ஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்ப பெறு! தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்!
கடந்த பிப்ரவரி 7 ஆம் நாளன்று அதிகாலை 4:30 மணி அளவில் சேலத்தில் அவரவர் வீட்டில் இருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன்(42), தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன்(66) மற்றும் தோழர் செல்வராஜ்(55) ஆகியோர் தீவட்டிபெட்டி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு அன்றிரவு கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188, 120(B), 121, 121-A, 124-A மற்றும் ஊபா ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் UAPA) வில் பிரிவுகள் 10,13,15,18 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. (பிரிவு 10 – சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராய் இருப்பதற்கான தண்டனை, பிரிவு 13 – சட்டவிரோத செயல்களுக்கான தண்டனை பிரிவு 15 – பயங்கரவாத செயல் , பிரிவு 18 – சதி செய்ததற்கான தண்டனை)
முன்னதாக, ”தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்ற இயக்கத்தின் சேலம் மண்டலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 6 அன்று நடந்தது. பிப்ரவரி 7 அன்று ஈரோடு மண்டலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. சனவரி 20, 2021 அன்று இவ்வியக்கத்திற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடத்தப்பட்டது. தோழர் பாலன் இவற்றையெல்லாம் முன்னரங்கில் நின்று ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த குழுவில் இருந்தார். சனவரி 20, 2021 அன்று நடந்த ஊடக சந்திப்பில் தோழர் பாலன் பேசும் புகைப்படம் தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது. இந்த சூழலில்தான் பாலன் உள்ளிட்ட தோழர்கள் ஊபாவில் (UAPA) சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள் மூவரும் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புனையப்பட்ட குற்ற வழக்கு எண் 14/2020 இல் இணைக்கப்பட்டுள்ளனர். 2019 அக்டோபர் 28 ஆம் நாள் கேரள மாநில அரசின் ’தண்டர் போல்ட்’ படையணியின் நடவடிக்கையால் மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகம் உள்ளிட்ட நான்கு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவொரு போலி மோதல் கொலை என்று கேரளாவுக்குள்ளும் வெளியேயும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்பட்டது. நவம்பர் 14 அன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தோழர் மணிவாசகத்தின் சொந்த ஊரான கணவாய்ப்புதூருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு நவம்பர் 14 க்கும் நவம்பர் 15 க்கும் இடைப்பட்ட இரவில் எரியூட்டப்பட்டது. அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஆறு தோழர்கள் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் 18/01/2020 அன்று தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. அதன் குற்ற வழக்கு எண் 14/2020. இந்த குற்ற வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விவேக் 2020, திசம்பர் 30 அன்று மதுரையில் கைது செய்யப்பட்டார். முகநூலில் பதிவுகள் போட்டதற்காக கூடுதலாக இன்னொரு ஊபா வழக்கும் அவர் மீது போடப்பட்டுள்ளது.
ஊபா சட்டத்தில் பாசக மேற்கொண்ட திருத்தங்களின்படி டி.எஸ்.பி.யின் முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்கூட செயல்பட முடியும், நீதிபதி முன்புதான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்தப் பிரிவைப் பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் பெறப்பட்டதாக சொல்லி தோழர் பாலன், சீனிவாசன், செல்வராஜ் மற்றும் மேலும் 6 பேர் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலன் உள்ளிட்ட தோழர்கள் ஓராண்டாக தலைமறைவாக இருப்பதாகவும் மாவோயிஸ்ட்கள் என்றும் காவல்துறை பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடினால் அவர்கள் மீது அந்நியர்கள் என்று முத்திரை இடுவது; பஞ்சாப் உழவர்கள் போராடினால் அவர்கள் மீது காலிஸ்தானிகள் என்று முத்திரை இடுவது; நகர்ப்புற அறிவுஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நகர்ப்புற நக்சல் ( அர்பன் நக்சல்), மாவோயிஸ்ட்டுகள் என்று முத்திரை இடுவது என்பது இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். இன் அரசியல் கலாச்சரமாகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டிலும் பாசிச பாசக எதிர்ப்பை முதன்மைப் படுத்தி செயல்பட முனைவோரை அச்சுறுத்துவதற்காகவே இந்த ஊபா சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். கூடவே, மாநிலக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இவ்வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை(NIA) யின் கீழ் கொண்டுவரப்பட்டு நடுவண் அரசின் விருப்பம் போல் நடத்தப்படுகின்றன.
பீமா கோரேகான் வழக்கில் 2018 இல் முதன் முதலில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் அதே வழக்கில் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வண்ணம் மேற்படி வழக்கில் புதிய, புதிய நபர்கள் சேர்க்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதேபோல், தில்லி வன்முறை வழக்கிலும் சர்ஜில் இமாம், தபாங்கனா கலிடா, நடாசா நர்வால் என குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய பலரும் குறிவைக்கப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எனவே, இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்வது என்பது பாசிச பாசக அரசின் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. அதுபோல், இந்த ஓமலூர் வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொல்லி புதிய நபர்களை சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.
நடுவண் அரசின் கொள்கையை எதிர்ப்பவர்கள் அல்லது பாசிச பாசகவை எதிர்ப்பவர்கள் என யாராகினும் ஊபா சட்டத்தின் மூலம் அடக்கி ஆள நினைப்பதன் தொடக்கமே இது. இந்தப் போக்கு மென்மேலும் தொடரக் கூடும். எனவே, அடக்குமுறைச் சட்டங்களின் வழி தமிழர்களைக் கையாள நினைப்பவர்களுக்கு எதிராய் சனநாயக ஆற்றல்கள் கிளர்ந்தெழ வேண்டும். சனநாயக ஆற்றல்களிடையே ஒற்றுமையைப் பேணி சங் பரிவார பாசிச படையெடுப்புக்கு எதிராக அணிதிரளுமாறு இந்த ஊடக சந்திப்பில் பங்கு பெற்றுள்ள பல்வேறு அமைப்புகளின் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம்.
மாநில அரசே, நடுவண் அரசே!
- தோழர்கள் பாலன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா பொய் வழக்கைத் திரும்பப் பெறு
- ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய். இனி புதிதாக இவ்வழக்கில் எவரையும் கைது செய்யாதே.
- அடக்குமுறைச் சட்டமான ஊபாவை திரும்பப் பெறு!
- மாநில உரிமைக்கு எதிரான என்.ஐ.ஏ வை தமிழகத்திற்கு அனுமதிக்காதே! என்.ஐ.ஏ சட்டத்தை ரத்து செய்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி,9443184051
ஊடக சந்திப்பில் பங்குபெற்ற அமைப்புகள்:
தோழர்கள்
மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வன்னியரசு, துணைப்பொதுச்செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி
அரங்க. குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்.
அ.சா. உமர் பாரூக், மாநிலப் பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ.
பழனி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி
உமாபதி, சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி.
முஹம்மது ஷேக் அன்சாரி, மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னணி
மகிழன், தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
ஜீவா, சிபிசிஎல்
கணேசன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்