தமிழக அரசே, அரசியல் கட்சிகளே! காவி – மோடி கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்கும் சதி திட்டத்திற்கு துணை போகாதீர்!

26 Apr 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்

ஆடு மழையில் நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்! நச்சுக் காற்றைப் பரப்பிய ஸ்டெர்லைட் ஆலை மூச்சுக் காற்றைக் கொடுக்கிறதாம்!  கொரோனா இரண்டாவது அலையை தில்லி, குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தில்லியில் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மருத்துவப் பேரிடரைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடந்த ஸ்டெர்லைட் ஆலையை எப்படியேனும் திறந்துவிடும் நோக்கத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து கொடுக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியது வேதாந்தா குழுமம்.

கடந்த காலங்களிலும் உச்சநீதிமன்றப் படியேறி மூடிய ஆலையைத் திறக்க இலகுவாக ஆணைப் பெற்று வந்துள்ளது வேதாந்தா குழுமம். ஆனால், 2018 மே 22 ஆம் நாள் நடந்த எழுச்சி மிக்க  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுதான் இத்தனை மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவைக்க வேண்டிய நிர்பந்தத்தை தமிழக அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. தமிழக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தூத்துக்குடி மக்களும் தமிழக அளவில் மக்கள் நலனில் அக்கறையுள்ளோரும் எழுப்பி வந்தனர். ஆனால், தமிழக அரசோ மக்களின் எதிர்ப்பையும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையையும்மட்டும் முதன்மைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு வந்தது. இந்நிலையில்தான், கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் தயாரிப்பு என்ற பெயரில் பூட்டிய கதவுகளைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆணைப் பெற்றுவிட்டது வேதாந்தா.

ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு  ஏற்கெனவே இருக்கும் உற்பத்தி நிலையங்கள், ஆக்ஸிஜன் தயாரிக்க வாய்ப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உச்சநீதிமன்றம் தமிழக அரசை நெருக்கியது. முதலாவது அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடைப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத் த தவறிய மோடி அரசு ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் இசைவு தந்தது. ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினால் என்ன என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டவுடன் அதற்கு உடன்பட மறுத்து தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது வேதாந்தா. இந்நிலையில் ஏப்ரல் 24 அன்று அவசர அவசரமாக தூத்துக்குடி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார் மாவட்ட ஆட்சியர். ஆலை திறப்பதற்கு மக்களிடம் இருக்கும் கடும் எதிர்ப்பு அந்த கூட்டத்தில் வெளிப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று காலை எட்டுக் கட்சிகளை மட்டும் அழைத்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது தமிழக அரசு. கொரோனா தடுப்புக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, வழக்கை எதிர்கொள்வதற்கு என எதற்கும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாத எடப்பாடி அரசு, காபந்து காலத்தில் எட்டுக் கட்சிகளை மட்டும் கூட்டி கருத்து கேட்டது. சிபிஐ, சிபிஐ (எம்) கட்சிகள் அரசே எடுத்து நடத்துவதானால் ’சரி’ என்று சொல்லியுள்ளன. ஆனால், தமிழக அரசு கருத்தில் எடுக்கவில்லை.  கூட்டம்  முடிந்த கையோடு உச்சநீதிமன்றத்தில் தன் கருத்தை வைத்தது தமிழக அரசு. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மருத்துவ தேவைக்கு பயன்படுத்த முடியாது என்றும் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு 9  மாதங்கள் காலம் எடுக்கும் என்றும் ஒருவேளை மைய, மாநில அரசுகளின் உதவியுடன் இதை விரைவுப்படுத்தினால்கூட  குறைந்தது  6  மாத காலம் எடுக்கும் என்றும் சொன்னது. இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலையைத் திறக்க ஒப்புதல் பெறப்பட்டது என்று அறிவித்தது தமிழக அரசு.  இதை தொடர்ந்து நான்கு மாதம் மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறந்துவிட்டு பெருந்தொற்று நிலைமை கோரினால் அதை பொருத்து நீட்டித்துக் கொள்ளலாம் என்று ஆணைப் பிறப்பித்துள்ளது  உச்சநீதிமன்றம்.

மொத்தத்தில் காவி மோடியும் கார்ப்பரேட் வேதாந்தாவும் சதி வலைப் பின்னினார்கள். எப்போதும்போல உச்சநீதிமன்றமும் கார்ப்பரேட் அனில் அகர்வாலுக்கு விசுவாசம் காட்டியது. தமிழக அரசு உள்ளூர் நாடகத்தை உயிரோட்டமாக நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு அரங்கேற்றத்தில் நல்ல பாத்திரங்கள் தந்து  ஆலையைத் திறக்க வழிவகுத்துவிட்டது.

தூத்துக்குடி மக்களும் தமிழக  அளவில்  ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிய வெகுமக்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பதோடு கடுங்கோபத்திலும் உள்ளனர். தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் மக்களின் உணர்வை அலட்சியப்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தங்கள் முடிவை திரும்பப் பெற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

– பாலன்,

பொதுச்செயலாளர்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW