கொரோனா இரண்டாம் அலை – அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக்கு! தனியார் மருத்துவக் கட்டமைப்பைக் கையிலெடு! தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறையை ஈடுபடுத்து! போர்க்கால அடிப்படையில் பொது சுகாதாரத்துறையைப் பலப்படுத்து!

12 May 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் செய்தியறிக்கை

திமுக தலைமையிலான தமிழக அரசு கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கு பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவர்களைக் களமிறக்கியமை, கட்டளை மையம் அமைத்தமை, ஒப்பந்த செவிலியர்களில் 1212 பேரை நிரந்தரமாக்கியமை, மருத்துவப் பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை என்பவை சுட்டிக்காட்டக்கூடியவற்றுள் சில.

இரண்டாம் அலையின் வருகை பற்றி வல்லுநர்கள் எச்சரித்தபோதும் மைய அரசின் அலட்சியத்தாலும் அறிவியல் நோக்கின்மையாலும் பெருந்தொற்றைக்கூட காவி-கார்ப்பரேட் நிகழ்நிரலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சிறுமதியாலும் நாடே மூச்சுத் திணறும் அவலத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. தடுப்பூசியின் வழியாக மந்தை தடுப்பாற்றலை(herd immunity) ஏற்படுத்த முடியும் என்று சொல்லிக் கொண்டே தடுப்பூசி உற்பத்தியிலும் கோட்டை விட்டுவிட்டது.  தமிழகத்தில் நேற்றைய புள்ளிவிவரப்படி 298 பேர் கொரோனாவுக்குப் பலி. இம்முறை பாதிக்கப்படுவதிலும் சாவதிலும் இளைஞர்களும் இணைநோய்கள் இல்லாதவர்களும் (comorbidities) அதிகம். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொற்று எண்ணிக்கை உச்சம் தொடும் என கணிக்கப்படுகிறது. இப்போதே படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை எனக் கையறு நிலையின் கதறல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.

முதல் சுற்றுப் போலவே, முதலைக்கு தலையைக் கொடுப்பது போல் முழுமுடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். நேற்றைக்கு கடன் சுமையால் மதுரையை சேர்ந்த குடும்பம் ஒன்றில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் நஞ்சுண்டு சாவு. இவை கொரோனா பேரிடரின் சாவுக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. முழு முடக்கம் விளைவித்துக் கொண்டிருக்கும் பொருளியல் பேரிடருக்கான முன்னோட்டங்கள் இந்த சாவுகள்.

இந்நிலையில்தான் வரவேற்கத்தக்க நிர்வாக மாற்றங்கள் மட்டுமின்றி கொள்கை மாற்றங்களைக் கோரி நிற்கிறது சூழல்.  இதற்கு மைய அரசும் தமிழக அரசும் செவிசாய்க்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு தன் அதிகாரத்திற்குட்பட்ட விசயங்களை உடனே அமல்படுத்த வேண்டும்; மைய அரசு செய்ய வேண்டியதை  வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கம் ஆக்கிடுக!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக்க முதல் வேலை என்பது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே ஆகும். அதற்கு தமிழக முதல்வர் முன்வந்திருப்பது வரவேற்புக்கு உரியது. அதேநேரத்தில் சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சிகளையும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,  அணைத்து கட்சிகள், இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், சமய நிறுவனங்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கி மாநில அளவில் தொடங்கி மாவட்ட அளவிலும் வேர்க்கால்மட்டத்தில்  வட்ட அளவிலும்  ”கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் நோயர் உதவிக் குழுக்கள் அமைத்து மேலிருந்து கீழ் வரையானக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விழிப்புணர்வு, கண்காணிப்பு, அறிவுறுத்தல், உதவி என எல்லாவகையிலும் இக்குழுவால் பங்களிக்க முடியும்.  உடனடி மற்றும் நீண்ட கால நோக்கில் அடுத்த அடுத்த அலைகள் , அடுத்த அடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள இதுவே உதவக் கூடும்.

தடுப்பூசிஉற்பத்தியில் ஏகபோகத்தையும் வெளிப்படையின்மையையும் ஒழித்துக் கட்டுக!

 • தடுப்பூசி உற்பத்தி செய்யும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் தந்து இதிலும் கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு மைய அரசு வால்பிடித்துக் கொண்டிருப்பது மக்களைக் கொத்துக்கொத்தாக மடியச் செய்யும் மனித குலத்திற்கு எதிரானக் குற்றமாகும்(crimes against humanity). பொதுத்துறை நிறுவனங்களையும் இன்ன பிற தனியாரையும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இறக்கிவிடும் வகையில் உரிமம் கொடுக்க வேண்டும், அவற்றிற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.
 • தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மைய அரசு, மாநில அரசு, தனியார் என்று  ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு விலை வைப்பதும் விருப்பம் போல் விலையை ஏற்றுவதும் ஏற்புடையதன்று. இலாப நோக்கமற்ற வகையில் ஒரே விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்.
 • தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகளை மக்களிடம் மூடிமறைப்பது ஏற்புடையதல்ல. மாறாக அதன் பாதிப்புகளையும் பலன்களையும் வெளிப்படையாக அறிவித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி தடுப்பூசி பற்றி வ்ழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் . தடுப்பூசிப் போட்டப் பின்னான பாதிப்புகள், சாவுகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.   AEFI – Adverse Effect Following Immunization” என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதா? அதன் ஆய்வில் கண்டடைந்தவை என்ன? தடுப்பூசி போட்டப் பின் 14 நாட்களுக்குள் நேரும் சாவுகளைக் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், தடுப்பூசியின் பொருட்டான பாதிப்புகளுக்கு அரசுப் பொறுப்பேற்க வேண்டும், இழப்புகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,  உயிரிழப்புகளுக்கு உதவித்தொகை கொடுப்பதன் மூலம் ஒரளவுக்கு ஈடுசெய்ய முன்வர வேண்டும்

தனியார் மருத்துவக் கட்டமைப்பைத் தற்காலிகமாக கையிலெடு, கட்டணக் கொள்ளையை தடுத்திடு.

 • ஆக்சிஜன், உயிர்வலியூட்டிகள் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இப்போது தனியார் மருத்துவமனைகளில் அரசு தந்துள்ள வழிகாட்டு நெறிகள் கறாராக கடைபிடிக்கப்படுவதில்லை, சிகிச்சைக்கான தேவையிருப்பினும் முதியவர் என்றால் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளாமல் திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில், தனியார் துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் படுக்கைகள் ஆகிய அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும். தனியார் மருத்துவப் படுக்கைகளை அரசே நிரப்ப வேண்டும்.
 • கர்நாடகாவைப் போல் 75% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆணையிட வேண்டும்.
 • ”எரியும் கொள்ளியில் பிடுங்கியதுவரை இலாபம்” என்பது போல் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவின் பெயரால்   கொள்ளையடித்து வருகின்றன. அரசு உடனடியாக தலையிட்டு விலையை நிர்ணயம் செய்வதோடு, அதை கண்காணிக்க வேண்டும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிசோதனை –எண்ணிக்கையைக் கூட்டுவதும் நேர விரையத்தை குறைப்பதும் 

இன்றைக்குகூட சுகாதாரத்துறைச் செயலர் இணைநோய் இல்லாத் இளைஞர்கள் சாவதற்கு காரணம் காலதாமதமாக சிகிச்சைக்கு வருவதுதான் என்று சொல்லியுள்ளார்.

 • அரசு பரிசோதனைக் கூடங்களில் மூக்கு – தொண்டையிலிருந்து மாதிரிகள் கொடுத்தபின் முடிவறிவதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதாவது 48 மணி நேரம் ஆகிறது. ஆனால், மாதிரி எடுத்து 6 மணி நேரத்தில் முடிவை அறியமுடியும். இந்த தாமதம் சிகிச்சையைத் தொடங்குவதற்கான நேரத்தை தள்ளிப்போடுகிறது. அதிகபட்சம் 12 மணி நேரத்திற்குள் முடிவறிவதற்கு வழிசெய்யப்பட வேண்டும்.
 • இப்போது அறியட்ட தொற்றாளர் எண்ணிக்கையை விடவும் கணக்கில் வராதது 10 மடங்கிலிருந்து 25 மடங்குவரை இருக்கக்கூடும் என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. “கொரோனா என்று உறுதியானால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்” என்ற தனிமைப்படுத்தல் தொடர்பான அச்சத்தாலும் 14 நாட்கள் வருமான இழப்பு ஏற்படும் என்ற வாழ்வாதார நெருக்கடியாலும் பரிசோதனைக்கு மக்கள் முன்வரத் தயங்குகின்ற்னர். குறைந்தபட்சம் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்ள அரசிடம் பரிசோதனை செய்து கொண்டு கொரோனா நோய்த்தொற்று உறுதியானால் அந்த நோயரின் குடும்ப அட்டைக்கு 2000 ரூ உதவித் தொகையும் ஒரு மாதத்திற்கான உணவு, தானியங்களும் வழங்குவதன்மூலம் பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்ட முடியும், உயிரிழப்பைக் குறைக்க முடியும், நோயரைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் சங்கிலியை உடைக்க முடியும்.  முழு முடக்கத்தினால் ஏற்படும் பொருளியல் சேதங்களோடு ஒப்பிடும்போது இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை மிகமிக குறைவே.
 • தனியார் பரிசோதனைக் கட்டணத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதும் பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்ட உதவும்.

தளர்வான மற்றும் பகுதியளவிலான முடக்கமே பொருத்தமுடையது

 • ’முழுமுடக்கம் முழுத்தீர்வல்ல’ என்று மருத்துவ வல்லுநர் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை பலரும் முதல் அலையின் போது சொல்லக் கண்டோம். இப்போது இரண்டாம் அலையில் நிலைமை கைமீறிப் போய்விட்டதென்றும் தொற்று பரவும் சங்கிலியை உடைக்க வேண்டும் என்றும் முழுமுடக்கம் இரண்டு வாரத்திற்கு அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பே பகுதியளவிலான முடக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஆட்சிப் போல் அல்லாமல் இந்த முழுமுடக்கத்தை உருப்படியாகப் பயன்படுத்தி சங்கிலியை உடைக்க வேண்டும், முன்கூட்டிய திட்டமிடலுடன் மருத்துவக் கட்டமைப்பு முறிந்து விழாத அளவிற்கு அதை பலப்படுத்த வேண்டும். முன்கூட்டிய திட்டமிடலை  செய்யத்தவறி, பிறகு மருத்துவ நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக முழுமுடக்கம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படக் கூடாது. முழு முடக்கத்தால் விளையும் நன்மைகள் மற்றும் இழப்புகள் கணக்கிடப்பட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்திட வேண்டும்.
 • மேலும், முதல் அலையின் போது முழுமுடக்கத்தில் பாதிப்புறும் மக்களைப் பாதுகாக்க மாதந்தோறும் 6000 ரூ முதல் 7500 ரூ வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு எதிர்க்கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. நிதிப்பற்றாக்குறை(fiscal deficit) பற்றி கவலைப்படுதவதற்குரிய நேரமிதுவல்ல என்றும் அப்போது அறிவுறுத்தப்பட்டது. இப்போது அக்கட்சிகள்தாம் ஆளுங் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளாகவும் உள்ளன. எனவே, தொழிலாளர்கள், உழவர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், சில்லறை வணிகப் பிரிவினர், முதியவர்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என வகைப்பிரித்து நிதியுதவி செய்ய வேண்டும்.

அரசு  மருத்துவக் கட்டமைப்பைப் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்துக

 • மருத்துவக் கட்டமைப்பு முறிந்து விழாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் அதை பலப்படுத்த வேண்டும் என்று துறைசார் வல்லுநர்கள் வலியுறுத்திய போது அது கருத்தில் கொள்ளப்படவில்லை. இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு(NHS) அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6% நிதி ஒதுக்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 11 இலட்சமாகும். நாட்டிலுள்ள துறைகளிலேயே அதிகமான பணியாளர்களைக் கொண்ட துறை இதுதான்! ஆனால், இந்தியாவிலோ ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6% மட்டும்தான் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இங்கிலாந்தின் NHS  போல் தமிழ்நாட்டின் சுகாதார துறையின் நிலையும் உயர்த்தப்பட வேண்டும்.
 • கடந்த ஆண்டு கோவிட் பராமரிப்பு மையங்களுக்கான( Dedicated Covid Care Centres) ஆயிரக்கணக்கானப் படுக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், கோவிட் நலவாழ்வு மையங்களும்( Dedicated Covid Health Centres) கோவிட் மருத்துவமனைகளும் ( Dedicated Covid Hospitals ) அவற்றின் தேவைக்கேற்ப உருவாக்க்ப்படவில்லை என்பது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளை ஒட்டுமொத்தமாக கோவிட் சிகிச்சைக்கு மாற்றும் பெருந்தவறு நடந்துவருகிறது. இதனால் கொரோனா அல்லாத நோயர்களுக்கான சிகிச்சை ஏற்கெனவே தடைப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் கிங்க்ஸ் இண்டிடியூட்டில் மட்டும்தான் கோவிட் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்தஅடுத்த அலைகளை எதிர்கொள்ளவும் வழக்கமான நோயர்களுக்கான சிகிச்சை தடைபடாமல் இருக்கவும் தனியான கோவிட் மருத்துவமனைகள் மாவட்டந் தோறும் உருவாக்கப்பட வேண்டும்.
 • ஆக்சிஜனுக்காக கிராமங்களில் இருந்து மாவட்ட மருத்துவமனை நோக்கி வரக்கூடிய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. இது கொடுமையானது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை கிராமப்புறங்களில் இருந்து முதலில் அமல்படுத்த வேண்டும். வேர்க்கால்மட்ட அடிப்படை மருத்துவக் கட்டமைப்பை பலப்படுத்த பெருமளவிலான நிதியை ஒதுக்கி அரசு மக்களின் நல்வாழ்வு முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
 • ஓராண்டில் தடுப்பூசி, மருந்து என கொரோனா பொருட்டான ஆய்வுக்காக ஆங்கில மருத்துவத் துறையில் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் உலகெங்கும் உள்ள அரசுகளால் செலவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மரபான மருத்துவ முறைகளில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஆய்வுகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது.? என்ன ஆய்வு முடிவுகள் வரப்பட்டன? உயிர்காக்கும் வழிவகைகள் உண்டு, இல்லை என்று சொல்வதற்கான அடிப்படைகள் என்ன இருக்கின்றன? கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவ முறைகளையும் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை மைய அரசும் தமிழக அரசும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

 

பாலன்,

பொதுச்செயலாளர்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW