தொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்!

04 Dec 2020

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, யெஸ் வங்கி (YES BANK) யைத் தொடர்ந்து தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் வாராக் கடன் பிரச்சனையால் திவால் ஆகியுள்ளது. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதிப் பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்கிற வகையிலே முதலில் அவ்வங்கியின் நிதிப் பரிவர்த்தனைக்கு  கட்டுப்பாடுகளை விதித்த இந்திய நிதியமைச்சகம் தற்போது, 94 ஆண்டுகாலமாக  வங்கி சேவையாற்றி வருகிற லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் (DBS) உடன் இணைத்து அவ்வங்கிக்கு மரண சாசனம் எழுதிவிட்டது.

கடந்த 27.11.2020  முதலாக லக்ஷ்மி விலாஸ் வங்கி-டிபிஎஸ் வங்கி  இணைப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலமாக, இந்திய வங்கித்துறை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் தனியார் வங்கி ஒன்றை வெளிநாட்டு வங்கியுடன் இணைத்த வரலாற்று பெருமையை மோடி அரசு தட்டிச் சென்றுள்ளது! இதுதான் புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம் போல!

கடந்த முப்பது மாதங்களில் மட்டுமே IL&FS வங்கி, DHFLவங்கி, யெஸ் வங்கி, பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி என ஐந்து வங்கிகள் அடுத்தடுத்து திவால் ஆகியுள்ளது. வரும் நாட்களில் இந்த பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம்.

மோடி அரசின் இரண்டாம் சுற்று ஆட்சியில் வங்கிகள் தொடர்ச்சியாக திவால் ஆகி வருகிற போக்கு என்பது தற்செயலானது அல்ல. வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் மோடி அரசு மேற்கொண்டுவருகிற கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளே இந்திய வங்கிகளின் திவால் போக்கிற்கு அடிப்படை காரணமாகிறது.

  • பெரும் தொழில் குழுமங்களுக்கு வங்கிக் கடனை வழங்குவது (பிறகு கடனை தள்ளுபடி செய்வது)
  • பெரும் தொழில் குழுமங்களுக்கும் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசியல் கட்சிகளுடனான கூட்டணி உறவால் வங்கியின் செயல்பாட்டை பலவீனப்படுத்துவது
  • நாட்டின் சிறு குறு வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைத்து வங்கிகளின் மூலதனத்தை சில வங்கிகளில் திரட்டி வைப்பது.
  • பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது. தற்போது மகாராஷ்டிரா வங்கி (PUNJAB-MAHARASHTRA COOP BANK), பஞ்சாப் சிந்து வங்கி (PUNJAB SINDH), யூகோ வங்கி (UNION BANK) மற்றும் ஐடிபிஐ IDBI வங்கி  ஆகிய நான்கு வங்கிகளில் உள்ள அரசின் முதலீட்டு பங்கை வேகமாக திரும்பப்பெற்று, இவ்வங்கிகளை முழுவதும் தனியார்மயப்படுத்துகிற வேலையை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி செயல்பாடுகளை முடக்கி, சூறையாடும் ஏகபோக நிறுவனங்களின் அங்கமாக ரிசர்வ் வங்கியை மாற்றுவது.

இப்போக்கின் இறுதியாக தற்போது

  • தொழிற்துறை பெரு நிறுவனங்களிடம் நாட்டின் வங்கித் துறையை முழுவதும் கையளிக்கிற நோக்கில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு தொழில் குழுமங்களுக்கு வங்கி தொடங்க உரிமை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இந்திய வங்கித் துறையை தொழில் குழுமங்கள் கைப்பற்றிவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என புரிந்துகொள்ள தொழில் குழுமங்களால் தற்போது வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள வாராக் கடன் நெருக்கடியை புரிந்துகொண்டால் தெளிவாகிவிடும்.

வாராக் கடனும் கார்ப்பரேட்களும்

தாராளமய காலகட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கான நீண்ட கால கடன்களை  வணிக வங்கிகள் வழங்கின. வங்கி வழங்குகிற கடன் மூலதனத்தை பெறுகிற பெரும்பாலான கார்ப்பரேட்கள், இந்த மூலதனத்தை திட்டங்களில் முதலீடு செய்யாமல் வங்கிகளிடமிருந்து கொள்ளையடிக்கிற நோக்கிலே பயன்படுத்திக் கொண்டன.  இந்த சட்டரீதியான பகல் கொள்ளைக்கு வங்கி குழுமத்தின் உயர் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் துணைபுரிகிறார்கள். தற்போதைய தகவலின்படி இந்திய வங்கிகளின் வாராக் கடன் தொகை மட்டுமே சுமார் எட்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் 75 விழுக்காடு கார்ப்பரேட் குழுமங்கள் பெற்ற கடனாகும்.இந்த கடன்களை வசூலிக்க வேண்டிய அரசு, வங்கிகளுக்கு மேலும் மறு மூலதனம் வழங்கியது. கடன்களை கட்டத் தவறிய கார்ப்பரேட்களின் சொத்தை பறிமுதல் செய்யாமல் மேலும் கடன் வழங்குவதற்கு வங்கிகளிடம் மக்கள் வரி பணத்தை சுரண்டிக் கொடுத்தது அரசு,கல்வி,சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கார்ப்பரேட்களுக்கு கடன் வழங்க வங்கிக்கு திருப்பிவிடுகிறது மத்திய அரசு.

முன்னதாக வங்கிக் கடனை திருப்பியளிக்காமல் ஏமாற்றிய முதல் ஐம்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலை மத்திய நிதி அமைச்சர் வெளியிடவேண்டுமென நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். ராகுலின் கோரிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி இந்த பட்டியலை ரிசர்வ் வங்கி வழங்கியது. அதில் நீரவ் மோடி, முஹுல் சொக்ஷி உள்ளிட்ட மோடியின் நண்பர்கள் இருக்கிறார்கள் என ராகுல் விமர்சித்தார். ஆனால் பாஜக அரசு இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் சுமார் 68,000 கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்தது.

மேலும் வங்கி திவால் நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அறிக்கை கொடுத்தார். அதோடு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 55,000 கோடியாக இருந்த எஸ் வங்கியின் வாராக் கடன் சுமையானது 2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு 2,41,000 கோடியாக அதிகரித்தது என்றார். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துகொண்டு வங்கி திவாலை தடுக்க இயலாத பாஜக, காங்கிரஸ் மீது பழிபோடுவதா? என்றார்.

தொழில் குழுமங்கள் வங்கி தொடங்கினால் என்னவாகும்?

வங்கிக் கடன் பெற்ற பெரும் ஏகபோக சக்திகளே வங்கிகளை கைப்பற்றினால் என்னவாகும்? நம்மூரில் திருடன் கையிலே சாவியை                                                   கொடுப்பதா? என்பதைப் போல தற்போது மோடி அரசு வங்கியில் கடன் வாங்கி, வங்கியை திவால் ஆக்கியவர்களிடமே நாட்டின் வங்கிகளை தாரை வார்க்க தொடங்கிவிட்டார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,400  கோடி ரூபாய் ஏமாற்றிய நீரவ் மோடி போன்றோர் நாளை சொந்தமாக வங்கியை நடத்தினால் என்னவாகும்?

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிப்பது வங்கித்துறை மீது அணுகுண்டு வீசுகிற செயலாகும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது மோசமான யோசனை. இது, ஒரு சில கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார அரசியல் அதிகாரத்தை குவிக்க வழிவகுக்கும்என ரகுராம் ராஜன் மத்திய அரசின் முடிவை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இத்தனைக்கும் ரகுராம் ராஜன் லிபரல் (தாராளவாத) ஜனநாயக முகாமின் முக்கிய பொருளாதார அறிஞராக அறியப்படுபவர். தனியார்மய தாராளமய சிந்தனையாளர். பன்னாட்டு நிதியகம், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி குழுமங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். விரால் ஆச்சார்யாவுக்கும் இது பொருந்தும். மோடி அரசின் பொருளாதார கொள்கைகள்,குறிப்பாக வங்கி சீர்திருத்த முடிவுகளுக்கு அழுத்தங்களுக்கும் எதிராகவே பலர் பதவியை ராஜினமா செய்துவிட்டு போனதையும் நாம் மறந்திடக் கூடாது.

மத்திய அரசுடனான முரண்பாட்டால் ரகுராம் ராஜனுக்கு இரண்டாவது முறை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி கொடுக்காமல் மோடி அரசு ராஜனை துரத்தியது. பின்னர் மோடி அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேல் பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார். இடையே இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா  பதவி விலகினார். ராஜினாமா செய்தார்  மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் பதவி விலகினார். மேலும் நிதி ஆயோக்கின் தலைவர் அரவிந்த் பன்காரியா ராஜினாமா செய்தார் பதவி விலகினார். தற்போது இந்தப் பொறுப்புகளில் எல்லாம் பாஜக அரசு சொல்வதை செய்கிற கிளிப் பிள்ளைகள் அமர்த்தப்பட்டுள்ளார்கள் எனக் கூறத் தேவையில்லை!

இவ்வாறு நாட்டின் வங்கித் துறையையும் இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தையும் சீரழித்த மோடி அமித்ஷா கும்பலாட்சியாளர்கள் தற்போது இந்திய வங்கித் துறைக்கு சவக் குழியை வெட்டிவருகிறார்கள். இதுவரை வாராக் கடன் என்ற பெயரில் மக்களின் சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை  திரைமறைவாக கொள்ளையடித்த இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் இனி நேரடியாக வங்கிகளை தொடங்கி நேரடியாக தங்களது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிக் கொண்டு மக்கள் பணத்தை சூறையாடப் போகிறார்கள்!

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சுமைக்கு நிரந்தர தீர்வு காண வக்கற்ற பாஜக அரசு, இந்த வங்கிகளை தனியார்மயப்படுத்திவிட்டாலோ. பெரும் குழுமங்களுக்கு வங்கி உரிமை வழங்கிவிட்டாலோ சிக்கல் தீர்ந்ததென்று நினைக்கிறது. ஆனால், நடைமுறையிலோ எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவதுபோல வங்கித் துறையை மென்மேலும் சீரழிவு பாதையிலே கொண்டு செல்கிறது

 

-அருண் நெடுஞ்செழியன்

 

 

ஆதாரம்:

https://www.hindutamil.in/news/india/604487-bad-idea-raghuram-rajan-on-rbi-panel-allowing-corporates-in-banking-1.html

https://peoplesdemocracy.in/2017/1203_pd/banks-and-non-performing-assets

https://www.businesstoday.in/current/economy-politics/bjp-govt-waived-rs-68607-crore-of-bank-loan-defaulters-alleges-congress/story/402270.html

https://www.businessinsider.in/finance/banks/news/lakshmi-vilas-bank-is-the-fifth-financial-firm-after-ilfs-dhfl-yes-bank-and-pmc-bank-to-collapse-in-india/slidelist/79286096.cms

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW