2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்!

24 Nov 2020

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ – மாவோ சிந்தனை) பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு

 

10 மையத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய பாசக அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) ஆதரவு தெரிவித்து பங்கேற்கிறது.

அண்மையில்., 44 தொழிலாளர் நலச் சட்டங்களை வகைப்படுத்துவது என்ற பெயரில் 4 தொகுப்புகளுக்குள் சுருக்கி ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு இருந்த சிற்சிலப் பாதுகாப்புகளையும்கூட இல்லாதொழித்துள்ளது மோடி அரசு. வேளாண்மையைக் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் வகையில் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பு, சுரங்கம், வங்கி, விமானம், இரயில் உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தப் பொதுத்துறை நிறுவனங்களை வேகவேகமாக தனியார்மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இந்த தொழிலாளர் – விவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறுவதுடன் பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கொரோனா என்ற பெருந்தொற்றின் வெடிப்பு மந்த கதியில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்ட நிலையில் மக்கள் வரலாறு காணாத பொருளியல் – வாழ்வியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதை கருத்தில்கொண்டு ஏழ்மை நிலையில் உள்ள 12 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாயும், 10 கிலோ உணவு தானியங்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது  சிறு குறு தொழிலுக்கும் வணிகத்திற்கும் உழவர்களுக்கும் கடன் உதவி செய்ய வேண்டும், கல்வி, விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், மாதக் கணக்கில் ஊரடங்கு, என்ற திடீர் அறிவிப்புகளுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் கொடுத்த மக்களைக் கைவிட்டது மத்திய அரசு.

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு என்று அறிவிக்கும்போதே மக்களின் வாழ்க்கையை நடத்துவதற்கும் பெருந்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் தேவையான நிதியைப் பல்வேறு நாடுகள் ஒதுக்கின. ஆனால், மக்களை ஏமாற்றும் நோக்கத்த்துடன் 20 இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவது போல் ஓர் அறிவிப்பைத் தந்தது மத்திய அரசு.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசியல் சுதந்திரம் முற்றாக முடக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய பெருநிறுவனங்களுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் நாட்டை தாரை வார்க்கும் பொருளாதார சீர்திருத்தங்களை, சட்டத் திருத்தங்களை செய்துள்ளார் மோடி. இவை உலகமய, புதிய தாராளியக் கொள்கை அமலாக்கத்தில் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் என்று பூரித்துப் போனார் முகேஷ் அம்பானி. கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளியல் நெருக்கடியின் காரணமாக வாழ்க்கை நிலைமையில் மக்கள் பதினைந்தாண்டுகள் பின்னுக்கு போய்விட்டனர். ஆனால், அம்பானி, அதானி போன்றோரின் சொத்துக்கள் இக்காலத்திலும் வளர்ச்சிப் பெற்றுள்ளன. நிதிமூலதனக் கும்பலின் கையில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒப்படைக்கும் நோக்கில் அதிகாரம் மென்மேலும் மத்தியில் குவிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்குள் முடக்கப்படுகின்றது.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை, ஒரே வேளாண் கொள்கை என காவி-கார்ப்பரேட் ஒற்றையாட்சி தீவிரப்படுகின்றது. தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் எதிரான பாசிச பாசக அரசின் கொள்கைகளை முறியடிப்பதற்கு அணி திரள்வோம். நவம்பர் 26 பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம். பொது வேலை நிறுத்தத்தின் வெற்றியில் இருந்து காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு ஊக்கம் பெறுவோம் என தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மா) சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்

பாலன்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மாவோ சிந்தனை)

07010084440

RELATED POST
1 comments
  1. வெகுமக்கள் எழுச்சிகொள்ளட்டும்!
    தொழிலாளர், விவசாயிகள் ஒற்றுமை நீடூழி வாழ்க!!
    பரந்துபட்ட மக்கள் முன்னணி தளிர்க்கட்டும்!!!

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW