ஸ்டெர்லைட் மரண ஆலையை மீண்டும் திறப்பதா? தமிழக அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அறிவில் பஞ்சமா ? அறிவியல் அறிவில் பஞ்சமா?

26 Apr 2021

ஒப்பற்ற முத்துநகர் எழுச்சிப் போராட்டத்தில் களப்பலியான  ஈகியர்களின் தியாகத்தின்  விளைவாக மூடப்பட்ட வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைய பேரிடர் சூழலில் ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என்ற ஆளுவர்க்க கருத்துருவாக்க நாடகத்திற்கு திமுக,இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட  தேர்தல் கட்சிகள் முற்றிலும் இரையாகிவிட்டன,எத்தனை உயிரை எடுத்தாலும் ஆலையை திறப்பதில் விடாக்கொண்டன் அனில் அகர்வால்  ஆக்சிஜன் தட்டுப்பாட்டு சூழலை ஆலை திறப்பதற்கான வாய்ப்பாக முன்வைப்பதில் உள்ள உள்நோக்கத்தை அரசியல் கட்சிகள் எவ்வாறு கண்டுகொள்ள முடியாமல் போனது?

கடந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கு இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்கு பல வாய்ப்புகள் இருந்தன.உதாரணமாக

  • ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  “ஸ்டெர்லைட் ஆலையில் 1050 டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் அதில் 35 டன் மட்டுமே திரவவடிவில் உற்பத்திசெய்ய முடியும் என்றும் அதன் தூய்மைத் தன்மையும் குறைவுதான்” எனக் கூறியதில் இருந்து ஆலோசனை கூட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும்.
  • ஒரு வேலை 35 டன் திரவ வடிவ ஆக்ஸிஜானை உற்பத்தி செய்து தூய்மை தன்மையையும் சரி செய்து விட்டாலும் எவ்வாறு அதை பிற பகுதிகளுக்கு அனுப்ப இயலும் என விவாதிருக்க வேண்டாமா? ஏனெனில் ஆக்சிஜன் உற்பத்தியின் முக்கிய பிரிவே அதை பாதுகாப்பாக கொண்டுசெல்வதில் தான் அடங்கியுள்ளது.இன்று இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் உள்ள தடங்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் அல்ல.பெரும்பாலும் பாதுகாப்பாக உருளைகளில் நிரப்பி லாரிகளில் அனுப்புவதுதான் சவாலாக உள்ளது. இத்தகைய நிலையில் திடுமென நாளைக்கே ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் எப்படி திரவு ஆக்சிஜன் வாயுவை லாரியில் அனுப்ப இயலும்?எங்கிருந்து ஆக்சிஜன் உருளைகள் மற்றும் லாரிகளை ஏற்பாடு செய்வார்கள்? அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?
  • முறையான மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவைப்படுகிற காலம் எவ்வளவு?இந்த காலதையும் நேரத்தையும் பொதுத்துறை பெல் நிறுவனத்திற்கு வழங்கினால் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதா?
  • பாதுகாப்பற்றது என அரசால் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும்? ஸ்டீல் ஆலைகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிகிற நிலையில் தமிழகத்தில் பிற ஸ்டீல் ஆலைகளில் இதைச் செய்ய முடியாதா?

மேற்கூறப்பட்ட கேள்விகளில் ஒன்றைக் கூடவா  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை?

உற்பத்தி பொருளின் மதிப்பையும் பயனையும் மட்டுமே கவனத்தில் கொண்டு உற்பத்தி நிகழ்முறையில் ஏற்படுகிற ஆபத்தை புறந்தள்ளியதன்  விளைவுதான் போபால் பேரவலம்.செர்நோபில் பேரிடர்.உற்பத்தியின் இறுதி பொருளை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆலையின் பாதுகாப்பு விதிமுறைகளில் சமரசம் செய்து கொள்வது சுற்றுவட்டார மக்களை உயிரோடு கொல்வதற்கு சமம்.அதைச் செய்வதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.அவ்வாறு பலவந்தமாக செய்ததன் விளைவுதான் ஸ்டெர்லைட் விஷ வாயு கசிவுகள்.சூழலியல் சீர்கேடுகள்.மக்களுக்கு நோய்த்ட் தொற்றுகள்.ஆலையின் விதிமீறல்களையும் அனுமதியோம் என போராடிய மக்களை ஏமாற்றி நய வஞ்சமாக ஆலையை மீண்டும் திறக்கிற உத்திதான் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நாடகம்.

பாதுகாப்பற்ற தாமிர உற்பத்தி ஆலையை பல ஆண்டு காலம் நடத்தி தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தை நாசம் செய்து மக்களை நோய்க்கு இரையாக்கி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு காரணமாகிய வேதாந்த நிறுவனம் மக்கள் நலனுக்காக எந்த லாபமும் இல்லாமால்  தனது கருவூல பணத்தை முதலீடு செய்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து விநியோகிக்கும் என  நம்புவதை விட ஒரு மடமை இருக்க முடியுமா?எரிகிற வீட்டில் புடுங்குகிற வரை லாபம் என்ற கார்பரேட் கொள்கையை அறியாத பால பாட மாண்வர்களா தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்?

திமுகவிற்கு தனியாக ஒரு சுற்றுச்சூழல் அணி வேறு உள்ளது. இது தொடர்பாக நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு மாற்று வாய்ப்புகளை முன்வைக்க திராணியற்ற கட்சியா திமுக?

வேதாந்தா ஆலையில் பிராண வாயு மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து நான்கு மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு வழங்கும் மின்சாரத்தைக் கொண்டு இயக்கலாம் என இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானது வேதாந்த நிறுவனத்தின் காரியக் கார உக்திக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

பேரழிவு முதலாளித்துவம் (Disaster capitalism) என ஒரு வார்த்தை உண்டு.அதாவது இயற்கை பேரிடரோ மனிதப் பேரிடரோ  பேரழிவையும் கார்பரேட்கள் ஆதாயமாக மாற்றுகிற தொழில்துறை உக்திதான் பேரழிவு முதலாளித்துவம்.கரோனா இரண்டாம் அலை பேரிடர் காலத்தில்  ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மூடப்பட்ட மரண ஆலையை மீண்டும் திறக்க நினைக்கிற வேதாந்தாவின் காரியவாத பேரழிவு முதலாளித்துவ உக்திக்கு தமிழக தேர்தல் கட்சிகள் பலியாகிவிட்டதை இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் தெளிவாக்கிவிட்டது.

கரோனா இரண்டாம் அலை தணிந்தபிறகு,ஆக்சிஜன் தேவை குறைந்த பிறகு வேதாந்தா அனில் அகர்வால் என்ன செய்வார் என்பதை பச்சைக் குழந்தையும் அறியும்.

நேராக நீதிமன்றத்திடம் சென்று “ஐயன்மீர்,இக்கட்டான கரோனா பேரிடர் சூழலில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மடிவதை கண்டு சகிக்காமல் நாங்கள் விடுத்த கோரிக்கை மனுவை ஏற்று ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள்மேலும் இனி வரும் காலத்தில் தாமிர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட, பொருளாதரத்தில் முன்னேற,மின்சார உபகரணங்கள்,மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய தாமிர உற்பத்தி அவசியம்.ஆகவே ஆலையில் தாமிர உற்பத்தியை  மேற்கொண்டு  இந்தியாவையும் மக்களையும் காக்க ஆலையை திறக்க  அனுமதி தாருங்கள் என நீதிமன்றத்திடம் வேதாந்தா திரைக்கதை வசனம் பேசும்.அரசியல் கட்சிகளும், காலத்தே செய்த உதவி ஞாலப் பெரிது என அய்யன் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆகவே இந்தியாவின் பொருளாதார நலன் கருதி ஆலையை தற்காலிகமாக திறப்போம்.ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் உடனடி மூடிவிடுவோம் என தீர்மானம் போடுவார்கள்.

தமிழக கட்சிகளே!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த ஈகியர்களின் ஆன்மாவை எண்ணிப் பாருங்கள்.கார்பரேட் வேதாந்தாவிற்கும் ஒத்தூதி மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களிடமும் உங்களின் ஆன்மாவை அடமானம் வைக்காதீர்கள்

-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW