ஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை

19 Feb 2021
சேலத்தில் கடந்த 07-02-2021 தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், கோசீ, சித்தானந்தன், செல்வராஜ் கைது, ஊபா வழக்கில் கோவைச் சிறையிலடைப்பு. 2019இல் தோழர் மாணிக்கவாசகம் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக 2021இல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கைதுகள் வேடிக்கையான, சட்டவிரோதமான செயல்களாகும். மாவோயிஸ்ட் என முத்திரை குத்தியும், தலைமறைவாக இருந்தார்கள் எனும் பொய் அறிக்கையும் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. சேலம் மாவட்ட காவல்துறை தயாரித்துக் கொடுத்த அறிக்கைகளை அப்படியே ஊடகத்தினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்த விளக்கமான அறிக்கை ஒன்றை தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் தோழமை அமைப்புத் தோழர்களுடன் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் – DGP திரு திரிபாதி அவர்களையும்,  உளவுத்துறைத் IGP  திரு ஈஸ்வரமூர்த்தி அவர்களையும் நேரில் சந்தித்து விளக்கினோம். இறப்பு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குற்றமா? எனக் கேள்வி எழுப்பினோம். சித்தானந்தன், சுரேஷ் எனத்தொடரும் கைதுகளை நிறுத்த வலியுறுத்தினோம்.
பங்கேற்ற தோழர்கள்:
அரங்க.குணசேகரன் – தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
துரைசிங்கவேல் – தலைவர், மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி
தமிழ்நேயன் – தலைவர், தமிழ்த்தேச மக்கள் கட்சி
தபசிகுமரன்,
உமாபதி – சென்னை மாவட்டச் செயலாளர், திவிக
கரீம் – எஸ்டிபிஐ ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர்,
வழக்கறிஞர் பாவேந்தன் – தஒவிஇ மற்றும் தோழர்கள் செந்தில், சதீஸ், ஸ்ரீராம், இரமணி – தலைமைக் குழுத் தோழர்கள், தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்டோர்.
===================================================================================

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர்கள் செல்வராஜ், சித்தானந்தன் உள்ளிட்டோர் மீது புனையப்பட்ட குற்ற வழக்கு எண்: 14/2020 ஐ ரத்து செய்யக் கோரி விண்ணப்பம்

பெறுநர்

காவல்துறை இயக்குநர்,

மாநில காவல்துறை இயக்குநரகம்,

சென்னை

ஐயா,

பொருள்: தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர்கள் செல்வராஜ், சித்தானந்தன், விவேக், லெட்சுமி, சாலிவாகனம் உள்ளிட்டோர் மீது புனையப்பட்ட குற்ற வழக்கு எண்: 14/2020 ஐ ரத்து செய்யக் கோருவது குறித்து

வணக்கம். கடந்த சனவரி 7 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன்(42), தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன்(66) மற்றும் தோழர் செல்வராஜ்(55) ஆகிய மூவரும் குற்ற வழக்கு எண்: 14/2020 இல் கைது செய்யப்பட்டு கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188, 120(B), 121, 121-A, 124-A மற்றும் ஊபா ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் UAPA) வில் பிரிவுகள் 10,13,15,18 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. (பிரிவு 10 – சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராய் இருப்பதற்கான தண்டனை, பிரிவு 13 – சட்டவிரோத செயல்களுக்கான தண்டனை பிரிவு 15 – பயங்கரவாத செயல் , பிரிவு 18 – சதி செய்ததற்கான தண்டனை). இம்மூவரைத் தொடர்ந்து பிப்ரவரி 15 அன்று தர்மபுரியில் உள்ள வெள்ளாளப்பட்டியில் தன் வீட்டில் இருந்த தோழர் சித்தானந்தன்(67) அவர்களும் கைதுசெய்யப்பட்டு சேலம் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 14 க்கும் 15 க்கும் இடைப்பட்ட இரவில் நடந்த மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகத்தின் இறுதியஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு முழக்கமிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவ்வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து 64 நாட்கள் கழித்து காடையாம்பட்டி வட்டம் கே.என்.புதூர், கிராம நிர்வாக அலுவலர் கே.எம்.சங்கர் என்பவர்  2020, சனவரி 18 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இவ்வழக்குப் போடப்பட்டுள்ளது.

கேரள வனப்பகுதியில் கேரள அரசின் காவல்துறை மற்றும் தண்டர் போல்ட் படையினரால் மாவோயிஸ்ட்கள் என்று சொல்லப்பட்ட நான்கு பேர் 28.10.2019 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இதுவொரு போலி மோதல் கொலை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அந்த நான்கு பேரின் உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. நான்கு பேரின் உறவினர்களையும் மிரட்டி உடலைப் பெற்று இறுதிச் சடங்கு செய்யவிடாமல் கேரளக் காவல்துறை தடுக்க முயன்றது. ஏனைய எல்லோரும் அஞ்சி பின்வாங்கிட தோழர் மணிவாசகத்தின் உறவினர்கள் மட்டும் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகி உடலைப் பெற்று நல்லடக்கம் செய்வதற்கான ஆணையைப் பெற்றனர். தோழர் மணிவாசகத்தின் உடல் திருச்சூர் அரசு மருத்துவமனையிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. திருச்சி நடுவண் சிறையில் இருந்த தோழர் மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா ஆகிய இருவரும் பரோல் விடுப்புப் பெற்று வழிக்காவலுடன் சேலம் வந்தடைந்து நல்லடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர். எல்லோரது உறவினர்களும் உடலைப் பெற தயங்கிய போது மணிவாசகத்தின் உறவினர் மட்டும் உடலைப் பெற்றதால்தான் அவரது தங்கை லெட்சுமி, தங்கையின் கணவர் சாலிவாகனம் மற்றும் அவரது மகன் சுதாகர் ஆகிய மூவரையும் உள்ளடக்கி சந்திரா, கலா மற்றும் அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழுவைச் சேர்ந்த விவேக் ஆகியோருடன் இணைத்து மேற்படி ஊபா வழக்குப் போடப்பட்டுள்ளது என்று கருதுகிறோம். இவர்களெல்லாம் இறுதி நிகழ்வில் கோசம் எழுப்பினார்கள் என்பதுதான் முதல் தகவல் அறிக்கையில்  இவர்கள் மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். முதல் தகவல் அறிக்கையை இணைப்பில் காண்க)

லெட்சுமி, சுதாகர், சாலிவாகனம் ஆகிய மூவருக்கும் 18.04.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் பிணை தந்தள்ளது. கடந்த திசம்பர் இறுதியில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ’அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழுவைச் சேர்ந்த தோழர் விவேக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் தேர்வு திணிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, இந்தி- சமற்கிருத திணிப்பு, வேளாண் சட்டத் திருத்தங்கள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், எழுவர் விடுதலைக்கு முட்டுக்கட்டை, ஜி.எஸ்.டி. வரி பாக்கியைத் தர மறுத்தல், பெரியார் சிலையை சேதப்படுத்தல், மதக் கலவரத்தைத் தூண்ட முனைதல், மீனவர் படுகொலையைத் தடுக்க தவறியமை, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை  தனியாருக்கு விற்றல் போன்ற கொள்கைகள் மட்டுமின்றி மாநிலங்களையே முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் காவி – கார்ப்பரேட் ஒற்றையாட்சி சர்வாதிகாரம் நடந்துவருகிறது. மேலும் அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது பாசிச அரச வடிவம் எடுப்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி 2019 திசம்பரில் ”மோடி 2.0 – பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம்” என்ற நூலை நிருபர்கள் சங்கத்தில் வெளியிட்டது தமிழ்த்தேச மக்கள் முன்னணி. பாசிச எதிர்ப்பின் தொடர்ச்சியாகவே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் பாசக தலையெடுத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ”தமிழக விரோத பாசிச பாசக – அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்” என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேச மக்கள் முன்னணி எடுத்தது. அதன் அடிப்படையில் கடந்த சனவரி 20 அன்று ’பாசிச பாசகவை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம் ’ என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் 70 க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடி ஆலோசித்தன. இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்ததில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியினரும் குறிப்பாக அதன் பொதுச்செயலாளர் தோழர் பாலனும் முதன்மையான பங்காற்றியிருந்தனர். இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6 அன்று சேலத்திலும் பிப்ரவரி 7 அன்று ஈரோட்டிலும்  பிப்ரவரி 14 அன்று தஞ்சையிலும் என மண்டலக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டன. சேலத்தில் பிப்ரவரி 6 அன்று இதே தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் தோழர் பாலனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அதை தொடர்ந்துதான் பிப்ரவரி 7 அன்று அதிகாலை இந்த கைதுகள் நடந்துள்ளன. நடுவண் அரசில் ஆட்சியில் இருக்கும் பாரதிய சனதா கட்சி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடக் கூடிய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திப் பரப்புரை செய்வோம் என்ற அறிவித்து முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த காரணத்தால்தான் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும் ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் மேற்படி கருப்புச் சட்டங்களின்கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டு தோழர் பாலன் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பேருடன்  தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ், சித்தானந்தன், தமிழ்வாணன், அரூர் வேடியப்பன், செட்டிப்பட்டி இளங்கோ, சுரேஷ் விஜயராகவன், வில் கிருஷ்ணன் ஆகிய 9 பேரின் பெயர்கள் குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.

மேலும் இம்மூன்று தோழர்களும் அதிகாலை சுமார் 4 மணிக்கு கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் சுமார் 17 மணி நேரம் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திலேயே காக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் அதே நாள் சுமார் 11 மணி அளவில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தும்வரை, அவர்கள் எந்தக் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை கைதுக்குள்ளான தோழர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தீவட்டிப்பட்டி காவலர்கள் தெரியப்படுத்தவில்லை. 17 மணி நேரம் கழித்து தோழர் கோ.சீனிவாசனின் உறவினர்களிடம் கைதுக்கான தகவல் கடிதத்தை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுத்துள்ளனர். ஏனைய இருவருக்கும் அந்த கடிதம் கொடுக்கப்படவே இல்லை. இரவு 11 மணி அளவில் நீதிமன்றக் காவலுக்குப் பின் கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர்கள் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தாரின் இந்த சட்டவிரோதச் செயலின் மூலம், “டி.கே.பாஸு எதிர் மேற்குவங்க அரசு வழக்கின்” உயர்நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டுதல்களையும், “குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 a,b,c,d” ஆகிய சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் நாளன்று தர்மபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் மூத்த தோழர் சித்தானந்தன் (வயது 67) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதியவர் மட்டுமின்றி பல்வேறு நோய் நொடிகள் கொண்டவர் என்றும் பாராமல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டோர் ’சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்கள்’ என்றும் அவர்களை ஓராண்டுக்கு மேலாக தேடிக் கொண்டிருந்ததாகவும் இப்போதுதான் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து கைது செய்ததாகவும் சேலம் மாவட்டக்  காவல்துறையால் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்.

சேலம் மாவட்டம் ஆனைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த திரு ஆண்டியப்பனின் மகனான பாலன்(40) தன்னுடைய கல்லூரி பருவத்தில் கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டு முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக மாறினார். கடந்த . 2002 ஆம் ஆண்டு பொடா வழக்கின் கீழ் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் சிறைப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்தார். கடந்த 14 ஆண்டுகளாக வெளிப்படையான அரசியல் பணிகளைச் செய்து வருகிறார். பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் பொடா வழக்கையும் சட்டப்படி எதிர்கொண்டு வருகிறார்.

2009 ஆம் ஆண்டு ”முத்துக்குமார் மக்கள் எழுச்சிப் பாசறை” என்ற பெயரில் ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தும் நோக்கில் காங்கிரசு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுப்பதற்கான அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உள்ளீட்ட பல்வேறு பிரச்சனைகளில் களப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த 2012 இல் இருந்து பல்வேறு கம்யூனிச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஏற்பட்ட ஐக்கியத்தில் இருந்து 2014 இல் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என்ற கட்சி உருவாக்கப்பட்டு திருவொற்றியூரில் முதல் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. அதன் பொதுச் செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார். அந்த அமைப்பின் அரசியல் முன்னணியாக ”தமிழ்நாடு மக்கள் கட்சி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டின் இறுதியில் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் காரணமாக பிரிந்து சென்ற குழுவினர் மேலே சொன்ன கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர். அதேபோல், தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற பெயரையும் பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் பயன்படுத்தத் தொடங்கினர்.  எனவே, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – மாவோ சிந்தனை) என்ற பெயரில் செயல்படத் தொடங்கினோம். 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தஞ்சையில் நடந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-மாவோ சிந்தனை)   மாநாட்டில் பொதுச்செயலாளராக  தெரிவு செய்யப்பட்டார். தமிழ்நாடு மக்கள் கட்சியும் பிரிந்து சென்றவர்களால் உரிமை கோரப்பட்ட நிலையில் ”தமிழ்த்தேச மக்கள் முன்னனி என்ற பெயரில்” அரசியல் முன்னணியை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக தோழர் பாலனும், தலைவராக தோழர் மீ.த. பாண்டியனும் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணியால் நடத்தப்பட்டு வந்த ’மக்கள் முன்னணி’ என்ற இதழின் ஆசிரியராக தோழர் பாலன் செயல்பட்டு வருகிறார்.

தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதோ அல்லது கோரிக்கை அடிப்படையில் பங்கேற்பதோ என்ற வகையில் தேர்தலில் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் தோழர் என்.குணசேகரனை எம்.பி. வேட்பாளராக நிறுத்திப் பணியாற்றினோம். சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தோம். பின்னர் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாடுதுறை தொகுதில் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக நூறு உழவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதென அறிவித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியால் அத்தொகுதியில் தேர்தல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

எனவே, அமைப்பின் நிர்வாகியாக கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு மேடைகளில் பேசுவது, போராட்டங்களில் கலந்து கொள்வது என வெளிப்படையாக செயல்பட்டு வரும் தோழர் பாலன் மீது ’சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்’ என்று முத்திரை குத்துவது ’பாசிச பாசகவை சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்போம்’ என்ற இயக்கத்தை முடக்கும் அரசியல் நோக்கத்துடனே என்று கருதுகிறோம்.

மேலும், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கோ.சீனிவாசன் (66) கடந்த 40 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் கம்யூனிச அரசியலில் செயல்பட்டு வருகிறார். அவரொரு ஆட்டோ ஓட்டுநர். தொடக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலையில் செயல்பட்டார். பின்னர் அதில் இருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மக்கள் விடுதலை என்ற அமைப்பில் செயல்பட்டார். இப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மாவோ சிந்தனை) யில் செயல்பட்டு வருகிறார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். சேலத்தில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்பவர்; சேலத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களிடம் வெகுவான அறிமுகம் உடையவர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிர்வாகியாக இருக்கிறார்.

ஆகவே, தோழர் பாலன் தோழர் கோ.சீனிவாசன் உள்ளிட்ட தோழர்கள் மீது ’சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்’ என்று முத்திரைக் குத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது. சேலம் மாவட்டக் காவல்துறையால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பரப்புரைகளை தாங்கள் விசாரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கூடவே, கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தார் என்று இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் டி.எஸ்.பி. சொல்கிறார். மிக வெளிப்படையாக துண்டறிக்கை போட்டு, முகநூலில் பரப்பி பல்வேறு போராட்ட மற்றும் அரங்க நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுவரும் தோழர்கள் பாலனையும், கோ.சீனிவாசனையும் ’தலைமறைவாக இருந்தார்கள்’ என்று சொல்வது அப்பட்டமான பொய். இரு தோழர்களும் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பை இணைப்பில் காண்க. கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் அனுப்பூர் செல்வராஜும் சித்தானந்தனும் வெளிப்படையாக செயல்பட்டு வருபவர்கள்.

மேலும், இக்கைதுகளைக் கண்டித்து மனிதவுரிமை அமைப்புகளான PUCL, OPDR, கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கைகளை இத்துடன் இணைத்துள்ளோம். இவை மட்டுமின்றி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,         மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்,  காங்கிரசு கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியா  மாநிலத் தலைவர் முகம்மது சேக் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஊபா (UAPA) பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டிருப்பதைக் கண்டித்து வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், தோழர்களை விடுதலை செய்யக் கோரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒருசில அறிக்கைகளை இத்துடன் இணைத்துள்ளோம்.

ஆகவே, மேற்படி குற்ற வழக்கு எண்:14/2020 ஐ ரத்து செய்யுமாறும், இவ்வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

 

மீ.த.பாண்டியன்

தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

9443184051

 

பின் இணைப்பு:

  1. தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாக பங்குபெற்ற பல்வேறு போராட்டங்கள் பற்றிய குறிப்பு
  2. முதல் தகவல் அறிக்கை
  3. PUCL, OPDR, கொடுங்கோன்மை சட்டங்களுக்கு எதிரான இயக்கம் ஆகிய மனிதவுரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை.
  4. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கண்டன அறிக்கை
  5. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் கண்டன அறிக்கை
  6. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனின் கண்டன அறிக்கை
  7. காங்கிரசு கட்சியின் மாநிலக் குழு தலைவர் கே.எஸ். அழகிரியின் கண்டன அறிக்கை
  8. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கண்டன அறிக்கை
  9. பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியாவின் மாநில தலைவர் அன்சாரியின் கண்டன அறிக்கை
  10. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணியின் கண்டன அறிக்கை
  11. தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமனி கண்டன அறிக்கை
  12. மக்கள் முன்னணி இதழ்கள் – 5, மக்கள் விடுதலை இதழ்கள் – 5
  13. துண்டறிக்கைகள்

இணைப்பு – 1

தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாக பங்குபெற்ற பல்வேறு போராட்டங்கள் பற்றிய குறிப்பை கீழே காணக்.

கடந்த ஓராண்டில் தோழர் பாலன் பங்குபெற்ற நிகழ்வுகள்:

2021 பிப்ரவரி 1: வண்ணார் சமூகம் உட்பட சிறு குறு சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் தோழர் பாலன்.

2021 சனவரி 20: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் ச்ங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து ஊடக சந்திப்பு நடத்திய செய்தி தினகரன் நாளிதழில் வந்தது.

2020 திசம்பர் 27:    சேலத்தில் பனமரத்தப்பட்டி ஏரி ரோரு அருகில் பனமரத்தப்பட்டியில் சேலம் மாவட்ட முழுவதிலும் உள்ள கருவேலம் முள் மரங்களை அகற்றக் கோரி துண்டறிக்கை அச்சடித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார் தோழர் பாலன்.

2020 அக்டோபர் 29: ”தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழர்களுக்கே” என்ற தலைப்பில் இணைய வழியில் நடந்தக் கூட்டத்தில் தோழர் பாலன் உரையாற்றினார். 2020 செப் 27: ”இந்துவாக நான் இருக்க முடியாது” என்ற நூல் மீதான திறனாய்வுக் கூட்டத்தில் நூலாசிரியர் மெக்வன்ஷியுடன் இணைய வழிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

2020 செப்டம்பர் 2: திவாலாக்கப்படும் மாநில அரசுகள், இனியும் ஜி.எஸ்.டி. வரிமுறை தேவையா? என்ற தலைப்பில் நடந்த இணையவழிக் கூட்டத்தில் தோழர் பாலன் உரையாற்றினார்.

2020 ஆகஸ்ட் 13: இனக்கொலையாளர்களுக்கு முடிசூட்டிய இலங்கை என்ற தலைப்பில் நடந்த இணையவழிக் கூட்டத்தில் தோழர் பாலன் உரையாற்றினார்.

2020 மே 2020: முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒட்டி நடந்த இணைய வழிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

2020 மார்ச் 2: ”தில்லியில் இஸ்லமியர்களுக்கு எதிரான கலவரம் – இந்துத்துவ பாசிச பயங்கரம்” என்ற தலைப்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

2020 பிப் 21: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 172 ஆம் ஆண்டு உலகு தழுவிய வாசிப்பு நாளை ஒட்டி மார்க்ஸ் நூலகத்தில் நடந்த கருத்தரங்கில் தோழர் பாலன் கருத்துரை ஆற்றினார்.

2019 திசம்பர் 7: ”மோடி 2.0 – பாசிச அபாயம்” என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கதில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடந்த கருத்தரங்கத்தில்  தோழர் பாலன் உரையாற்றினார்.

கடந்த ஓராண்டில் தோழர் கோ.சீனிவாசன் பங்குபெற்ற சில நிகழ்வுகள்:

2020 திசம்பர் 6: சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்வில் தோழர். கோ.சீனிவாசன் பங்கேற்றார்

2020 செப்டம்பர் 17: பெரியார் பிறந்த நாளில் பெரியாருக்கு மாலை அணிவித்த நிகழ்வில் தோழர் கோ.சீனிவாசன் பங்கேற்றார்

22 திசம்பர் 2020: சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோ.சீனிவாசன் கலந்து கொண்டார்.                                                                               11 அக்டோபர் 2020: இடதுசாரி உணர்வாளர்கள் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாபு(எ) சந்திரசேகர் நினைவேந்தல் நிகழ்வு கூட்டத்தில் தோழர் கோ.சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW