கரோனா வைரஸ்: ஆய்வகத்திலிருந்து தப்பியதா? இயற்கையாக வந்ததா?

“கரோனாவை ஆயுதமாகப் பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா”, “கரோனா வைரஸ் எனும் உயிரி ஆயுதம்?” – 5 ஆண்டுகளுக்கு முன்பே விவாதித்த சீனா? என்ற தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகள் சமீப காலங்களில் வெளிவந்தன. சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து (WIV) கரோனா வைரஸ் (SARS-CoV-2) பரவியதாக முன்வைக்கப்படுகிற விமர்சனங்கள் ஒன்றும் தற்போது புதிதல்ல. கடந்த ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக சீனாவைக் குற்றம் சாட்டியதும் உலக சுகாதார அமைப்பு, சீனாவிற்குத் துணை போகிறது என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியதும் அதற்கு சீனா மறுப்பு தெரிவித்ததையும் நாம் அறிவோம். அதன் பிறகு வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதாக கூறுகிற வாதமானது உண்மையில்லை என்றும் இயற்கையாகவே வைரஸ் பரவியது என லான்செட் (Lancet) பத்திரிக்கையில் வைரஸ் ஆய்வக மருத்துவர் குழுவொன்று அறிக்கை வெளியிட்டது. அதோடு இச்சர்ச்சை ஓய்ந்ததுபோல தெரிந்தது.
ஒருவாறு அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளில் முதல் அலை ஓய்ந்தும், இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் அலை உச்சம் பெற்று தனியத் தொடங்கிய நிலையில், அறிஞர் வேட் வெளியிட்ட “The Origin of Covid:Did people or nature open the Pandora’s Box ” என்ற தலைப்பிலான கட்டுரை கரோனோ வைரஸ் பரவலின் மூல வித்துக் காரணம் குறித்து விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த விவாதங்களுக்குள் செல்வதற்கு முன்னர் முதலில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் பொருளாதார முரண்பாடுகளையும் நிறவாத கண்ணோட்டங்களை புறந்தள்ளி, கரோனா வைரஸ் தொற்றுக்கான அடிப்படை மூலக் காரணமென்ன?, உண்மையிலேயே வூஹான் இறைச்சிக் கூடத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதா? அல்லது வூஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து மனிதத் தவறால் தப்பி வந்ததா என ஆதாரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்வது அவசியமாகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் 1 வைரசானது வௌவால்களிடமிருந்து புனுகுப் பூனைக்கும் , புனுகுப் பூனையிலிருந்து மனிதர்களுக்கும் பரவியதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். பின்னர் 2012 ஆம் ஆண்டில் பரவிய மெர்ஸ் வைரசானது வௌவால்களிடமிருந்து ஒட்டகத்திற்கும் பின்னர் ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கும் பரவியதை கண்டறிந்தார்கள். இந்நிலையில் 2019 டிசம்பரில் பரவிய வைரசும் வௌவால்களில் மரபுக் கூறுகளை ஒத்துள்ளதை கண்டறிந்து சார்ஸ் 2 என பெயரிட்டனர். வூஹான் இறைச்சி சந்தையிலிருந்து வௌவால்கள் மூலமாக இயற்கையாக இந்த வைரசும் பரவியதாக கூறப்பட்டது. ஆனால் சில நாட்களில் சீன மருத்துவர்கள் சிலர் இந்தக் கூற்றை மறுத்தனர். உலகின் வைரஸ் ஆய்வகங்களில் மையமான வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டும் சதிக் கோட்பாடும்:
கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலத்தில் வலதுசாரி தலைவர்கள் கரோனாத்தொற்றை, ஒரு பெருந்தொற்று நிலையாக ஏற்காமல் அலட்சியமாக அறிவியல் விரோத நிலைப்பாடு எடுத்தார்கள். அதில் குறிப்பாக அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரேசில் பிரதமர் பொல்சனரோ ஆகியோர் முதல் அலையில் மிகவும் அலட்சியமாகப் பெருந்தொற்றை அணுகினார்கள்.
இதனால் டொனால்ட் ட்ரம்ப் சொன்னதாலேயே சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்தே கரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற வாதம் சதிக் கோட்பாடு என தொடக்க நிலையிலே ஒதுக்கப்பட்டுவிட்டது. இயற்கையாக அல்லாமல் ஆய்வகத்திலிருந்து வைரஸ் தப்பியிருக்கும் என்ற முடிவை ஆராய்ச்சியாளர்களால் நினைத்துப் பார்க்க இயலவில்லை. அதோடு, சீனாவின் வூஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அமெரிக்காவே நிதி வழங்குகிறது என்பதும் ஆய்வகக் கோட்பாட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகியது. மறுபுறம், சீனாவும் வூஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்தே வைரஸ் பரவியது எனக் கூறத்தொடங்கியது.
வூஹான் வைரஸ் ஆய்வகமும் அமெரிக்கத் தொடர்பும்:
இதற்குள் போவதற்கு முன்பாக வைரசை ஏன் ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும் என்ற கேள்விக்கு வருவோம். Gain of Function (GOF) எனப் பொதுவாக அழைக்கப்படுகிற வைரஸ் பற்றிய ஆராய்ச்சியின் நோக்கமானது, எதிர்வரும் காலங்களில் மனிதகுலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிற நுண்ணுயிர் வைரஸ்கள் எத்தகையப் பண்பு கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுசெய்வதைப் பற்றியதாகும். அதற்காக, இயற்கை வைரஸ்களின் கட்டமைப்பை, செயற்கையாக மறுக் கட்டமைப்புக்கு ஆட்படுத்தி அதன் விளைவுகளைக் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாவதை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்விற்காகப் பல்வேறுவிதமான வைரஸ்களை மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தியும் வளர்சியடைச்செய்தும் பல்வேறு உயிரினங்களுக்கு இடையே செலுத்தியும் விளைவுகள் ஆய்வு செய்யப்படுகிறது. வைரஸ்களின் பண்புகளைப் பொருத்து ஆய்வக பாதுகாப்பு அடுக்குகளுக்கு வரைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய, ஆய்வொன்றில் அமெரிக்காவிலுள்ள மருத்துவர் பீட்டர் டசாக் என்பவர் தனது ECO HEALTH ALLIANCE என்ற அமைப்பின் மூலமாக ஈடுபடுகிறார். இந்த ஆய்விற்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பின் அனுமதியும் பெறுகிறார். பின்னர் இவர் தனது ஆய்வை சீனாவிலுள்ள வூஹான் வைரஸ் ஆய்வகத்திற்கு அவுட்சோர்சிங் செய்கிறார். வூஹான் ஆய்வுக் கூடத்தில் மருத்துவர் சி செங்க்லி என்பவர், தலைமை வைரஸ் ஆய்வாளராக இருப்பவர். இவரது ஆய்வுக் கட்டுரையையும் வௌவால் வைரஸ்கள் குறித்தான அவரது பரந்த அறிவையும் சர்வதேச மருத்துவக் கூட்டமொன்றில் கண்டுகொண்ட பீட்டர், சி செங்க்லிக்கு குறிப்பிட்ட வைரஸ் ஆய்வுத்திட்டத்தை மேற்கொள்ள பணித்ததாக வேட் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
வூஹான் ஆய்வகமும் வெளவால் பெண்மணியும்:
கடந்த 2019 ஆண்டில் மருத்துவர் பீட்டர் டசாக்கிடம் மேற்கொண்ட பேட்டியொன்றில், சுமார் ஆறு ஏழு ஆண்டுகாலமாக நூற்றுக்கும் மேலான சார்ஸ் வைரஸ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவது குறித்தும், எலிகளுக்கு சார்ஸ் வைரஸ்கள் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டது குறித்தும் பேசியுள்ளார். வூஹான் தலைமை ஆய்வாளரான சி செங்க்லி, வூனான் மாகாணத்தின் குகைகளிலுள்ள வௌவால்களின் ரத்த மாதிரிகளை சுமார் இரண்டாண்டுகளாக சேகரித்துள்ளார். இதனாலேயே இவர் பேட் யூமன் என பட்டப்பெயர் பெறுகிறார். புதிரான தொற்று பாதிப்பால் வூனான் சுரங்கத்தில் உயிரிழந்த பணியாளர்களின் ரத்த மாதிரிகளை சி செங்க்லி சேகரித்துள்ளார் எனவும் வேட் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதை தொகுத்துப் பார்ப்பின் வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் வௌவால்களிடத்தில் சேகரிக்கப்பட்ட வைரஸ்களை மறு கட்டமைப்பு செய்து எலிகளிடத்தில் செலுத்தி பரிசோதனை செய்வது புலனாகிறது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் ஆய்வுக்கூடங்களில் சேமித்து வைத்து மேற்கொள்ளப்படுகிற ஆபத்தான பரிசோதனைகள் கட்டுப்பாடான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் வூஹான் ஆய்வகம் அத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்பதே பலர் தற்போது முன்வைக்கின்ற குற்றச்சாட்டாக உள்ளது. அதாவது, இத்தகைய ஆய்வகங்களில் அதிகபட்ச பாதுகாப்பு முறையான BSL-4 ஐ கடைபிடிக்கவேண்டும். அதோடு, தேர்ந்த ஆய்வகப் பணியாளர்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால், வூஹான் ஆய்வகத்தில் இவையிரண்டும் முறையாக கடைபிடிக்கவில்லை என 2018 ஆம் ஆண்டில் வூஹான் ஆய்வகத்தை பரிசோதனை செய்த அமெரிக்க பரிசோதனை அதிகாரிகள் தங்களது அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.
சீனாவும் கரோனாவும்:
சரி இவ்வளவு சிக்கலான ஆய்வை அமெரிக்கா ஏன் சீனாவில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சீனாவில் மலிவான ஊதியத்திற்கு கிடைக்கிற மனித உழைப்பே அதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆய்வை அமெரிக்காவில் இருந்து மேற்பார்வையிட முடியும் என்பதாலும் சீன ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தொகுத்துப் பார்ப்பின் கரோனா வைரஸ், ஆய்வகத்திலிருந்து வந்ததா இயற்கையாக வந்ததா என ஒரு முடிவுக்கு வருவது சவாலான காரியமாக உள்ளது. சிக்கல் என்னவென்றால் வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் ஆய்வுத் தகவல் திரட்டு அனைத்தும் வெளிப் பார்வையாளர்களின் கண்களுக்கு கிடைக்காமல் போனதால் ஆய்வகக் கோட்பாட்டிற்கு வலுவான அறிவியல் ஆதாரம் கிடைக்காமல் போகிறது. அதேவேளையில், வூஹான் இறைச்சி சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவினாலும், வௌவாளுக்கும் மனிதனுக்கும் இடையிலான இடைப்பட்ட வைரஸ் கடத்தல் உயிரினத்தை இதுவரை கண்டறியமுடியவில்லை. சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்றுப் பரவலின் போது, இடைப்பட்ட வைரஸ் கடத்தல் உயிரினம் சில மாதங்களிலேயே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிருக்கான விடை சீனாவிடமே உள்ளது. மாறாக, சீனாவோ உண்மையை மூடி மறைக்கவே முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. வூஹான் ஆய்வகத்தில் பணி செய்தவர்கள் முதலில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அதை சீனா மறைப்பதாகவும் கூறப்படுகிறது. சார்ஸ் -1 போன்ற பெருந்தொற்று ஒன்று வூஹானை தாக்கப் போகிறது என்றும், வூஹான் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வெய்லிங்க் என்பவரை சீன அரசு அச்சுறுத்தி வழக்கு போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். .
இத்தகைய சூழலில்தான் உலக சுகாதார அமைப்பு வூஹான் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அங்கு பிரச்சனை ஒன்றுமில்லை என அறிக்கையளித்தது. இந்த ஆய்வகத்தை ஆய்வு செய்த ஆய்வகக் குழுவில் மருத்துவர் பீட்டர் டசாக்கும் இடம்பெற்றுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியது. முன்னதாக கடந்த 2020 பிப்ரவரி தொடக்கத்திலேயே, ஆய்வக வைரஸ் பரவல் என்பது சதிக் கோட்பாடு என்றும் இயற்கை வழியேதான் வைரஸ் பரவியுள்ளது எனவும் மருத்துவர் பீட்டர் வாதிட்டார். அவரை ஆய்வுக் குழுவில் உலக சுகாதார அமைப்பு சேர்த்தது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த 90 நாட்களில் கரோனா தொற்றுப் பரவலின் மூலக் காரணத்தை அறிந்து அறிக்கை அளிக்க வேண்டுமென அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
முடிவும் எதிர்காலமும்:
கடந்த 1972 ஆம் ஆண்டின் உயிரி ஆயுத தடுப்பு ஒப்பந்தமானது, ஆபத்தான வைரஸ் பாக்டீரியாக்களை ஆய்வகத்தில் சேமித்து ஆய்வு செய்யக் கூடாது என கூறுகிறது. ஆனால் இதை எந்த நாடும் கடைபிடிப்பதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை. முன்னதாக 1960,70 களில் இங்கிலாந்திலுள்ள ஆய்வகங்களிலிருந்து சிற்றம்மை வைரஸ் வெளியே தப்பித்து பரவி சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தற்போது இதுபோன்றதொரு ஆபத்தில் மனித இனம் சிக்கிவிட்டதாக ஐயம் உருவாகிவிட்டது.
கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வந்ததா இல்லையா என்ற விவாதத்திற்கு மத்தியில் இத்தகைய ஆபத்தான அறிவியல் ஆய்வுகள் அறிவியல் எல்லைகளை மீறாமல் இருப்பது மனிதகுலத்தின் உயிர்பிழைப்பிற்கு முன் தேவையாகிறது.
-அருண் நெடுஞ்செழியன்
ஆதாரம்:
The red flags on the trail of the virus-Jayant prasad
https://thewire.in/health/origins-of-covid-19-wuhan-china-coronavirus