’தூய்மை இந்தியா’ திட்டத்தின் சமுதாயப் பரப்புரையாளர் நதியாவின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்றிடு! உரிய நிவாரணம் வழங்கிடு! 3000 பணியாளர்களின் பணி நீக்கத்தை தடுத்திடு! முன்களப்பணியாளர்களை நிரந்தரமாக்கிடு!

10 Sep 2021

சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை

மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில்  5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும்  ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5  ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா (31) கடந்த 5-9-2021  ஞாயிற்றுக்கிழமை அன்று விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(9-9-2021)   இறந்துபோனார். இவர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாவார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டுவதற்கும் குப்பைகளைப் பிரித்து கொடுப்பதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ’சமுதாயப் பரப்புரையாளர்(Animator)’ மற்றும் மேற்பார்வையாளர் (Supervisor) என இருவகையானவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பரப்புரையாளருக்கானக் கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேறியிருத்தலாகும். மேற்பார்வையாளருக்கான கல்வித் தகுதிப் பட்டப்படிப்பாகும். சுமார் 3000 பேர் இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டனர். மாநில அளவில் இத்திட்டம் மைய நகராட்சி நிர்வாக இயக்குநரால்(CDMA) இயக்கப்படுகிறது. சென்னைப் பெருநகரத்திற்கு வெளியே மொத்தம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநரால் (RDMA) செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக டெண்டர்  விட்டு மனித வள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்நிறுவனங்களின் வழியாக ஒப்பந்த முறையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பரப்புரையாளருக்கு சுமார் 14,000 ரூ மாதச் சம்பளமும் மேற்பார்வையாளருக்கு சுமார் 19,000 ரூ மாதச் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ’பரப்புரையாளர்’ என்ற வகையில் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் டெங்கு, கொரோனா போன்ற கொள்ளை நோய்க் காலத்திலும் முன்களப் பணியாளர்களாக நின்று செயல்பட்டு உள்ளார்கள். அதுமட்டும் அல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் உதவியாளர்களாகவும் கூடுதல் பணிச்சுமையையும் ஏற்றுப் பணியாற்றி வந்துள்ளனர். Reward Society, Mughil Manpower, Excel Neat and Tidy Agency போன்ற பல்வேறு மனிதவள நிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களைப் பெற்று தொழிலாளர்களுக்கு பணத்தைப் பிடித்துக் கொண்டு சம்பளம் கொடுப்பது, வங்கிக் கணக்கில் போடாமல் கையில் கொடுப்பது, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கொடுப்பது எனப் பல்வேறு வகையிலும் தொழிலாளர்களை சுரண்டியுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான புதிய அரசு, எல்லா மண்டலங்களிலும் மனித வள ஒப்பந்தந்தாரர்களை மாற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது. அதன்படி, ஏற்கெனவே இருந்த ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்கள் வந்துள்ளனர். ஏற்கெனவே பணி செய்து கொண்டிருந்த பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை மாற்றாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்குமாறு புதிய ஒப்பந்த நிறுவனங்கள்/உள்ளூர் திமுக பிரமுகர்கள் கேட்கின்றனர். அப்படி பணம் கொடுக்க முடியாவிட்டால் பணியில் நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க நேரிட்டுள்ளது. அதில் ஒருவர்தான் தற்கொலை செய்து இறந்து போன நதியா!

குத்தாலம் திமுக நகரச் செயலர் சம்சு, ஏழாண்டுகளாகப் பணி செய்து கொண்டிருக்கும் பரப்புரையாளர் நதியா உள்ளிட்ட நால்வரை பணியில் இருந்து நீக்கிவிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களை புதிய ஒப்பந்ததாரர்  வழியாக பணியமர்த்தியுள்ள நிலையில், ’தன்னை பணியிலிருந்து நீக்க வேண்டாம்’ என்று முறையிட சென்றபொழுது பணிநீட்டிக்க மறுத்ததோடு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பின்புலத்திலேயே இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நதியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

1996 – 2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பணியமர்த்தப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களை 2001 இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கட்டாயப் பணி நீக்கம் செய்தது. அது போல, இப்போது ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து திமுகவும் அதே பாணியை தொடர்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஒப்பந்ததாரர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? அப்படி மாற்றுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் இத்தகைய மாற்றத்தின் போது ஏற்கெனவே பணியில் இருந்தவர்களை காரணமின்றி நீக்கக் கூடாது என்பதை ஒப்பந்தத்தின் வழியாக அரசு உறுதி செய்யாதது ஏன்? போன்ற கேள்விகள் எழுகின்றன. கொரோனா பெருந்தொற்றை ஒட்டி மக்கள் பெரும் வாழ்வியல் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் போது புதிய குழப்பங்களை அரசே ஏற்படுத்த வேண்டாம். புதிய சுமைகளை ஏழை, எளிய மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம். ஆகவே, தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்று சோசலிச தொழிலாளர் மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

கோரிக்கைகள்:

  1. தந்தையில்லாக் குழந்தைகளைவிட தாயில்லாக் குழந்தைகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு, திருமதி நதியாவின் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவோடு வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, இரு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
  2. திருமதி நதியாவின் தற்கொலைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் திமுக பிரமுகர் சம்சு மற்றும் இதில் தொடர்புடைய பேரூராட்சி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அரசியல் குறுக்கீடு இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  3. புதிய ஒப்பந்ததாரர்கள் ஏற்கெனவே பணிசெய்து கொண்டிருக்கும் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களைப் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
  4. ”மழை, வெள்ளம், தொற்றுநோய், சுனாமி போன்ற இயற்கை பேரிடரின் போது முன்களப்பணியாளர்களாக ஓய்வின்றி உழைக்கும் துறைகளில் ஒப்பந்தப் பணிமுறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த பரப்புரையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

 

இப்படிக்கு,

சதிஸ்குமார்,

பொதுச்செயலாளர்,சோசலிச தொழிலாளர் மையம்(SWC)

9940963131

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW