சாஹி இத்கா மசூதி மற்றும் ஞானவாபி மசூதி: ஆர்.எஸ்.எஸின் அடுத்தடுத்த இலக்குகள்

09 Aug 2021

மதுராவில் அமைந்துள்ள சாஹி இத்கா மசூதியையும், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியையும் மாற்றக்கோரும் சங்கப் பரிவாரத்தின் சமீபத்திய மனுக்கள் அவர்களுடைய மசூதி இடிப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தடுத்த இலக்குகளாக அமைந்திருக்கின்றன.

பிரெடெரிக், தி கிரேட் பற்றிய கட்டுரையில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே இவ்வாறாக எழுதுகிறார்,        “அண்மைக்கால உடன்படிக்கைகளுக்கும் அவை வழங்கும் நீண்டகால உரிமைகளுக்கும் எதிராக நாம் காலாவதியாகிவிட்ட கோரிக்கைகளை வைத்தோமானால் உலகம் ஒருநாள்கூட அமைதியாக இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரியவில்லையா? அனைத்து தேசங்களும் தங்களுடைய சட்டங்களில் நியாயமான ஒரு காலவரயறையை நிர்ணயித்துள்ளன, அதன்படி அந்த காலவரையறைக்குப் பின்னர் உரிமைத் தகுதியினை அதனுடைய மூலம் முறைகேடாக இருந்தால் கூட, அதனைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு மனிதரின் மூதாதையர் பண்டைய காலத்தில் ஒரு அநீதியைப் புரிந்துள்ளார் என்று காரணம் காட்டி அவரை அவருடைய மனையை விட்டு வெளியேற்றுதலும், அதனை தன்னிச்சையாக கையகப்படுத்துவதன் மூலமாக ஏற்படும் தீமைகளையும், அதுமட்டுமின்றி அதனால் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்க நேர்வதையும் நம் அனைவராலும் உணர முடிகின்றது. இது பொதுநலவாயத்திற்கு (Commonwealth) கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கின்றது – எனவே ஒரு சட்டக் கோட்பாட்டினை முன்மொழிகிறோம் – இப்படிப்பட்ட வழக்குளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே அது. மற்றும் இந்த கோட்பாடானது கண்டிப்பாக மாண்புமிகு பொதுநலவாயத்தின் அனைத்து அரசுகளுக்கும் சமமாக பொருந்தும்; ஏனெனில் இந்த பொதுநலவாயத்தில் வழக்குகள் என்பது மாகணங்களின் பேரழிவுக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இடைநிற்றலுக்கும் காரணம் ஆகும்.” (மெக்காலே பிரபுவின் Critical and Historical Essays, லாங்மேன்ஸ் கிரீன் குழுமம், 1877, பக்கம் 666)

மதுராவில் (ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான்) அமைந்துள்ள மசூதி மற்றும் வாரணாசியில் சிவன் வழிபாட்டுக் கோவிலான காசி விசுவநாதர் கோவிலுக்கு அடுத்து உள்ள ஞானவாபி மசூதி ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதிகளை இடித்துத் தகர்க்கக் கோரி அடுக்கடுக்காகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சமீபத்திய மனுக்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் எம். எஸ். கோல்வால்கர் மற்றும் எஸ்.எஸ். ஆப்டே மும்பையில் விஷ்வ இந்து பரிஷத்தினை உருவாக்குவதற்காக ஒரு மாநாட்டை ஒருங்கிணைத்தார்கள் (உலக இந்து மாநாடு). இந்த வி.எச்.பி அமைப்பானது இந்தியா விஷ்வகுருவாக (உலகத்தின் வழிகாட்டியாக) வேண்டும் எனவும் இந்த அமைப்பு உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றும் விருப்பம் கொண்டிருந்தது.

Shahi Idgah mosque

வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராக இருந்த கே.எம். முன்ஷி இந்த 1964 மாநாட்டில் பங்கேற்றிருந்தார். ஜெய சந்திர வாதேயார் மற்றும் சி.பி ராமசாமி அய்யர் வி.எச்.பியின் பழிதீர்க்கும் துணிகரத்தினை மனமார ஆதரித்தனர்.

ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பியை தொடங்கியது, அதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டிருந்தது. 1984 ஏப்ரல் மாதத்தில் வி.எச்.பி அயோத்தி ராமர் கோவிலை “விடுவிக்க” வேண்டும் என்ற தனது உறுதிமொழியைப் பிரகடனப்படுத்தியது. இது முழுக்க முழுக்க ஒரு தந்திர உத்தி மட்டுமே. உண்மையான திட்டம் இன்னும் பெரிதாகவே இருந்தது. வி.எச்.பி மார்க் தர்ஷக் மண்டல் என்னும் ஒரு மத்திய குழுவை ஏற்படுத்தியது. இக்குழு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் “அரசியல் தலைவர்களுக்கான” ஒரு 18 புள்ளிகள் கொண்ட நடத்தை விதிகளை உருவாக்கியது. “அரசியல் தலைவர்களுக்கான” பகுதியில் பின்வருமாறு இடம்பெற்றிருந்தது, “ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பிடங்களையும், காசி விசுவநாதர் கோவிலையும் மற்றும் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களையும் இந்துக்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும்”. இடித்துத் தகர்க்க வேண்டிய மசூதிகளின் பட்டியலில் தில்லியின் ஜம்மா மஸ்ஜித்தும் இடம்பெற வேண்டும் என்று ஆச்சார்ய வாம்தியோ கோரினார்.

Gyanwapi mosque

1984 கூட்டத்தின் நடவடிக்கைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிக்கை நம்மிடம் உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ராம ஜென்மபூமி இயக்கத்தின் முன்னணி நபர்களில் ஒருவருமான தியோகி நந்தன் அகர்வால் அந்த மாநாட்டின் பின்னணியைப் பதிவு செய்துள்ளார். வி.எச்.பி தன்னுடைய உருவாக்கத்திற்காக ஆர்.எஸ்.ஸின் தலைவர் எம்.எஸ் கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்மயானந்தாவின் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி மும்பையில் நிகழ்த்திய முன்னெடுப்புகளுக்கு கடமைப்பட்டிருப்பதாக தெரிவித்தது. அதனுடைய முதல் அமர்வு அலகாபாத்தில் 1966 கும்பமேளாவில் நிகழ்ந்தது. அகர்வால் நினைவுகூர்கிறார்: “தில்லி விக்யான் பவனில், 1984 ஏப்ரல் 7 மற்றும் 8ஆம் தேதியில் நிகழ்ந்த அதனுடைய முதல் அமர்வில், விஷ்வ இந்து பரிஷத்தின் தர்ம சன்சத் ’அயோத்தியின் ராம ஜன்மபூமி, மதுராவின் கிருஷ்ண ஜன்மஸ்தான் மற்றும் வாரணாசியின் ஞானவாபியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய பண்டைய இந்து கோவில்களைத் தகர்த்துவிட்டு பின்பு அங்கு இஸ்லாமிய கொள்ளைக்காரர்கள் கட்டியுள்ள மூன்று மசூதி போன்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்தார். அயோத்தியில் உள்ள பாபர் மசூதி என்று கூறப்படும் மசூதி முதலாவதாக எடுத்துக்கொள்ளபட்டது”.

இதன் மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதிகளை அதாவது அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, மதுராவில் உள்ள மசூதி மற்றும் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி ஆகிய மூன்றையும் அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளை தொடக்கம் முதலே சங்கப் பரிவாராம் (ஆர்.எஸ்.எஸ் – வி.எச்.பி – பா.ஜ.க) தன்னுடைய செயல்திட்டத்தில் கொண்டிருந்தது என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது. மீதமிருக்கும் இரண்டு இலக்குகளையும் அவைக் கைவிடவில்லை. உண்மையில் 1990இல், எல். கே. அத்வானி அதனை பேரம் பேச பயன்படுத்தினார். அதாவது பாபர் மசூதியை இஸ்லாமியர்கள் ஒப்படைத்துவிட்டால், வாரணாசி மற்றும் மதுராவில் உள்ள மசூதிகள் மீதான உரிமை கோரிக்கைகளை அவரும் சங்க பரிவாரமும் கைவிடுவது என்பதுதான் அந்த பேரம்.

இதற்கு முன்னர் தீவிர மதப்பற்றுகொண்ட இந்து தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பால கங்காத திலகர், மதன் மோகன் மாளவியா கூட இந்து வாக்கு வங்கியை அணி திரட்ட சங்க பரிவாரம் எழுப்பியது போன்ற கோரிக்கைகளை எழுப்பியதில்லை.

ஏற்கெனவே பாபர் மசூதியைத் தன்னுடைய “சாதனைகளில்” ஒன்றாக சேர்த்த நிலையில், தற்போது நரேந்திர மோடி மங்கி வரும் தன்னுடைய செல்வாக்கினை மாற்றியமைப்பதற்கு மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு மசூதிகளை பயன்படுத்த ஆயத்தமாயிருக்கிறார் – அதுவும் தன்னுடைய அதே யுக்தியான நீதிமன்றங்கள் வாயிலாக! ஆர்.எஸ்.எஸின் பத்திரிகையான ’ஆர்கனைசர்’ அயோத்தியாவைப் பற்றிய சிறப்புப் பதிப்பில் (ஜனவரி 10 – 2021) அரசர் நரேந்திர மோடி மற்றும் அவரது நாக்பூர் பேராயர் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எழுதிய கட்டுரைகளைப் பிரசுரித்தது. அதில் காசி விசுவநாதர் பற்றி போகிற போக்கில் நிறைய குறிப்புகள் இருந்தன. மற்றபடி அதில் பல்லவி இது தான், “அழிவு மற்றும் மீட்சி என நூற்றாண்டு கால சங்கிலியின் பிடியிலிருந்து ராமஜென்மபூமி விடுதலையாகிவிட்டது”. அமையவிருக்கும் கோவிலானது, “நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக இருக்கும்”. பா.ஜ.கவின் புனைவுகோள்களின் உயிர்நாடி எது என்பதும் அதனுடைய குறிக்கோள் எது என்பதும் அம்பலப்படுவது இந்த இடத்தில் தான் என்பதை கவனிக்கவேண்டும். ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவது என்பது தேசம் முழுவதையும் ஒன்றிணைப்பதற்கான வேலையாகும். “எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ரீ ராமர் அனைவருக்குமானவர், அனைவருக்குள்ளும் வாழ்பவர்”, என்று எழுதியுள்ளார் மோடி.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் எசமானர் மோகன் பகவத்தோ மோடியை முற்றிலும் கைவிட்டுவிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, “ஸ்ரீ ராமர் பாரதத்தின் பெரும்பான்மையான மக்களுக்கான, குறிப்பாக இந்துக்களுக்கான ஒரு கடவுள். ஆனாலும் இந்த ஒட்டுமொத்த இயக்கமும் தேசத்தின் விடியலுக்காக என்ற பெயரில் முடுக்கிவிடப்பட்டுள்ளது”, என்று ஒப்புக்கொள்கிறார்.

கோவிலாக மாற்றப்பட்ட மசூதி:
வழிபாட்டுத் தலங்களை சிதைத்தல் என்கிற படுகேடான ஆட்டத்தைப் பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக அதனை இந்தியாவில் அனைவரும் விளையாடியுள்ளனர். இந்தத் துறையில் முழுமுதல் பாண்டித்தியம் பெற்றவர் ரிச்சர்ட் ஈட்டன், “இத்துறையின் முதன்மை வல்லுநர்” என்று கருதப்படுவர் (அவருடைய “Temple desecration in pre-modern India” அதாவது முன்-நவீன கால இந்தியாவில் கோவில் சிதைப்பு” என்கிற தகவல்களின் மீது ஒளியைப் பாய்ச்சும் கட்டுரையைக் காண்க – ப்ரண்ட்லைன், 22, டிசம்பர், 2020). இந்து மன்னர்கள் பௌத்த கோவில்களை அழித்துள்ளார்கள்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர், சுவாமிநாதன் எஸ். அங்கிலேசரிய ஐயர், அண்மையில் இவ்வாறாக குறிப்பிட்டுள்ளார், “வரலாறு நெடுகிலும் போரில் வெற்றிக்கொண்டவர்கள் வழிபாட்டுத்தலங்களைக் கொள்ளை அடிக்கவும், தகர்க்கவும் செய்தார்கள் என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. வாரணாசியில் ஞானவாபி மசூதியைக் கட்டுவதற்காக ஔரங்கசீப் கோவிலை இடித்தார். இந்து மன்னர்கள் மற்ற இந்து மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டு அவர்களது கோவில்களையும் கொள்ளையடித்தனர் என்று ரிச்சர்ட் ஈட்டன் போன்ற வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்”.

“பல மசூதிகள் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன என்பது பலருக்குத் தெரியாது, முக்கியமாக இந்தியப் பிரிவினையின் போது இருந்த வெறுப்பு நிறைந்த வெறியாட்டதின் போது. சோனிப்பட், ஹரியானவில் இருக்கும் ஜம்மா மஸ்ஜித் துர்கா கோவிலாக மாற்றப்பட்டது. அங்கு பாரம்பரிய இசுலாமிய குவிமாடங்களும் (Domes) மற்றும் மினாரெட்டுகளும் இருக்கின்றன, எனவே அதனுடைய மத குணாதிசயங்கள் மாற்றப்பட்டுள்ளது என்பதனைக் காண்பிக்க எந்த தொல்லியல் ஆய்வு விசாரணையும் தேவைப்படாது.”

அரியானா, ஃபருக்கா நகரில் 1732இல் கட்டப்பட்ட ஜம்மா மஸ்ஜித், பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானிலிருந்து பெருந்திரளாக அகதிகள் வந்த பின்பு இந்து கோவிலாகவும் குருத்வாராவாகவும் மாற்றப்பட்டது. அந்த கட்டடத்தின் ஒரு பாதி தகர்க்கப்பட்ட நிலையில், மூன்று இஸ்லாமிய பாணி குவிமாடங்களும், இரண்டு மினாரெட்டுகளும் மீதமுள்ளன. ஔரங்காபாதில் கிலிஜி வம்சத்தினர் கட்டிய ஜம்மா மஸ்ஜித் தற்போது ஒரு பாரத மாதா கோவிலாக உள்ளது. ஹிசார் நகரத்திலிருந்த தனா ஷியா மசூதி இந்திய பிரிவினை கலவரங்களுக்குப் பின்னர் ’பகவான் தனசேர் கோவில்’ என ஆனது.

“இது ஒரு விசித்திரமான கேள்விக்கு இட்டுச்செல்கிறது. வாரணாசியிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் மசூதிகளை இந்து சமயத்திற்கு மீட்கக்கோரும் வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதியுமேயானால் அதேநேரத்தில் கோவில்களாக மாற்றப்பட்டுள்ள மசூதிகளைத் திரும்ப இசுலாமிய சமயத்திற்கு மீட்பதைப்பற்றி கருத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா?”(தி டைம்ஸ் ஓப் இந்தியா, ஏப்ரல் 18, 2021. (மேலும் படிக்க – “Target Varanasi”, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் பூர்ணிமா த்ரிபாதி, ப்ரண்ட்லைன், நவம்பர் 24, 2018.)

நான்கு வருடங்களுக்கு முன்னால் ஆடுரே ட்ருஷ்கேவின் Aurangzeb: The Man and the Myth (பென்குவின் பதிப்பகம்) வெளியிடப்படும் போது உருவாக்கிய சச்சரவுகள் நினைவிருக்கிறதா? அது ஔரங்கசீபை நியாயப்படுத்தாமல், ஓர் அறிவார்ந்த வேலைப்பாடாக, நுணுக்கங்கள் கொண்டதாக, ஜாதுநாத் சர்க்காரின் வேலைப்பாடு போல் அல்லாமல் (ஆடுரே அதனை “மதவாத” கண்ணோட்டம் கொண்டது என சரியாகக் குறிப்பிடுகிறார்) அனைத்து செறிவுமிக்க ஆய்வுகள் எப்படி இருக்குமோ அவ்வாறாகப் படைத்திருந்தார். அதன் தகுதிக்கேற்ப அனைத்து முன்னணி ஆங்கில நாளிதழ்களும் அந்தப் புத்தகத்தைப் பாராட்டி எழுதின. மோடியின் ஆட்சியில் அறிவற்ற மதவெறியர்கள் ஏற்படுத்தும் சச்சரவுகளால் பல வெளிநாட்டு அறிவுஜீவிகள் மீண்டும் இந்தியாவிற்கு வருவதை தவிர்த்துள்ளனர்.

கோவில் இடிப்பு: அரசியல் அன்றி மதத்திற்காக அல்ல
ஒளரங்கசீப் கோவிலை இடித்ததற்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமே அன்றி மத நோக்கங்கள் கிடையாது. இப்படி சொல்வது அச்செயல்பாடுகளை நியாயப்படுத்தவதற்காக அல்ல, மாறாக சரியானப் பரிமாணத்தில் பார்ப்பதற்காக.

எந்த தயக்கமுமின்றி இந்த கருத்துச் சாறம் பற்றிய பகுதிகளை விரிவாக மேற்கோளிடுகின்றேன். அவை பின்வருமாறு:

“பண்டைய சிலைகள் கோவில்களை வீணாக கிடப்பில் போட்டிருப்பதென்பது நீதிக்கு புறம்பானதாகும். மேலும் பண்டைய காலந்தொட்டு வழக்கமாக இருந்துவரும் குளங்களில் செய்யப்படும் நீர்ச்சடங்குகளை தடை செய்வதை நீங்கள் முடிவு செய்ய முடியாது” – இது இஸ்லாமிய சட்ட நிபுணர்கள் வருங்கால தில்லி சிக்கந்தர் லோதிக்கு (ஆட்சிகாலம்: 1489 – 1517) வழங்கிய அறிவுரை.

“முகலாய ராச்சியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான இந்து மற்றும் சமண கோவில்களில், அனைத்துமே மீதமில்லை எனினும், பெரும்பான்மையானவை ஔரங்கசீப்பின் ஆட்சிக்கால முடிவின் போது அதே நிலையில் தான் நின்றிருந்தன. ஔரங்கசீப் ஆணையிட்டு எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டது அல்லது எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது போன்ற சரியான கணக்குகள் யாருக்கும் தெரியாது, தெரிந்துக்கொள்ளவும் முடியாது. இத்துறையின் முதன்மை வல்லுநர், ரிச்சர்ட ஈட்டன் உறுதிசெய்யப்பட்ட கோவில் இடிப்பு எண்ணிக்கையாக பன்னிரண்டு அல்லது அதற்கு சற்று கூட இருக்கலாம் என்கிறார், அதில் அரசரின் நேரடி கட்டளையினால் இடிக்கப்பட்டது சிலது தான் என்கிறார். ஈட்டனின் கணக்கெடுப்பில் விடுபட்ட கோவில் இடிப்புகளை மற்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், சோமநாத கோவிலை இடிப்பதற்காக இரண்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது ஒன்று 1659இல் மற்றும் 1706இல் (இரண்டாவது ஆணை இருப்பதன் மூலம் முதலாவது ஆணை நிறைவேற்றப்படவில்லை என்பதை ஊகித்துக்கொள்ளலாம்). ஔரங்கசீப் தனது மேற்பார்வையில் கோவில்களை சிதைவுகளுக்கும் உள்ளாக்கினார். உதாரணமாக 1645இல் சமண வணிகர் சாந்திதாசால் கட்டப்பட்ட அகமதாபாத் சிந்தாமணி பரசுவநாத் கோவிலில் மிஹ்ராபுகளை (மசூதிகளில் இருக்கும் வழிபாட்டு சுவர்கள்) எழுப்ப உத்தரவிட்டார். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் கூட ஈட்டன் இவ்வாறாக குறிப்பிடுகிறார், “அதற்கான ஆதரங்கள் கிட்டத்தட்ட துண்டுதுண்டாகவோ, முழுமையற்றதாகவோ அல்லது முரண்பட்டதாகவோ தான் இருக்கின்றன.” இப்படியாக எடுத்துக்கொண்டால், உறுதி செய்யப்பட்டதை விட கூடுதலான கோவில்களை ஔரங்கசீப் இடித்திருக்கக்கூடும் (மொத்தமாக சேர்த்து சில டஜன் இருக்கலாம்), ஆனால் நாம் வந்து அடைந்திருப்பதோ ஒரு கரிய திரையினால் மூடப்பட்டுள்ள ஒரு புலப்படாத கடந்த காலமாகும்.

“அரசியல் நிகழ்வுகள் தான் ஔரங்கசீப்பை குறிப்பிட்ட சில இந்து கோவில்கள் மீது தாக்குதல்களை முன்னெடுக்க காரணமாக இருந்தது. உதாரணமாக, ஔரங்கசீப் 1669இல் பெனாரசின் விசுவநாத கோவிலையும், 1670இல் மதுராவின் கேசவ தேவா கோவிலையும் இடிக்க உத்தரவிட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் கோவில் நிர்வாகிகளின் அரசியல் தவறுகளை தண்டிப்பதற்காகவும், மேற்படி அவர்கள் மொகலாய அரசிற்கு கீழ்ப்படிதலை உறுதி செய்யவும் மேற்கொண்ட முயற்சியாகும்.

“மத நிறுவனங்கள் தகர்க்கப்படுவதற்கு அரசியல் நோக்கம் ஒரு காரணமாக அமையலாம் என்னும் கருத்தே இன்றைய காலத்தில் பல மக்கள் மத்தியில் கோபத்தை வரவழைக்கிறது, ஆனால் நவீன காலத்துக்கு முன்பு வாழ்ந்த இந்தியர்கள் மதத்திற்கும், அரசியலிற்கும் இடையில் ஒரு உறுதியான கோடு எதையும் வரைந்திடவில்லை. மாறாக, இந்துக்களும் சரி, இசுலாமியர்களும் சரி, கோவில் என்பதை அரசியல் நடவடிக்கையுடன் சம்பந்தமுடைய விஷயமாகவே அர்த்தம் கொண்டனர். ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாய் கருதக்கூடிய ’சம்ஸ்க்ருத ப்ரிகட்சம்கிதா’ இவ்வாறாக எச்சரிக்கின்றது, ‘ஒரு சிவ லிங்கமோ, படமோ அல்லது கோவிலோ உடைந்து போனால், நகர்ந்தால், கஷ்டப்பட்டால், அழுதால், பேசினால் அல்லது எந்த காரணமுமின்றி செயற்பட்டால், அது அந்த அரசருக்கும், அவருடைய ராச்சியத்திற்கும் அழிவு நேரும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.’ மத உருவங்கள் அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த சூழலை எதிர்கொண்டிருந்த இந்து அரசர்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் ஒருவர் மற்றவருடைய கோவில்களை குறிவைத்து கொள்ளையடிப்பதையும், துர்கா, விநாயகர், விஷ்ணு மற்றும் பல உருவங்களை சிதைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். பருவந்தோறும் ஒருவர் மற்றவருடைய கோவில்களை அழித்தனர். சில இந்து அரசர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டாடுவதற்காகவும், நினைவுகூர்வதற்காகவும் சமஸ்கிருத பாடல்களை உருவாக்குவதற்கான குழுவையும் நியமித்தனர். இந்திய – முகலாய ஆட்சியாளர்கள், ஔரங்கசீப் போன்றோர் இதனைப் பின்தொடர்ந்து அரசு தண்டனை விதிப்பதற்கான முறையான இலக்குகளாக இந்து கோவில்களை கருதினர்.

“பெனாரசின் விசுவாதர் கோவிலின் பெரும்பான்மை பகுதியினை 1669 ஆம் ஆண்டு ஔரங்கசீப் தரைமட்டமாக்கினார். இந்த கோவில் அக்பரின் ஆட்சிக்காலத்தில் ராஜா மான் சிங் என்பவரால் கட்டப்பட்டது, இவருடைய கொள்ளுப்பேரன் ஜெய் சிங் என்பவர் தான் 1666ஆம் ஆண்டு சிவாஜியையும், அவருடைய மகன் சம்பாஜியையும் முகலாய நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்செல்ல உதவினார் என்று பலரால் நம்பப்படுகிறது. (இதே ஜெய் சிங் தான் இதற்கு முன்னர் சிவாஜி மீது புரந்தர் என்னும் இடத்தில் இராணுவ தாக்குதலை வழிநடத்தினார்.) கூடுதலாக, 1669 ஆம் ஆண்டு விசுவநாதர் கோவிலுடன் தொடர்புடைய பெனாராஸ் நிலக்கிழார்கள் மத்தியில் கிளர்ச்சி வெடித்தது, அதில் பலர் சிவாஜி தப்பிச்செல்வதற்கு காரணமாகவும் இருந்தார்கள்.

“இதே மாதிரியான அடுக்கடுக்கான அரசியல் காரணங்களினால், 1618ஆம் ஆண்டு பீர் சிங் பண்டேலாவால் கட்டப்பட்ட மதுராவின் கேசவ தேவா கோவிலினை ஔரங்கசீப் 1670 ஆம் ஆண்டு அழித்தார். 1666ஆம் ஆண்டு சிவாஜி மதுராவை விட்டு வெளியேறுவதற்கு மதுரா பார்ப்பனர்கள் உதவி இருக்கலாம். அதுமட்டுமின்றி, கேசவ தேவா கோவில், ஔரங்கசீபின் சிம்மாசனத்திற்கான முக்கிய எதிரி தாரா சிக்கோவின் ஆதரவைப் பெற்றிருந்தது. இன்னும் சமீபத்தில் 1669 மற்றும் 1670 ஆண்டுகளில் அந்த பகுதியில் நிகழ்ந்த ஜாட் எழுச்சிகள் முகலாயர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தின. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஔரங்கசீப் இது போன்ற காரணங்களுக்காக ஜோத்பூர், காந்தேலா மற்றும் பிற பகுதிகளில் இருந்த கோவில்களை இடித்தார். பின்னர் கேசவ தேவா மற்றும் விசுவநாதர் கோவில்கள் இருந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டிருப்பினும், அவை வேறு சூழ்நிலைகளின் கீழ் கட்டப்பட்டவையாகும். இன்று பெனாரசில் இருக்கும் ஞானவாபி மசூதியில், பாழடைந்த கோவிலுடைய சுவரின் ஒரு பகுதியும் மசூதியுடன் இணைந்தவாறே நிற்கிறது. இந்த மறுபயன்பாடு என்பது, முகலாய அதிகாரத்தை எதிர்த்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதனை கூறும் மதப்போர்வைகொண்ட அறிவிப்பாகவும் இருக்கலாம். வசதிக்காகவும் இப்படியான மீள்பயன்பாடு தேவைப்பட்டிருக்கலாம். ஞானவாபி மசூதியின் காலம் ஔரங்கசீப்பின் காலகட்டத்தைக் குறித்தாலும், இதனுடைய பயன்பாட்டாளர்கள் யார் என்பது அறியப்படவில்லை, இந்த கட்டடத்தைப் பற்றி எந்த முகலாய ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.

“ஔரங்கசீபின் நேரடிச் செலவில் மதுராவின் கேசவ தேவா கோவில் மசூதியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனை ஜாட் எழுச்சியின் போது நிகழ்ந்த முகலாய தளபதியும், மதுராவின் முக்கிய மசூதியின் ஆதரவாளருமான அப்துல் நபி கானின் இறப்பைக் கொண்டு விளக்கலாம்.
அப்துல் நபியின் இறப்புக்குப் பின்னான வெறும் எட்டு மாதங்களில், மதுரா மசூதிகளுக்கான ஆதரவு வீழ்ச்சியடைகிறது, கேசவ தேவா கோவிலும் அழிவுக்குள்ளாகிறது.

“முகலாயர்களின் கோவில் அழிப்பு அரசியலை நம்மால் எடுத்துக்காட்ட முடிந்தும், சாதாரண பார்வையாளர்கள் ஒருபோதும் குறிப்பிட்ட தலங்கள் தாக்கப்பட்டதற்கான மெய் அரசியலினைப் புரிந்துக்கொள்வதில்லை. பல இந்து மற்றும் சமண சிந்தனையாளர்கள் கோவில் அழிப்புகளைக் கலியுகத்தின், அதாவது தற்போதைய காலத்தின் சீரழிவு என தொடர்புப்படுத்தி வரையறுக்கிறார்கள். இசுலாமிய எழுத்தாளர்கள் கோவில் அழிப்புகளைப் பற்றி எடுத்துரைக்கும்போது ஜிஹாத் அல்லது வேறு ஏதாவது மதம் சார்ந்த கருத்தாக்கத்தைக் கொண்டோ விளக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த வழக்கமானது, இசுலாமிய சட்டம், அரசுடைய நலனுக்காக மத நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிப்பதை அனுமதிக்கவில்லை என்றாலும், ஆனால் இசுலாத்தைப் பரப்புவதற்கு என்றால் அந்த செயல்களை நியாயப்படுத்தும் கருத்தையொட்டியதாக இருக்கலாம். இந்த தர்க்கம் கலாச்சார ரீதியில் பொருத்தமானதாக இருந்தாலும், அந்த தர்க்கத்தால் ஔரங்கசீப்பின் இந்தியாவில் கோவில் இடிப்புக்கான வரலாற்றுப்பூர்வமான, ஏற்புடைய விளக்கத்தைக் கொடுக்க இயலவில்லை.

சட்டங்கள் என்ன சொல்கின்றன
1991 ஆம் ஆண்டில் வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991 இயற்றப்பட்டது.
அந்த சட்டத்தின் பிரிவு (3), ஒரு மத வகுப்பின் வழிபாட்டு தலத்தை அதிலிருந்து மற்றொரு மத வகுப்பிற்கு மாற்றப்படுவதை தடைசெய்கிறது.

பிரிவு நான்கு, ஒரு வழிபாட்டுத் தலம் ஆகஸ்ட் 15, 1945 இந்தியா விடுதலை அடைந்த போது எந்த மதத் தன்மையுடன் இருந்ததோ அவ்வாறாகவே இருப்பதைப் பாதுகாக்கிறது. அந்த நாள் வரை மேற்கொள்ளப்பட்டு இருந்த மதத் தன்மை மாற்றம் தொடர்பான வழக்குகள் அன்று முதல் முடிவு பெற்றதாகவும், அந்த தலங்களின் நடைமுறை நிலைமை என்னவாக இருந்ததோ அதுவே தொடரும் என்றும் கூறுகிறது.

சட்டத்தின் பிரிவு (5) இந்த சட்டமானது அயோதியாவின் பாபர் மசூதிக்கு பொருந்தாது என்று கூறுகிறது. இது தொடர்பான மற்ற சட்டங்கள் மீதான மேலாணையாக இந்த சட்டம் அமையும் (பிரிவு 7). பிரிவு 4(3) இந்த சட்டத்திற்கான விதிவிலக்குகளைக் கொண்டுள்ளது. “எந்த வரலாற்று நினைவுச்சின்னத்துக்கும் அகழ்வாய்வு தலங்களுக்கும்” இந்த சட்டம் பொருந்தாது. இந்த கூறு(அ) சந்தேகமின்றி மூன்று மசூதிகளுக்கும் பொருந்துகிறது.

ஆனால் தொன்மை நினைவுச்சின்னங்கள், அகழ்வாய்வு தலங்கள் மற்றும் எஞ்சியிருப்பவை சட்டம், 1958 பாபர் மசூதியைக் காப்பாற்றியிருக்க வேண்டும். தொடக்கநிலையிலிருந்தே இந்த சட்டத்தினைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த சட்டமானது மதுரா, வாரணாசி மற்றும் அயோத்தியா உட்பட மூன்று மசூதிகளுக்கும் நன்றாகவே பொருந்துகிறது. “வரலாற்று” நினைவுச்சின்னம் என்பதன்படி இந்த மூன்றும் கூறு(அ)வின் கீழ் நேரடியாக பொருந்தும்.

“இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன்னர் இருந்த தகராறுகள்… அந்த தரப்பினராலேயே தீர்வுகண்டிருப்பின்” என்ற 1958 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கூறு(இ) மதுராவின் சாஹி இத்கா மசூதி தரப்புக்கும், மதுராவின் கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்க தரப்புக்கும் சந்தேகமின்றி பொருந்தும். இந்த தீர்வு என்பது இரு பக்கத்தின் அங்கீகாரத்தையும் முழுமையாகப் பெற்றதாகும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இருக்கும் இந்த சுமுக நிலை என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்றாநாமா (உருது மொழி – உடன்படிக்கை) ஆகும். இரு தரப்புகளாலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. சாஹி மசூதி மற்றும் கிருஷ்ண ஜன்மஸ்தானிற்கான எல்லைகள் நுட்பமான விவரங்களுடன் துல்லியமாக ஆவனத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முழு ஒப்பந்தத்தை காண – The Babri Masjid Question – தொகுத்தது – ஏ.ஜி. நூராணி, தூளிக்கா புத்தகங்கள், 2003, பக்கங்கள் 316 – 318, 2ஆம் தொகுதி)

1991ஆம் சட்டத்தின் பிரிவு4(3) இன் கூறுகள் (ஈ) மற்றும் (உ) வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு பொருந்தும். அது பின்வருமாறு, “ஈ) இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன்னர் இப்படியான தலங்கள் எந்த எதிர்ப்புமின்றி மாற்றத்துக்கு உள்ளாகியிருப்பின்”. மசூதியாக மாற்றப்பட்ட முந்நூறு ஆண்டுகளில் எந்த எதிர்ப்பும் இருந்ததில்லை.

உறுப்பு (அ) குறிக்கும் வரம்புகளுக்கான தடைகள் தெளிவாக பொருந்துகின்றன.

பாபர் மசூதி வழக்கில் ஐந்து நீதிபதி அமர்வு ஒருமனதாக இந்த சட்டத்தினைப் பாராட்டியது (எம். சித்திக் எதிர் மஹந்த் சுரேஷ் தாஸ் (2020 I உச்சநீதிமன்ற வழக்குகள் I பக்கங்கள் 247 – 253). தீர்ப்பின் 252வது பக்கம் 103வது பத்தியில் நீதிமன்றம் இவ்வாறாக கூறுகிறது, “வழிபாட்டுத் தலங்கள் சட்டமானது ஒரு மதச்சார்பற்ற அரசுக்கான கடமைகளுடன் இயற்கையாகவே தொடர்புடையதாகும். ஒரு ஏழு நபர் அமர்வினால் மட்டுமே இந்த சட்டத்தை மீறி தீர்ப்பளிக்க முடியும்.” ஆனால் எதற்காக? எந்த எல்லை வரை? திரும்பவும் பாபர் மசூதி வழிவகையிலா?

அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பிரகடனம் செய்ததை அலகாபாத் உயர்நீதிமன்றம் புறந்தள்ளி இந்து தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. உயர்நீதிமன்றம், வழக்கின் அடிவேர் வரை சென்று, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் தவறு என்றே கருதியது. அது பெரும் பிழையாகும்.

மசூதி இடிக்கப்பட்டதற்கு பின்னர், சம்பந்தப்பட்ட இடங்களைப் பெறுவதற்காக “அயோத்தியில் சில பகுதிகளைக் கையகப்படுத்தும் சட்டம், 1993” என்ற சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் ஒரு கேள்விக்கான ஆலோசனை கருத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாடினார். இது நிகழ்ந்த நாள் ஜனவரி 7, 1993, இந்த அவசர சட்டம் (பின்னாளில் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது) பிறப்பிக்கப்பட்ட அதே நாளாகும். நீதிமன்றத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்குறிப்பு என்னவென்றால், மசூதி கட்டப்படுவதற்கு முன்னர் அங்கே ஒரு இந்து கோவில் இருந்ததா? இல்லையா? என்பதே. சட்டத்தின் பிரிவு 4(3) கையகப்படுத்தப்பட்ட அந்த நிலத்தின் உரிமையாளர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்கிறது. செப்டெம்பர் 14, 1994 அன்று, அரசு கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிலங்கள் இந்துக்களிடம் கொடுக்கப்படும் என்றும், இல்லை என்றால், “அரசின் நடவடிக்கைகள் இசுலாமிய சமூகத்தின் விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. இஸ்மாயில் ஃபாருக்கி சி, மற்றவர்கள் எதிர் இந்திய ஒன்றிய அரசு, மற்றவர்கள் வழக்கில் (1994, ஆறு உச்சநீதிமன்ற வழக்குகள், 360) சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யும் பிரிவு 4(3)ஐ நீக்கி உத்தரவிட்டது. இதனை பொறுத்தவரை நீதிமன்றம் ஒருமனதாக உத்தரவினை வழங்கியது.

சட்டத்திலிருந்து பிரிவு 4(3)ஐ மட்டும் தனியாக துண்டிக்கமுடியுமா என்ற கருத்தில் மட்டும் நீதிபதிகள் மத்தியில் கருத்து வேற்றுமை இருந்தது. நீதிபதிகள் ஏ.எம். அஹ்மாதி மற்றும் எஸ்.பி.பரூச்சா இருவரும் அப்பிரிவினை மட்டும் துண்டிக்கமுடியாது என்று கருதி முழு சட்டத்தையும் ரத்து செய்தனர். இந்தியாவின் தலைமை நீதிபதி எம்.என் வெங்கடாசலய்யா மற்றும் நீதிபதிகள் ஜே.எஸ். வர்மா மற்றும் ஜி.என்.ரே அவ்வாறு துண்டிக்கமுடியும் என்று கருதி மீதமிருந்த சட்டத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்தனர். ஐவரும் குடியரசுத் தலைவரின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு மறுத்துவிட்டனர்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நீதிபதி ஜே. எஸ். வர்மாவினுடைய கருத்து பொருத்தமானது: “சர்ச்சைக்குரிய இடத்தினை எந்த தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற முடிவினை நிலுவையிலுள்ள வழக்குகளை இனிமேல் தள்ளுபடி செய்வதன் மூலம் தீர்மானிக்க முடியாது. அப்படி செய்வதனால் இசுலாமிய சமூகம் எழுப்பியிருக்கும் பல வாதங்களும் மறைந்து போய்விடும், 1528ஆம் ஆண்டு மீர் பாக்கியால் கட்டப்பட்ட மசூதி இருந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தை 400 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உடைமையாக வைத்திருந்தது என்ற வாதம் உட்பட. அதே நாளில், அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 143(1)ஐ பயன்படுத்தி இந்த நீதிமன்றத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்குறிப்பின் முடிவையே இந்த பிரச்சினைக்கான மாற்றுத் தீர்வு பொறிமுறையாகக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் முன்வைத்த மற்றும் பிரச்சனையின் மையக் கேள்வியான (இடம் யாருடையது என்கிற) நிர்ணயதித்தினைப் பற்றி நீதிமன்றத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்குறிப்பில் உள்ளடக்கமாகக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது, மற்றும் இசுலாமிய சமூகம் எழுப்பிய வாதங்களையும் அதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அந்த கேள்விக்குறிப்புக்கான பதில், எதுவாக இருப்பினும், அது அந்த நிலுவையிலிருந்த வழக்குகள் முன்வைத்த மையக் கேள்வியான நிர்ணயம் யாருக்கானது? என்கிற கேள்விக்கான பதிலுக்கு இட்டுச்செல்லாது என்பது தெளிவாகிறது, மட்டுமில்லாமல் அது சர்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்திற்காக நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வையும் தேடித்தராது. எனவே, சட்டப்பிரிவு 4(3)னால் தள்ளுபடிக்குள்ளாகும் நிலுவை வழக்குகளுக்கான பயனுள்ள மாற்றுத் தகராறு தீர்வு பொறிமுறையாக உறுப்பு 143(1)இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விகுறிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது.”

இருப்பினும் அக்டோபர் 2002, 23ஆம் தேதி அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த இடத்தில் நிலம் ஊடுருவும் ரேடார் அல்லது ஊடுக திரியல் தொழில்நுட்பம் (Ground Penetrating Technology or Radar) மூலம் ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வகத்திற்கு (ASI) உத்தரவுகள் விடுத்தது. பிப்ரவரி 17, 2003 அன்று அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் ஆய்வு செய்த இடத்தில் முரண்பாடுகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் குறிப்பிட்டது. மார்ச் 5, 2003 அன்று அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு நீதிமன்றம் இந்திய தொல்லியல் ஆய்வகத்திற்கு உத்தரவிட்டது.
அதன் விளைவாக, குடியரசுத் தலைவரின் கேள்விக்குறிப்பு புறவாசல் வழியாக அமல்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் கேள்விக்குறிப்பில் இவ்வாறு இடம்பெற்றிருந்தது, “ராம ஜென்மபூமி – பாபர் மசூதி தாங்கி நின்ற நிலப்பரப்பில் அதற்கு முன்னர் ஏதேனும் ஒரு இந்து கோவிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ அமைந்திருந்ததா?…” இதே கேள்விக்கான பதிலை தான் உயர்நீதிமன்றம் இந்திய தொல்லியல் ஆய்வகத்திற்கு இட்ட உத்தரவில் பின்வரும் வரும் வரிகளில் கேட்டது:
“சர்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டப்படுவதற்கு முன்னால் அங்கு கோவிலோ அல்லது கட்டடமோ இடிக்கப்பட்டதா?” இவ்வாறாக உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறியதற்காகவே, அதனுடைய தீர்ப்புகள் நிராகரிப்புக்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

இதற்கு முன்னர் எப்பொழுதாவது உரிமைக் கோரும் உரிமையியல் வழக்குகளில் இப்படிப்பட்ட அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இம்முறை அவ்வாறு செய்யப்பட்டது, ஒருமனதாக தாங்கள் வழங்கிய தீர்ப்பை மீறியதற்காக ஒரு வார்த்தை கண்டனத்தைக் கூட உச்சநீதிமன்றம் பதிவிடவில்லை.

உண்மையில், இந்த வழக்கின் தொடக்கத்திலேயே அகழ்வாய்வுக்கும் அதனுடைய முறைகேடான கண்டுபிடிப்புகளுக்கும் காரணமான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துவிட்டு, மீதமிருக்கும் பிரச்சனைகளுக்கான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நியாயமான பாதை ஏன் பின்பற்றப்படவில்லை என்பது அதனுடைய தீர்ப்பின் மூலம் அம்பலமாகிறது.

 

Shahi Idgah mosque and Gyanwapi mosque: next targets of RSS – Frontline, May 2020

கட்டுரையாசிரியர்: ஏ.ஜி. நூராணி

தமிழ் மொழிபெயர்ப்பு: எம். சதீஷ்

https://frontline.thehindu.com/the-nation/communalism/rss-sangh-parivar-campaign-kashi-mathura-temples/article34563142.ece/amp/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW