தமிழக அரசே ! சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக!

06 Jun 2021

 

சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள்

தமிழக அரசு ஜுன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய முழுமுடக்கத்தை அறிவித்து, தொற்று விகிதத்தின் அடிப்படையில் பகுத்துப்பார்த்து பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் (வெளியீடு எண்:229) மக்களின் பயன்பாட்டு தேவையை அறிந்தும், சிறு, குறு தொழில்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டும் சில தளர்வுகளை அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது.

அதில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சாலையோர வியாபாரிகள் பழம், பூ, காய், விற்பனை செய்யலாம் என்று தெளிவாக சுட்டி காட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள் செயல்படுவது குறித்து எந்த விபரமும் குறிப்பிடவில்லை.

மே மாத முதல் வாரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது 8-05-2021 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் , ”சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது” என்று சொல்லப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அனைத்துப் பிற உணவு நிலையங்களும் செயல்படலாம், பார்சலுக்கு மட்டும் அனுமதி உண்டென்று சொல்லப்பட்டிருந்தது. மேலும்  மின் வணிகமான (E-commerce) amazon, flipkart, bigbasket, swiggy, zomato,uber eat, olaeat  செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருந்தது. ஏனெனில், உணவகங்களில் பார்சல் பெற்று செல்ல அனுமதி உண்டென்றால் சாலையோர கடைகளில் பார்சல் பெற்று செல்ல அனுமதிக்காததற்கு  என்ன காரணம் இருக்கிறது? என்ற கேள்வி அப்போது எழுந்தது. இப்போது  தளர்வுகளை அறிவிக்கும் போது நடைபாதை தள்ளுவண்டி உணவுக் கடைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், தள்ளுவண்டி கடைகள் செயல்பட அனுமதி உண்டா? இல்லையா? என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தொடருமாயின் அரசு பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  1. பார்சல் மட்டும் வழங்கும்பட்சத்தில் உணவகங்களை செயல்பட அனுமதிக்கும்பொழுது தள்ளுவண்டி சாலையோர உணவுக்கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதிப்பதால் கொரோனா தடுப்புக்கான முழு முடக்கத்தின் நோக்கத்திற்கு ஊறு ஏற்பட்டுவிடாது என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.
  1. சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகளில் உணவு தயாரிப்பு, விநியோகம் என்ற அனைத்தும் திறந்த வெளியில் ‘open space’ இல் நடப்பதாகும். உணவகத்தோடு ஒப்பிடும்போது தள்ளுவண்டி உணவுக் கடைகள் வெட்ட வெளியில் நடப்பதால் கூடுதல் பாதுகாப்பானவை.
  1. சாலையோர வியாபாரத்தில் பூ, காய், பழங்கள் இதர பொருட்கள் விற்பனையில் ஒருவர் மட்டுமே ஈடுபடுவர். பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பிற  தொழிலகளில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவர். ஆனால் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளில் ஒட்டுமொத்த குடும்பமும் அதில் ஈடுபடும்.  பாத்திரம் கழுவுதல், எடுப்பு வேலை, மாஸ்டர் என ஓரிருவர் கூலிக்கு வேலை செய்வர். எனவே, இந்த தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஒரு குடும்பமே வாழ்வாதாரம் இழக்கிறது என்பதையும் கூடவே மேலும் சிலர் வேலையில்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  1. 2016ல் சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி சென்னையில் சாலையோர வியாபாரிகளின் மொத்த எண்ணிக்கை 27,192 ஆகும். அதில் 4884 பேர் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் பாதிபேராவது இரவுநேர தள்ளுவண்டிக் கடை நடத்துபவர் என்று எடுத்துக்கொண்டால் குறைந்தது 2500 பேர் மாநகராட்சிக் கணக்குபடியே வருகின்றது. மேலும் மாநகராட்சியின் கணக்கில் வந்தது மிக குறைவே என்பதையும் சொல்லத் தேவையில்லை. எனவே தமிழகமெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தள்ளுவண்டி உணவுக் கடை நடத்துவோர் வாழ்வாதாரத்தை தேவையின்றி முடக்குவதாக இக்கட்டுப்பாடு அமைந்துவிடக் கூடாது.
  1. தள்ளுவண்டி கடைகளை உணவுகளில் ஒப்பீட்டளவிலான குறைந்த விலை உணவை நம்பிருக்கும் நலிந்த  மக்கள் பிரிவினரும் நம் நாட்டில் உள்ளனர்.  ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளியல் நெருக்கடி காரணமாக மேலும் பலர் மேற்சொன்ன நலிந்த மக்கள் பிரிவினரின் வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஏழை, எளிய நுகர்வோரின் பார்வையிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகள் செயல்படுவது அவசியமாகிறது.

எனவே தமிழக அரசே  சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என சோசலிச தொழிலாளர் மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

 

9940963131 / 9607963397

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW