ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்காததுதான் இப்போது பிரச்சனையா? தொற்றுப் பரவல் சங்கிலியை எப்படி உடைக்கப் போகிறோம்?

14 May 2021

2000 ஆம் ஆண்டுகளின் பிற்பாதிவரை ஐ.டி. துறையில் பெரும்பாலான நிறுவனங்களில்  சட்டையை பேண்டுக்குள் நுழைத்துக் கொண்டு ’formals’ என்று சொல்லப்படும் வகையில் ஆடையணிந்து செல்ல வேண்டும். வாரத்தில் ஒருநாள்  வெள்ளிக்கிழமை மட்டும்  டீ-சர்ட் , ஜீன்ஸ் அணிந்து செல்லலாம். அது ‘casuals’ என்று சொல்லப்படும். அதுவும்கூட business casusals தான். காலர் இல்லாத டீ-சர்ட் அணிந்து செல்ல முடியாது.  டி.சி.எஸ். , இன்போசிஸ் போன்ற இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் இதுதான் நிலை. பின்னர், பேபால், அக்சென்சர், கேப்ஜெமினி போன்ற மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் வந்தன. அதில் வாரத்தின் 5 நாட்களிலும் casuals இல் வேலைக்குப் போகலாம். ”நீங்கள் விரும்பிய ஆடை அணிந்து வரலாம். எங்களுக்கு வேலைகள் சரியாக நடந்தால் போதும்” என்பதுதான் நிர்வாகத்தின் கண்ணோட்டம்.

முழுமுடக்கம் பற்றிய பார்வையிலும் என்ன தேவை என்பதில் பழமைவாதக் கண்ணோட்டமே நம் ஆட்சியாளர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு போன்றவர்கள் மக்களைக் குற்றஞ் சொல்வதென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வருவதையும் மைய அரசின்  கொலைக்குற்றங்களைக் கண்டும் காணாமல் விடுவதையும்தான் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தமக்கு முகம் தெரிந்த ஒருவரின் இறப்பு செய்தியை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஊரடங்கு தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களாம்! அப்படி தவறாகப் பயன்படுத்துவதற்கு அல்லது இன்றியமையக் கூடிய கேளிக்கைகள் என்னென்ன திறந்துவிடப் பட்டுள்ளன? கடற்கரை, பூங்கா, திரையரங்கு, கேளிக்கை விடுதிகள், மைதானங்கள் என எல்லாம் மூடியுள்ளன. மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், சுடுகாடுகள்  ஆகியவைதான் திறந்து கிடக்கின்றன. மருத்துக்கும் சிகிச்சைக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் மருத்துவமனைக்கும் சுடுகாட்டுக்கும் வறுமைக்கும் தேவைகளுக்கும் பசிக்கும் சோற்றுக்கும் இடையே  வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில், தேவையில்லாமல் நடமாடுவதற்கு மக்கள் என்ன மடையர்களா?

முழு முடக்கம் என்றால் சாலைகள் வெறிச்சோடி இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. அதாவது, மாணவரென்றால் கை கட்டி, வாய் மூடி, தலையாட்ட வேண்டும் என்று சொல்லும் எசமானர் மனநிலை. மக்கள் சற்றே ஆசுவாசமாக காணப்பட்டால், சமூகத்தில் ஒரு லேசான மன நிலை இருந்தால் வக்க்கிர மனம் ப்டைத்தோருக்கு வயிறு எரிய தொடங்கிவிடும். முழு முடக்கத்தின் போது லத்தியை சுழற்றாமல் விடலாமா? கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுவிடுகிறார்கள்!

வாகனங்கள் சாலையில் போனால் விதி மீறல் என்று சொல்வது. ஒரு பொருளை வாங்குவதற்கு நடந்து சென்றால் என்ன, சைக்கிளில் சென்றால் என்ன? பைக்கில் சென்றால் என்ன? பொருள் வாங்கும் கடையில் சமூக இடைவெளியைப் பேண வேண்டும். அவ்வளவுதானே.

கொரோனா போதிய சமூக இடைவெளி இருந்தால் பரவாது, வெட்ட வெளிகளில் பரவாது. மூடிய அறைகளில் பரவ வாய்ப்புண்டு. இவையெல்லாம் அடிப்படையான புரிதல். தனியாக மகிழுந்தில் வரும் ஒருவர் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லும் காவல்துறை! பைக்கில் ஒருவர் தனியாக வண்டி ஓட்டிச் செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்லும் விதி. ஆனால், வீட்டுக்குள், காற்றோட்டமில்லாத அறையில்தான் காற்றில் கிருமி இருக்கும். வெட்ட வெளியில் கிருமி இறக்காது.

ஆகவே, சமூக இடைவெளி பேணப்படுகிறதா? இல்லையா? மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளையில் முகக் கவசம் அணிகின்றனரா? இல்லையா? வெட்ட வெளியிலான சந்திப்புகளா? மூடிய அறை சந்திப்புகளா? இவையெல்லாம் தான் கருதிப் பார்க்க வேண்டிய விசயங்கள்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.

முழு முடக்கம் என்றால் என்ன?

தொற்று இருப்போர், இல்லாதோர்  என எல்லோரையும் அவரவர் வீட்டிற்குள்ளேயே முடக்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தையும் சமூகத்திடம் இருந்து தனிமைப்படுத்துவது, தொற்றுப் பரவல் சங்கிலியை உடைப்பது. இதற்குப் பெயர்தான் முழுமுடக்கம்.

தொற்றுப் பரவல் சங்கிலியை உடைக்க முழுமுடக்கம்தான் ஒரே வழியா?

முதற்பெரும் வழி என்பது பரிசோதனை எண்ணிக்கையை கூட்டுவதுதான்.இப்போதைய நிலையில் கொரோனா தொற்று என்று பதிவேட்டுக்கு வருவதைவிட சராசரியாக 20 மடங்கு கணக்கில் வராமல் போகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளில் இந்த இடைவெளி உண்டு. ஆனால், பிற  நாடுகளில் அறிகுறி இல்லாத தொற்றாளர்கள் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பில்லாததால் இந்த கணக்கில் வராத எண்ணிக்கைக்கு காரணமாகிறது. நம் நாட்டிலோ, அச்சத்தினாலும் தயக்கத்தினாலும். மக்கள் பரிசோதனைக்கு தாமாக முன்வருவதில்லை. இதனால் இரண்டு பிரச்சனைகள்.

  1. பரிசோதனை செய்து கொண்டு கொரோனா கிருமித் தொற்று இருப்பின் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இதனால், நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். பரிசோதனை செய்யாமல் அறிகுறியோடு வெளியே நடமாடுவதால் நோய்ப் பரவ வாய்ப்புண்டு. அதனால்தான், நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த பரிசோதனையைக் கூட்டச் சொல்கின்றனர்.
  2. அறிகுறிகள் தெரிந்தாலும் பரிசோதனைக்கு முன்வராமல் காலந்தள்ளி பத்து நாட்கள் கழித்து நோய் தீவிரமடைந்தபின் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புவரை அது செல்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, இங்கு தொற்றைக் கட்டுப்படுத்தவும் சாவைக் குறைக்கவும் பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்டியாக வேண்டும்.

அதிலும், அறிகுறி இருப்போர் பரிசோதனைக்கு தாமாக முன்வந்து, பரிசோதனையில் தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் சங்கிலியை உடைத்துவிட முடியும். ஆனால், இது நடப்பதில்லை. அரசின் மீது நம்பிக்கை கொண்டு அறிகுறி வந்தவுடன் பரிசோதனைக்கு வர மக்கள் தயங்குகின்றனர். இந்த இடத்தில்தான் நமக்கு இடர்பாடு இருக்கிறது.  தன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, பரிசோதனை, தனிமைப்படுத்தல் பற்றிய அச்சத்தைப் போக்கி, பரிசோதனைக்கு வரவைப்பதில் அதிக முன்னேற்றம் காண முடியாத அரசு, முழுமுடக்கம் என்ற முடிவுக்கு செல்கிறது. அதன்மூலம், மக்கள் மீது ஒட்டுமொத்த பழியையும் சுமையையும் தூக்கி வைக்கிறது அரசு.

 பரிசோதனை எண்ணிக்கையைப் பெருக்க வழி என்ன?

  • மக்களுக்கு நோய்ப் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
  • பெரிய அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பிறருக்கு நோய்ப் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் நோயர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ’ தனிமைப்படுத்துவதற்கு நீங்கள் ஒத்துழைப்பதன் மூலம் ஒரு சமூகப் பணியை செய்கிறீர்கள், நீங்கள் தனிமைப்படுத்தப்படுவது தண்டனையோ அல்லது உங்களைக் குற்றவாளிகள் போல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ அல்ல என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இன்றளவும் 100 இல் 80 பேர் நோய் தீவிரம் அடையாதவர்கள்தான். ”நான் நன்றாகத்தான் இருக்கிறேன், நான் ஏன் பராமரிப்பு மையத்திற்கு(dedicated covid care centres) வரவேண்டும்” என்பது அவர்களது வாதம். ”நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், உங்களைச் சுற்றியுள்ளோருக்காக நீங்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஒத்துழையுங்கள்” என்று புரிய வைக்க வேண்டும். தனிமைப்படுத்தல் தொடர்பான இத்தகைய புரிதலை ஏற்படுத்துவதற்கு மாறாக ’வந்து புடிச்சிட்டுப் போயிடுவாங்க” என்பதுதான் நாம் இந்நாள்வரை  ஏற்படுத்தியுள்ள புரிதல்.
  • 10 – 14 நாள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஏற்படும் வருமான இழப்பு பற்றிய அச்சம்.
  • தனிமைப்படுத்தலால் தன்மான இழப்பு(social stigma) என்று கருதுவதையும் வருமான இழப்பு என்று கருதுவதையும் எதிர்கொள்ள பின்வரும் கொள்கைமுடிவு உதவக் கூடும். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவரது குடும்பத்திற்கு உதவித் தொகையாக 2000 ரூ பணமும் ஒரு மாதத்திற்கான உணவு, தானியப் பொருட்களும் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ஓரளவுக்கு பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்ட முடியும். இதனால் நிதிச்சுமை ஏற்படும் என்று சொல்லப்படலாம். ஒரு குடும்பத்திற்கு என்று சொல்லும் போது இப்போது மொத்த எண்ணிக்கையில் இழப்பீடு பெறுவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். மேலும் முழு முடக்கத்திற்கு செல்வதால் ஏற்படும் பொருளியல் இழப்போடு ஒப்பிடுகையில் அதற்கான வாய்ப்புகளைக் குறைக்க கூடிய இந்த பொருட் செலவு என்பது மிகச் சொற்பமே. முதலாளிகளின் கூட்டமைப்புகள் கூட இந்த சொற்பமான செலவை ஏற்றுக் கொள்ள முன்வருவரக் கூடும். ஏனெனில் மக்களுக்காக அல்லாமல் தங்கள் இலாபத்திற்காக முழுமுடக்கத்தை விரும்பாதவர்கள் ஆயிற்றே.

 

தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கைக்கும் கணக்கில் வராத எண்ணிக்கைக்குமான இடைவெளியைக் குறைப்பதில்தான் உண்மையிலேயே அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா  என்பதைக் கண்டறிய முடியும். கண்கள் பொய் சொல்லும், புள்ளிவிவர  எண்கள் பொய் சொல்லாதுதானே.

எது எடப்பாடிக்குப் பொருந்துமோ அது ஸ்டாலினுக்கும் பொருந்தும். கொரோனா சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல, மருத்துவப் பேரிடர். மக்கள் அரசோடும், அரசு மக்களோடும் கைகோர்த்தால்தான் இதை வெல்ல முடியும். காவல்துறையின் தடிகொண்டு கொரோனாவை விரட்டியடிக்க முடியாது. கண்ணுக்கு தெரியாத கொரோனாவை ஊபா சட்டத்தில் கைது செய்ய முடியாது.

நோயர்களுக்கு அரசால் ஆக்சிஜன் தரமுடியவில்லை, படுக்கைகள் தர முடியவில்லை, ரெம்டசிவர் மருத்து கொடுக்க முடியவில்லை, செத்தவர்களுக்கு சுடுகாட்டில் புதைக்கவோ எரிக்கவோ இடம் தர முடியவில்லை. உயிரிழப்பு ஒருபுறம். பொருளிழப்பு மறுபுறம். அன்பு உறவுகளின் சாவுக்குப் போய் கண்ணீர் விட்டு அழ முடியாத மன அழுத்தம் இன்னொருபுறம். நம் சமூகத்தின் பண்பாட்டு வாழ்க்கையின் மூச்சை அழுத்தும்படியான நிலைமை விரிந்து கொண்டிருக்கிறது.

மக்களை அடக்கியாளும் காவல் துறையினர் நிரந்தர வேலைக்காரர்கள். ஆனால், மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும், செய்நுட்பப் பிரிவினரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தேசப் பாதுகாப்பின் பெயரால் துப்பாக்கிகளும் குண்டுகளும், அணுகுண்டு வைத்திருக்கும் அரசு தம் மக்களின் உயிர் காப்பதற்கு தேவையான அக்சிஜனை கையிருப்பாக வைத்திருக்கவில்லை. இத்தனைக்குப் பிறகும்கூட மக்களைத்தான் குற்றவாளி ஆக்குகிறார்கள்.

இந்நேரத்தில் மக்களிடம் காவல்துறையின் வழியாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் விதைப்பதால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.  மற்றபடி, பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்டுவதில்தான் சங்கிலி உடைப்பு அடங்கி இருக்கிறது. ஒரு சமூகத்தில் இந்த எண்ணிக்கை எவ்வளவுக்கு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு முழுமுடக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் ராக்கெட் அறிவியலோ கம்ப சூத்திரமோ அல்ல.

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW