இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவருமான திரு ரிசாத் பதியுதீன் கைது – மியான்மர்மயமாகும் இலங்கை அரசியல்

27 Apr 2021

ஏப்ரல் 24 சனிக்கிழமை அன்று அதிகாலை 2:30 மணிக்கு அகில  இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரிசாத் பதியுதீன் அவரது வீட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புபடுத்தப்பட்டு இவரும் இவரது தம்பி ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரமலான் மாதத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படியொரு கைதை செய்ததன் மூலம் இலங்கை தீவில் வாழும் முஸ்லிம்களை அச்சுறுத்தியுள்ளது இலங்கை அரசு.

மூன்று நாட்களுக்கு முன்பு கத்தோலிக்கப் பேராயர் மால்கம், ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல் மீதான விசாரணையில் எந்த முன்னேற்றமுமில்லாதது பற்றி அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு கணக்கு காட்டுவதற்காகவும் அதேவேளையில் முஸ்லிம்கள் மீது மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்காகவும் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது கோத்தபய அரசு.

ஏப்ரல் 14 அன்று 11 முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டதாக கோத்தபய அரசு அறிவித்தது. அப்பட்டியலில் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்,ஐ.எஸ். உம் குறிப்பிடப்பட்டுள்ளன. எஞ்சிய 9 அமைப்புகள் இலங்கையில் உள்ள சமய மற்றும் சமுதாய அமைப்புகளாகும். இந்த அமைப்புகளோடு தொடர்புடைய எவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கோத்தபய சொல்லியுள்ளார்.  இந்த குண்டுவெடிப்புப் பற்றி புலனாய்வு செய்வதற்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஓர் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படிதான் இந்த அமைப்புகள் தடை செய்யப்படுவதாக கோத்தபய அரசு சொல்கிறது. இந்த ஆணையத்தால் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்ற பெளத்த அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை இருந்தது. ஆனால், அப்படியான எந்த அமைப்பின் பெயரும் கோத்தபயாவால் வெளியிடப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இல்லை.

பேராயர் மால்கம் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் மட்டுமின்றி அதை காக்கத் தவறிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். 2019 ஏப்ரலில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளில் கிட்டதட்ட 279 பேர் கொல்லப்பட்டனர். முழுக்க இராணுவமயமாகியுள்ள இலங்கை தீவுக்குள் எப்படி வெடிமருந்து வந்தது?, எங்கே குண்டு தயாரிக்கப்பட்டது? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன. இராணுவத்தின் ஒத்தாசையின்றி இத்தகைய குண்டுவெடிப்பை நடத்தியிருக்கவே முடியாது என்ற கருத்தும் அரசியல் அரங்கில் பலராலும் முன்வைக்கபட்டது. உண்மையில் இப்படியொரு தாக்குதல் நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கையை இந்திய அரசும் இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தாக்குதல் நடப்பதற்கு 17 நாட்களுக்கு முன்பே வழங்கியிருந்தது. அப்படியிருந்தும் இத்தாக்குதலை இலங்கை அரசு தடுக்கத் தவறிவிட்டது.

 ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் காரணமாக காட்டி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு ஆட்சியில் இருக்கும் ரணில் – சிறிசேனா தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற பரப்புரையை இராசபக்சே சகோதரர்கள் சிங்கள மக்களிடம் முன்னெடுத்தனர்.  அது சிங்கள மக்களிடம் எடுபடவும் செய்தது. இதன் தொடர்ச்சியாகவே இரணிலும் சிறிசேனாவும் தோற்கடிக்கப்பட்டு இராசபக்சே சகோதரர்கள் பதவிக்கு வந்தனர்.

முள்ளிவாய்க்காலில் மாபெரும் படுகொலைகளை நிகழ்த்தி தமிழர்களின் போராட்டத்தை நசுக்கிய பிறகு சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் முஸ்லிம்கள் பக்கம் திரும்பினர். முஸ்லிம்களின் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பொருளியல் நலன் இதற்குள் ஒளிந்துகொண்டிருந்தது. புத்த துறவிகளால் தலைமை தாங்கப்படும் பொது பலசேனா என்ற சிங்கள பெளத்த பேரினவாத அமைப்பு 2009 க்குப் பிறகு தொடங்கப்பட்டது. இதன் தலைவர் புத்த துறவி கலபோத் அத்தி ஞானசேரா. முஸ்லிம் தீவிரவாதத்தாலும் சமூகப் பிரிவினைவாதத்தாலும் ஏற்படுகின்ற ஆபத்திற்கு எதிராக சிங்கள மக்களை அணி திரட்டுவதாக அவ்வமைப்பு சொல்லிக் கொண்டது. அவர்களைப் பொருத்தவரை முஸ்லிம்களின் அன்றாடப் பழக்கவழக்கங்கள் யாவும் மதத் தீவிரவாதமாகும். ஏற்கெனவே 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரானக் கலவரங்களுக்கு இவ்வமைப்பு வழிவகுத்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களை முஸ்லிம் சமய வழக்கப்படி புதைப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. அவரவர் சமய வழக்கப்படியும் உரிய பாதுகாப்புடனும் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுநெறிகளை உலக நலவாழ்வு மையம்(WHO) வழங்கியிருந்தது. அதையும் மீறி கொரோனாவின் பேரால் முஸ்லிம்கள் மீதானப் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பாக இலங்கை அரசு இதை பயன்படுத்திக் கொண்டது.  இது உள்நாட்டிலும் பன்னாட்டளவிலும் இலங்கை மீது கடும் விமர்சனத்தை எழுப்பியது. கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்துள்ள ஐ.நா. மனிதவுரிமை மன்றக் கூட்டத்தொடரில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு மத்திய கிழக்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடுகளிடம் ஆதரவு பெறும் பொருட்டு கொரோனாவினால் உயிரிழந்தோரை முஸ்லிம்கள் அடக்கம் செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை அரசு.

அதேவேளையில் மார்ச் 13 அன்று பர்தா அணிவதற்கு தடை விதித்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிக் கூடங்களை மூடச் சொல்லியும் அறிவிப்பு தந்தார் அமைச்சர் சரத் வீரசேகரா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மதத் தீவிரவாதம் என்றும் தேசியப் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தக் கூடியதென்றும் அவர் சொன்னார். பின்னர் எழுந்த கடுமையான பன்னாட்டு எதிர்ப்புக் காரணமாக இந்த முடிவைப் பிற்போட்டது இலங்கை அரசு.

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வழக்கறிஞர் அசீஸ் இஸ்புல்லா 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்டு இப்போதுவரை விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 சனவரி இறுதியில் இலங்கையில் மனிதவுரிமைகளின் நிலைமை குறித்து ஐ.நா. மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலே வெளியிட்ட அறிக்கையில், அசீசின் கைது பற்றி புதிய மற்றும் அதிகரிக்கும் மனிதவுரிமைக் கவலைகள் என்ற தலைப்பின் கீழ் விவரிக்கிறார். மேலும் பெரும்பான்மைவாத மற்றும் விலக்கி வைக்கும் சொல்லாட்சியங்கள் என்ற தலைப்பில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறார். அசீஸ் மட்டுமின்றி இளம் இஸ்லாமிய கவிஞர் அக்னப் ஜசீம், ஜமாஅத் இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் அஜ்ஜூல் அக்பர் ஆகியோரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டில் எழுந்துள்ள பொருளியல் நெருக்கடி, கடன் சுமை, அம்பலமான வரி ஊழல், ஐ.நா. மனிதவுரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் தீர்மானம் என ஆளும் இராசபக்சே தரப்புக்கு பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நோக்கில் சிங்கள பெளத்தப் பேரினவாத அரசியலை வடக்குகிழக்கு பகுதியில் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுப்பது அப்பட்டமாக தெரிகிறது.

கடந்த இருவாரத்திற்கு முன்பு யாழ் நகர மேயர் மணிவண்ணனும்கூட ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டது போலவே ஓர் அதிகாலை வேளையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த கைதின்போது சிங்கள இராஜதந்திர ஆய்வாளர் தயன் ஜெயதிலகா, ”சிறிலங்காவின் அரசியல் மியான்மர்மயமாகி வருகின்றது” என்று குறிப்பிட்டார். அதாவது, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் மியான்மரைப் போல் இலங்கை அரசியல் மாறிவருகின்றது என்பது இக்கூற்றின் பொருளாகும்.  ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தம் குடிமக்களை மியான்மர் இராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்வதை உலகம் கண்டு வருகிறது.

இன்றைய இலங்கையின் அரசியலும் மியான்மர்மயமாகி வருகிறது என்று சொல்வது பொருத்தமுடையதுதான். இப்போது மியான்மரில் அங்குள்ள பெரும்பான்மை இன மக்கள் இராணுவ அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இலங்கையைப் பொருத்தவரை அங்குள்ள சிங்கள பெளத்தப் பேரினவாதக் கொலை இயந்திரம் சிறுபான்மை இன மக்களைத் தின்று செரிப்பதற்கு இன்னமும் மக்கள் மிச்சம் இருக்கிறார்கள். அவ்வகையில் மியான்மரைப் போல் சிறிலங்காவிலும் ரோஹிங்கியாத் துயரம் நிகழ்வதற்கான வாய்ப்பு இலங்கையின் அரசியல் சமூக வரலாற்று யதார்தத்தில் உண்டு. மியான்மரில் நடந்ததுபோல் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் மீது சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிகள் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உண்டு.

இவ்வேளையில் தமிழகத்தில் இருந்து சிங்கள பெளத்தப் பேரினவாதத்திற்கு எதிரான வலுவான இயக்கம் உடனடித் தேவையாக இருக்கிறது. ஏனெனில், கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம்களானாலும் சரி வடக்கு கிழக்கில் வாழும் ஏனைய ஈழத் தமிழர்களானாலும் சரி மலையகத் தமிழர்களானாலும் சரி அவர்களுடைய இருப்பிலும் நல்வாழ்விலும் அக்கறைக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW