மக்களை மடிய விட்டு பிணக் காட்டை ஆட்சி செய்கிறது மோடி அரசு

25 Apr 2021

கொரோனா முதல் அலை தாக்குதலில் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியானதை கண்டு வெம்பிய நாம் இன்று அதன் இந்திய பதிப்பிற்கு சாட்சியாகிவிட்டோம். தற்போதைய இரண்டாம் அலையில் பெருந்தொற்று அதிகரிப்பால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை இதோடு தடுப்பூசி கண்டுபிடித்தும் கையிருப்பு இல்லாமல் தடுப்பூசி தட்டுப்பாடு என நாடே பேரிடர் காலத்தில் பெரும் குழப்பத்திலும் உயிரச்சத்திலும் உறைந்துபோயுள்ளது.

‘பிச்சை எடுங்கள், கடன் வாங்குகள் ஏதேனும் செய்து கரோனா பேரிடரை சமாளிக்க ஒரு தேசிய வரைவுத் திட்டத்தை தயாரியுங்கள்’ என நீதிமன்றங்கள் மத்திய மோடி அரசை மன்றாடுகிறது. உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தில்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்களே மருத்துவமனைகளில் புகுந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சூறையாடிச் செல்கிறார்கள். தலை நகர் தில்லி தற்போது இந்தியாவின் மயான பூமியாகிவிட்டது. தில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனையில் நோயாளிகள் மரணமடைகிற செய்திகளும்  கொரோனா  பாதிப்பால் உயிரழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமின்றி  கொத்து கொத்தாக எரியூட்டப்படுகிற காட்சிகளும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது.

ஒரு நாளைய பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது. நாளைக்கு சுமார் மூன்றரை லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.. நாளொன்றுக்கு இந்தியாவில் சுமார் இரண்டாயிரம் பேர் தொற்றுக்கு பலியாவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் கூறிவந்தாலும் பதிவு செய்யப்பட்டதாக இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் போபால் பேரழிவு மரணங்கள்  நிகழ்ந்துவருகிறது. சென்றாண்டு முதல் அலையின் உச்சத்தில் பரிசோதனை உறுதி வீதம் (TEST POSITIVITY RATE) 9 விழுக்காடே இருந்தது (நூறு நபருக்கு பரிசோதனை செய்தால் 9 பேருக்கு தொற்று உறுதி). தற்போதைய இரண்டாம் அலையில் இந்த எண்ணிக்கை 18.5 விழுக்காடாக திடுமென உயர்ந்துள்ளது.

Source:The Hindu

ஆனால் தற்போதைய நிலைமைக்கு தொற்று எண்ணிக்கை உச்சமாக உள்ளது, வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் மரண விகிதங்கள் குறித்த புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மையுடையதாக  இல்லை எனவும் எண்ணிக்கையை குறைவாக காட்டி வருவதாக அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் பேராசிரியர் பிரமர் முகர்ஜி இந்திய அரசை விமர்சிக்கிறார். இந்தியாவின் தற்போதைய தொற்றுப் பரவல் வேகத்தையும் வீரியத்தையும் கணக்கில் கொண்டால் மே மாத மத்தியில் ஒரு நாளைய தொற்று எண்ணிக்கை எட்டு முதல் பத்து லட்சமாகவும் மரண எண்ணிக்கை 4,500 ஆக உயரக் கூடுமென பேராசிரியர் கூறுகிறார்.

மோடி அரசின் அலட்சியமும் சுய பிரச்சார மோகமும்

இரண்டாம் அலையின் தாக்குதலுக்கு தயாராகாத மத்திய அரசு நிர்வாக ரீதியாக தோல்வியடைந்ததோடு பெருந்தொற்று மேலாண்மை குறித்த கொள்கை உருவாக்கத்திலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மேலும், மத்திய மோடி அரசின் அதிகாரத்துவ ஆணவப் போக்கு, பேரிடர் மேலாண்மையை ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆக, சுய பிரச்சார அரசியலாக கையாண்டது நிலைமையை மோசமாகிவிட்டது.

பெருந்தொற்று அபாயம் அகல்வதற்கு முன்பாகவே, நாம் கொரோனாவை வென்று விட்டோம் மோடி இந்தியாவை காப்பாற்றி விட்டார் என பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கொக்கரித்தார். பாஜக அடிமை எடப்பாடி அரசோ அம்மாவின் ஆட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது எனக் கூறி முதிர்ச்சியற்ற வகையில் பேசத் தொடங்கினார்கள்.

 

 

கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிற சூப்பர் ஸ்பிரடர் (Super spreader) நிகழ்சிகள் நாடெங்கிலும் சாதாரணமாக நடைபெறத் தொடங்கின. இதன் உச்சமாக இரண்டாம் அலை தொடக்கத்தையும் புறந்தள்ளி ஹரித்துவாரில்  கும்பமேளாவை அரசு நடத்தியது. இந்த கும்பமேளாவில்  43 லட்சம் பேர் கலந்துகொண்டு நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் சாது தலைவர்களின் கொரோனா மரணமும் கும்பமேளாவை பாதியிலயே கைவிட வைத்தது.இதுவரை நாட்டு மக்களுக்கு  தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை போதனை செய்த மோடி,கரோனா வைரசுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா இருக்க வேண்டும் என கூறியதுதான் முரண்பாட்டின் உச்சம். கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாகிற  லட்சக்கணக்கான மக்களின் ஒன்றுகூடல், கொரோனா வைரசுக்கு எதிரான போராக இருக்க முடியாது என்பதை ஆறாம் வகுப்பு அறிவியல் பாடம் பயின்ற மாணவனுக்கு கூட விளங்கும். ஆனால் நூறு கோடி பேருக்கும் மேலான மக்களை ஆட்சி செய்கிற  நாட்டின் தலைவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாமல் போனதுதான் கொடுமை.இந்த முட்டாள்களின் கும்பலுக்கு அதிகாரம் கிடைத்ததுதான் விளைவுதான் தலைநகர் தில்லியில் ஓயாமல் எரியும் பிணங்கள்! தேசத்தின் அழுகுரல்கள்.

அடுத்து மேற்கு வங்காளத் தேர்தலை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கொரோனா தொற்று காலம் என்பதை முற்றிலும் புறக்கணித்து பிரம்மாண்ட பேரணிகளையும் ஊர்வலங்களை பாஜக நடத்தியது. நான் இங்கு மிகப்பெரிய மக்கள் கடலை பார்க்கிறேன் என உற்சாகம் ததும்ப  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பெருந்தொற்று காலத்தில் ஒரு பிரதமர் எவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வரலாற்றில் மோடி இடம் பிடிக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வாங்க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை ரத்து செய்வதாக அறிவிக்கிறார்.இதர கட்சிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அதிகார வெறியில் தனது அமைச்சர் பதவிக்கான கடமையை செய்யாமல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் கவனத்தில் செலுத்தினார்கள்.இறுதியில் எதிர்ப்பு வலுக்கவே தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு தடை விதித்தது. தமிழக தேர்தல் பிரச்சாரமும் இவ்வாறான  பல சூப்பர் ஸ்பிரடர் நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாகியது.இறுதியிலே தேர்தல் பிரச்சாரதை முடித்து சோர்ந்த தலைவர்கள் பண்ணை வீடுகளில் ஓய்வெடுக்க இரண்டாம் அலை பாதிப்பிற்கு மக்கள் மீது பழி பாவத்தை சுமத்தத் தொடங்கிவிட்டார்கள்.கரோனா  பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக மக்கள் பின்பற்றாததே இரண்டாம் அலை பரவலுக்கு காரணம் என தனது புகழ்மிக்கதனது  “மக்கள் கடல்” உரையை மறந்துவிட்டு மக்கள் மீது பழி சுமத்துகிறார்.இனி வரும் நாட்கள் மோசமாக இருக்கும் என ஆருடம் கூறுகிறார்.இதைக் கூறுவதற்கு  ஒரு பிரதமர் தேவையா?

செயல்திட்டமில்லாதா தடுப்பூசி விநியோகம்

கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் பாரத் பையோ டேக் நிறுவனத்தின் கொவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிப்பிற்கும்  சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து தயாரிப்பிற்கும் அவசர கால அனுமதி வழங்கியது மத்திய அரசு. இரு நிறுவனங்களும் முக்கியமான மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே வர்த்தக ரீதியாக தடுப்பு மருந்து உற்பத்திக்கும் பயன்பாட்டிற்கும் அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதலில் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இலவச தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி வழங்காமல் தடுப்பூசி ஏற்றுமதிக்கு அதிக முன்னிரிமை கொடுத்தது பாஜக மோடி அரசு.அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யாமல் தன் நாட்டு மக்களுக்கு செலுத்தத் தொடங்கியது.இந்தியாவோ பணக்கார நாடான சவுதிக்கும் கூட தடுப்பூசி ஏற்றுமதி செய்தது. பிரேசில், மொராக்கோ, மியான்மர், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட72   நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி செய்தது.

கொரோனா இரண்டாம் அலை வாய்ப்புகளை புறந்தள்ளியும் சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை உறுதிப் படுத்தாத அரசுதான் மொத்த தடுப்பூசி உற்பத்தியில் சுமார் பாதி அளவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது .தமிழகம், கேரளம், தெலுங்கான போன்ற மாநிலங்களில் தடுப்பூசி பற்றாகுறையால் தவிக்கின்றன.உடனடியாக தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகின்றன..மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் செல்கிறார்கள். அமெரிக்க அரசோ இக்கட்டான நேரத்திற்கு இந்தியாவிற்கு தடுப்பூசி தயாரிப்பு மூலப்பொருள் ஏற்றுமதிற்கு தடை விதித்து, அமெரிக்கவே முதன்மை என்ற கொள்கையின் அடிப்படையிலே செயலாற்றுகிறது.

 

இஸ்ரேல் அரசு, தன் நாட்டு மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி முகக்கவசம் இல்லாமல் மக்கள் நடமாட அனுமதித்துள்ளது.அந்நாட்டில் 61 % மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்ததாக இங்கிலாந்தும் அமெரிக்காவும் சீனாவும் அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் உள்ளன.இந்தியாவிலோ மக்கள் தொகையில் வெறும் 8.6 விழுக்காட்டு மக்களுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆதாரம்: https://qz.com/india/1992029/india-curbs-covid-19-vaccine-exports-opens-up-for-those-over-45/

வறுமையும் ஏழ்மையும் சூழந்துள்ள இந்தியாவில் கொரோனாவும் சேர்ந்துகொள்ள, தடுப்பூசிக்கு இமாலய விலை வைத்து தடுப்பூசி நிறுவனங்களை ஊக்குப்படுதுகிற ஒரு கேடு கெட்ட அரசை எங்குமே பார்க்க முடியாது. கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடுமென உயர்த்திய சீரம் நிறுவனம் மாநில அரசுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600 க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.தற்போது உலகிலயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்கப்படுகிற நாடக இந்தியா உள்ளது.எதிர்க்கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தடுப்பூசி விலை நிர்ணயத்தை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இதுவரை விலை குறைப்பு குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.சில மாநிலங்கள் தாமாகவே முன்வந்த தங்கள் மாநிலத்தில் இலவசமாக தடுப்பூசி போடுவோம் என அறிவித்துள்ளன.

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைத்து, லட்சகணக்கான மக்களின் உயிரை இந்தியா காத்துள்ளதாக டாவோஸ் மாநாட்டில் (வீடியோ கான்பரன்சிங்) உரை நிகழ்த்திய மோடி சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடாமல்,இருப்பையும் விநியோகத்தையும் கவனத்தில் கொள்ளாமல் நாட்டு மக்களை நோய்க்கு இரையாக்கி விட்டார். 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம் என பெருமை பேசிய மோடி அரசு  இன்று உலக நாடுகளிடம் ஆக்சிசனையும் தடுப்பூசிகளையும் வழங்க முன்வாருங்கள் என கோருகிறது.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல இந்தியாவின்  ஆக்சிஜன் தட்டுப்பாட்டு மரணங்களை தடுக்க அவசர அவசரமாக விமானப் படை விமானங்கள் ஆக்சிஜனை நிரப்ப பல நாடுகளுக்கு பறக்கின்றன.தற்போது சிங்கப்பூரில் இருந்து நான்கு டேங்கர் ஆக்சிஜன் வந்துள்ள நிலையில் ரஷ்யா,ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் ஐக்கிய அமீர நாடுகளிடமிருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் வரவுள்ளன.உலகிற்கு இந்தியா உதவியது தற்போது இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென  வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கிறார். இந்தியாவில் இருந்து தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாஜக அரசின் மோசமான திட்டமிடலும் அதிகார ஆணவப் போக்கும் சுய மோக பிரச்சாரமும் பல லட்சம் மக்களை உயிர்களை தற்போது காவு வருகிறது.

தற்போதைய இரண்டாம் அலை தாக்குதலில் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்களை சாவில் தள்ளுகிற நிலமைக்கு  பாஜக அரசே  தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

  1. கொரோனா வழிக்காட்டல் நடைமுறைகளை சொந்த அரசியல் நலன்களுக்கேற்ப வலைத்து நெளிப்பது.
  2. :நாட்டு மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி செலுத்தாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெற்று விளம்பரம் தேடிக்கொள்வது.
  3. தனியார் மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தடுப்பூசியின் விலை நிர்ணய உரிமையை வழங்கி கார்பரேட்களுக்கு சேவை செய்தது.
  4. அனைத்து கட்சிகளையும் அரவனைத்து குறைந்தபட்ச ஜனநாயகத்தன்மையுடன் கரோனா பேரிடர் காலத்தை கையாளாமல் தான்தொற்றித்தனமாக அரசியல் சுயலாப அடிப்படையிலும் பிரச்சார நோக்கிலும் பேரிடரை கையாண்டது.

என மத்திய பாஜக அரசின் முட்டாள்தனமும் கார்பரேட் அடிவருடி நலனும் அதிகார திமிரும் நாட்டு மக்களை தற்போது இக்கட்டான நிலையில் தள்ளிவிட்டுள்ளது..

இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேட்டியளிக்கிறார். இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என  சீன அரசும் பாகிஸ்தான் அரசும் நட்பு கரம் நீட்டுகின்றன.

தேசமே பற்றி எரிகிற நிலையிலும் பாஜக ஆதரவு ஊடகங்கள் மோடி அரசுக்கு பல்லக்கு தூக்குவதை நிறுத்தாமல் துதி பாடி  வருகின்றன. மோடி அரசின் தோல்வியை அம்பலபலப்படுத்துகிற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியற்று தற்போது அரசை விமர்சிப்போர்களின் ட்விட்டர் கணக்குகள முடக்கக் கோருகிறது பாஜக. தடுப்பூசிக்கு தட்டுப்பாடில்லை, எதிர்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன என பாஜக தமிழக தலைவர் முருகன் நா கூசாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார். அதிகார ஆணவத்தோடு  ஆட்டு மந்தை போல மக்களை ஏமாற்றி பொய் பிரச்சார அரசியல் செய்த ஹிட்லரின் கதியை இந்திய சங்கி கூட்டத்திற்கு இந்நேரத்தில் நினைவுபடுத்துவோம்.

 

-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW