கொரோனா காலம் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் சில முன்மொழிவுகளும்

16 Jul 2021

கொரோனா பேரிடர் பொருளியல் பேரிடராக வடிவமெடுத்தது மட்டுமின்றி கல்வி, பண்பாடு, வாழ்க்கை முறை என எல்லாத் தளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வியைப் பொருத்தவரை பள்ளிக் கல்விதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் தொடக்கக் கல்விதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.ஏழை, நடுத்தர பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் எதிர்கொண்டு வரும் கல்விப்  பிரச்சனையைக் கருத்தில் கொண்டு சிறப்பு திட்டமிடலை அரசு மேற்கொள்ள வேண்டும். இது குறித்து எழுந்துள்ள முதன்மையான நெருக்கடிகள் மற்றும் சில முன்மொழிவுகளின் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

  1. ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடிக் கிடப்பதால் வகுப்புகள் ஆன் லைனில் நடந்து வருகின்றன. இது எந்த வகையிலும் நேரடி பள்ளிக் கல்விக்கு மாற்றீடு ஆகிவிட முடியாது. பள்ளித் தொடர்பே இல்லாத நிலையில் குழந்தைகள் கற்றல் நிகழ்முறையில் இருந்து தொடர்பறுந்து போயுள்ளனர், குழந்தை பருவத்திற்கு உரிய கூட்டுக் கல்வி சூழலும் இல்லாமல் இருக்கிறது. எவ்வளவு விரைவாக பள்ளிகளைத் திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பலவும் கோரியுள்ளன. பெற்றோர்களும் கவலையுடன் உள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.அதேநேரத்தில் மூன்றாம் அலை குறித்த அச்சமும் உயிர்ப்புடன் உள்ளது. ஒருவேளை, எப்போதும் போல் பள்ளியைத் திறக்க முடியாதெனில் குறைந்தபட்சம்   வாரம் இரு முறை அரை நாள் வகுப்புக்கு மாணவர்களை பகுதி பகுதியாக வந்து செல்ல வைப்பது என்பது போன்ற தெரிவுகள் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.
  1. தவிர்க்கவே முடியாதபடி முழுமுடக்கத்தை நீடிக்க வேண்டி வந்தால், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்த காலகட்டத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிற ’நுண் வகுப்பறைகள்’ என்ற மாதிரியை அமலாக்கி வருகின்றனர். இதை ஓர் எடுத்துக்காட்டாக பள்ளி ஆசிரியர்கள், ஆர்வமுள்ள தன்னார்வலர்களைக் கொண்டு வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இதை அமலாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
  2. கொரோனா காலம் ஏற்படுத்திய பொருளியல் நெருக்கடி பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி வர வைத்துள்ளது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி போதிய ஆசிரியர் நியமனம், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
  3. அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதால் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை விரிவாக்கப் போவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறினார். இது அறிவியலுக்கும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முரணானது. தமிழக அரசின் பயிற்று மொழிக் கொள்கை என்பது தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும். தமிழகத்தின் நாடறிந்த கல்வியாளர்கள் அனைவரும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி இருப்பது ஏற்றுகொள்ளவியலாத தவறான நடைமுறை. தமிழ்வழிக் கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கட்டாயம் தமிழ்வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும்.
  4. பள்ளிகளைத் திறக்க முடியாமல் முழுமுடக்கம் தொடரும் பட்சத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் எனப்படும் கையடக்க மடிக்கணினி கொடுக்க வேண்டும் மேலும் அதை பயன்படுத்த கட்டணமில்லா இணையதள வசதியை அரசே ஏற்படுத்தி தரவேண்டும்
  5. பள்ளிக் கல்வி இடைநிற்றலைத் தடுப்பதற்கு மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்களை அமைத்து தன்னார்வ அமைப்புகளையும் ஈடுபடுத்திப் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  6. தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் எனப்படும் (டிசி) தேவைப்படுகிறது. பல தனியார் பள்ளிகள் இதை தர மறுக்கின்றனர். இந்த சிக்கலை தவிர்க்க அனைத்து தனியார் ,அரசுப் பள்ளி மாணவர்களின் மாற்று சான்றிதழை ஒரு மையப்படுத்தப்பட்ட தகவ்ல் சேமிப்பு மையத்தில் இணைக்கவேண்டும் மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் (unique id) கொடுத்து அதன் மூலம் அந்த மாற்று சான்றிதழை தாங்களே எடுத்து கொள்வது போன்ற முறையை உருவாக்க வேண்டும். உடனடி கோரிக்கையாக எட்டாம் வகுப்பு வரை மாற்று சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் சேரலாம் என்று அறிவித்திருப்பதை 9, 10 வகுப்புகளுக்கும் நீடிக்க வேண்டும்.
  7. கொரோனா பொது முடக்க காலத்திற்கு பின் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மொழிப் பாடத்திற்கும் கணக்குப் பாடத்திற்கும் சிறப்பு வகுப்பு எடுத்து மீண்டும் கற்றல் நிகழ்முறையில் இணைப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.
  8. பள்ளிகளுக்கான தூய்மைப் பணியாளர்களை அரசு சார்பில் நியமிக்க வேண்டும்.
  9. ஒன்றரையாண்டு காலமாக பள்ளிக்கு வராமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தப் பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி திறந்த பின் அத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு மாணவர்கள் முன்னோக்கி செல்வதற்கு உதவும் வகையில் பள்ளிக்கு வெளியே இருந்து செல்லும் உளவியல் ஆலோசகர்களை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் பள்ளி மாணவர்களின் மனநலம் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

 

-கார்த்தி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW