திமுக தலைமையிலான புதிய அரசு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னுள்ள கடமைகளும் சவால்களும்

06 May 2021

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து திமுகவுக்கு அரசமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்வது இவ்வாட்சியின் உடனடி சவாலாக இருக்கிறது. கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை கடந்த ஓராண்டாக எங்களைப் போன்ற பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசும் அதற்கு அறைகூவல் விடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஒன்றிணைந்து வென்றிடுவோம்!

எல்லோரும் குறிப்பிட்டதுபோல் ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த ஆட்சி பாசிச பாசகவின் அடிமை ஆட்சியாக இருந்தது.  அது அகற்றப்பட்டுள்ளது. ஆனால், மைய பாசக அரசின் ஆபத்துகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் பொருட்டு தமிழக அரசு மூன்று முக்கிய கடமைகளுக்கும் இரு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

மூன்று முக்கிய கடமைகள்:

  1. நாடாளுமன்ற அமைப்பு முறையின் மீதான தாக்குதலும் சிறுகும்பலாட்சி (Oligarchy) சர்வாதிகாரமும்:

தோல் இருக்க சுளை பிடுங்குவதுபோல் நாடாளுமன்ற அமைப்பு முறையை வைத்துக்கொண்டே  அதை செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. நாடாளுமன்ற அமைப்பு முறையில் உள்ள நிறுவனங்கள் யாவும் பிரதமர் அலுவகத்தின் கைப்பாவை ஆக்கப்பட்டுவிட்டன. மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை போன்றவையும் செயலிழக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்களில் ஒரு சிறு கூட்டத்தின் நலனையும் காவிக் கும்பலின் கொள்கைகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது இவ்வரசு. இதைத்தான் சிறுகும்பலாட்சி சர்வாதிகாரம் என்கிறோம்.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்பது காவி-கார்ப்பரேட் கூட்டணியின் முழக்கமாக இருக்கிறது.  இந்துராஷ்டிரம் என்பதை ஓரிரவில் அவர்களால் உருவாக்க முடியாது. ஆனால், நாடாளுமன்ற அமைப்பு முறையை வைத்துக் கொண்டே இந்துராஷ்டிரத்தின் உள்ளடக்கமான குடியுரிமை திருத்தச் சட்டம் CAA, பசுவதை தடுப்புச் சட்டம் EIA, பொதுசிவில் சட்டம் என ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டுவந்து இஸ்லாமியர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது இவ்வரசு.   இதை நரித்தனமாக செய்கிறது அது. இந்த நிகழ்ச்சிப் போக்கின் முடிவில் பாசிச அரச வடிவமெடுப்பதையும் அதற்கேற்றாற் போல் சமூகத்தை தயார்படுத்துவதையும்தான் நாம் காவி-கார்ப்பரேட் பாசிச அபாயம் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

இந்நிலையில், உடனடியாக நாடாளுமன்ற அமைப்புமுறையின் மீதான தாக்குதலை தடுப்பதுதான்  காவி-கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கான வழி. அதுவே, புதிய தமிழக அரசின் முதலாவது கடமையாக இருக்கிறது.

  1. தில்லியில் அதிகாரக்குவிப்பும் ஒற்றையாட்சி சர்வாதிகாரமும்

மற்றெந்த மாநிலங்களைவிடவும் அதிகபட்சமான அரசியல் உரிமையைப் பெற்றிருந்த ஜம்மு-காசுமீர் மாநிலத்தையே, ஒரு நாடாளுமன்ற மசோதா மூலம் துண்டாடியதோடு ஒன்றிய ஆட்சிப்புலமாக்கியது மோடி அரசு. கொரோனா நாட்களில் எல்லா மாநிலங்களும் கூடுதல் அதிகாரம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒன்றிய ஆட்சிப்புலமான தில்லியின் அதிகாரத்தை மேலும் குறைத்தது மோடி அரசு. மாநிலங்கள் மீதான தாக்குதலின் தன்மையை உணர்ந்துகொள்ள ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் இவை.

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் தலையீடு, பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் தொடங்கி மாநில அதிகாரிகள் நியமனம்வரை தலையீடு, நிதி அதிகார பறிப்பு என மோடி அரசின் அதிகார அத்துமீறல்கள் மாநில அரசுகளின் இயல்புவாழ்க்கையாக மாறிவிட்டன. கல்வி, வேளாண்மை, சட்ட ஒழுங்கு என மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கும் அம்சங்களில் கூட மைய அரசின் தலையீடுகள் நாள்தோறும் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிப் போக்கின் இறுதிப் பக்கம் என்பது சட்டமன்றங்களை செல்லாக்காசாக்கி, மாநில அரசுகளை முழுமுடக்கம் செய்து, மாநில கட்சிகளையே குழி தோண்டிப் புதைப்பதாக இருக்கப் போகின்றது. எனவே, மைய அதிகாரக் குவிப்புக்கு எதிராக மாநில அரசின் உரிமைப் போர் முழக்கமும் அதற்காதரவாக தமிழக மக்களைத் தன் பக்கம் திரட்டுவதும் திமுக அரசின் முக்கியமான இரண்டாவது கடமையாகும்.

  1. சமூகங்களைப் பிளவுப்படுத்தும் பொறியமைவும் (Social Engineering) காவிகளின் நிகழ்ச்சிநிரலும்:

மக்களை இந்து – முஸ்லீம் என்று பிளவுபடுத்தி தேசியவாத கதையாடல்களின் மூலம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதை காலந்தோறும் சமூக அரசியல் தளத்தில் செய்துவந்த பாசக, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் வழியாகவும் இதை செய்யத் துணிந்துவிட்டது. தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பவர்களை இந்து விரோதியாக சித்திரித்து தனது வலையில் விழ வைக்கும் உத்தியைக் கையாள்கிறது. இந்த பிளவுபடுத்தும் அரசியலை எதிர்கொள்வதற்கு இந்து விரோதி என்ற தருக்கத்திற்குள் சென்று சரமசப்படுத்திக் கொள்வது ஆபத்தையே விளைவிக்கும். மாறாக தமிழ்நாடு எதிர் சங் பரிவாரக் கும்பல் என்ற அரசியலை முன்வைத்து இந்த பிளவுவாதக் கருத்தை முறியடிக்க வேண்டும்.

இன்னொருபுறம், சாதிகளைக் கையாளும் சமூகப் பொறியமைவு உத்தியை ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக முயன்றுவருகிறது. இட ஒதுக்கீட்டு சட்டம், மண்டல் ஆணையப் பரிந்துரை ஆகியவை சமூகத்தை முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் என வகைப்படுத்துகிறது. ஆனால், பாசகவோ இதற்கு மாற்றாக ஒவ்வொரு தனித்தனி சாதிகளாக விசயத்தைப் பார்க்கிறது. அவற்றின் அரசியல் பிரதிநித்துவம், பண்பாட்டு விருப்பங்கள், பொருளாதார நலன் ஆகியவற்றோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன்மூலம் நாடாளுமன்ற அதிகாரத்திற்கானப் போட்டியில் அச்சாதிகளை தன் அணியில் சேர்த்து கொள்கிறது. அச்சாதிகளில் இருந்து தலைவர்களை உருவாக்குகின்றது.  இதில் முதன்மையாக, அச்சாதிகளை ஏற்கெனவே இருக்கின்ற வகைப்பாடுகளில் இருந்து பிரித்து, ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு எதிராக நிறுத்தி, அரசியல் சண்டையில் பயன்படுத்திக் கொள்ளும் உத்தியைக் கடைப்பிடிக்கிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் சில சாதிகளை குறிவைத்து தனது அரசியலை நடத்தி ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளது பாசக.

ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தும் பாசக, தொடர்ச்சியாக அந்த சாதியின் நலனுக்காக நிற்பதில்லை ( மேற்கு வங்கத்தில் மட்டுவா சாதி)  என்பதை பல்வேறு மாநிலங்களிலும் கண்டுவருகிறோம். இதை உணர்ந்துகொள்ளாத சாதிக் குழுக்கள் பாசகவின் சமூகப் பொறியமைவென்னும் பொறிக்குள் சிக்கிக்கொள்கின்றன.

சமூகநீதி விசயத்தில் தமிழகம் எடுத்துக்காட்டான வரலாறையும் நடைமுறையையும் கொண்டுள்ளது. ஆனால், அதிலும்கூட இன்றைக்கு அடையாள திரட்சியுடன் வரக்கூடிய சாதிகளின் சமூகப் பொருளாதாரக் கோரிக்கைகளை தீர்க்க முடியவில்லை என்பதைத்தான் பாசக தனக்கான களமாகப் பார்க்கிறது. அந்த வகையில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கொள்கைகளை விரிவாக பரிசீலித்து, அண்மையில் மறைந்த தோழர் வே. ஆனைமுத்து உள்ளிட்டோர் வெகுகாலமாக வலியுறுத்தி வருவதைப் போல், தமிழகத்தில் 100 விடுக்காடு இடப்பங்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையை ஆய்வுக்கு எடுக்க வேண்டும். அத்துடன்   பல்வேறு மேற்கு நாடுகளில் இருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகள் (affirmative action) போல் அரசின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய விசயங்கள் மட்டுமின்றி சமூகத்தின் பொது வளங்களாக உள்ள  தொழில்,வணிகம், நிலம் ஆகியவற்றிலும் சமூகநீதிக் கொள்கையை, இடப் பங்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த தொடங்குவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் பாசகவின் சமூகப்பொறியமைவு என்ற பொறிவலையை உடைத்தெறிவது புதிய தமிழக அரசின் மூன்றாவது கடமையாகும்.

 இருபெரும் சவால்கள்:

  1. ஈழத்தமிழர் இன அழிப்புக்கான நீதியும் தமிழ்நாட்டின் வகிபாகமும்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு சிங்கள பெளத்தப் பேரினவாத இலங்கை அரசால் நடத்தப்பட்டதாயினும் அதில் இந்திய அரசின் பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும். இந்தியாவுக்கு மிக அண்மையிலும் தெற்காசிய நிலப்பரப்பிலும் இருக்கும் இலங்கை தீவின் மீது இந்தியாவின் எத்தகைய தலையீட்டையும் உலக நாடுகள் தடுக்க முன்வராது.  சீனாகூட அதிகபட்சம் ஐநா சபையில் ஒரு கண்டன அறிக்கை வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளக்கூடிய சர்வதேச அரசியல் யதார்த்தமே நிலவுகிறது.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அது தடுத்து நிறுத்தவில்லை என்பதோடு அதற்கு துணைபோனது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தி இந்திய அரசை வழிக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய கடமை அப்போதைய மைய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் உண்டு. ஆனால், அக்கடமையிலிருந்து அவர்கள் இருவருமே தவறிவிட்டனர்.

12 ஆண்டுகளாகியும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கை தீவில் இன அழிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசு தனக்கு தேவையான வகையில் இலங்கையில் தலையிட்டு ஆட்சிமாற்றம் வரை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் உறுதிமிக்க அரசியல் தலைமை இருந்தால் இந்திய அரசை வழிக்கு கொண்டுவந்து சிங்களப் பெளத்த பேரினவாத அரசை தனிமைப்படுத்தியிருக்க முடியும்.

தெற்காசிய பிராந்திய, சர்வதேச அரசியல் பற்றி எந்த படிப்பும் கள அறிவும் இல்லாத திமுக ஆதரவு அறிவாளிகளில் சிலர், முந்தைய திமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறை நியாயப்படுத்தி, இன அழிப்புப் பற்றிய உரையாடலைப் புதைத்துவிட முடியும் என்று கருதிக்கொண்டு திமுகவை தவறாக  வழிநடத்தி வருகின்றனர். ஆனால், இன அழிப்பை மூடி மறைக்க முடியாது. இலங்கை தீவில் இந்தியாவின் தலையீடும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த கால தவறைப் புரிந்து கொண்டு புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும். கடந்த காலத் தலைமைகளின் தவறுகளை இன்றைய கால தலைமை சுமக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த தவறை தமிழ் மக்களிடம் ஒப்புக்கொள்வதன் மூலம் இன அழிப்புக்கு நீதி கோருவதிலும் அரசியல் தீர்வு காண்பதிலும் உறுதியான புதிய தலைமையாக திமுக தம்மை நிலைநாட்டிக் கொள்ளவியலும்.

மக்கள்தொகை, சந்தை, பொருளாதாரம் என எந்த வகையிலும் இலங்கையைவிட தமிழ்நாட்டுக்குதான் சாதகம் அதிகமாக இருக்கிறது. இதனால், சிங்கள ஆளும்வர்க்கத்தைவிட தமிழ்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு இப்பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்கு அதிகம். சீனப் பூச்சாண்டி என்று இந்திய அரசு சொல்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டும் வேடிக்கை. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை உறுதியாக இருந்தால் சிங்களப் பேரினவாதத்தை தனிமைப்படுத்தி முற்றுகைக்குள் கொண்டு வரமுடியும்.

இன்றைக்கும் இன அழிப்பு பல முனைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களின் உடனடி கோரிக்கைகளான சிங்களக் குடியேற்றத் தடுப்பு, இராணுவ வெளியேற்றம், நிலப்பறிப்பு தடுப்பு போன்றவற்றிற்கு குரல் கொடுப்பதில் தொடங்கி இன அழிப்புக்கு நீதியைப் பெறுவது வரை தமிழக அரசும் அதன் தலைமையும் உணர்பூர்வமாக செயலாற்ற வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் இதை செய்யக்கூடிய தலைமை யாராயினும் அது போற்றப்படும்; செய்யத் தவறும் தலைமை யாராயினும் அதற்கு நீங்காப் பழிவந்து சேரும்.

  1. கார்ப்பரேட் பேரழிவுத் திட்டங்களும் கொள்கை நிலைப்பாட்டின் தேவையும்

கார்ப்பரேட் பேரழிவுத் திட்டங்கள் தொடர்பில் திமுகவுக்கென்று ஒரு தீர்க்கமான கொள்கை இல்லை. மீத்தேன் திட்டத்திற்கு இசைவு தெரிவித்தது திமுக அரசுதான். பின்னர், மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் திமுக மீத்தேன் திட்டத்தை எதிர்க்கத் தொடங்கியது. காவிரிப் படுகையை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள  நரிக்குடியில் 25000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடியும் பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினர். அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை முட்டாளாக கருதுகின்றனர். திமுகழகம் இதுகுறித்து வாய்த்திறக்கவில்லை என்பதையும் கண்டோம்; நினைவில் கொண்டோம்.

சுருங்கக்கூறின், மக்கள் எதிர்த்தால் ஒரு திட்டத்தை எதிர்ப்பது என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. இதனால், ஆக்சிஜன் தேவையின் பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதென்ற கேள்வி எழுந்தபோது திமுக தவறான நிலையெடுக்க நேர்ந்தது. மேற்குலக நாடுகளில் பசுமை தொழில்துறைக் கொள்கை, சூழலைப் பாழ்செய்யாத வகையிலான திட்டங்கள் போன்றவை முதலாளித்துவ முகாமிலேயெ உருவாகியுள்ளன. குறைந்தபட்சம் இதுபோன்ற சில மாதிரிகளை எடுத்துக்கொண்டாவது திமு கழகம் தமக்கென்று இதன் தொடர்பில் கொள்கைகளை வரித்துக்கொண்டு கார்ப்பரேட் நலனை மையப்படுத்திய, சூழலை சீரழிக்கும் பேரழிவுப் பெருந்திட்டங்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. தற்சார்பு, பசுமை தொழில்வளர்ச்சி குறித்து தெளிவான கொள்கைகளை வகுத்திட வேண்டும்.

பாசிச அபாயத்தை முறியடித்து வரவிருக்கும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நோக்கில் இக்கருத்துகளை முன்வைக்கிறோம். இதே நோக்கத்துடன், இந்த தேர்தலுக்கு முன்பும் தேர்தல் காலத்திலும் செயல்பூர்வமாகப் பணியாற்றிவருகிறோம். பாசிச பாசகவை சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கோடு  நேரடியாகவும் அடையாளமின்றியும் பல்வேறு இயக்கங்களோடு கூட்டாக ’மக்கள் இயக்கங்கள்’ என்ற பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பணிசெய்தோம். இதனால், தேர்தல் களத்தில் நேரடி மோதலை எதிர்கொண்டோம்; அடக்குமுறையை சந்தித்தோம்; சிறைபடுத்தப்பட்டோம்.

இதன் தொடர்ச்சியாகவே, பாசிச எதிர்ப்பு சனநாயகத்திற்கான திசையில் தமிழக அரசியல் நடைபோட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை முன்வைக்கிறோம்.

-பாலன்

பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW