தமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

02 Nov 2020

 

நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைது செய்தும் தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தும் பாசிச பாசக அரசின் அடிமையே தானென்று காட்டும்விதமாக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளார்.

நேற்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக மக்கள் முன்னணியின் தலைவருமான தோழர் பொழிலன் தனது வீட்டில் தமிழ்நாடு விழாவைக் கொண்டாட முற்பட்ட போது அவரும் உடனிருந்த மக்கள் குடியரசு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜான் மண்டேலாவும் ஆங்கிலேயர் காலந்தொட்டு அடக்குமுறைக்கென்றே பயன்படுத்தப்பட்டு வரும் 124A அரச துரோகப் பிரிவு, பிரிவு 506 மற்றும் 353 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னையில் பெரியார் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட சென்ற தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் 13 தோழர்கள் 124A, 188, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சந்தோஷ்குமார், செல்வம், அண்ணாதுரை, பாரத்குமார், சதீஷ், பார்த்திபன், வீரன், முரளி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் மா.சேகர், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மூத்த தோழர் ஏசுகுமார், தோழர்  நாகேந்திரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் லோகநாதன் மற்றும் திராவிடர்  கழகத்தைச் சேர்ந்த தோழர் செல்வம் ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, இந்நாளைக் கொண்டாட முயன்றவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த்தேசிய பேரியக்கம் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கப் பரப்புரையைத் தடுத்தும் அச்சுறுத்தியும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக காவல்துறை. நாம் தமிழர் கட்சி கோவையில் முன்னெடுத்த தமிழ்நாடு பெருவிழா கொண்டாட்ட முன்னெடுப்புகளைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளது காவல்துறை. தமிழர் தேசிய முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைத் தமிழக காவல்துறை கிழித்துள்ளது.

பாசிச ஒற்றை மைய அதிகாரக் குவிப்பிற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்துடன் தஞ்சை, சேலம், திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த்தேச மக்கள் முன்னணிக்கு பல்வேறு நெருக்கடிகளை தமிழக காவல்துறை கொடுத்தது. இது உண்மையிலேயே தமிழ்நாடா? அல்லது தில்லிநாடா? என்று கேட்கும் அளவுக்கு எடப்பாடியும் அவர்கீழ் செயல்படும் காவல்துறையும் வாலை ஆட்டி மோடி – அமித் ஷா கும்பலுக்கு விசுவாசத்தைக் காட்டியுள்ளனர்.

மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நாளை கர்நாடகா, கேரளம், ஆந்திரம் போன்றவைக் கொண்டாடுகின்றன. கன்னடம், ஆந்திரம், காசுமீர் போன்ற மாநிலங்கள் தமக்கென தனிக் கொடியும் கொண்டுள்ளன. திராவிட நாடு திராவிடருக்கே, மாநில சுயாட்சி போன்ற முழக்கங்களை எழுப்பிய முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியாக இருந்து கொண்டு தமிழ்நாடு நாளை கொண்டாடுவதை அரச துரோக குற்றமாக பார்ப்பது எத்தனை முரணானது. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே பண்பாடு  என தனித்துவங்களையும் தேசிய இனங்களின் இருப்பையும் இல்லாதொழிக்க துடிக்கும் நடுவண் பாசக அரசின் அடிமையாக எடப்பாடிப் பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைப்பதோடு அதை கேள்விக் கேட்பவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியும் வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் சிறைக்கு அஞ்சக் கூடியவர்களா? கோடிகோடியாய் அள்ளிக் கொடுத்தாலும் பாரத மாதாவுக்கு பண்ணிசைப்பார்களா? தமிழ்நாட்டு அடிமைநிலையை மக்களிடம் எடுத்துச் சொல்லாமலோ எதிர்த்து நிற்காமலோ போய்விடுவார்களா? அவர்களைத்  தீயில் பொசுக்கினாலும் அந்த சாம்பலும் விடுதலை மணம் பரப்புமே ஒழியே இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்காது!

தமிழ்நாடு நாளைக் கொண்டாடும் உரிமை கூட தமிழருக்கு இல்லை என்பது எந்தளவுக்கு நம் ஆட்சியாளர்கள் தில்லியின் அடிமையாக ஆகிப் போயிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் கூட இந்நாளை உணர்வுபூர்வமாக அனுசரிக்காமல் போனதால்தான் ஆட்சியாளர்களால் அடக்குமுறை சட்டங்களை ஏவ முடிகிறது என்பதையும் கருதிப் பார்க்க வேண்டும். மொழிவழி மாநிலங்கள் உருவானதைக் கொண்டாடுவது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரக் கும்பலுக்கு கசப்பானது என்பதற்காக தமிழர்கள் இந்நாளை கொண்டாடக் கூடாதா?

இதுபோன்ற பொய் வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காது; தமிழ் மக்களிடம் விற்காது. சில நாட்கள் சிறையில் அடைப்பதன்மூலம் வாலாடிக் காண்பித்தால் எசமானவர்கள் தொட்டுத்தடவும் அரவணைப்புக் கிடைக்கக்கூடும். அதைதவிர பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

தமிழக அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் தன் அடிமைப் புத்தியைக் கைவிட்டு மேற்படி தோழர்கள் மீதுப் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெறவேண்டும். குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் பிணை மறுக்கும் வேலையையாவது செய்யாமல் இருக்கவேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

 

-பாலன், பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW