ஆரணி கவுதமன் சாதி ஆணவக்கொலை – மகளை மட்டுமல்ல, மகனையும் கொல்லும் சாதிவெறி

02 Oct 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் பட்டியல் சாதியை சேர்ந்த அமுல் (29) நர்சிங் டிப்ளமோ முடித்தவர். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, ஆரணி அருகே காரணியைச் சேர்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இளைஞர் கவுதமன் (32) அந்த ஊரில் நிலப்புலன்களை கொண்ட வசதியான குடும்பம் இவரது தந்தை முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். சென்னையில் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் புற நகர் ரயிலில் வேலைக்கு சென்று வரும்போது காதல் மலர்ந்துள்ளது.. 2012ல் இந்த காதல் கவுதமனின் குடும்பத்திற்குத் தெரியவர அவரின் செல்போனை உடைத்து  வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதையறிந்த அமுல், கவுதமன் வீட்டுக்குச் சென்று கேட்க பிரச்சினை செய்து அனுப்பியுள்ளனர். அதன் பின்னாலும் கவுதமன் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இவர்களின் காதல் 7 வருடமாக தொடர்ந்திருக்கிறது.

2019ல் இவர்கள் பதிவு திருமணம் செய்து சென்னையில் தனியாக வீடு பார்த்து கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துவந்துள்ளனர். கவுதமன் அவ்வப்போது தனது சொந்த ஊரான காரணியிலுள்ள வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அந்த நேரத்தில் கவுதமன் குடும்பத்தினர்,சொத்துக்கள் தேவையென்றால் அமுலைவிட்டு வந்துவிடும் படியும், வேறு திருமணம் ஏற்பாடு செய்வதாகவும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் தனது குடும்பத்தினருடன் பேசாமல் தொடர்பை துண்டித்திருக்கிறார் கவுதமன். இந்நிலையில் அமுலுக்கு ஒரு மாதம் முன்பு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையுடன் சந்தோசத்தில் திளைத்திருந்த கவுதமனுக்கு அவரின் குடும்பத்திலிருந்து செப்டம்பர் 17ம் தேதி அதிகாலை அவரின் தாத்தா இறந்து விட்டதாகவும் உடனே கிளம்பி வரும்படியும் போன் செய்கிறார்கள். தாத்தாவின் மீதான பாசத்தினால் கவுதமன் அன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். அமுலுக்கு ஓரிரு முறை போன் செய்து ஈமச்சடங்குகள் முடியும் நேரத்தைப் பொறுத்து இரவு அல்லது நாளை வந்துவிடுவதாக சொல்கிறார். இறுதியாய் செய்யும் போனில் தான் குடும்பத்தினர் அனைவரும் கூட இருப்பதாகவும் முக்கியமாக விசயம் பேசுவதாகவும் மீண்டும் அழைப்பதாகவும் சொல்கிறார் அப்போது அவர் குரலில் பதற்றம் இருந்துள்ளது.

அதன் பின்னர் அவர் போன் அழைத்தால் எடுக்கவில்லை. அடுத்த நாள் அணைத்து வைக்கப்படுகிறது. தனது கணவர் ஊரில் யாரையும் தெரியாததால் அமுல் தவிக்கிறார் ஆனால், கவுதமன் வந்துவிடுவார் என நம்புகிறார். 2 நாட்களாகியும் வராததால் போனும் செய்யாததால் தனது சகோதரனை கவுதமன் ஊருக்கு அனுப்புகிறார். அங்கு சென்றால் பஸ் நிலையத்திலேயே கவுதமனின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி கண்ணில்பட பதட்டத்துடன் திரும்பி அமுலுவுக்கு தெரியப்படுத்துகிறார். இதைக்கேட்ட அமுலு 1 மாதக்குழந்தையுடன் அழுது துடித்திருக்கிறார்.

நன்றாக சென்ற கணவர் எப்படி திடீரென்று இறந்திருக்க முடியும்? மேலும் தனக்கு தெரியப்படுத்தாமல் எப்படி கணவர் உடலை அவரது உறவினர்கள் எரித்திருக்க முடியும்? கண்டிப்பாக இதில் ஏதோ சதி இருக்கிறது. எனவே தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகளை உடனே கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் சென்று கவுதமனின் கொலைப்பற்றி புகார் அளிக்கிறார். அதன் பின்னர் டிஎஸ்பியையும் பார்த்து புகார் அளிக்கிறார். சந்தேகத்திற்கு இடமான வகையில் மரணம் என்ற பிரிவில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் யுகத்திலும் சாதி வெறி தலைக்கு ஏறி இரத்த பந்தத்தை கொல்லும் கயவர்கள் அனைவரும்  கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சாதி ஆணவக்கொலைகளை புரிகிறவர்கள் கொலைகளை தற்கொலைகளாகவும் விபத்தாகவும் மாற்றி தப்பிக்கும் திட்டமிட்ட நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்கிறது. எனவே வரதட்சணை கொடுமைகளைப் போல சாதி மத மறுப்புத்திருமணங்கள் புரிகிறவர்கள் மணமாகி 7 வருடங்களுக்குள் இறந்தால் காவல்துறை விசாரணை கட்டாயமாக்கப்படவேண்டும்.

சாதி தாண்டி காதலித்து தனது குடும்பத்தினரைப் பகைத்து காதலியை திருமணம் செய்து, இன்று காதலுக்காக தனது உயிரை பறிகொடுத்திருக்கிறார் கவுதமன். சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட கவுதமனுக்கும், கணவரை இழந்து ஒருமாத கைக் குழந்தையோடு நிற்கதியாக நிற்கும் அமுலுக்கும் நீதியைப் பெற்றுத்தருவது நம் அனைவரின் கடமையாகும்.

26.09.21 அன்று சாதி ஒழிப்பு முன்னணி சார்பாக பாதிக்கப்பட்ட அமுலுவை  நேரில் சந்தித்தோம். தனது கணவரின் சாதி ஆணவக்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் தனக்கும் தன் குழந்தைக்கும் நியாயம் வேண்டும் என்று கண்ணீரோடு ஆனால் உறுதியாக சொன்னார்.

தமிழக அரசே

  1. கவுதமன் கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கையை கொலை வழக்காக மாற்றிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைதுசெய்யப்படவேண்டும்.
  2. கவுதமனின் மனைவி அமுலுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
  3. தொடரும் சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட தமிழக அரசு சிறப்புச்சட்டம் இயற்றிட வேண்டும்.
  4. சாதி மறுப்புத்திருமணத் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லங்களை அரசு ஏற்படுத்த வேண்டும்.
  5. சாதி மறுப்பு திருமண தம்பதிகளில் மணமுடித்த 7 வருடங்களுக்குள் யாரொருவர் இறந்தாலும் காவல்துறை விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 

ரமணி,பொதுச்செயலாளர்

சாதி ஒழிப்பு முன்னணி

8508726919

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW