பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர் வயிற்றிலடிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

19 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 3)

உள்ளூர் மக்கள் தொடங்கி, வெளிநாட்டு பயணிகள் வரை அனைவரும் விரும்பிவந்து  பொருட்களை வாங்கிச் செல்லும் பாரம்பரியமிக்க ஓர் சந்தையாக தி.நகர் விளங்குகிறது.  இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வணிக சந்தையாகவும்  உள்ளது.

சுமார் 50 பிரம்மாண்டமான ஷோரூம்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு கடைகள் மற்றும்  1500 சாலையோரக் கடைகள் என ஆண்டுக்கு சுமார் 13,000 கோடி ரூபாய் வியாபாரம்  நடைபெறுகிறது.  ஆடை, நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்  என  குடும்பத்திற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் தி.நகர் சந்தையில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், சிறு குறு வியாபாரிகளும்  பணிபுரிகின்றனர். இதில் சுமார் 50 %  தொழிலாளர்கள் பெரும் தொழில்குழுமங்களான சரவணா ஸ்டோர், போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.டீ’ இன் பிரம்மாண்டமான ஷோரூம்களில் வேலைசெய்கின்றனர்.

பெரிய கடைகளில் வேலை செய்யும் பல தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம். அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். {புனைப்பெயரில் எழுதி அதே பெயரில் ஒரு தொழிலாளி நிறுவனத்தில் இருக்கக் கூடும் என்பதால்  பெயர்களை முழுமையாக தவிர்க்கிறோம்}.

பிரம்மாண்டமான ஷோரூம்களில் பணியாற்றும் தொழிலாளிகள் பெரும்பாலும் கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த  இளம் பெண்கள் மற்றும் ஆண்களை குறைந்த கூலிக்கு அழைத்து வருகின்றன. அவர்களுக்கு தங்குமிடம், பணியிடம் என எப்போதும் நிர்வாகத்தின் பார்வையிலும், முழுக்கட்டுப்பாட்டிலும் நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றன.

சரவணா ஸ்டோர்ஸ் குழுமம்

1969 முதல் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம்  சென்னையில் செயல்பட்டு வருகிறது.1995ல் பாத்திரக் கடை, 1997ல் நகைக் கடை என சரவணா குழுமம்  வளரத் தொடங்கியது. இந்திய அளவில்  மிகப்பெரும் வணிக கடைகளில் தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் முன்னமாதிரியாகவும், அதிக வியாபாரம் செய்து புகழ்பெற்ற நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. அரசு அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது, தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் இறப்பு மற்றும்  வருமான வரி ஏய்ப்பு என்று பல சட்டவிரோத செயல்களுக்கும் புகழ்பெற்ற நிறுவனமாகவும் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர், லெஜெண்ட் சரவணா ஆகிய 4 பிரிவுகளாக தனித்தனியே  செயல்பட்டு வருகின்றது. தமிழக அளவில் 20க்கு மேற்பட்ட கடைகளில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வியாபாரம் செய்யும் பெரும் தொழில் குழுமமாகும்.

கொரோனா முதல் அலையில் 3 மாத  பொதுமுடக்கத்திலும் சரி, தற்போதைய இரண்டு மாத பொதுமுடக்கத்திலும் சரி, சரவணா செல்வரத்தினம் தனது தொழிலாளர்களுக்கு  1ரூபாய் கூட சம்பளம் வழங்கவில்லை. அன்றாடம் காலை 9.30 மணி  முதல் இரவு 9.30 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். திருமணமாகவில்லை என்றால் காலை 9 மணி முதல் இரவு 10மணி வரை 13 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். தற்போதைய தொடக்க சம்பளம் 10,000 ரூபாய். இதில் PF,ESI வழங்கப்படுகிறது. உணவு நேரத்தை தவிர எப்போதும் நின்று கொண்டே இருக்க வேண்டும். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதத்தில் 2 நாட்கள் மட்டும் விடுப்பு  (OFF) உண்டு. அதுவும்  சனி, ஞாயிறு நாட்களில் அனுமதியில்லை. தொடர்ந்து 2 நாட்கள் விடுப்பு எடுக்க முடியாது. தொடர்ந்து விடுப்பு எடுத்தல் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்தாலும் Gruaduity தொகையோ, முன்பணமோ, வங்கி வழியாக கடனுதவியோ எதுவும் செய்து தருவதில்லை.

கொரோனா காலத்தில் போத்திஸ் கடையில் 75% சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஜி.ஆர்.டியில் 100% சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். Gruaduity தொகையும் உண்டு என கூறினார்.

நல்லி சில்க்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட தற்போது பொதுமுடக்கத்தில் சம்பளம் வழங்கவில்லை எனத் தெரியவருகிறது.

சென்னை சில்க்ஸ் ஒப்பந்த தொழிலாளர் முறையை பின்பற்றுகின்றன. ஐந்தாண்டுகள் வேலை செய்தாலும்  PF,ESI Gruaduity தொகையோ வழங்கப்படுவதில்லை.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் கடையில் 90% பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  ஆண்களை விட குறைந்த கூலிக்கு பெண்களை பணியமர்த்தி செயல்படும் இந்நிறுவனமும் கொரோனா பொதுமுடக்கத்தில் சம்பளம் கொடுக்கவில்லை.

பத்தாயிரத்திற்கு மேலான முழுநேர தொழிலாளர்களைக் கொண்டு செயல்படுகின்ற சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் பணக்கார வணிக குழுமங்கள்  முழுமுடக்க காலத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்காமல் முழுநேர தொழிலாளர்களை தினக்கூலிகள் போல நடத்தும் போக்கை கண்டிக்கவேண்டும். பொதுமுடக்க காலத்தில் அணைத்து பெரு நிறுவனங்களும் முழு ஊதியம் வழங்கிட தமிழக அரசு உத்தரவிடவேண்டும். ஊரே அறிய 12 – 13மணி நேரம் கட்டாய வேலை நேரத்திற்கு முடிவுகட்டி,  8 மணி நேர வேலை, அங்காடியில் அனைவருக்கும் அமர்வதற்கு நாற்காலியும், மாதம் 4 நாட்கள் கட்டாய விடுமுறை ஆகிய  அடிப்படை தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும்.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW