தமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய்! அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு! – கூட்டறிக்கை
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைதுசெய்து தேச துரோகப் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து, சிறைபடுத்தி பாசிச பாசக கும்பலுக்கு அடிமை சேவகம் செய்துள்ளது எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு.
நவம்பர் 1 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக மக்கள் முன்னணியின் தலைவருமான தோழர் பொழிலன் தனது வீட்டில் தமிழ்நாடு விழாவைக் கொண்டாட முற்பட்ட போது அவரும் உடனிருந்த மக்கள் குடியரசு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜான் மண்டேலாவும் ஆங்கிலேய காலனிய கால ஒடுக்குமுறை சட்டமான 124A பிரிவு உள்ளிட்ட மூன்றுப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னையில் பெரியார் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட சென்ற தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் 13 தோழர்கள் 124A, 188, 143 ஆகிய பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அம்பேத்கர் சிறுத்தைகள், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருவள்ளூரில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நாளைக் கொண்டாட முயன்றவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த்தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது தமிழக காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது.
ஒருபுறம் தமிழக நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்துவிட்டு மறுபுறம் தேசிய இன உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் மோடி – அமித்ஷா கும்பலுக்கு தமிழக காவல்துறையும் எடப்பாடி அரசும் தன் விசுவாசத்தைக் காட்டுவதற்காக இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அரங்கேற்றியுள்ளது.
மொழிவழிமாநிலம் அமைக்கப்பட்ட நாளை கர்நாடகா, கேரளம், ஆந்திரம் போன்றவைக் கொண்டாடுகின்றன. கர்நாடகம், ஆந்திரம், காசுமீர் போன்ற மாநிலங்கள் தமக்கென தனிக் கொடியும் கொண்டுள்ளன. திராவிட நாடு திராவிடருக்கே, மாநில சுயாட்சி போன்ற முழக்கங்களை எழுப்பிய முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியாக இருந்துகொண்டு தமிழ்நாடு நாளை கொண்டாடுவதை அரச துரோக குற்றமாக பார்ப்பது எத்தனை முரணானது. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு எனக் கூறி தனித்துவங்களையும் தேசிய இனங்களின் இருப்பையும் இல்லாதொழிக்க துடிக்கும் மத்திய பாசக அரசின் அடிமையாக எடப்பாடிப் பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைப்பதோடு அதை கேள்விக் கேட்பவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியும் வருகின்றனர்.
மோடியின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சி தமிழர்களின் மீதும் ஏனைய தேசிய இனங்களின் மீதும் ஒடுக்குமுறையைச் செலுத்தி மென்மேலும் ஒற்றைமைய அதிகாரக் குவிப்பை செய்துவருகிறது. இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடம் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் உணர்வு வளர்ந்துவருகின்றது. அதன் வெளிப்பாடே, நவமபர் 1 ஐ வழக்கமாக அனுசரிக்காத அமைப்புகள்கூட இவ்வாண்டு அந்நாளை அனுசரிக்க முன்வந்திருப்பதாகும். அத்தகைய முன்முயற்சிகள் மத்தியில் ஆளும் பாசக அரசை ஆத்திரம் மூட்டியுள்ளது. அதனால், தனது கைப்பாவையான தமிழக அரசின் மூலம் இந்தக் கைது நடவடிக்கைகளை அரங்கேற்றியுள்ளது பாசக. ஒருபுறம் வாக்கு வங்கிக்காக தமிழ்நாடு விழாவைக் கொண்டாடுமாறு அறிவித்துவிட்டு இன்னொருபுறம் பாசக அரசின் ஏவல் அரசாக ஒடுக்குமுறையை செலுத்துவதை மக்கள் உற்றுக் கவனித்து வருகின்றனர். இந்த இரட்டை நாடகத்தை மக்கள் எப்போதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, அனைத்து வழக்குகளையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெற்று சிறைபடுத்தப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
- பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
- அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
- சித்தானந்தம், சிபிஐ(எம்-எல்)
- துரை. சிங்கவேல், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி
- குணாளன், சிபிஐ(எம்-எல்)
- தமிழ்ச்செல்வன், இகக(மா-லெ) செந்தாரகை
- பாஸ்கர், இந்திய கெதர் கம்யூனிஸ்ட் கட்சி
- மாயக்கண்ணன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
- சிதம்பரநாதன், கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மக்கள் விடுதலை
- தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி
- மணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி
- பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி
- பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
- சாமிநாதன், கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு
- டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
- செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி
- தமிழரசன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்
- மருதுபாண்டியன், சோசலிச மையம்
- தங்க. குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
- பிரபாகரன், தமிழ்த்தேச பாதுகாப்பு இயக்கம்
- அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி
தொடர்புக்கு: 70100 84440