‘தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்’ இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 3 தலைக்கும் மேல் தொங்கும் கத்தி இருப்பது தைலாபுரத்திலா ?

09 Jun 2021

மருத்துவர் இராமதாசு தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாலும அது தைலாபுரத்தில் தோன்றியது அல்ல. அது நாக்பூரில் இருந்து எழும் இரைச்சல். ஆர்.எஸ்.எஸ். இன் விருப்பம். மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையே இந்து மகாசபையோ அல்லது ஆர்.எஸ்.எஸ். ஓ ஏற்கவில்லை. இந்தியாவை 50 ஜன்பத்களாகப் பிரிக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். மாநிலங்கள் என்பதை ஒரு நிர்வாக அலகாகப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். மாநிலங்களுக்கு எவ்வித உரிமையும் இன்றி மையத்தில் அதிகாரம் குவிக்கப்பட்ட தில்லி அரசின் வழியாக இந்தியாவின் 138 கோடி மக்களும் ஆளப்பட வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இன் அமைப்பு வடிவம்கூட வட தமிழகம், தென் தமிழகம் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது தற்செயலானதல்ல. ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அமைப்பு வடிவத்தை அப்படி வைத்திருக்கிறார்கள்.

ஒரு மாநிலம் பல்வேறு துண்டுகளாக ஆக்கப்படுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. தமிழகத்தை வட தமிழகம், கொங்கு நாடு, தென் தமிழகம் என்று பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை கூறுபோட்டு தமிழ்த்தேசிய இன உணர்ச்சிக்கு ஊறு செய்ய வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். மிகவும் குறியாய் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த தேர்தலிலும்கூட அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாசக என்ற கூட்டணி உருவாக்கத்தின்வழி சமூக தளத்தில் கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர், பள்ளர், அருந்ததியர், பார்ப்பனர் போன்ற சமூகங்கள் வாக்கு வங்கிக்காக குறி வைக்கப்பட்டன. இதை தமிழகத்தில் பாசக கைக்கொண்ட சமூக பொறியமைவு என்று சொல்லலாம். சாதி என்பது வட்டார அளவில் திரட்சியாக இருப்பதனால் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஒருசில சாதிகளைச் சேர்ந்த ஆளும் வர்க்க சக்திகள்  மைய அரசுடன் கூட்டணி வைத்து மாநிலத்தைப் பிரிப்பது பற்றிப் பேசும்போக்கு இனியும் தொடரக்கூடும். தி இந்து தமிழ் திசையில்  நடுப்பக்க கட்டுரையாளர் திரு சமஸ் குறிப்பிட்டது போல் மருத்துவர் இராமதாசுவின் முன்மொழிவென்பது மறைமுகமாக வன்னியர் நாடு, கவுண்டர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்று சொல்வதாகும் என்று எழுதினார். எனவே, சாதி அரசியல் என்பது முதலாவது பொருளில் தமிழ்த்தேசிய இன மக்களைப் பிளவுபடுத்துவதோடு கூடவே அது தமிழர் தாயகத்தை அதே சாதியின் அடிப்படையில் கூறுபோடச் சொல்வதில் போய் முடிகிறது என்பதற்கு மருத்துவர் இராமதாசே கண்கண்ட சான்று.

அதேநேரத்தில், தைலாபுரத்திலோ அல்லது நாக்பூரிலோ மட்டும் சிக்கல் இல்லை. நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டக்கூறு இருக்கின்றது. அரசமைப்பு சட்ட உறுப்பு 3 இன் படி  ஒரு எளிய நாடாளுமன்றப் பெரும்பான்மையின்வழி “அ. ஒரு மாநிலத்தில் இருந்து கொஞ்சம் பிராந்தியத்தை எடுத்தோ, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின்  பகுதிகளை இணைத்தோ ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கலாம். ஆ. ஒரு மாநிலத்தின் பரப்பளவை விரிவாக்கலாம், அல்லது  இ. குறைக்கலாம், ஈ. எந்த மாநிலத்தின் எல்லையையும் மாற்றி அமைக்கலாம் உ. எந்த மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்” என்று மாநில சுயாட்சி நூலில் பக்கம் 204 இல் மறைந்த முரசொலி மாறன் அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்.

மாநில சட்டசபையின் கருத்தை ஒப்புக்கு கேட்டுவிட்டு மைய அரசு,  தான் விரும்பியதை செய்யலாம். சம்மு காசுமீர் துண்டாடப்பட்டு ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றப்பட்டத்தில் மாநில சட்டசபை கலைக்கப்பட்ட நிலையில் ஆளுநரின் கருத்தைக் கேட்டுவிட்டதாக சொல்லி காசுமீரின் கதையை முடித்தது மைய அரசு. இதற்கெல்லாம் ஆசி வழங்கியது அரசமைப்பு சட்ட உறுப்பு 3 தான்.

இந்த உறுப்பின் அபாயம் பற்றி முரசொலி மாறன் மேலும் விளக்குகிறார்.

” எடுத்துக்காட்டாக, நாளை தமிழ்நாடு முழுவதும் துண்டு துண்டாகப் போடப்பட்டுப் பக்கத்து மாநிலங்களுடன் இணைக்கப்படலாம். அல்லது தமிழ்நாடு இனி ஒரு மாநிலமே அன்று, பாண்டிச்சேரி போல மத்திய அரசிற்குட்பட்ட பிராந்தியம் என்றும் ஆக்கப்படலாம். ” என்று அச்சத்தை வெளிப்படுத்துகிறார். ” நாடாளுமன்றத்தில் ஒரு சாதாரண மெஜாரிட்டியால் ஒரு மாநிலத்தின் பிராந்தியம் ஒழிக்கப்பட்டுவிடக்கூடிய நிலை இருக்கும்போது, மத்திய அரசிற்கு மாநில அரசுகள் கீழ்ப்பட்டவை என்கிற தத்துவம் இந்திய அரசியல் சட்டம் முழுவதிலும் இழையோடிக் கொண்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை” என்று ” இந்தியாவில் கூட்டாட்சி – மத்திய மாநில உறவுகள் பற்றிய ஆய்வு (Federalism in India: A Study on Union-State Relations) நூலில் அசோக் சந்தா சொல்வதாக முரசொலி மாறன் குறிப்பிடுகிறார்.

மொழிவழி மாநிலங்கள் உருவாகாத நிலையில், சமஸ்தானங்கள் பல இந்தியாவோடு சேராதிருந்த காலத்தில் ஒவ்வொரு முறையும் புதிய சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தால் இந்த சட்ட உறுப்பு தேவைப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் உருப்பெற்றுவிட்ட நிலையில், 1960 க்குப் பிறகு இந்த உறுப்பு நீடிக்கக் கூடாது என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், இன்றுவரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது. அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை 2019 ஆகஸ்ட் 5 இல் இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் துண்டாடப்பட்ட போது கண்டோம்.

ஒரு மாநிலத்தின் எல்லை தொடர்பான மாற்றங்களை செய்வதற்கு அமெரிக்க அரசமைப்பை  பொருத்தவரை அம்மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பெற வேண்டும்.

எனவே, இந்திய அரசமைப்பிலும் இந்த உறுப்பு 3 நீக்கப்பட வேண்டும். மாறாக ஒரு மாநிலத்தைப் பிரிக்க வேண்டுமாயின் அப்படி பிரிக்கக் கோரும் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இலங்கையின் அரசமைப்பில் ஒற்றையாட்சி, பெளத்தம் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் தொடர்பில் திருத்தம் வேண்டுமானால் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி கருத்தறிய வேண்டும் என்ற சட்ட வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் உச்சம் தொட்ட ஈழத்தில் சம்பந்தன் – சுமந்திரன்கள் இருக்கும்போது, காசுமீரில் அப்துல்லா – முப்தி முகமதுகள் இருக்கும்போது தேசிய போராட்டம் தீவிரம் பெறாத தமிழ்நாட்டில் குப்பைக் கூலங்கள் இருப்பதில் வியப்பதற்கொன்றுமில்லை. அப்படிப்பட்டவர்களை இடையறாது இந்திய அரசு உருவாக்கும், அரசியலில் அவர்களுக்கு இடம் கொடுக்கும், அவர்களைப் பாதுகாக்கும். புதிய புதிய பெயர்களில் புதிய புதிய தலைவர்கள் வந்து இன்றைக்கு மருத்துவர் இராமதாசு சொன்னதை சொல்லிப் பார்ப்பார்கள்.

அதுமட்டுமின்றி, தமிழ்த்தேசிய அரசியலை ஏற்காத அனைத்திந்திய கட்சிகள் தமிழ்த்தேசிய எழுச்சியை மட்டுப்படுத்தும் வகையில் மாநிலத்தை துண்டாடி இந்தியா துண்டாடப்பட்டுவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டலாம்.

சாதிய ஆற்றல்களோ, இந்திய பெருந்தேசிய ஆற்றல்களோ, உலக வல்லரசுகளோ அல்லது இவ்வாற்றல்களின் அணிசேர்க்கையோ தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு வழிவகுக்கக் கூடும்.

இப்போதைக்கு ஒரு இடைக்காலப் பாதுகாப்பாக அரசமைப்பு சட்ட உறுப்பு 3 ஐ நீக்கி வாக்கெடுப்பின்வழி மக்களின் கருத்தறிந்து முடிவுசெய்யும் வகையில் சட்டமியற்றுமாறு இதில் அக்கறை கொண்டோர்  கோரிக்கை  எழுப்பலாம். மற்றபடி தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து தாயகப் பிளவு ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

-செந்தில்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW