .
சவுதிரி, ப்ரீத்தி சிங்க் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான உபாத்யாய் உட்பட தனது ஆதரவாளர்களான சூழ்ந்திருக்க “2 மார்ச் 2022 க்குள் இந்தியா ஒரு இந்து ராஷ்ட்ராவாக மாறும்” என்று கூறினார்.
போலீஸ் ஆண்களும் பெண்களும் கூட்டத்தை கலையும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் அவர்கள் அதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை . பேரணியாளர்கள் போலீசாரின் எச்சரிக்கையை புறக்கணித்து, பேச்சு, கோஷம், முழக்கம் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தல் என தங்கள் செயல்பாட்டை தொடர்ந்தனர்.
“மோடி நிரம்பிய ராம் லீலா மைதானத்தில் வைத்து இந்தியாவை ஒரு இந்து ராஜ்யமாக அறிவிப்பார் ” என சிங் கூறினார்.
“மோடிஜி சரியான பாதையில் செல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் இந்தியாவை இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் ” என்று பேரணியில் ஒரு பெண் பத்திரிகையாளரிடம் கூறினார். “மெதுவாக இருக்காதீர்கள், இல்லையெனில் 20 குழந்தைகளைப் பெற்று முஸ்லிம்கள் பலம் பெறுவார்கள், நாம் தோல்வியடைவோம்.”
“உபாத்யாயியின் நல்ல ஆரம்பம் இது. நாங்கள் விழித்துக்கொண்டோம். எங்களிடம் ஐந்து கோரிக்கைகள் உள்ளன, மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று பல்தாவா, பேரணி சுவரொட்டிகளில் கோரிக்கைகளை எதிரொலித்தார்: இந்திய தண்டனைச் சட்டத்தை ரத்து செய்தல்; பொது சிவில் சட்டத்தை அறிவித்தல்; “ஊடுருவலை” தடுக்க ஒரு சட்டம்; மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் சட்டம்; மற்றும் “ஒரு தேசம், ஒரு பள்ளி வாரியம், ஒரு தேசம், ஒரு எண்டோமென்ட் கோட்” க்கான கோரிக்கை
“இது சரியான நேரம் அல்ல என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று ஒருவர் உள்ளூர் இந்துத்துவா சேனலிடம் கூறினார் . “கலவரங்கள் இருக்கும், ஆனால் இந்த நாடு இந்து ராஷ்ட்ராவைப் பார்க்கும்போது, கலவரம் ஏற்படும் (எப்படியும்), எனவே நாம் இப்போது போராடத் தயாராக இல்லை என்றால், 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எப்படித் தயாராக இருப்போம்?”
“தேச துரோகிகளை முடித்துக் கட்ட நாங்கள் இங்கு வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார். “எங்கள் வீரர்கள் எல்லையில் எதிரிகளுடன் சண்டையிடுகிறார்கள், நாங்கள் துரோகிகளைக் கொல்வோம்.”
மேலும் சீற்றங்கள் வெளிப்பட்டன. துவாரகாவில் இருந்து ஒரு பங்கேற்பாளர் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது கோபமாக இருந்தார். “கெஜ்ரிவாலுக்கு வாக்களித்ததன் மூலம் டெல்லி மக்கள் தவறு செய்து விட்டனர் . இலவச தண்ணீர் மற்றும் மின்சாரத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தேசியவாதிகள். நாங்கள் மோடியையும் யோகியையும் நேசிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பின் 15 வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மற்றொருவர் கூறினார் , அது தான் “பயங்கரவாதிகளின் பிறப்புக்கு” காரணம் என்று அவர் கூறினார். அரசியலமைப்பின் பிரிவு 15 என்பது அரசு “சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காக” சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரம் அளிக்கிறது.
சில ஆண்கள், பங்கேற்பாளர்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகித்தனர், அதில் குழந்தைகள் அடங்குவர்: அந்த துண்டறிக்கை “இஸ்லாத்தை அழித்தல்” என தலைப்பிடப்பட்டு, இந்துக்கள் “விழிப்புணர்வு” பெறவும் “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பயங்கரவாதத்தைப் பயன்படுத்தவும் ” மேலும் “இந்த முஸ்லிம்களைக் கொல்லவும்” கோரியது . (முழு உரையையும் கீழே காண்க).
டெல்லி பேரணியில் விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கையின் உரை:
பயங்கரவாதத்தால் இஸ்லாம் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்து அமைப்புகள் எப்போதுமே முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருகின்றன, இது அவர்களின் பலவீனம் மற்றும் கோழைத்தனம். ஒவ்வொரு முறையும் இந்துக்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கதவைத் தட்டும்போதும் , ஒருவேளை இந்துக்கள் இரத்தம் சிந்தும் திறன் கொண்டவர்கள் அல்ல என்ற சந்தேகம் வருகிறது . சில சமயங்களில் லவ் ஜிஹாத், சில சமயங்களில் அல்லாவின் பெயரால் பயங்கரவாதம் மற்றும் சில சமயங்களில் பசு வதை, என முஸ்லிம்களால் செய்யப்படும் அனைத்திற்கும் இந்துக்கள் எப்போதும் எதிர்ப்பை மட்டுமே தெரிவித்துள்ளனர் . வெறுமனே சத்தம் போடுவது இஸ்லாத்தை அழிக்காது. நீங்கள் எழுந்திருக்காவிட்டால், நீங்கள் தூக்கிலிடப்பட்டவரின் வாழ்க்கையை வாழ்வீர்கள். ஷாஹீன் பாகில் முஸ்லிம்கள் தங்கள் வேலையைச் செய்தனர். வங்காளத்தில் முஸ்லிம்கள் தங்கள் வேலையைச் செய்தனர். ஆனால் இந்துக்கள் என்ன செய்தார்கள்? ….. வெறும் எதிர்ப்பு. பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் மட்டுமே அழிக்க முடியும். சத்தம் போடுவதால் அல்ல …. இந்துக்கள் எப்போது, எப்படி பழிதீர்ப்பீர்கள் ? நீங்கள் இந்த முஸ்லீம்களுக்கு எதிர்ப்பு மட்டும் தெரிவித்து ஊக்குவிக்கிறீர்கள். நீங்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பு வலையில் விழுந்தால் இந்த முஸ்லிம்களை எப்படி கொல்வீர்கள்? நாம் அவர்களை முழு மனதுடன் இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும், பின்னர் இஸ்லாத்தையும் . பூமியில் முடியாதது எதுவுமில்லை. உங்கள் பயத்தை நீக்கிவிட்டால், அவர்களை நம் பூமியிலிருந்து அழிக்கலாம் . பரசுராமன் பிறந்த பூமி, ராமர் பிறந்த பூமி, கிருஷ்ணன் பிறந்த பூமி, கொடுங்கோலர்களிடமிருந்து பூமியை விடுவித்தோம். அவர்கள் மூவரும் பூமியில் சண்டையிட்டனர். உங்களின் போர் குணம் எங்கே சென்றது? உங்களின் போர் குணத்தை வெளிப்படுத்துங்கள் ஏனெனில் தியாகப்போர் சட்டம் மற்றும் அரசியலமைப்பை விட பெரியது . என்னுடன் சேருங்கள், நான் இந்த இஸ்லாத்தை இந்தியாவிலிருந்து, உலகம் முழுவதிலுமிருந்து அகற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். எதுவும் சாத்தியமில்லாமலில்லை , எல்லாம் சாத்தியம். எதிர்க்காதே, கலகக்காரனாக இரு. சத்தம் போடாதீர்கள், கொல்லுங்கள். இஸ்லாத்தை அழிக்க விரும்புபவர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
தமிழில் – முகமது சர்ஜோன்
கட்டுரையின் ஆங்கில மூலம்:
https://article-14.com/post/event-calling-for-genocide-against-muslims-in-india-s-capital-latest-in-an-unhindered-spiral-of-hate-speech–6115dc826c952
கட்டுரைக்குள் வரும் சுட்டிகள்:
https://twitter.com/ZafarAafaq/status/1425052051604574210?s=19
https://legislative.gov.in/sites/default/files/A1860-45.pdf
https://legislative.gov.in/sites/default/files/A1974-02.pdf
https://legislative.gov.in/sites/default/files/A1897-03.pdf
https://indiankanoon.org/doc/1432790/
https://indiankanoon.org/doc/120498/
https://indiankanoon.org/doc/734195/
https://indiankanoon.org/doc/244497/
https://indiankanoon.org/doc/1831482/
https://indiankanoon.org/doc/1166740/
https://indiankanoon.org/doc/930621/
https://thewire.in/communalism/hindutva-ecosystem-muslim-fruit-sellers-threat-india
https://thewire.in/communalism/farmers-protest-locals-bjp-hindutva
https://clarionindia.net/muslim-gym-trainer-beaten-to-death-in-haryana/
https://www.article-14.com/post/the-hateful-facebook-adventures-of-ragini-tiwari-friends
https://widerimage.reuters.com/story/a-gunman-shoots-at-new-delhi-protesters
https://twitter.com/asfreeasjafri/status/1417857265361555459?s=19
https://twitter.com/suraj_livee/status/1425890184743194626?s=19
https://twitter.com/asfreeasjafri/status/1422948595875991561?s=19
https://twitter.com/ShabnamHashmi/status/1422768910672171013
https://twitter.com/asfreeasjafri/status/1423561433636241411
https://twitter.com/The_Sherry_/status/1425705601850494978?s=19
https://www.youtube.com/watch?v=f9vg2clNfVs
https://www.youtube.com/watch?v=VCbeKFt58i0
https://www.youtube.com/watch?v=vHSHp1-YCk4