11 நாட்கள் இரத்தக் களரிக்குப் பின் இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த உடன்பாடு! பாலஸ்தீன விடுதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அகற்றமுமே நிரந்தர அமைதிக்கு வழி!

22 May 2021

கடந்த மே 10  ஆம்தேதி முதல் நடந்துவரும் இஸ்ரேலிய தாக்குதலும் ஹமாஸ் பதிலடியும் நேற்று மே 21 அதிகாலையோடு நிறுத்தப்பட்டுள்ளது.  காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் போர் நிறுத்தம் என்று அறிவித்துள்ளன. இஸ்ரேல் அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவ்விரு தரப்புமே பரஸ்பர, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன. எகிப்து, கத்தார், ஐ.நா. ஆகியவை போர் நிறுத்தத்திற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளன.

மேற்குகரைப் பகுதியில் உள்ள கிழக்கு ஜெருசலேமில்தான் பிரச்சனை வெடித்தது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தின்  (old city) ஒரு நுழைவாயிலாக டமாஸ்கஸ் கேட் இல் இஸ்ரேலியப் படையினர் வேலிகளை அமைத்தனர். இதனால் ஆயுதமில்லாதப் பாலஸ்தீனியப்  போராட்டக்காரர்களுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே நாட்கணக்கிலான சண்டை நடந்தது. ஒருவழியாக வேலிகள் அகற்றப்பட்டன. டமாஸ்கஸ் கேட் க்கு  அருகிலேயே சேக் ஜர்ராஹ் என்ற பகுதியும் இருக்கிறது. ”அங்குள்ள சில வீடுகளின் உரிமையாளர்கள் யார் – பாலஸ்தீனியர்களா? யூதர்களா?”  என்பதற்கு தீர்வுகாண கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து  இஸ்ரேலிய நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. மே மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய நீதிமன்றம், பாலஸ்தீனியக் குடும்பங்களை வெளியேற்றுமாறு இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவான தீர்ப்பை இவ்வழக்குகளில் வழங்கியது. இதை ஓட்டி தமது தாயக உரிமைக்காக கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். பின்னர், இத்தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மே மாத மோதலில் மிக முக்கியப் புள்ளியாக சேக் ஜர்ராஹ் பிரச்சனை பார்க்கப்படுகின்றது. ஐநாவைப் பொருத்தவரை சேக் ஜர்ராவில் இருந்து பாலஸ்தீனியர்கள் அப்புறப்படுத்தப்பட்டால் அது பன்னாட்டு சட்டமீறலாகும், போர்க்குற்றமாகும். ஜெருசலேத்தை தனது தலைநகரம் என்கிறது இஸ்ரேல். ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் இதை ஏற்கவில்லை. ஜெருசலேம் பாலஸ்தீனத்திற்குரியதாகும். டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகரமாக ஏற்றுக் கொண்டது.  இந்நிலையில், மெல்ல மெல்ல ஜெருசலேத்தை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களின் மூலம் அதை விழுங்கிவிடப் பார்க்கிறது இஸ்ரேல். இந்தப் பின்புலத்திலேயே, சேக் ஜர்ராஹ் பகுதியைப் பாதுகாப்பது பாலஸ்தீனியர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இஸ்ரேலியப் படையினர் சேக் ஜர்ராஹில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

இந்நிலையில், ரமலான் மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமை தொழுகையை அல் அக்சா மசூதியில் நடத்தும் பொருட்டு மே 7 ஆம் நாள் அன்று பத்தாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சேக் ஜர்ராஹில் ஒன்று கூடியிருந்தனர். இந்த மசூதி உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது. தொழுகைக்குப் பின்பு பாலஸ்தீனியர்களால் முழு நகரமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இஸ்ரேலியப் படையினர் அல் அக்சா மசூதியின் வளாகத்தின் மீதே தாக்குதலைத் தொடங்கினர். அவர்கள் கிரனைட்களை வீசினார்கள், ரப்பர் புல்லட்களால் சுட்டார்கள். பாலஸ்தீனியர்கள் கற்களை வீசி இந்த தாக்குதலை எதிர்கொண்டனர்.  மசூதிக்குள்ளேயே கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.  இது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை அதிர்ச்சியும் பெருங்கோபமும் அடையச் செய்தது.

இப்போதுதான் காசா களத்தில் இறங்கியது. காசா என்பது செவ்வக வடிவிலான சிறிய நிலப்பகுதி. அதன் நீளம் 41 கி.மீ. அகலம் 12 கி.மீ. இச்சிறிய நிலப்பரப்பில் 20 இலட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். இது ஹமாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மே 10 ஆம் நாள் மாலை 6 மணிக்குள் இஸ்ரேல் படையினர் அல் அக்சா மசூதி வளாகத்தில் இருந்தும் சேக் ஜர்ராஹ் பகுதியில் இருந்தும்  இஸ்ரேலியப் படையினர் வெளியேற வேண்டும் என்று இறுதிக் கெடு விதித்தது ஹமாஸ். கெடு முடிந்த நிலையில் ஹமாஸ் மத்திய இஸ்ரேலின் மீது ராக்கெட் குண்டு தாக்குதலை நடத்தத் தொடங்கியது.  இஸ்ரேலிய இராணுவம் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய காசா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.பதிலுக்கு ஹமாசும் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் ஐ நோக்கி ராக்கெட் குண்டுகளை ஏவியது. ஆனால், ஹமாசின் ராக்கெட் குண்டுகள் அதன் இலக்கை அடைய முடியாதபடி இஸ்ரேல் இராணுவத்தால்  வானிலேயே தகர்க்கப்பட்டன. அத்தகைய பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஹமாசிடம் இல்லை. காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டன. வானுயர நின்ற கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன.

தான் ஹமாசு படை மீதுதான் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் சொன்னது. ஹமாஸ் மக்களிடையே ஒளிந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியது. ஆனால், மக்களை இலக்கு வைத்தே இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அல்ஜசிரா மற்றும் அசோசியேட் பிரஸ் போன்ற அனைத்துலக ஊடகங்களின் வானளாவிய கட்டிடங்கள் தாக்கியழிக்கப்பட்டன. இதன் நோக்கம் என்பது செய்தி வெளியே தெரியவராமல் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதே ஆகும். இஸ்ரேல் காசாவில் இருந்த கோவிட் பரிசோதனை மையத்தை தாக்கி அழித்தது.

இதற்கிடையே காசா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மேற்குகரையில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கிப் போராடினர்.

அமெரிக்க வல்லாதிக்கம் தனது வழமையான இஸ்ரேலிய ஆதரவு கொள்கை நிலையில் இருந்து சிறிதும் மாறாமல், போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் சீனாவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது வெட்டதிகாரத்தின் மூலம் ( veto power) தடுத்து நிறுத்தியது. ”இஸ்ரேல் தன்னைக் காத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்தினார்.

மொத்தத்தில் இந்த பதினொரு நாள் தாக்குதலில் 65 குழந்தைகள், 30 பெண்கள் உள்ளிட்ட 232 பாலஸ்தீனியர்கள் காசாவில் இஸ்ரேலியப் படையின் கண்மூடித்தனமான குண்டு வீச்சால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1900 த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 160 க்கும் மேற்பட்ட போராளிகளைத் தான் கொன்றுள்ளதாக இஸ்ரேல் சொல்கிறது. சுமார் 20 போராளிகள் வரை உயிரிழந்துள்ளனர் என்று ஹமாசும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் சொல்கின்றன. இஸ்ரேலில் ஹமாசின் ராக்கெட் தாக்குதலால் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இப்போது இந்த போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா. செயலர், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. காசாவிலும் மேற்கு கரையிலும் பாலஸ்தீனியர்கள் இந்த போர் நிறுத்தத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை தமது தாயகத்தைக் காக்கும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் பார்க்கிறார்கள். ஹிஸ்புல்லா இயக்கமும் இந்த போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லியுள்ளது.

ஹமாஸ் திருப்பி அடித்ததும் மேற்குகரையில் பாலஸ்தீனியர்களும் பாலஸ்தீனிய இஸ்ரேலியர்களும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்ததும் பன்னாட்டு அழுத்தத்தின் மூலமாக நெதன்யாகு தலைமையிலான யூத இனவெறி இஸ்ரேலைப் போர் நிறுத்தத்திற்கு உடன்படச் செய்ததும் பாலஸ்தீனியர்களுக்கு கிட்டிய அரசியல் வெற்றியாகும், நம்பிக்கை அளிக்கக் கூடியதாகும்.

ஹமாசைப் பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா பட்டியலிட்டு உள்ளது. அதே நேரத்தில், ஹமாஸ் ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இஸ்ரேல் அரசுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கண்டுள்ளது. இத்தகைய ஒரு முரண்பாட்டை ஈழச் சிக்கலிலும் கண்டோம். விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பாக இருக்கும்போதே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என முத்திரையிட்டு அரசியல் அரங்கில் பலவீனப்படுத்தின. எப்படி இஸ்ரேலியக் குடியேற்றங்களின் மூலம் பாலஸ்தீனியர்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகிறதோ அது போலவே சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு நடந்து வருகிறது. பாலஸ்தீனிய மக்களின் துயரங்களில் நாமும் பங்குகொள்வோம், போர் நிறுத்த உடன்படிக்கையை வரவேற்போம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்போம். பாலஸ்தீனியர்களின் தாயக உரிமையை உயர்த்திப் பிடிப்போம். பாலஸ்தீனியர்தம் போராட்டத்தின் வெற்றி தோல்விகளினில் இருந்து பாடம் கற்போம். குறிப்பாக ஈழத்திற்கானப் பன்னாட்டு ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கு பாலஸ்தீனப் போராட்டத்தில் இருந்து கற்போம்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்த உலக ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குவோம். கொள்ளைக்காரத்தனமான போரும் அடிமைப்படுத்தலும் ஆக்கிரமிப்பும் சுரண்டலும் இல்லாத புதியதோர் உலகத்திற்கான போராட்டத்தில் பாலஸ்தீனியர்களோடு தோழமை கொள்வோம்.

-செந்தில்

சுட்டிகள்:

  1. https://www.aljazeera.com/news/2021/5/20/israel-and-hamas-annouce-gaza-ceasefire
  2. https://www.aljazeera.com/program/start-here/2021/5/20/how-did-fighting-between-israelis-and-palestinians-get-so-bad
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW