ஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை

11 Jan 2021

கடந்த 6.1.2021 அன்று, கரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே மதியம் 1.30மணியளவில் காவல் நிலையம் நேரெதிரில் சாதி ஆதிக்க கும்பலால் ஹரிகரன் என்கிற இளைஞன் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரக்கொலை உடுமலை சங்கர் கொலையின் கொடூரத்தைவிட கொடியதாக நடத்தப்பட்டிருக்கிறது. சாதி மாறி காதலித்த ஒரே காரணத்திற்காக குற்றுயிரும் கொலையுயிருமாய் பலர் முன்னிலையில் ஆதிக்க திமிரோடு ஹரிகரனை படுகொலை செய்தவர்கள் மீனாவின் பெற்றோர், உறவினர்களோடு இன்னும் பலர் சேர்ந்து அடித்துக்கொன்றுள்ளனர். ஒன்றிரண்டு பேர் தடுத்து தூக்கிச்சென்றிருந்தால்கூட ஹரிகரன் காப்பாற்றப்பட்டிருப்பான். அதைச்செய்ய ஒரு மனசாட்சிகூட அங்கு இல்லையா? பட்டப்பகலில் யாரும் தடுக்கவில்லையா? என்றால், “அவன் 5 பவுன் நகையைத் திருடிவிட்டான் அதனால் அடிக்கிறோம்“ என சொல்லி அடித்துள்ளனர். சமூகமும் மௌனமாக கடந்திருக்கிறது. அடிக்கும்போது, ஹரிகரன் உடன்வந்த சிறுவன் காவல்நிலையத்திற்கு சென்று தகவல் சொல்லியும் காவல்துறையினர் யாரும் வரவில்லை. இறுதியில் ஒரு வயதான பெரியவர் மீண்டும் சென்று சொன்ன பின்பே காவலர்கள் வந்துள்ளனர். மக்களின் காவலர்கள் என சொல்லிக்கொள்ள காவல்துறைக்கு என்ன அருகதையிருக்கிறது? ஒரு உயிர் கொல்லப்பட காக்கிச்சட்டை கழிசடைகளும் துணைபோயிருக்கிறார்கள். நாவிதர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் இதுவரை 5பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

காவல்நிலையங்கள் எதற்கு ?

கரூர் காவல் நிலையத்திலிருந்து 100மீ தொலைவில்தான் ஹரிகரன் மீதான கொலை வெறிச்செயல் கிட்டதட்ட அரைமணிநேரமாக அரங்கேறியிருக்கிறது என்றால் காவல்துறையினர் ஏன் இதனை தடுக்க முயற்சிக்கவில்லை? உரிய நேரத்தில் அங்கு ஏன் செல்லவில்லை என்பதை ஊடகங்கள் கேள்விக்குட்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி இக்கொலை குறித்து இதுவரை தமிழக முதல்வர் வாய்திறக்கவில்லை. ஆணவக் கொலைகளைத் தடுத்திட எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசவில்லையே . ஏன்? ஹரிகரனின் உயிர் ஒரு பொருட்டில்லையா? ஏற்கனவே நடந்த ஆணவக்கொலைகளில் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கையை எடுத்திருந்தால் பல ஆணவக்கொலைகளை குறைந்தபட்சம் தடுத்திருக்க முடியும்.  தினம் தினம் அதிகரிக்கும் கொலைக்கு தமிழக அரசு பொறுப்பில்லையா? நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று தீர்ப்பளித்திருந்தால் குற்றங்கள் குறையும். அதை செய்யத்தவறிய அரசு, நீதிமன்றம், காவல்மன்றங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகத்தால்தான் கொலையாளிகள் கூலிப்படைகள், சாதி சங்கங்கள் துணிச்சலுடன் சாதி மாறி காதலிப்பவர்களை கொலைசெய்யத் துணிகிறது. அரசு செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறும்போது மக்கள் அரசை நோக்கி கேள்வி கேட்டால் சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாற்றி “மக்கள் சட்டத்தை கையில் எடுத்துகொள்ளாதீர் என போதிக்கிறது. ஆனால், கும்பலாக சேர்ந்து காதலித்த காரணத்திற்காக தலித் இளைஞர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் இளைஞர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கையை பின்பற்றுகிறது? தனிச்சட்டம் இயற்றக்கோருவது குறித்து தமிழக அரசு இதுவரை பரிசீலிக்க கூட தயாரில்லை என்றால் சாதி ஆதிக்கத்தின் பக்கம் நிற்கிறது என்றுதான் அர்த்தம்.

ஒவ்வொரு ஆணவக்கொலையின்போதும் சமூகத்தில் எதிர்ப்புவந்துவிடக்கூடாது என்பதற்காக இக்கொடூரத்தையும் கொலைவெறி மனநிலையையும் மறைக்க சாதிகௌரவத்தை காக்க உடனடியாக “ஒருதலைக் காதலால் கொலை“ என்கிற பொய்யை கட்டவிழ்த்துவிட்டு செய்தி பரப்பப்படுவது எவ்வளவு வெட்ககேடானது. அதற்கு பாலிமர் போன்ற சில சாதி சார்பு ஊடகங்கள் ஒத்தூதுகிறது. உண்மையை மறைத்து நேர்மையற்ற செய்தியை ஒலிபரப்புவதை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இதேபோன்றுதான், கடந்த 8.5.2019 அன்று விருத்தாச்சலத்தில் திலகவதி என்ற வன்னியர் சாதியைச் சேர்ந்த மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டார். அந்த பழியை திலகவதி காதலித்துவந்த பறையர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஆகாஷ் மீதே சோடிக்கப்பட்டு அன்று மாலையே “ஒருதலைக்காதலால் கொலை“ என தலைப்பிட்டு பல செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டன. உண்மை மூடிமறைக்கப்பட்டன. கொலையாளிகள் தப்பித்துவிட்டனர். அப்பாவி ஆகாஷ் பலியாக்கப்பட்டு சிறைக்கம்பிக்குள் அடைக்கப்பட்டான். இன்று மனம் பிறழ்ந்த தன்மையில் வழக்கிற்கு நடந்துகொண்டிருக்கிறான். ஒவ்வொரு வட்டாரத்திலும் காவல்துறை அதிகாரிகள் சாதி ஆதிக்கக் கும்பலோடு, சாதி சங்கங்களோடு, பெற்றோர்களோடு கைக்கோர்த்துக் கொண்டு துணைநிற்பதன் விளைவே இத்தகைய கொலையை துணிச்சலுடன் செய்ய முடிகிறது. இதற்கு அரசியல் பிரமுகர்களும் துணைநிற்கிறார்கள்.

இதுவரை நடந்த ஆணவக்கொலையில் ஒரு காவல் அதிகாரியோ, சாதி சங்கத்தின் பொறுப்பாளர்களோ தண்டிக்கப்பட்டதில்லை. அரசியல் கட்சிகளும் இதனை கேள்வி கேட்பதில்லை. “எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆணவக்கொலையில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை தண்டிப்போம் என்றோ, “எங்கள் சாதியில் நடக்கும் ஆணவக்கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். அதனை தடுக்க பாடுபடுவோம்“ என்றோ அரசியல் கட்சியிலுள்ளவர்கள் எத்தனை பேர் வெளிப்படையாக பேசுகிறார்கள்? எதிர்க்கிறார்கள்? அல்லது கட்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்? காதலர்கள் சட்டபூர்வ வயதை அடைந்திருந்தும் கொல்லப்படுகிறார்களென்றால் அது சட்டவிரோத கொலை என்று எதிர்க்க வேண்டும். அது சம்பந்தமில்லா ஒன்றாகிவிடுகிறது. நாவிதர்கள் வாக்கு வேண்டுமானால் வீடுதேடி செல்லும் அரசியல் கட்சிகள் படுகொலை நடந்து 4 நாட்களாகியும் ஹரிகரன் வீட்டிற்கு ஆறுதல் கூறிட திமுக தவிர வேறு எந்தக் கட்சியும் செல்லவில்லை. இது ஹரிகரனுக்கு மட்டுமல்ல, நடந்த அத்தனை ஆணவக்கொலைகளிலும் பார்த்திருப்போம். சமூகத்தில் எழவேண்டிய எதிர்ப்பலைகள் மௌனமாகுவது அநீதிக்கு துணைபோவதாகவே அமைகிறது இந்த மனநிலையை எவ்வாறு உடைக்கப்போகிறோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

ஒவ்வொரு சாதியும் தனித்தனி சாதியே

வரலாறுதோறும் எந்த சாதிக்கும் எந்த சாதியும் கீழானதாகவோ மேலானதாகவோ இல்லை. எந்த சாதியும் காலந்தோறும் ஒரே தொழிலை செய்யவில்லை. எந்த ஒரு சாதி மட்டும் சேவை சாதியாகவே இருந்தது இல்லை என்பதை கல்வெட்டாய்வாளர் நொபுரு கராசிமா வின்  “தமிழ் சமூகத்தில் சாதியின் உருவாக்கம்” என்கிற ஆய்வுநூல் முன்வைக்கிறது. சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் பல சாதிக்கிடையிலும் வேறுவேறு பண்புகளோடு, இடைவெளியோடு இயங்குகிறது. ஆணவக்கொலை என்பது இன்று அனைத்து சாதியிலும், உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு சாதிக்கிடையிலும் நடக்கிறது. எப்சி, பிசி, எம்பிசி,  எஸ்சி என்பது எல்லாம் பட்டியலுக்காகவும் இடஒதுக்கீட்டிற்காகவும்தான். ஒவ்வொரு சாதியும் தனித்தனி சாதிகள்தான். உயர் சாதிகள் என சொல்லப்படும் சாதிகள் அனைத்திற்கும் இடையில் வர்க்க ரீதியாக சாதிய ரீதியாக குல ரீதியாக வேறுபாடும் தீண்டாமையும் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு எதிரான போராட்டத்தை அன்றாடம் ஏதோ வடிவில் சாதிகள் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. பாதிப்புகளை சந்தித்துக் கொண்டும் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதியை கீழாகத்தான் பார்க்கிறது. ஒரு சாதி இன்னொரு சாதியை தாழ்ந்த சாதியாக தீண்டாத சாதியாக கருதும் உளவியல் மனோபாவத்திற்கு புற உலகும் குடும்ப உறவும் உயிரூட்டுகிறது. ஆக, சாதி, தீண்டாமை எனும் இழிவை போக்கும் கடமை, தாழ்த்தப்பட்ட சாதிகள் என வரையறுக்கும் சாதிகளுக்கு மட்டுமல்ல, தனித்தனி சாதிகளுக்கும் சாதி ஒழிப்பும், சாதிய பாகுபாட்டை ஒழிக்கவேண்டிய, சமத்துவக் கோரிக்கையும் தேவையாகிறது. சாதியை விரும்பாத மக்கள் பிரிவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கிறது.

மேல் கீழ் ஆக்கப்பட்ட சாதிப் படிநிலையை உடைத்தெறிய சாதி எனும் இழிசுமையை போக்குவது எந்த சாதியின் பொறுப்பு என்று ஒவ்வொரு சாதியும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே ஹரிகரன் ஆணவக்கொலை எடுத்துக்காட்டுகிறது. சாதி கடந்து வர்க்கமாய் திரளும் மக்களை களைத்து பூசலை செய்யும் யாராவது சாதியால் பயன் இருக்கிறது என்று கூறுவாரானால் அவர்கள் அதனால் பலன் பெறுபவர்கள், அரசியல் ஆதாயம் அடைபவர்கள், பிழைப்பு நடத்துபவர்களாகத்தான் இருக்கமுடியும்.  ஒரு சாதி அதன் சனநாயகத்திற்கு சமூக முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கு குரல் எழுப்பும் அதேவேளையில், மனிதநேயம், சாதி கடந்த உறவை சாதிக்கிடையில் மனித மாண்பை உயிர்ப்பிக்க என்ன வழி என்று சாதிகளின் பிரதிநிதிகளாக தங்களை கருதிக்கொள்ளும் கட்சிகள் என்றாவது சிந்தித்ததுண்டா? சாதியின் வாக்கை உறுதிசெய்யும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலேயே சாதி உறுதி செய்யப்படுகிறது.

எதிர்ப்பின்மூலமே சாதிய முரணமும் ஆணவக் கொலையும் மட்டுப்படும்.  சாதிகடந்த தமிழுணர்வு, வர்க்க உறவு மேம்படும். அதற்கு சாதி மாறிய காதலர்கள் ஒன்றிணைய வேண்டும். தன்னை காதலித்த உடுமலை சங்கரின்  நீதிக்காக நின்ற கௌசல்யாக்கள் உருவாகவேண்டும். கௌசல்யா போல் ஹரிகரனை உறுதியாய் நேசித்த மீனா  ஹரிகரனின் நீதிக்காக வெளியில் வரவேண்டும்.  ஹரிகரனின் கொலைக்கு நீதி கிடைத்திட, மறைத்து வைக்கப்பட்டுள்ள மீனாவை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைத்திட, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை, ஹரிகரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கிட  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

ரமணி,

பொதுச்செயலாளர்,

சாதி ஒழிப்பு முன்னணி

8508726919

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW