முரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’? – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்

23 Oct 2020

நேற்றைக்கு முன் தினம் இந்து தமிழ் திசையில் ”ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் திரு. இரா.வினோத் எழுதிய கட்டுரையும் ஆங்கில இந்துவில் ’Heckler’s veto’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளிவந்திருந்தது. முத்தையா முரளிதரனின் தன்வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு எழுந்த எதிர்ப்பினால் அவர் விலக நேர்ந்தது குறித்து ஆழ்ந்த கவலையை இரண்டுமே வெளிப்படுத்தின. அதில் இந்துத்துவ சக்திகள் தனிஷ்க் விளம்பரத்திற்கு எழுப்பப்பட்ட எதிர்ப்பையும் இதையும் ஒப்பிட்டு இந்து தமிழ் திசையில் இரா.வினோத் எழுதியிருந்தார். இந்துத்துவ தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தை ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் வழமையான தாராளியப் பார்வை அதில் வெளிப்பட்டது. தாராளியர்களைப் பொருத்தவரை பாசிசத்தைக் கண்டாலும் பயம், எதிர்த்திசையில் ஆளும்வர்க்க நலன் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு சிறுவெற்றி ஏற்பட்டாலும் பயம். அவர்கள் எதிர்ப்பார்ப்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கு எதிராக எவ்வித முன்நிபந்தனையும் இன்றி தாராளியர்களின் காலை எல்லோரும் பற்றிப்பிடித்திருக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் அக்கறையை எப்போதும் வெளியிட்டு வந்துள்ளனர்.

தமிழ்த்தேசிய அரசியலையும் ஈழ ஆதரவு அரசியலையும்  மலையகத் தமிழர்களுக்கு எதிரானதாக சித்திரிக்க முயலும் கட்டுரை அது. விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுப்பியவர்களை பின்வரும் சொற்களில் சுட்டியுள்ளார் – ’சோஷியல் மீடியா மாஃபியா’, ‘வாட்டாள் நாகராஜ் பாணி மிரட்டல்’, ’அவசர மனநிலை’, ’உணர்வுகளின் முதலீடு’, ’மொழித் தூய்மைவாதம்’, ’’ஈழ ஆதரவு’ முலாம்’, ’புலம்பெயர் ’ஈழத் தமிழ் குழுக்கள் ஒரு திரியைக் கொளுத்திவிட்டதும்’ என்று அவர் பயன்படுத்தும் சொற்கள் முழுக்கவும் முன்முடிவுகளுடன் கூடியவை. அவர் கோரும் கருத்துரிமை, ஜனநாயகம் என்பவற்றை இந்த கோரிக்கையை எழுப்பியவர்களுக்கு அவர் காட்டத் தயாரில்லை. அதுதான் ஜனநாயகத்தினதும் கருத்துரிமையினதும் எல்லை என்பதற்கு அவரே சான்று.

இனப்படுகொலைக்கு நீதியா இப்போது முக்கியம்?

மையப் பிரச்சனை என்னவென்றால் ஓர் இனப்படுகொலையின் கொடுமையை உணரமுடியாத நடுத்தர வர்க்கத்தின் தாராளிய அரசியல்தான். இந்தியாவின் தாராளியர்கள் பாபர் மசூதி தீர்ப்பு வந்தபோது மெளனம் காக்குமாறு இஸ்லாமியர்களிடம் சொன்னார்கள். இப்போது இனப்படுகொலையும் கடந்த போக  வேண்டிய  ஒன்றென்று போதிக்கிறார்கள். மானுடத்திற்கு எதிரான குற்றம், கொடூரமான(heinous crimes) குற்றம் என்றெல்லாம் மேற்குலகத்தினர் வண்ணனை செய்யும் இனக்கொலைக் குற்றம் இந்தியாவின் தாராளியர்களுக்கு ஒரு சாதாரண விசயம். ஏனென்றால் நீதியையும்விட ‘அமைதி’ அவர்களுக்கு எப்போதும் மேலானது. எவ்வித இடையூறும் இன்றி தங்கள் காலமும் பிழைப்பும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தனக்கு காலில் காயம் பட்டாலே ஒப்பாரி வைப்பவர்கள் இன்னொருவருக்கு தலையே உடைந்தாலும் ‘இதுவொரு சின்னப் பிரச்சனை’ என்பார்கள்.

யாரை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்?

ஈழம் சென்றாராம். நொறுங்கிப் போனாராம் இரா.வினோத். அடுக்கடுக்கான கேள்விகள் வந்ததாம் அவருக்கு. தமிழ்நாட்டில் ஏன் எந்த தலைவரும் எழுத வில்லை, பேசவில்லை, போராடவில்லை என்பதுதான் அவருக்கு அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள். மலையகத்துக்கு கூலிஅடிமைகளாக தமிழர்களை  அழைத்து சென்றது யார்? பிரிட்டிஷ் காலனியாதிக்கம். சுதந்திரம் கிடைக்காதபடி குடியுரிமையைப் பறித்தது யார்? சிங்கள பெளத்த பேரினவாதம். ஆடுமாடுகளைப் போல் அம்மக்களைப் பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம் போட்டது யார்? சிங்களப் பேரினவாதமும் இந்திய விரிவாதிக்கமும். தன் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு சென்று நூறாண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் தங்கள் நாட்டுக்கு ஒப்பந்தம் போட்டு அழைத்து வந்த வரலாற்றுக் கொடுமையை இந்திய அரசு தமிழர்கள் தவிர்த்த வேறெந்த தேசிய இனத்திற்காவது செய்திருக்க முடியுமா? உலகில் வேறெங்கும் இப்படியொரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக வினோத் காட்டமுடியுமா?

இந்திய விரிவாதிக்கத்திற்காக மலையகத் தமிழர்கள் அந்த மண்ணில் இருந்து வேரோடுப் பிடுங்கப்பட்டார்கள், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, அமெரிக்க எதிர்ப்பை மையமிட்டு போராளிகளுக்கு இந்தியாவில் பயற்சி வழங்கப்பட்டது, ஈழத் தமிழர்கள் மீது இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டது, இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்கள் மீது ஏவப்பட்டது, தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட போது இந்திய அரசு மெளனம் காத்தது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது, விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால்வரை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. இத்தனையும் சிங்கள பெளத்தப் பேரினவாதத்தாலும் இந்திய விரிவாதிக்கத்தாலும் நிகழ்த்தபட்டவை. இவற்றையெல்லாம் கேள்வி எழுப்பாமல் பக்கபலமாக நின்றவை பாசக, காங்கிரசு, சிபிஐ(எம்) போன்ற அனைத்திந்திய கட்சிகளும் அனுசரித்துப் போனவை திமுக அதிமுக போன்ற மாநில ஆளும்வர்க்கக் கட்சிகளும் ஆகும்.

இந்தக் கட்சிகள் சனநாயகத்தின் பக்கம் நிற்காமல் போகவே அந்த வெற்றிடத்தில் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ச்சிப் பெற்றது. இலங்கை சென்று வந்த வினோத்துக்கு இத்தனைக்கும் காரணமானவர்கள், ஒத்தோதியவர்கள் மீது கேள்விகள் எழாமல் தமிழ்த்தேசியர்கள் மீது அடுக்கடுக்கான கேள்விகள் எழுவது ஏனோ? இத்தனை குற்றவாளிகளையும் மக்களிடம் அடையாளம் காட்டாமல் இதற்காகவெல்லாம் தீக்குளித்து, பொடா, தடா வழக்குகளில் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடி, தடியடி பெற்றுப் போராட்டம் நடத்தியவர்களைக் குற்றவாளியாகக் காட்டுவது நியாயமா? மலையகத் தமிழர்களின் துயரங்களுக்கு காரணமாக இருந்த காங்கிரசு, பாசக போன்ற கட்சிகளும் துணைபோன சிபிஐ(எம்), திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் எப்போதும் போல மிகச் சரியாகவே முத்தையா முரளிதரனின் ’ஜனநாயகத்தை’ மதித்து நின்றார்கள். அது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு காட்டிய ஜனநாயகம் அல்ல, சிங்களப் பெளத்தப் பேரினவாதத்திற்கு, இந்திய விரிவாதிக்கத்திற்கு, இனப்படுகொலைக்கு நீதியை மறுக்கும் அரசியலுக்கு இனப்புடுகொலையின் ஆதரவாளருக்கு காட்டிய ’ஜனநாயகம்’!

முரளிதரன் வெறும் விளையாட்டு வீரரா?

”அவர் எந்த உயரத்துக்குப் போனாலும் ‘தோட்டத்துப் பொடியன்’ என்ற அடையாளம் மட்டும் இலங்கைத் தமிழர்களிடையே மாறவில்லை. இதற்குக் காரணம், சாதிய – வர்க்க மனோபாவம்தான்.” என்று இப்போது எழுந்துள்ள எதிர்ப்புக்கான காரணத்தை அடித்துச்சொல்கிறார் வினோத்,

”முரளிதரன் விளையாட்டு வீரர், அரசியலர் அல்லர். .. முரளிதரன் கடந்த காலத்தில் இலங்கைப் போர் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளையோ, அரசின் மொழியிலோகூடப் பேசியிருக்கலாம்.”  என்று சந்தேகத்தின் பலனை முத்தையா முரளிதரனுக்கு வழங்குகிறார். முத்தையா முரளிதரன் இனப்படுக்கொலைக்கு தலைமையேற்ற இராசபக்சேக்களை ஆதரித்து இந்துஸ்தான் டைம்ஸுக்கு வழங்கி பேட்டி வினோத்துக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை நாம் அவருக்கு வழங்கி அதை கீழே மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளோம்.

கே: பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் அதிபர் (கோத்தபய) இராசபக்சேவை எதிர்க்கிறார்கள். திருமண உறவின் மூலம் இந்தியா உங்களது இரண்டாவது இல்லமாக இருக்கிறது. திரு இராசபக்சேவிடம் நீங்கள் கொண்டிருக்கும் பற்றை அங்கிருக்கும் மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்?

பதில்: உங்கள் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால், உங்களுடைய அண்டைய வீட்டார் தலையிடுவதை ஏற்பீர்களா? என்று சொல்லுங்கள். இலங்கையர்களின் பிரச்சனையைத் தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை. எங்கள் அரசை நிர்வாகம் செய்வதற்கு அவர்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் நாட்டைத் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வதற்குப் சரியானவர் அதிபர் கோத்தபய இராசபக்சே என்பதால் நான் அவரை ஆதரிக்கிறேன். அவர் ஆட்சிக்கு வரும் முன்பு முன்னேற்றம் எதுவும் இல்லை. பொருளியல் படுத்துக்கிடந்தது, எதுவும் நகரவில்லை. அதிபர் கோத்தபய ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் மற்றும் படைவீரர். அவரொரு புத்திசாலி, சீர்திருத்தங்களை மேற்கொள்வார், புதிய பாதையை தெரிவு செய்வார், வாழ்வை மேம்படுத்துவார், சரியான செயலை செய்வார்.

இதுமட்டுமின்றி இராசபக்சேவின் கட்சியை ஆதரித்து அவர் தேர்தல் பரப்புரையும் செய்துள்ளார். கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினரும்  மலையகத் தமிழருமான மனோகணேசனுக்கு எதிராக இராசபக்சே கட்சியை சேர்ந்த விமன் வீரவமச என்ற நாடறிந்த சிங்களக் கடும்போக்கு இனவாதியை ஆதரித்து  தேர்தலில் பரப்புரை செய்தார். இதை மனோகணேசன் அவர்களே மனம் நொந்து அண்மையில் வெளிப்படுத்தினார். மலையகத்தில் தமிழ் வேட்பாளரைத் தோற்கடிக்கும் விதமாக தனது சகோதரரை வேட்பாளராக நிறுத்தி வாக்குகளைப் பிரித்து இராசபக்சே கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றிப்பெற வழிவகுத்தார். ஆகவே, அவர் விளையாட்டு வீரர் மட்டுமல்ல, அரசியலரும் கூட. இலங்கை அரசியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது புதிது இல்லை. மேலும் இனப்படுகொலையை எதிர்க்கவில்லை, நீதி கோரவில்லை தானுண்டு தன் வேலையுண்டு என்று பந்தை தேய்த்து கொண்டிருந்தார் என்றால் முரளிதரன் தமிழ் மக்களிடம் இவ்வளவு வெறுப்பை ஈட்டியிருக்க மாட்டார். மாறாக இனக்கொலை குற்றவாளிகளை ஆதரித்துப் பேசி, காணாமற்போனோர்தம் உறவுகளின் போராட்டங்களை சிறுமைப்படுத்தி ஆளும்வர்க்கத்தின் அடிவருடியாக விளங்கினார் என்பதே இங்கு பிரச்சனை. ச்சீ ச்சீ தமிழர்களை இன அழிப்பு செய்யவும் பின்னர் அதிபராகவும், பிரதமராகவும் வலம்வருவதற்கு இராசபக்சேக்களுக்கு ஜனநாயகம் இல்லையா? என்ற இந்து தமிழ் திசையின் மனக்குமுறல்தான் இந்தக் கட்டுரை.

அரசியல் இல்லாத இடமுண்டா?

கருவறை முதல் கல்லறைவரை அரசியல் உண்டு. பாதாள சாய்க்கடை முதல் பேரண்டம் வரை அரசியல் உண்டு. இந்த உலகில் மண்ணுக்குள்ளேயும் வெளியேயும் ஓசோன் படலத்திலும் அண்டார்டிக் பனிப் பரப்பிலும் கொரோனாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசியிலும் காவிரியிலும் பசிபிக் பெருங்கடலிலும் என எங்கும் எதிலும் அரசியல் உண்டு..  தாராளியர்களின் இதயங்கவர்ந்த பொழுதுபோக்குகளான கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த கிரிக்கெட் இந்திய தேசிய அரசியலையும் சினிமா திராவிட அரசியலையும் நிலைநாட்டுவதற்கு எந்தளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறியாதவர்களாக அவர்கள்? அப்போதெல்லாம் அவர்கள் மெளனம் காப்பதும் இப்போது இவற்றுக்கு அரசியலில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பதிலும்தான் அவர்களுடைய தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் தலைவிரித்தாடுகிறது.

இன, நிற வெறிக்கு எதிராக, படுகொலைகளுக்கு நீதிகேட்டு புறக்கணிப்பை(boycott) ஒரு போராட்ட வடிவமாக மாந்த சமூகம் கடைபிடித்து வருகிறது. கருப்பர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னிட்டு  கருப்பர்கள் பங்குபெறாத கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டது. நெல்சன் மண்டேலா புறக்கணிப்புப்  போராட்டம் நடத்தினால் அது விடுதலைப் போராட்டத்தின் பகுதி, அதே போராட்டத்தை தமிழர்கள் நடத்தினால் அது இனவெறியா?.

’கருத்துரிமை பொது’ என்ற தலைப்பில் கட்டுரை முடியும் பத்தியில் முன்னாள் போராளிகள் ’ உங்கள் அரசியலுக்கு எங்களைப் பயன்படுத்தாதீர்கள்’  என்று முகநூலில் விட்ட வேண்டுகோளைச் சுட்டிக்காட்டுகிறார் வினோத். ஆனால், வடக்கு கிழக்கு வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோர் சங்கம் விஜய சேதுபதியைப் படத்தில் இருந்து விலகக் கோரியதை வினோத் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அல்லது அதைக் குறிப்பிடவும் தயாரில்லை. இந்த அளவுக்குத்தான் கருத்தை வாசகர்களுக்குப்  பகிர்வதில் ஒரு பொதுநியாயத்தை அவரால் கடைபிடிக்க முடிந்திருக்கிறது.

பாசிஸ்டுகளைக் கண்டால் தாராளியர்களுக்கு அச்சம். அதே நேரத்தில் பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் சிறு ஊக்கம் பெற்றாலும் கதிகலங்கி விடுகின்றனர். இந்தியப் பெருந்தேசியத்தால் பலன்பெற்றுவரும் பெருமுதலாளியவர்க்கத்திற்கும் அதை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் தனது இருப்புநிலையில் உலகத்தைப் பார்க்க முடிகிறதே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து உலகைப் பார்க்க முடியவில்லை. ஆகவேதான், விஜய்சேதுபதி படத்தில் இருந்து பின்வாங்க நேர்ந்தது தாராளிவர்களுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.

என்ன செய்வது, பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் வினோத் போன்ற தாராளியர்களோடும் நாம் சேர்ந்து நின்றாக வேண்டும் ;என்ற தேவையுள்ளது. அவர்களுக்குதான் இது புரிகிறா என்று தெரியவில்லை.

 

– செந்தில்

  1. https://www.hindutamil.in/news/opinion/columns/593329-freedom-of-expression-1.html
  2. https://www.hindustantimes.com/india-news/the-offer-for-governor-s-post-in-northern-province-is-a-rumour-muttiah-muralitharan/story-KN1faayjHOfed1Rh0rpBGN.html?fbclid=IwAR1A26EU5O3LcYynGKe6ayhgNv5DeRXOdPQ1Bpe14f04ryYDLCRwfQnfvAU
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW