விஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா?

22 Oct 2020

ஒரு போரில் எதிரிக்கு எதிராக எந்தவித நியாய, தர்மங்களையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. எதை வேண்டுமானாலும் செய்து வென்றால் போதும் என பொய், சூது, பித்தலாட்டம் என எல்லாவற்றையும் செய்து காட்டுவான் கண்ணன். கீதையில் அவன் போதிக்கும் போர் தர்மம் இதுதான்.

இதை அச்சுஅசலாக கடைபிடிப்பது ஆர்.எஸ்.எஸ். – பாசகதான். பாசகவில் உறுப்பினர்கள் சேருவதால் தாமரை மலர்ந்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றாலும் பாசகவின் கழிசடைத்தனமான பொய்ப் பித்தலாட்ட அரசியலுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்களே என்ற கவலை எனக்கு உண்டு. அப்படி ஓர் அரசியல் பண்பாட்டிற்கு பழக்கப்பட்டுவிட்டால் பின்னர் மீள்வது மிகவும் கடினம். தமிழக அரசியல் சூழலும் பாழ்பட்டுவிடும்.

எடுத்துக்காட்டாக, யாரை வேண்டுமானால் இந்து அல்லாத கிறித்தவர், இஸ்லாமியர் என்பார்கள்.  கிறித்தவத்தைப் பரப்பும் விஜய்சேதுபதி, கிறித்தவக் கைகூலி வைரமுத்து என்று பொய்யை உமிழ்வர். எங்கோ ஒரு வெடிகுண்டு வெடித்தால் உடனே அதை இஸ்லாமியக் குண்டு என்றும் அதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் பொறுப்பாக்குவர். லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத் என்று புதுபுதுக் கதைகளை எழுதிப் பரப்புவர். வள்ளுவரை இந்து என்பார்கள். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்றவர் பெரியார் என்பார்கள். அவற்றை பொய் என்று மெய்ப்பிக்கும்போது எந்த கூச்சமும் இல்லாமல் துடைத்துக் கொண்டு போவார்கள். சில காலம் கழித்து மீண்டும் அந்தப் பொய்யை எடுத்து வருவார்கள். இவ்வண்ணம்  போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் என்னவும் செய்யலாம் என்ற கீதையின் போதனையைத்தான் சங் பரிவாரங்கள் அரசியலில் கடைபிடிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். – பாசக கடைபிடிக்கக் கூடிய இதே உத்தியைத்தான் நேற்று திமுகவினரும் திமுக ஆதரவாளர்களும் விஜய்சேதுபதி மகளைக் குறிவைத்தப் பாலியல் மிரட்டல் பதிவைப் பயன்படுத்தி செய்தனர். அந்தப் பதிவைப் போட்டவர். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர். அது உண்மையான கணக்கா? பொய் கணக்கா? இஸ்லாமியர்களின் போராட்டத்தில் புகுந்து ’பாகிஸ்தான் வாழ்க்’ என்று முழக்கமிடுவது பாகிஸ்தான் கொடியைப் பிடிப்பது ஆகியவற்றை சங்கிகள் செய்வது உண்டுதானே. அதுபோல் ஒருவர் அதை செய்திருக்கக் கூடாதா?  இல்லை, இல்லை அதை நிச்சயம் ஒரு தமிழ்த்தேசியவாதிதான் போட்டிருக்க வேண்டும் என்றுதான் இந்த நாளில் பரப்புரையைத்  தொடங்கினார்கள்.

உடனே, மேற்படி டிவிட்டர் கணக்குப் பிரச்சனையை வைத்து ஆர்.எஸ்.எஸ். – பாசகவோடு திமுகவை சமன்படுத்துவதா? என்று சிலர் நம் மீது பாயக் கூடும். மத அடிப்படைவாத பாசக வைவிடவும் முதலாளித்துவ திமுக நிலவுடைமை ஆணாதிக்கப் பண்பாட்டிற்கு எதிரான அரசியலில் ஓப்பீட்டளவில் முற்போக்கானதுதான். ஆனால், நான் பார்வைக்கு கொண்டு வர விரும்புவது அதையல்ல. ஓர் அரசியல் போரில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளைப் பற்றித் தான் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழ்த்தேசிய அரசியலையும் இந்துத்துவ அரசிய்லையும் நேர்படுத்திக்கூட சிலர் இன்றைக்கு பதிவிட்டனர். டிவிட்டர் பதிவைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய அரசியலை களங்கப்படுத்துவது அவர்கள் நோக்கமாக இருந்தது. என்னுடைய குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய அரசியலை ஒருவர் எதிர்க்கக் கூடாது என்பதல்ல. தமிழ்த்தேசிய அரசியலை அதன் கொள்கை, நடைமுறை ஆகியவற்றில் இருந்து விமர்சனத்திற்கு உட்படுத்தும் ஒருவருக்கு உண்டு. ஆனால், அப்படி ஒரு விமர்சனத்தை ஏன் திமுகவினர் செய்வதில்லை? ஏனென்றால், அப்பட்டமான இந்திய தேசிய ஒடுக்குமுறையின் எதிர்விளைவாய் எழுச்சிப் பெற்றுவரும் தமிழ்த்தேசியத்தை நேருக்குநேர் நின்று வீழ்த்திவிட முடியாது. அது புறநிலை மெய்ம்மையில் இருந்து தோன்றுவதாகும். பார்ப்பானின் சதியோ பாசகவின் சூழ்ச்சியோ கூரையில் இருக்கும் பள்ளியின் சகுனமோ அல்ல அது.

சனநாயகத்தின் மீது அக்கறை உள்ளோர் இதைவிடவும் உண்மையில் கவலைகொள்ள வேண்டிய விசயம் ஒன்று உண்டு. இஸ்லாமியர்கள் பற்றி இந்துத்துவ ஊடகங்கள் அணுப்பொழுதும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மக்களிடம் நாம் உண்மையை எடுத்துச் சொல்லி அந்தப் பொய்களை முறியடிக்க முயல்கிறோம். பெரும்பாலான நேரத்தில் எதிரியின் கை ஓங்கித்தான் இருக்கிறது. பல நேரங்களில் பொய்களை முறியடிக்க முடியாமல் நம் மனம் குமுறுகிறது. மக்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசக் கூடியவர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதற்கு காரணம், அரசியலில் எல்லோரும் பங்கேற்க கூடிய இத்தகைய மக்கள் யுகம் என்பதே மனிதர்களுக்குப் புதியதுதான். வெறும் 300 ஆண்டுகள்தான் இந்த யுகத்தின் வயது. அரசியல் துறையில் ஒன்றின் மெய்ப்பொருளைக் கண்டடையும் பயிற்சி மக்களுக்கு குறைவாக இருக்கிறது. எதன் பொருட்டும் விவரங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருவது என்பதற்கு மாறாக விருப்பங்களின் அடிப்படையில், தன் சாதி, தன் மதம், தன் இனம் என்ற அடிப்படையில் முடிவுக்குவரும் பழக்கம் மக்களுக்கு இருக்கிறது. இந்த யதார்த்த நிலையில் இருந்து மெய்ப்பொருள் காண்பது, பகுத்தறிவது, கொள்கையை ஆராய்ந்து முடிவெடுப்பது, விவரங்களைத் தேடுவது என்பதற்கு நடைமுறையோடு கூடிய இரத்தமும் சதையுமான பயிற்சி சமூகத்திற்கு தேவைப்படுகிறது. அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்கு மக்களுக்கு துணை நிற்பதுதான் சனநாயக ஆற்றல்களின் கடமையாக இருக்க முடியும். ஏனென்றால் இந்த பின்தங்கிய நிலைமை இஸ்லாமியர்களுக்கும் தலித் மக்களுக்கும் பெண்களுக்கும் பழங்குடிகளுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் காசுமீர் போன்ற தேசிய இனங்களுக்கும் என ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிரான கருத்துவருவாக்கத்திற்கான விளைநிலமாக இருக்கிறது.

இதுபற்றி எல்லாம் திமுகவுக்கோ அதன் அடிவருடிகளுக்கோ எள்ளளவேனும் அக்கறை இருந்திருந்தால் சீர்கெட்ட ஒருவரின் டிவிட்டர் பதிவைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக சேற்றை வாரி இறைக்க முயன்றிருக்கமாட்டார்கள். இந்துத்துவப் பாசிசத்தின் எதிர்விளைவே தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சி.. கரைபுரண்டு வரும் காட்டாற்று வெள்ளம் போன்றது அது. அதை அத்தனை எளிதில் மடைமாற்றிவிட முடியாது.

மக்கள் விழிப்புற வேண்டும் என்ற அக்கறை ஆளும் வர்க்கத்திற்கு நிச்சயம் இருக்காது. அந்த அக்கறை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசிப்பவர்களுக்குத்தான்  இருக்கும், இருக்கவேண்டும்.

கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவாது. ஏனென்றால், ஒரு போராட்டத்தின் வெற்றியைவிடவும் மக்கள் பெறக்கூடிய பட்டறிவு  வெகுமதியானது. எல்லா போராட்டக் களங்களிலும் மக்களுக்கு வெற்றி, கிட்டுவதில்லை. ஆனால், இரத்தமும் சதையுமான பட்டறிவு கிடைக்கிறது.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW