மோடியை கேள்வி கேட்டு சுவரொட்டி ஒட்டினால் கைது! நாசிக்களை மிஞ்சுகிற நவ நாசிக்கள்!

17 May 2021

மோடி அரசின் மோசமான கொரோனா தடுப்பூசி கொள்கையை விமர்சித்து தில்லியில் சுவரொட்டி ஒட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. மோடிஜி எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?” என நாடே கேட்கிற கேள்வியை சுவரொட்டியாக ஒட்டிய  காரணத்திற்காக 25 பேரை தில்லி போலீஸ் பொதுச்சொத்தை சேதப்படுத்திய சட்டத்தின் (Prevention of Defacement of Property Act) கீழ் கைதுசெய்துள்ளது.

மோடி அரசின் இந்த சட்டப்பூர்வ வன்முறை செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி “தைரியம் இருந்தால் என்னையும் கைது செய்யுங்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்போல முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்,  தனது வீட்டின்முன்பு அதே வாசகம் கொண்ட சுவரொட்டியை ஒட்டி, தன்னையும் கைது செய்யுமாறு தில்லி போலீசுக்கு சவால் விடுத்துள்ளார். பெருந்தொற்று சூழலிலும் தில்லி போலீசுக்கு வேறு வேலை ஏதும் இல்லாமல் இப்படி கைது செய்வதா? என ரமேஷ் அறச்சீற்றத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுவரொட்டியில் கேட்கப்பட்டது மிகச் சரியான கேள்வி என்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. சமூக ஊடகங்களில் “என்னையும் கைது செய்” (Arrest me too) என்கிற வாசகம் டிரன்ட் ஆகி வருகிறது. சட்டத்தின் மூலமாக சாமானிய மக்களின் குரல்களை நெரித்துவிடலாம், மக்களை பயமுறுத்தி மௌனிக்க வைக்கலாம் என்ற மோடி அமித்ஷா கும்பலின் நோக்கத்தில் மண் விழுந்துள்ளது.

சுவரொட்டி ஒட்டியதற்கு நூதனமான வகையிலே பொதுச்சொத்தை சேதப்படுத்திய சட்டத்தின் பேரில் கைது செய்வது ஒன்றும் மோடி அரசுக்கு புதிதல்ல. முன்னதாக 2020 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய சுற்றுப் பயணத்தைக் கண்டித்தும் சுவரொட்டி ஒட்டியதற்காக சுமார் 583 பேர் மீது இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டது 477 கைது செய்யப்பட்டனர்.

எதார்த்தத்தில் நாட்டு மக்களின் உயிரையும் உடைமையும் சேதப்படுத்துகிற ஆர் எஸ்எஸ் பாஜக கும்பல், ஆட்சியாளர்கள், சாமானிய மக்களின் மீது இதுபோன்ற சட்டத்தை போடுவதும் மிரட்டுவதும் முரண்தான். சாமானிய மக்களின் ஜனநாயக போராட்டம் மீதான ஆளும் அரசின் அச்சத்தையே இந்த சட்டங்களும் கைதுகளும் பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரு நாளைக்கு சுமார் நாலாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர். ஆற்றில் செத்த மீன்கள் மிதப்பதுபோல கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கின்றன. மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்து கிடக்கின்றனர். இந்தியாவின் இந்த அவல நிலைக்கு மோடி அரசின் அலட்சியமும் ஆணவப் போக்குமே காரணமென சர்வதேச பத்திரிக்கைகள் முதற்கொண்டு உள்ளூர் பத்திரிக்கைகள் வரைக்கும் மோடி அரசின் கையாலாகாத்தனத்தை தோலுரிக்கின்றன. ஆனால் மடமையும் ஆணவமும் ஒருங்கே கொண்ட மோடி அமித்ஷா கும்பலாட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வக்கற்ற கோழைகளாக போலீஸ் படைகளுக்கு பின்னே ஒழிந்துகொண்டு எதிர்ப்புகளை ஒடுக்கத் துடிக்கின்றனர்.

ஒருபக்கம் இரண்டாம் அலை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தாமல் மருத்துவ எச்சரிக்கைகளையும் மீறி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தியது, கும்பமேளாவை நடத்தியது என அடுத்தடுத்த மோடி அரசின் அலட்சியப்போக்கு மக்களை மாபெரும் நிறுவனப் படுகொலைக்கு தள்ளியது. மற்றொரு பக்கம் தடுப்பூசி திட்டத்தை தனது பொறுப்பில் எடுக்காமல் தடுப்பூசி மருத்துவ சந்தையிடம் கைகழுவிவிட்டது. தடுப்பூசி உற்பத்தி விநியோகம், விலை நிர்ணயம் ஆகியவற்றின் மீதான அரசின் தடுப்பூசி கொள்கை, இரு ஏகபோக நிறுவனங்களின் வணிக நலன்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது. உயிர் காக்கும் தடுப்பூசியை கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக சரக்காக மாற்றுவதற்குத் துணை போனதன் மூலமாக நாட்டு மக்களுக்கு மரண சாசனம் எழுதியது மோடி அரசு.

மேலும் போர்க்கால அடிப்படையிலே நாட்டு மக்களுக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாமல் இழிவான சுய மோக நோக்கத்திற்காக உலக நாடுகளுக்கு 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. எங்கள் சொந்த மக்களுக்கு தடுப்பூசி போட்டதை விட அதிகப்படியான தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று கடந்த மார்ச் 27 ஆம் தேதி ஐநா சபையில் இந்திய பிரதிநிதி பேசிய பேச்சானது, சொந்த நாட்டு மக்களை தனது அரசியல் விளம்பரத்திற்கு மோடி அரசு பலி கொடுத்ததற்கான ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ தடுப்பூசி ஏற்றுமதியை விமர்சிப்பவர்கள் பொறுப்பற்றவர்கள், குறை பார்வை உடையவர்கள் என விமர்சிக்கிறார்.

பொறுப்புள்ள அரசோ  தொலைநோக்கு பார்வை கொண்ட அரசோ இந்தியாவில் இருந்திருந்தால் இந்தியாவில் இரண்டாம் அலையை தவிர்த்திருக்கலாம் என்பதே உண்மை. இந்தியாவின் நிலைமையை பாருங்கள், இந்திய அரசைப் போல அலட்சியமாக தொற்றை கருதினால், இதான் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு மோசமான வகையில் இந்தியாவை மேற்கோள் காட்டுகிற நிலைக்கு தள்ளியது யார் என்பது வெளியுறவுத் துறை அமைச்சருக்கே வெளிச்சம்.

தற்போது தில்லியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்து எறிந்தாலும் ஐநாவில் பேசிய பேச்சை மோடி அரசால் மறைக்க முடியுமா? தடுப்பூசி இல்லாமலே நாம் கொரோனாவை வென்றுவிட்டோம் என்று பேசியதை மோடியால் மறுக்க இயலுமா?

தடுப்பூசி கொள்கை குறித்து நீதிமன்றத்திடம் சென்ற வழக்குகளுக்கு பக்கம் பக்கமாக பிரமாணப் பத்திரம் மூலமாக பதில் சொல்கிற மோடி அரசு குடிகாரனைப் போல தெளிவற்ற வகையில் தனது மக்கள் விரோத தடுப்பூசி கொள்கையை  நியாயப்படுத்துகிறது.

சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் ஏன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என மத்திய அரசைக் கேட்டல், சுகாதார அமைச்சகம் கடந்த மார்ச் 11 அன்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் கூறிய பதிலைப் பாருங்கள்.

“உலகம் என்பது ஒரே அலகு. உலக நாடுகள் நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெற்றால் தான், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகிற தொற்றை தடுக்க முடியும்” என்கிறது

இப்படியாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏன் சிந்திக்கவில்லை என நமக்கு வியப்பாக உள்ளது. இந்தியாவில் தொற்று நீடித்தால் கொரோனாவிற்கு எதிராக அமெரிக்கா மக்கள் எதிர்ப்பாற்றல் பெற முடியாது. இந்தியாவில் இருந்து தொற்று அமெரிக்காவிற்கு பரவலாம் ஆகவே முதலில் இந்திய மக்களுக்கு தடுப்பூசி போடுவோம் என அமெரிக்க அரசு சிந்திக்கவில்லை பாவம்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடியும்! காளையும் கன்று ஈனும்” என்பதுபோல உள்ளது அரசின் பதில். இதற்கு முன்னர் இதே போன்றதொரு கேள்விக்கு தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும் மத்திய அரசை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும் என தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, பிரமாணப் பத்திரத்தில் மத்திய மோடி அரசு குறிப்பிட்டது.

நீதிமன்றமும் தலையிட கூடாது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் ஆலோசனைகளுக்கும் செவி சாய்க்கக்கூடாது. மருத்துவ ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் கேட்கக் கூடாது. சுய அறிவும் கிடையாது. இத்தகைய அரசியல் தலைமையின்கீழ் நாடு சென்றால் என்னாகும் என்பதற்கு எதார்த்த சாட்சியாகிவிட்டோம். ஆனால், அதற்கு மிகப்பெரிய விலை கொடுத்துவருகிறோம்.

தடுப்பூசி கொள்கையில் மோடி கும்பல் ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் முறையே

  1. தடுப்பூசி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்து இரு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் உற்பத்தியை அனுமதித்தது.
  2. இரு தடுப்பூசி நிறுவனங்களிடம் மட்டும்தான் மாநில அரசுகள் நேரடியாக வாங்க வேண்டும் என உத்தரவு போட்டது
  3. தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற விலையை கட்டுப்படுத்தாமல் மோடி அரசு கள்ள மௌனம் காப்பது.
  4. தடுப்பூசி தயாரிப்பிற்கு மிக தாமதமாக மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
  5. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல், மாநில அரசுகளை தடுப்பூசி நிறுவனங்களின் வாசலில் பலவந்தமாக நிற்க வைத்தது. இதில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசிகள் கிடைக்காமல் மூன்றாம் தடுப்பூசி கொள்கையை அமல்படுத்த முடியாமல் (18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது) திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

தடுப்பூசி கொள்கையில் மோடி அரசு செய்த/செய்துவருகிற அடுக்கடுக்கான மக்கள் விரோத செயல்பாடுகள் தான் இன்றைய அவல நிலைக்கு முதன்மைக் காரணியாக உள்ளது..

கொரோனாவை வெற்றி கொண்டோம் என ஊருக்கு முன்னாடி அறிவித்த மோடி அமித்ஷா கும்பல் தற்போது மண்ணுக்குள் தலையை அமிழ்த்திக் கொள்கிறது. இதையேதான் அவுட்லுக் பத்திரிக்கை “மோடி அரசை காணவில்லை” என முன்பக்கத்தில் சரியாகவே பிரசுரித்தது.

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://www.republicworld.com/india-news/politics/congress-and-tmc-mps-slam-24-arrests-for-anti-modi-posters-jairam-ramesh-issues-dare.html

https://theprint.in/india/action-on-anti-modi-posters-not-new-delhi-filed-583-firs-in-2020-439-in-2019-under-same-law/659570/?utm_source=izooto&utm_medium=push_notification&utm_campaign=ThePrint

https://www.thehindu.com/news/national/centre-justifies-move-to-export-covid-19-vaccine-in-supreme-court/article34571071.ece

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW