தமிழக அரசே! நாகூர் உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களை உடனடியாக மருத்துவ பரோலில் விடுதலை செய்!
கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி வரும் சூழலில் வெளியில் இருப்பவர்களுக்கே சரியான மருத்துவ சிகிச்சை இன்றி மரணங்களை சந்தித்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவ கட்டமைப்பும் போதுமான மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. மருத்துவர்களும் அரசும் திணறிக்கொண்டு திண்டாடிக் கொண்டும் இருக்கின்றது. இந்நிலையில் சிறையில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இல்லை. ஐ சீ யூ வார்டுகளும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் இல்லை. வெண்டிலேட்டர் பொருத்தக்கூடிய உள்கட்டமைப்பு சாதனங்களும் இல்லை. சிறையில் இருக்கும் மருத்துவமனைகள் ஒரு சாதாரண ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சமமாகவே உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
அப்படி இருக்கும் பொழுது சிறையில் நீண்ட காலமாக இருக்கும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளன் அவர்களுக்கு ஒரு மாதகால மருத்துவ விடுப்பை தமிழக அரசு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனைச் சிறைவாசிகளாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகள் பலர் போதிய சிகிச்சை இன்றியும் உடல்நலக் குறைவாலும் மரணமடைந்துள்ளனர். அவர்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்திருந்தால் காப்பாற்றி இருக்க முடியும்.
கொரானா தாக்குதல் சிறைக்குள்ளும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் கவலைக்கிடமாக உள்ளனர். நோயாளிகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறைக்குள்ளேயே சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இவர்களை உடனடியாக தமிழக அரசு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாத கால பரோலில் விடுதலை செய்ய வேண்டும். உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் சார்பில் அவரது குடும்பத்தினரும் அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். குறிப்பாக நாகூர் உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களின் குடும்பத்தினர் முதல்வருக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் மனுக்களை அளித்துள்ளனர். அந்த அடிப்படையில் இவர்களை மருத்துவ சிகிச்சைக்காக போலீஸ் காவல் இன்றி குறைந்தபட்சம் ஒரு மாத காலம் உடனடியாக பரோலில் விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் நேற்று கூட மதுரை சிறையில் ஒருவர் குரோனா பாதிப்பினால் இறந்துள்ளார். உற்றார் உறவினர்களின் சந்திப்புகளுக்கும் கூட சிறைத்துறை தடைவிதித்துள்ளது. வழக்கறிஞர்களும் சிறைவாசிகளை நேர்காணல் செய்ய முடியவில்லை. சிறைவாசிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் சிறைக் கொட்டடியில் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழக அரசு பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
தமிழக அரசு சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை சரி செய்து ஆக்சிஜன் சிலிண்டர் வெண்டிலேட்டர் மற்றும் ஐ.சி. யு வார்டுகளை உருவாக்கி போதிய மருத்துவ சிகிச்சைகளை சிறைவாசிகளுக்கு வழங்கவேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு பரோல் கோரிக்கை வைக்கும் சிறைவாசிகளை இடைக்காலமாக விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்
-விநாயகம், தலைமை குழு உறுப்பினர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.
9994094700