15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – ஐ.டி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை திறந்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும்!

18 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 9)

கொரோனாவிற்கு முன்னர் பழைய மகாபலிபுரம் சாலை (ஒ.எம்.ஆர்) சிருசேரி செல்வது என்பது ஒரு ஊருக்கு பயணம் போவது போல் 1 மணியிலிருந்து 2 மணி நேரமாகும், அவ்வளவு வாகன நெரிசலான பகுதி அது. இப்போது 45 நிமிடங்களில் செல்லும் அளவுக்கு அந்த சாலையே வெறிச்சோடி இருக்கிறது. வானுயர கட்டிடங்களும் அலங்கார விளக்குகளும் இரவு பகல் எது என தெரியாதது போல் இயங்கிய ஒஎம்அர் சாலை கொரோனா பெருந்தொற்றின் பொதுமுடக்கத்தின் விளைவாக கடந்த மார்ச் 2020 முதல் 15  மாதங்களாக  வெறிச்சோடி இருக்கிறது. முதல் அலை முடிந்தபின் OMR சாலையில்  50% அளவுக்கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கடைகள், தொழில் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மூடிய வண்ணமே இருந்தன. செயல்பாட்டில் இருந்த கடைகளும், தொழில் நிறுவனங்களும் பாதியளவு வணிகம் கூட நடக்கவில்லை.  ஈட்டிய வருமானமும் மாதாந்திர செலவுகளுக்கே போதுமானதாய் இருந்தன. சாலையோர சால்னா கடைமுதல் ஒய்யார உணவுவிடுதிவரை முதலுக்கு ஏற்றார்ப்போல் லாபம் ஈட்டி வந்தனர். ஏதோ ஒரு வேலைசெய்து பிழைத்தும் கொள்ளலாம், மேலும் சிறு தொழிலையோ கடையையோ நடத்திய ஒருவர் குறுகிய காலத்தில் வளருவதற்கு வாய்ப்பு இருந்தது.

ஐ டி துறையின் அசுர வளர்ச்சி தான் இந்த பகுதியின் அபிரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாய் இருந்தது. எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அதே அளவு வேகமாக சரிவை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சம் மக்களை சூழ்ந்து உள்ளது. மென்பொருள் நிறுவனங்களுக்கோ, அதில் பணிபுரியும் மென்பொருள் ஊழியருக்கோ எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அந்த மென்பொருள் நிறுவனங்களை நம்பி கட்டப்பட்ட வீடுகள்,  குடியிருப்புகள் காலியாகி இருக்கிறது, நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உண்பதற்காக நடத்தப்பட்ட உணவுக் கடைகள், தங்கும் விடுதிகள், தேநீர் கடைகள் என அனைத்தும் ஈ ஒட்டிக் கொண்டு இருக்கின்றன, துணிக்கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. தங்கும் விடுதிகள் எலிகள் குடியிருப்பாக மாறிப்போகும் அபாயத்தில் உள்ளது. மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் விட்டிலிருந்தே பணி செய்வதால் நிறுவனங்களுக்கு செலவு குறைந்து வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ருசிக் கண்ட பூனை சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில்  லாபம் மட்டுமே நோக்கமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை தவறவிடுமா?  அலுவலகம் வரவழைத்து வேலை வாங்குவதை விட வீட்டில் இருந்து வேலைவாங்குவது லாபகரமானதாக இருப்பதனால் பழையமுறைக்கு முற்றுபுள்ளி வைத்து விடலாமா என்று லாபகணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள்.

நிலைமை இப்படி இருக்க நாம் மக்களிடமே கேட்போம் என்று நாங்கள் சென்று காரப்பாக்கத்தில் தங்கும் விடுதி நடத்தும் தெரிந்த அக்காவிடம் இருந்து எங்கள் ஆய்வை தொடங்கினோம். கொரானவிற்கு பின்னான நிலைமை என்னவென்று கேட்க, “கொரானா முதல் அலைக்கு முன்னாடி போன பசங்க இன்னும் திரும்பல அதுக்குள்ள இரண்டாவது அலை வந்திடுச்சி அவ்வளவுதான் இனி பசங்க வரமாட்டங்க 90% .டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தான் எங்கள் வாடிக்கையாளர்கள். தற்போது வீட்டிலிருந்தே அவர்கள் வேலை செய்வதால் எங்கள் விடுதிகள்  தேவையற்றதாகிப் போனது பழைய பசங்கள விசாரித்தா 2021 முடியும் வரை எங்களுக்கு வீட்டிலிருந்து தான் வேலை என்று கம்பெனி கூறுவதாக சொன்னார்கள் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேலே முதலீடு செய்து 4 விடுதிகள் நடத்துகிறேன் பற்றாததற்க்கு வீடு கட்டியிருக்கிறேன் எல்லாம் கடன் வாங்கிதான். 2020 மார்ச் மாதம்வரை நான் நட்டம் அடையல ஆனா கொரோனாக்கு பிறகு எல்லாமே தலைகீழ் ஆகிவிட்டது. இனிமே லாபம்  என்ற ஒன்று இருக்குமா தெரியல. என்னோட விடுதியில் 40 பேர் வேலை செய்தாங்க ஆனால் இப்போது நாலுபேரு தான் வேலை செய்யுறாங்க. கண்ணுக்கு தெரிந்து 36 பேருக்கு வேலைபோச்சி இது மாதிரி கிட்ட தட்ட 3000 விடுதியிருக்கும். கோட்டூர்புரத்தில் இருந்து திருப்போரூர் வரை அப்ப நீங்களே கணக்கு போட்டுகங்க. கொரோனா தொடங்கியதிலிருந்து இதுவரை விடுதி வாடகை கொடுக்க முடியல  மின்சாரக் கட்டணம் மட்டும் செலுத்துகிறேன் பயன்படுத்தவில்லை என்றாலும் மாதாந்திர தொகை செலுத்தியாக வேண்டும் இல்லையென்றால் இணைப்பு துண்டிக்கப்படும்... சேமித்து வைத்த பணம் எல்லாம் வாங்குன கடனுக்கு வட்டி கட்டியாச்சு. எல்லாம் சரியாகிடும் என்ற நம்பிக்கையில் வங்கி கொடுத்த 6 மாத தளர்வை கூட பயன்படுத்தல. எங்க நிலைமைதான் இப்படி என்றால் எங்களை சார்ந்து தொழில் செய்றவங்களூம் இப்படிதான் உதாரணத்துக்கு லாரியில் குடி தண்ணீர் விற்பவர்கள், கழிவுநீர் ஊர்தி, மளிகை கடை, காய்கறிகடை, என பலரும் அவரவர் தொழில்களிள் பலனடைந்து வந்த நிலையில் இந்த சங்கலி அறுந்துவிட்டது, எப்படியிருந்தாளும் வாழ்ந்துதானே ஆகணும்” என்றார் .

துணிக்கடைக்கு போனோம், பொதுமுடக்கத்தின் பின்னான பொருளாதாரம் எப்படி இருக்கு என்று கேட்டோம் “50%க்கும் குறைவா  தான் நடக்குது. வாடகைக்கும் சம்பளத்துக்குமே சரியா போகுது துணியோட விலையும் ஏறிடுச்சு, சீனா தான் கொரோனா பறப்புனதுனு அமெரிக்க சொன்னதும் அங்க இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று சொன்னதின் விளைவு சீனாவிலிருந்து பருத்தி வாங்கிகிட்டு இருந்த நிலைமாறி வங்கதேசம் இந்தியாவுல இறக்குமதி செய்ய தொடங்கிடுச்சு… அதனால பருத்திக்கான தட்டுபாடு எற்பட்டு விலை 30% உயர்ந்துவிட்டது. அதன் உடனடி விளைவு துணிகளோட விலை உயர்வு.  ஒரு உள்ளாடை விலை 140 ருபாய இருந்தது 200 ஆக விலை ஏறிடுச்சு. ஏற்றத்தை அப்படியே நுகர்வோர் தலையில கட்ட முடியாது ஏனா எங்க கடையில் வாங்குறவங்க பெரும்பாலும் நடுத்தரமக்கள் தான் எங்க லாபத்தை குறைத்து முதலுக்கு மோசமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் இதே நிலை நீடித்தால் கடையை மூடிட்டு ஊர்பக்கம் போய் சேர வேண்டியது தான்” என்று சொன்னார். ‘கொரானா காலத்துல வாடகை குறைக்கவில்லை முதல் அலையின் முழு முடக்கத்தின் 3 மாதங்கள் மட்டும் 30% குறைச்சாங்க அவ்வளவுதான் 2 வது முழு முடக்கத்தில் 1 மாத வாடகையை 20% குறைச்சாங்க அதுக்கப்புறம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் அவங்களும் என்னபண்ணுவாங்க’ என்று முடித்தார்.

ஒஎம்அர் சாலையில் உள்ள படூர் என்ற ஊரில் பிரியாணி கடைக்கு சென்று விசாரித்தோம் வியாபாரம் எல்லாம் எப்படி போகுது என்று வினா எழுப்பியதும் ‘வியாபாரம் ஒன்னும் பெருசா நடக்கல சார் என்றார் ஒரு நாளைக்கு 10-12 ஆயிரம் ருபாய்க்கு விற்பனை ஆகும் ஆனா இப்போ 3-4 ஆயிரம் கூட விற்கமாட்டிங்குது என்றார். நாங்க மேற்கு வங்கத்தை சேர்ந்தவங்க முதல் கொரோனாவுக்கு ஊருக்கு போனவங்க செப்டம்பர் மாதம் தான் வந்தோம் வாடகை கொடுத்தேன், கடாயில் வேலை செய்யுற 4 பசங்களுக்கு பாதி சம்பளமாச்சி கொடுக்கனும்ல அவங்களுக்கும் குடும்பம் இருக்கு… எல்லா பணமும் செலவு ஆகிடுச்சு. மீண்டும் தொடங்க 1லட்சம் தண்டல் வாங்கினேன் அதுல 10000 ருபாய் புடிச்சுட்டு 90000 ருபாய் தந்தாங்க ஒரு நாளைக்கு 1000 ரூபாய்ன்னு 100 நாள் கட்ட வேண்டும் கொரானாக்கு முன்னர் தண்டல் எல்லாம் வாங்கமாட்டேன் ஆனா எங்களுக்கு அவசரத்துக்கு யார் பணத்தை கொடுப்பாங்க வங்கில கடண் கொடுக்கமாட்டாஙக நாங்க மேற்கு வங்கத்திலிருந்து வந்தவங்க எங்களுக்கு எந்த அடையாள அட்டையும் இங்கு இல்லை அதனால எங்களுக்கு கடன் கிடைக்காது. இந்த கடைக்கு வாடகை மட்டும் 9500 பிரியாணி மாஸ்டருக்கு 25000 மாதசம்பளம், மின்சார பில் கட்டணும் இதெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாம முழிக்குறோம். ஏற்கனவே செல்லாகாசு அறிவிப்புக்கு பிறகு என்னால கடைய நடத்த முடியாம வேலைக்கு போனேன் திரும்பவும் அதுதான் நடக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

தேநீர்விடுதியில் தேநீர்குடிச்சிகிட்டே பேச்ச தொடங்கினோம், என்ன சார் தொழில் எல்லாம் எப்படி போகுது? தொடங்கும் போதே சாராய கடைய திறக்கும் அரசு தேநீர் கடைக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி பண்ணுராங்கன்னு தெரியலனு காட்டமா பதில் சொன்னார். ஐ டி துறையினர் வராத்தினால் உங்க தொழிலுக்கு பாதிப்பு இருக்கானு கேட்டோம் நமக்கு உள்ளுர் நுகர்வோர் தான் கவலையில்லை எங்க பிரச்சனை விலைவாசி தான் பெரிய இடியாய் இருக்குது கொரானாக்கு முன்ன 70ரு விற்ற பாமாயில் இப்ப 126ரூ க்கு விற்கிறது, தேநீர் தூள் 320ரூபாயாய் இருந்தது தற்போது 540ருபாய்க்கு விற்கிறது. 19கிலோ சிலிண்டர் விலை 1600 ருபாய்க்கு விக்குது இப்படியே போனா எப்படி ?  வாடகை எல்லாம் குறைத்திருகிறார்கள் என்று கேட்டதற்க்கு..’ இல்லங்க 3 மாத வாடகை மட்டும் பாதிகொடுக்க சொன்னாங்க அவ்வளவு தான, இன்னும் 50 ஆயிரம் வாடகை பாக்கி வைத்து இருக்கிறோம். ஏன் வங்கில கடன் தருவாங்கலேன்னு கேட்டதற்க்கு ‘நாங்க எங்க அங்கப்போய் வாங்குற்து அதெல்லாம் கொடுக்கமாட்டாங்க ‘ என்றார். ‘கடையில் வேலைக்கு ஆள் கூட போடல நானு, எங்க அப்பா, அம்மா தான் பார்த்துக்கொள்கிறோம் அப்படியிருந்தே அதிக சிக்கலில் கடை நடத்துகிறோம், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கு என்ன செய்ய? எல்லாம் சரியாகனும்.

படூர் ஊருக்குள்  சென்று  ரமணியம்மாவிடம் விசாரித்தோம் ‘எங்க நிலைமையை என்னானு சொல்லுவது நாங்க இருக்கிறோம் அவ்வளவு தான். நான் ஒரு ஒட்டலில் வேலை செய்தேன்  முதல் கொரோனா பொதுமுடக்கத்துல மூடினதுதான் இன்றும் திறக்கலை. நான் 7000 ருபாய் சம்பளம் வாங்கிட்டுதான் இருந்தேன் வாடகை 3000ருபாய் கொடுத்திட்டு மீதி இருக்க பணத்துல வாழ்ந்திட்டு இருந்தேன் கொரோனா கொடூரமான நாட்கள் நியாய விலைக்கடை அரிசிதான் சாப்பிட்டு இருந்தோம் நான் வேலை செய்த ஒட்டல் முதலாளி அரிசி மூட்டை, மளிகை சாமான், காய்கறிகள் எல்லாம் கொடுத்தாங்க, ஊர்தலைவரும் கொடுத்தாரு அதனால் எப்படியோ சமாளிச்சிட்டோம்.இப்ப என் மகள் ஒரு சூப்பர்மார்க்கெட்டுல வேலை செய்றா 6500 ருபாய் அதுல தான் எங்க குடும்பம் நடக்குது என்றார். அடுத்ததாக விமலா அக்காவிடம் பேசினோம் ‘நான் அபார்ட்மெண்டல் சமையல் வேலைப்பாக்குறேன் 5 வீட்டில் வேலை செய்றேன் காலையில் 5 மணிக்கு போனா 1.30 மணிக்குதான் வீட்டுக்கு வருவேன். கொரோனா முன்னாடி எந்த சிக்கலும் இல்லை கிட்டதட்ட 20000 ருபாய் சம்பாதிச்சிட்டு இருந்தேன் கொரோனாக்கு பின் அது அப்படியே பாதிஆகிடுச்சு 2 வீடு காலிபண்ணிட்டு போயிட்டாங்க மீதி 3 வீடு வேலை செய்யுறேன் கொரோனா காலத்துல தண்ணிக்கூட தரமாட்டாங்,க கொரோனா தொற்றிடுமா நான் சமைக்கிறதை சாப்பிட்டுவிட்டு இப்படி சொல்றாங்க. காலையில போனா வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவேன்.  10,000 ருபாய்க்கு வாடகைக்கு இருந்தோம் இப்ப 5,000 ருபாய் வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டு வந்துட்டோம், கணவர் ஆட்டோ ஒட்டுவார் அதுவும் பள்ளி பசங்க சவாரிதான் ஒட்டுவார் பள்ளிகள் மூடியதால ஆட்டோ வருமானமும் குறைந்தது. மொத்த குடும்ப வருமானம் பாதியாக குறைந்துப்போச்சி ‘ என்றார்.

கடைசியாக பத்மா அவங்களை பாத்தோம் ‘நானும் ஒரு அபார்ட்மெண்ட்ல வேலை பாக்குறேன் காலையில் 9 டொ 1.30 மணிக்கு வந்திடுவேன் 10,000 ருபாய் வரை சம்பாதிச்சிட்டு இருந்தேன். போன வருஷம் கொரோனா காலத்துல வேலையும் இல்லை சம்பளமும் இல்லை அக்டோபர்ல தான் திரும்ப வேலைக்கு சென்றேன் அதுக்குள்ள அடுத்த முடக்கம் வந்திடுச்சி திரும்ப வேலையை நிறுத்திட்டாங்க இப்ப தடுப்பூசி போட்டுக்கிட்டு வரச்சொல்லி இருக்காங்க கொரோனா காலத்துல சிறு சிறு உதவிகளை செய்தாங்க. எங்க வீட்டுக்காரர் டைலர் எதோ ஒடுது குடும்பம்’ என்றார்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு OMR சாலையை, பிரத்யேகமாக ஐ.டி தொழில் வளர்ச்சிக்காக பல கட்டமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தி வந்துள்ளது. SIPCOT, ELCOT என சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (SEZ) மூலம் வரி விளக்கு உள்ளிட்ட பல சலுகைகளை ஐ.டி நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. அடையார் மத்திய கைலாஷ் தொடங்கி திருப்போரூர் வரை சுமார் 35 கிலோமீட்டர் வரை IT Corridor விரிவாக்கம் அடைந்துள்ளது. தமிழக அரசின் இந்தத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை நம்பிதான் சில லட்சம் தொடங்கி பல கோடிகள் வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர  தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து வந்தது. கடந்த 15 மாத பொருளாதார முடக்கம் ஆயிரம் கோடிக்கு மேலாக இழைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்களின் நலன்களையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழக அரசு ஐ.டி நிறுவனங்களை குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை உடனே திறந்திட உத்தரவிடவேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம், 9500056554, 9941931499

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW