அறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்

26 Sep 2020

திருவிளையாடல் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா பாண்டிய மன்னன் அவையில் பாடி முடித்தபின் ஒரு போட்டியை அறிவித்து அதில் தான் வென்றுவிட்டால், அதன்பிறகு பாண்டிய நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக்கூடாது என்று கூறுவதாக ஒரு காட்சி வரும்.  அதுபோல் அறுதிப் பெரும்பான்மை இருக்கிற மத்திய அரசு கொரோனா நோய்தொற்று பயத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு கேள்வி நேரமே கிடையாது என்ற நிபந்தனையோடு கூட்டப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டு நடப்பில் இருந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுதிகளுக்குள் உள்ளடக்கி அதற்கான சட்டங்களை செவ்வாயன்று 4 மணிக்கு மக்களவையிலும் 7 மணிக்கு மாநிலங்களவையிலும் விரைந்து நிறைவேற்றி இருக்கிறது. இது இனிமேல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படவேண்டும்.

முன்னதாக கடந்த ஆகஸ்டில் சம்பளம் குறித்த சட்டத் தொகுப்பு நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே தற்போது சமூக பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், மற்றும் பணியிட பாதுகாப்பு என்கிற மூன்று தலைப்பில் சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் வழியாக 29 சட்டங்கள் மூன்று தொகுப்புகள் வந்துவிட்டது ஏறக்குறைய 17 ஆண்டுகாலம் தொழிலாளர் வர்க்கம் நாடுமுழுவதும் தொடர்ந்து இதுபோன்ற தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தப்பட அதை எதிர்த்து இயக்கங்களும் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களையும் நடத்தி  வந்திருக்கிறது.

தொழிற்சாலைகள் சட்டம், தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சங்கச் சட்டம், சுரங்க சட்டம், வருங்கால வைப்பு நிதிச் சட்டம், பணியாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், மகப்பேறு நலச்சட்டம் போன்றவையெல்லாம் மிக நீண்ட காலமாக இருந்து வருகிற சட்டங்கள்.  தொழில்துறையில் உற்பத்தியை பெருக்குவதற்காக என்கிற பெயரில் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இது மாறும் நேரம் மற்றும் மாறிவரும் தேவைகளுக்கான கோரிக்கை, இது தொழிலாளர் நலன் மற்றும் தொழில் நலனை சமன் செய்கிறது என்று தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் மாநிலங்களவையில் பேசியபோது தெரிவித்தார். குறிப்பிட்ட கால பணி 300 தொழிலாளர்களுக்கு கீழே இருந்தால் அந்த நிறுவனம் தொழிலாளர் துறையின் ஒப்புதல் இல்லாமலேயே என்று வேண்டுமானாலும் நிறுவனத்தை மூடி தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வேலை செய்யலாம் பேரம் பேசும் சக்தி என்பது இதன் மூலம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பருவத்தில் நோய் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது என்கிற பெயரில் பல மாநில அரசுகள் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு எந்தவிதமான தொழிலாளர் சட்டங்களும் இங்கே நிறுவனங்களை கட்டுப்படுத்தாது  என்கிற விதிவிலக்குகளை செய்து, ஒருபுறம் உழைப்புச் சுரண்டலை மேற்கொண்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக இந்த சட்டத்திருத்தம் மூன்றும் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு முன்பாக வைக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து இது பல விதத்தில் தொழிலாளர்களுக்கு தீங்கிழைப்பதாக உள்ளது என்று சொல்லி பல திருத்தங்களை பரிந்துரை செய்திருந்தனர். அவற்றில் எவை எல்லாம் கருத்தில் எடுக்கப்பட்டது என்பது இந்த சட்டத் தொகுப்பு முழுமையாக வெளிவந்த பின்தான் பார்க்க இயலும். ஆனாலும் ஆளும் கட்சியினுடைய தேசிய தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம், அதன் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் அதிகப்படியான அமர்த்து, துரத்து மற்றும் துப்பாக்கிச்சூடு விதிகள், ஆட்சி செய்யும் போது விதிகளை மாற்ற  அதிகாரம் மற்றும் புதிய குறியீடுகள் எவ்வாறு தொழிலாளர் தொடர்பான நிலைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகளை புறக்கணித்தன என்பது உள்ளிட்ட பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்துறை உறவுகள் சட்டம் முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகமாக சாய்ந்து வருவதாகவும் தொழில்துறை அமைதியை மோசமாக பாதிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  இந்திய தொழிற்சங்க மையத்தின் துணை தலைவர் தோழர் ஏகே. பத்மநாபன் இப்போது தொழிலாளர்கள் இந்த சட்டங்களை வீதிகளில் எதிர்த்துப் போராடுவார்கள் மற்றும் பணியிடத்தில் முதலாளிகள் மீது சாய்ந்து இருக்கும் சட்டங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தொழில்துறை சீர்கேடுகள் அதிகமாகும் தொழிலாளர் நலம் கெடும் என்று தன் கவலையை பதிவு செய்துள்ளார்.

மறுபுறம் முதலாளிகள் சார்பாக நிதி அமைச்சரின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தன்னுடைய டுவிட்டர் செய்தியில் தொழில் மற்றும் சில பொருளாதார வல்லுனர்கள் இது ஒரு சிறந்த சித்தமாக கருதுகின்றனர், இது முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் வணிகத்தை எளிதாக்கும், இந்த சீர்திருத்தம் இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இது சிக்கலான தன்மை மற்றும் உள் முரண்பாடுகளை வெகுவாக குறைகிறது, இலகுத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் பாதுகாப்பு பணி நிலைமைகள் குறித்து வகைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த சட்டத் திருத்தங்களை வெகுவாக வரவேற்றுள்ளனர்.

இது குறித்து கேட்ட போது தொ.மு.ச. பேரவையின் பொருளாளர் திரு கி.நடராஜன் அவர்கள் தெரிவிக்கையில், மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு விதமான தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  குறிப்பாக இந்தியத் திருநாட்டில் சைமன் கமிஷன் காலம் தொட்டு ஏறக்குறைய 100 ஆண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகளின் வாயிலாக தொழிலாளர்களின் உரிமைகளை ஓரளவிற்கு பாதுகாத்து வருகிறது.  மத்திய சட்டங்கள் 44, மற்றும் பல்வேறு மாநிலச் சட்டங்கள் என ஏறக்குறைய 100 தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுலில் உள்ள போதிலும், அவற்றாலும் தொழிலாளர்களை முழுமையாக பாதுகாக்க இயலாமல் அவ்வப்போது தொழிலாளர் வர்க்கம் போராடித்தான் தங்கள் உரிமைகளை நிலை நாட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் 44 சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளுக்குள் உள்ளடக்குகிறேன் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தொழிற்சங்கங்களைப் பொறுத்தவைர காலத்திற்கேற்ப தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்புடைய கருத்தாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தும் தற்போதைய முறை ஏற்க இயலாததாக உள்ளது.  இந்திய தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, தொழிலாளர் ஆணைய தலையீட்டுடன் உருவாக்க வேண்டிய சட்டங்களை, அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கேற்ப அவசர கதியில் மசோதாவாக நிறைவேற்றம் என்பதை ஏற்க இயலாது.

இந்திய அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுபிடியாக செயல்பட்டு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம் நீண்ட நெடிய போராட்டங்களினால் பெற்றது 8 மணி வேலை நேரம் என்பது, தற்போது சட்டத் திருத்தங்களின் மூலம் அது பறிக்கப்பட்டுள்ளது.  மேலும் வேலை நேரம் என்பதை சம்மந்தப்பட்ட அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் (Appropriate government may fix the working hours) என்ற நெகிழ்வுத் தன்மையின் மூலம் வேலை நேரம் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  தற்போதைய தொழிற்தாவாச் சட்டம் வேலை நிறுத்தத்தை தடை செய்கிறது, அதே போல் கதவடைப்பையும் தடை செய்கிறது.  ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் தொகுப்புகளின் வாயிலாக முதலாளிகள் எப்போது வேண்டுமானாலும் மூடிவிட்டுப் போகலாம் என்கிற அபாய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெறும் வகையிலான தொழில்கள் பெரிய அளவில் துவக்கப்படவில்லை.  அவ்வாறே துவங்கப்பட்ட நிறுவனங்களிலும் 10% நிரந்தரத் தொழிலாளர்கள், மற்றவர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்கிற வகையில்தான் நிறுவனங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  தவிர அவுட் சோர்சிங் என்ற முறையில் பணிகள் வெளியில் விடப்படுகிறது.  இந்த சூழலில் எந்த வித அனுமதியும் பெறாமல் தொழிற்சாலையை மூடிக்கொள்ளலாம் என்கிற அனுமதி வேலையிழப்பை அதிகரிக்கவே செய்யும்.  பாஜக உருவாக்கிய இத்தகைய அபாயங்களை எதிர்த்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால் அரசுகள் காது கொடுத்து கேட்காத நிலைதான் தொடர்கிறது. இந்தியாவில் 50 கோடிப்பேர் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம், 60 கோடி பேர் விவசாயத் தொழிலாளர்கள் என்கிற நிலையில் அவசர கதியில் இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து இரு தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் மிகப் பெரிய போராட்டங்களுக்கு தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு தயாராக வேண்டும்.  இந்த அரசை அகற்றுவதற்கான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்க முடியும்.  தொழிலாளர் வர்க்கம் தோற்றதாக வரலாறு இல்லை, எனவே தொழிலாளர்கள் ஒன்று திரள அறைகூவல் விடுக்க வேண்டும் என தொமுச பேரவை பொருளாளர் திரு கி.நடராஜன் தெரிவித்தார்.

இது குறித்து மூத்த தொழிற்சங்க நிர்வாகியான தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில செயல் தலைவர் கூறுகையில், இந்த அரசு தொடர்ந்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கானது என்பதை மெய்ப்பித்து வருகிறது.  பொருளாதாரத்தை மேம்படுத்த, மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை விடுத்து, பல பொதுத்துறைகளை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகிறது.  மேலும் 70 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கு தோள் கொடுத்து வருகிற ஆயுள் காப்பீடு பங்கு விற்பனை, தேசிய மய வங்கிகளை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் தனியார் வங்கிகளை ஊக்கப் படுத்துவது என்கிற நடவடிக்கைகளோடு, தற்போது குறிப்பிட்ட கால நியமனம் – அமர்த்து, துரத்து என்கிற போக்கை அதிகப்படுத்தியதோடு, 300 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடிவிட்டுப் போகலாம் என்கிற சலுகையை அளித்துள்ளது வேதனையளிக்கிறது.  தவிர தொழிற்சங்க உரிமைகளை நீர்த்துப் போகச் செய்துள்ளது.  இவையனைத்தையும் தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு எதிர்த்து முறியடிக்கும் என தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நோய்த் தொற்கு காலத்தில் ஏறக்குறைய 3.5 லட்சம் டிரில்லியன் டாலர் சம்பளம்  ( 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி டாலர், அதாவது இந்திய மதிப்பில் 258,195,000,000,000 ரூபாய் துடைத்தெறியப்பட்டுள்ளது. 100 மில்லியன் வேலை இழப்புகள் நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளது. எனவே இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முன்பாக, அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்களின் முன்பாக எழுந்துள்ள மிகப் பெரிய சவால் என்பது, இந்த சட்டத் திருத்தங்களை எதிர்த்து உடனடியாக ஒன்றுபட வேண்டும் என்பதாகும்.

 

(கட்டுரையாளர் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் ஆவார்)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW