லட்சத்தீவு – பாசகவின் இந்துராஷ்டிரத்திற்கான பரிசோதனைக் கூடமா?

03 Jun 2021

லட்சத்தீவு கேரளத்திலிருந்து 200-300 கி.மீ. தொலைவில் உள்ளது. 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. 10 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். காசுமீருக்கு அடுத்து ஏறத்தாழ 97% இஸ்லாமியர்களைக் கொண்ட ஒன்றிய ஆட்சிப்புலம் இது. அவர்கள் எல்லோரும் மொழியால் மலையாளிகள். 100% கல்வியறிவு, 16% வேலையின்மை இருந்தாலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பெருங்குற்றங்களும் நிகழாத, பயங்கரவாத அச்சுறுத்தல்களற்ற ஒன்றிய ஆட்சிப்புலம் அது. அங்கே மீன்பிடித்தொழிலும், சுற்றுலாவும் பிரதான தொழிலாகும். அனைத்து வகை இன்றியமையாத் தேவைகள், மருத்துவம் கேரளத்தை சார்ந்தே இருக்கிறது. மக்கள்தொகை 65000 மட்டுமே. ஆதலால் சட்டமன்றம் கிடையாது. பஞ்சாயத்து நிர்வாக முறையே அங்கே இருக்கிறது. மத்திய கிழக்கு கடலில இந்தியாவின் கடல் வழித்தடங்களை கண்கானிக்கவும் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன.

இந்த சூழலில் லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா(I.P.S) காலமாக,  டிசம்பர் 5, 2020 அன்று பிரபுல் கேதா படேல் என்ற குஜராத் அரசியல்வாதியை நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கிறது மோடி அரசு. இதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் களை மட்டுமே நிர்வாகியாக பொறுப்பில் அமர்த்துவது வழக்கம்.  முதல்முறையாக வெளிப்படையான அரசியல் பின்புலம் கொண்டவரை மோடி அரசு பணியமர்த்தியுள்ளது. இவர் குஜராத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மோடிக்கு மிக நெறுக்கமானவர்.

சொராபுதீன் சேக் போலி மோதல் கொலை வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்ட போது, அவர் வகித்த பொறுப்புகள் அனைத்தும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவர் மீது தாத்ரா நாகர் ஹாவேலியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகன் தேல்கரின் தற்கொலைக்கு காரணம் என 306,506,389 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணையில் உள்ளது. இத்தகையப் பின்னணி கொண்ட படேல் கட்ந்த 5 மாதங்களாக லட்சத்தீவில் அறிமுகப்படுத்தி வரும் மாற்றங்களை எதிர்த்து அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபுல் கேதா படேல் அடியெடுத்து வைத்து அங்கு செய்யும் அட்டூழியங்களில் குறிப்பிடத்தக்க 4 சட்ட வரைவுகளை கீழே காண்போம்.

 

  1. லட்சத்தீவு வளர்ச்சிக் குழுமம் விதிமுறைகள் சட்டம் 2021 என்ற புதிய சட்ட வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. வரைவின் படி ’வளர்ச்சி’ என்பதன் பொருள்விளக்கம் மண்ணுக்கு அடியே, கீழே, மேலே சுரங்கம் தோண்டுவது, கட்டிடம் கட்டுவது, மலைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட எந்த மாற்றங்களையும் செய்வதாகும். ஆனால், இத்தீவு சூழலியல் வகையில் முக்கியமானப் பகுதியாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வளர்ச்சி மாதிரி உயிர்ச் சூழலுக்கு ஊறுவிளைவிக்கும். அதுமட்டுமின்றி, இச்சட்டத்தின்படி நிர்வாகப் பொறுப்பாளர் ’திட்டமிடல் மற்றும் வள்ர்ச்சிக் குழுமங்களை’ உருவாக்கலாம். அவை எந்தவொரு பகுதியையும் ’வளர்ச்சியின்றி இருக்கிறது’ என்று வரையறுத்த வளர்ச்சியின் பெயரால் அப்பகுதியில் இருப்போரை அப்புறப்படுத்தலாம்.   இது ’சுற்றுலா வளர்ச்சி’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் நிலத்தை கைப்பற்றவும் மக்களைத் தமது வாழிவிடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும் வழிவகுக்கும்.
  2. லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2021 மூலம் மாட்டுக்கறியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிப் பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இவ்வரைவு வழங்குகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யும் பொழுது மாட்டுபவர்களை 1 முதல் 5 இலட்சம் வரை தண்டம் செலுத்த வைப்பதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைப்படுத்தவும் வழிவகுக்கிறது இவ்வரைவும். கேரளா கோவா மற்றும் வடகிழக்கு மாகானங்களில் மாட்டுக்கறி தடையை வலியுறுத்தாத பாசக அரசு, 97% இஸ்லாமியகளைக் கொண்ட தீவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முற்பட்டுள்ளது. மேலும் பங்காராம் என்ற தீவை தாண்டி எங்கும் மது விற்பனை கிடையாது. தற்போது 3 தீவுகளின் மது விற்பனையை அனுமதித்து  ’சுற்றுலா வளர்ச்சி’ என்கிறார் பிரபுல் கூடா படேல்.  குஜராத்திலும் லட்சத்தீவுகள் போல பெரிய கடல்பரப்பு உள்ளது ஆனால், அங்கே மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  இஸ்லாமிய சமய வழக்கத்திற்கு மாறானது என்பதற்காகவே மது விலக்கு அகற்றப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள் முடிகின்றது.
  3. இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைப் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் சட்டத்திருத்தமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அங்குள்ள பல முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியும். தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. இது மறைமுகமாக கட்டாய கருத்தடை செய்யும் வேலையாகும்.
  4. சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்குமுறை சட்டம் 2021 அல்லது குண்டர் சட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே குற்ற நடவடிக்கைகள் மிக குறைவாக நடக்கும் பகுதிகளில் இத்தீவும் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய குற்றங்கள் எதுவும் நடந்தது இல்லை. யாரையும் ஓராண்டு சிறையில் விசாரணையின்றி தடுத்து வைக்க அனுமதிக்கும் இச்சட்ட முன்மொழிவு லட்சத்தீவுக்கு ஏன் கொண்டு வரப்படுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பே. மேற்குறிப்பிட்ட காவி-கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை எதிர்த்து நிற்பவர்களை வேட்டையாடுவதற்கான சட்ட ஏற்பாடாகவே இது முன்வைக்கப்படுகிறது.

 

லட்சத்தீவில் இருந்த விலங்கு வளர்ப்பு துறையை கலைத்து , ஊழியர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, விலங்குகளை விற்றுவிட்டு தற்போது குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் பால் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  38 அங்கன்வாடிகள் , 300 க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களை நீக்கிவிட்டு பள்ளிகளில் வழங்கி வந்த அசைவ உணவையும் தடை செய்துள்ளார் படேல்.

படேல் அடியெடுத்து வைத்து அத்தீவுவாழ் மக்களுக்கு ஆற்றியுள்ள பெருந்தொண்டு இதுதான். கடந்த ஆண்டு இறுதிவரை அத்தீவில் ஒருவருக்குகூட பெருந்தொற்று ஏற்படவில்லை. படேல் தீவுக்குள் வருவதற்கான விதிகளை மாற்றினார். யார் வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியை தளர்த்தி ’கோவிட் நெகட்டிவ்’ என்ற ஆர்.டி. பிசிஆர் சான்றிதழோடு வந்தால் போதும் என்று மாற்றினார் படேல். இன்றளவில் லட்சத்தீவில் 7000த்திற்கும் அதிகாமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் பத்தில் ஒன்றாகும்.

கேரளம் இதை கடுமையாக எதிர்க்கிறது. ஒருமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து மாற்றங்களை மட்டுமின்றி படேலையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. காங்கிரசு கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் டிவிட்டரில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஆனால், இன்னும் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகத்தில் எழுந்துள்ளது. பாசகவோ மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பரப்பப்படும் அவதூறு என்று சொல்கிறது. பாசக தனது எதேச்சதிகார போக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், லட்சத்தீவில் பாசகவைச் சேர்ந்த 8 முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இலட்சத்தீவின் பாசக தலைவர் முன்மொழியப்பட்டுள்ள சட்ட வரைவுகளுக்கு எதிரானப் போராட்டங்களில் பங்குபெற்று வருகிறது.

பாசக அரசு தன்னுடை சித்தாந்தத்தை லட்சத்தீவில் திணிப்பதன் நோக்கம் என்ன? இதை ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் காரரின் சித்துவிளையாட்டு எனப் பார்க்க முடியாது. மொத்த மக்களையும் துரத்திவிட்டு இராணுவமயமாக்க திட்டமிடுகிறதா? அல்லது முழுக்க சுற்றுலா தளமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பார்க்கிறதா? திடீரென ஏன் மாட்டிறைச்சிக்கு தடை, ஏன் மதுவிலக்கு நீக்கம் என்று  கேள்விகள் பற்பல எழுகின்றன.

காசுமீரை துண்டாடிய பாசக ஒன்றிய ஆட்சிப்புலங்களில் தான் செய்ய விரும்பும் காவி-கார்ப்பரேட் வக்கிரங்களைப் பரிசோதனை செய்து பார்க்க நினைக்கிறது என்று புலனாகிறது. ஒரு சிறிய நிலப்பகுதியில் இவற்றை செய்து பார்த்து, செறிவானப் பட்டறிவைப் பெறுவதோடு அவற்றைப் படியாக விரித்துக் கொண்டு செல்லவும் முடியும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான் செய்த தவறுகளை மறைப்பதற்கு சிஏஏ அமலாக்கம், லட்சத்தீவில் அத்துமீறல் என காவி நிகழ்ச்சிநிரலை முன்னுக்கு தள்ளப் பார்க்கிறது பாசக. சனநாயகத்தின் பாற் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக நின்று இதை முறியடிக்க வேண்டும். லட்சத்தீவு மக்களின் அமைதியான வாழ்வுக்கும் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் உரிமை மீட்கப்படுவதும் நிலைநாட்டப்படுவதும் நம்முடைய உரிமைகள் மீட்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும்.

-செந்தில்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW