சென்னை அண்ணாசாலையைத் திணறடித்த ஓலா-ஊபர் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் போராட்டம் – தமிழக அரசே கட்டணம், கமிசனைத் தீர்மானிக்கவேண்டும்!

02 Jul 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 6)

கொரோனா பேரிடரில் உழைக்கும் மக்களை அரசு கைவிட்டதால் வாழ்விழந்து நிற்போரில் ஒரு பிரிவினர் நெருப்புப் பறக்க தெருவில் இறங்கிவிட்டனர். ஆம், லாக் டவுன் காலத்திலும் மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வயிறு வளர்க்கும் காவல்துறையினர் சாம, பேத, தண்டத்தைப் பயன்படுத்திப் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியதாக கருதிக் கொண்டிருக்க,  அண்ணா சாலையில் தங்கள் வாகனத்தை நிறுத்தி தங்கள் நியாயத்தை நாடறியச் செய்துள்ளனர். நடந்தது இதுதான்.

டீசல் விலையேற்றம் 95 ரூபாயைத் தொட்டுவிட்டது. ஓலா, ஊபர் செயலியின் பெயரால் 30% கமிசனை எடுத்துக் கொள்கிறார்கள். ’கால் டாக்ஸி, டீசல், உழைப்பு எல்லாம் என்னுடையது, கமிசன் அவர்களுக்கு, வறுமை எனக்கு, கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை ‘ என்று கலங்கி நிற்கிறார்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்கள். தமிழகமெங்கும் சுமார் ஒரு இலட்சம் பேர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளனர். ஆட்டோவுக்கு மீட்டர் வைத்தது போல் கால் டாக்ஸிக்கு கி.மீ இத்தனை ரூபாய் என்ற விலை நிர்ணயம் இல்லை.  கால் டாக்ஸி ஓட்டுநரிடையே வலுவான சங்கங்கள் இல்லை. வாட்ஸ் அப், டெலிகிராம் மூலமாக தம்மை அணி திரட்டிக் கொண்டுள்ளனர். ஜூன் 30 ஆம் தேதியை போராட்டத்திற்காக தெரிவு செய்து, ஓலா, ஊபர் செயலிகளை செல்பேசியில் இருந்து அகற்றிவிட்டு காலவரையற்ற பணி நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகள்:

  • ஐந்து வருடங்களுக்கு முன்பு நிர்ணயித்த விலை பட்டியலை மாற்றி அமைத்து 80% ஆக உயர்த்த வேண்டும்.
  • இவ்விரு நிறுவனங்கள்(ஓலா, ஊபர்) தற்போது ஓட்டுனர்களிடம் பெறும் 30% கமிசன் தொகையை 10% ஆக குறைக்க வேண்டும்.
  • டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல விலை பட்டியலை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்.

ஜூன் 30, ஜுலை 1 என்று இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஓலா, ஊபரில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக இந்த இரண்டு நாட்களில் கட்டணம் இருமடங்காகிவிட்டது. இந்நிலையில், இப்போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனையுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று சிஐடியூ வழிகாட்டியிருப்பதாக தெரிகிறது. அதன்படி, இன்றைக்கு காலையில் தங்கள் வாகனத்துடன் சேப்பாக்கத்தில் கூடிவிட்டனர். சுமார்  1500 பேர் மட்டுமே அங்கே குடியிருந்தனர்.  எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுநர் தொழிலாளர்கள் திரண்டிருக்கவில்லை என்று கருதப்படுகிறது.

இன்றைக்கு சுட்டெரிக்கும் வெயில். ஆனால், கொடுமை என்னவெனில் போராட்டத் திடலில் சாமியானா போடவோ நாற்காலி போடவோ காவல்துறை அனுமதிக்கவில்லை. ஒரு மனிதனின் தன்மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர்கள்  சுடுமணலில் அமர்ந்திருந்தனர். சுமார் 12 மணிக்கு மேல் ஒரு சில சங்கங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து துறை கமிசனரால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தையில், ஜுலை 9 ஆம் தேதிக்குள்  இதன் தொடர்பில் அரசு தீர்வு காணும் என்று சொல்லிவிட்டு போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பியுள்ளனர். பேச்சுவார்த்தையில் சிஐடியு பொதுச் செயலாளர் தோழர் ஆறுமுக நயினார் தலைமையேற்று இருந்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவைப் போராட்டத்தில் இருந்த ஓட்டுநர்களுக்கு தோழர் ஆறுமுக நயினார் அறிவித்தார். இன்னும் கூடுதலாக போக்குவரத்து தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தொழிலாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். தோழர் நயினாரும் வாகனத்தில் இருந்து இறங்கி அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர், வழக்கம் போலவே காவல்துறை உயரதிகாரிகள் தனது ‘பேச்சுவார்த்தையைத்’ தொடங்கினர் . கூடுதலாக ஏதாவது கோரிக்கை இருப்பின் எழுதி தருமாறு கேட்டனர். அங்கிருந்த தொழிலாளர்கள் சுமார் 200 பேர் வரை மீண்டும் பேரி கார்டுக்குள் அமர்ந்துக் கொண்டனர். கோரிக்கைகளை எழுதிக் கொடுத்தனர்.  ”ஒரு கி.மீ க்கு இவ்வளவு என்று கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அங்கிருந்த பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின்கள் சேர்ந்து கையெழுத்துப் போட்டு காவல்துறைக்கு ஒரு கையெழுத்துப் படிவத்தைக் கொடுத்தனர். இரண்டு முறை பேருந்தைக் கொண்டு வந்து நிறுத்தி, ’கைது செய்துவிடுவோம்’ என்ற தொனியில் மிரட்டியது காவல்துறை. போக்குவரத்து துறை அமைச்சர் போராட்ட திடலுக்கு வந்து வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்பதே அப்போது அங்கிருந்த ஓட்டுநர்களின் கோரிக்கை ஆகும். அமைச்சர் சாப்பிடப் போய் விட்டார் என்று யாரோ ஒரு அதிகாரி சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் சொன்னார்கள். ஆனால், ஓட்டுநர்களில்  கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அப்படியென்றால், ’கைதாகுங்கள்’ என்று சொல்லி பேருந்தில்  ஏற்றினார்கள். பேருந்து நிரம்பி வழியும் வண்ணம் சுமார் 50 பேருக்கு மேல் ஏறிவிட்டனர். ஆனால், பேருந்தில் ஏறிச் சென்று மண்டபத்தில் இருந்துவிட்டு மாலை திரும்பிச் செல்ல அங்கிருந்தவர்களில் சிலர் அணியமாக இல்லை. எனவே, ஓட்டுநர்கள் பேருந்து அருகே சென்று பேருந்தில் ஏறியவர்களை இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். பேருந்தில் ஏறிய அனைவரும் இறங்கினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து, ’இங்கிருந்து கிளம்புங்கள்’ என்று சொன்னார்கள். அங்கு நிலவிய தன்னெழுச்சியை தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மிக இலகுவாக காவல்துறையினர் கையாண்டனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் மதிய உணவின்றி , தேநீருக்கு கூட வழியின்றி காய்ந்து கிடந்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர். இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்தபின் இன்றோடு மூன்றாவது நாள் என்ற நிலையில் தீர்வுகாணாமல் திரும்பிப் போவதில் ஓட்டுநர்கள் கொந்தளிப்பாக இருந்தனர். ஒரு சிலர் மன வேதனையில் அழுவது போல் ஆகி புலம்பத் தொடங்கினர். ஏற்கெனவே பெங்களூரில் விமான நிலையத்தின் முன்பு ஒரு கால் டாக்ஸி ஓட்டுநர் தீக்குளித்து இறந்ததை நினைவுகூர்ந்து ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்துவதும் சமாதானப்படுத்துவதுமாக நிலைமை மாறியது.

திடீரென்று சிலர், ’நாம் வண்டியை எடுத்துச் சென்று சாலையை மறிபோம். வாகனத்தை ஆங்காங்கே விட்டுச் சென்றுவிடுவோம், ஆனதாகட்டும்’ என்று பேசத் தொடங்கினர். மிகுந்த சலசலப்புடன் காய்ந்த வயிறுடன் வஞ்சிக்கப்பட்ட மனதுடன் ஓட்டுநர்கள் வாகனத்தோடு புறப்படத் தொடங்கினர்.  கிட்டத்தட்ட மணி 3 இருந்தது. ’போராட்டத்தைக் கலைத்துவிட்டோம்’ என்ற களிப்புடன் லாக் டவுன் காலத்திலும் பசியறியாத தங்கள் வயிற்றுக்கு மதிய உணவு கொடுத்து வளர்ப்பதற்கு காக்கிச் சட்டைக் காரர்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், புறப்பட்ட வண்டிகள் அண்ணாசாலையில் நிற்கத் தொடங்கின.

அண்ணா சாலையில் ஒன்று, இரண்டு, மூன்று என 50 வண்டிகள் எல்.ஐ.சி. தாண்டி நின்றுவிட்டன. வண்டியில் இருந்து இறங்கி ஓட்டுநர்கள் ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டனர். ஒரு காலத்தில், 1980 களில் தங்கள் மாட்டு வண்டிகளோடு சாலைகளை மறித்த உழவர் பெருந்திரள் போல் இந்த இளம் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்க்கை சாதனத்தை வீதியில் நிறுத்தி தங்கள் இரத்தை உறிஞ்சிக் குடிக்கும் கார்ப்பரேட்களுக்கு எதிராக போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர். ஓட்டுநர்களை விரட்டியடித்தப் பெருமிதத்தில் இருந்த  திருவல்லிக்கேணி E1 காவல் நிலையத்தினர் அண்ணா சாலைக்கு வந்தனர். காவல்துறையினர் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓட்டுநர்கள் நகர முனைந்தனர். ஆனால், காவல்துறை சுற்றி வளைத்தது. ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துவிட்டு வாகனங்கள் ஒவ்வொன்றாக நகரத் தொடங்கின. சுமார் 20 நிமிடம் அண்ணா சாலை மறிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஒரு சில வாகனத்தின் ஓட்டுநர்கள் வண்டியை நிறுத்திவிட்டு தொலைவில் போய்விட்டனர். அவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டனர். அதில் ஒருவர் தாக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டதை காண முடிந்தது. அவர் தன் வண்டியின் சாவியைத் தர முடியாதென கதறி அழுதார். பின்னர் சுமார் 6 பேர் வரை ஒரு காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் தண்டம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டதாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. எல்லா வாகனங்களின் நம்பர் பிளேட்டையும் வேகவேகமாகப் படம்பிடித்தது காவல்துறை. அநேகமாக எல்லோர் மீதும் தனி வழக்கு இருக்கும் என்று நம்பலாம்.

மொத்தத்தில், போக்குவரத்து ஆணையரோ அல்லது அமைச்சரோ முறையான உறுதி மொழியை தந்து அவர்களுக்கு நம்பிக்கையளித்திருக்க முடியும். கொரோனா பேரிடரிலும் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவு தந்து உழைக்கும் மக்களை ஒன்றிய அரசு கைவிட்டதன் விளைவு இது. உழைத்துப் பிழைப்பவர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டுப் போராட அவர்களுக்கு ஒன்றும் மனநலம் பாதிக்கப்பட்டுவிடவில்லை. இதுவொரு வாழ்வா? சாவா? பிரச்சனை. இந்த ஓட்டுநர்களைக் கையாண்டது போல் ஓலா, ஊபர் கார்ப்பரேட்களை காவல்துறை கையாளுமா?

தமிழக அரசு இவ்விசயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஒரு கிமீ க்கு சின்ன வண்டி என்றால் 30 ரூ, பெரிய வண்டி என்றால் 40 ரூ கட்டண நிர்ணயம், எந்த செயலியாக இருந்தாலும் கமிசன் 10% மட்டுமே என்பதுதான் கோரிக்கைகள். ஓட்டுநர்களின் துயரமும் பதற்றமும் பெங்களூரில் நடந்தது போல் ஆபத்தான முடிவுகளுக்குப் போவதற்கு முன்பு அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW