இந்திய அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

25 Sep 2020

ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

நாள்: 25-09-2020, வெள்ளி, காலை 11 மணி, இடம்: இந்திய உணவுக் கழகம் அருகில், நுங்கம்பாக்கம்

இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை அடகுவைக்க கூடிய கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இவ்வார்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் வெற்றிவேல்செழியன் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (The Essential Commodities Amendment Act 2020), விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020(Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)  மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020)  ஆகியவை உழவர்களின் வாழ்வை சூறையாடிக் கார்ப்பரேட்களை வளர்த்துவிடக் கூடியவை. இச்சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள உழவர்கள் போராடி வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இப்பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை இச்சட்டம் விலக்கிக்கொண்டுள்ளது.  இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் உள்ள தானியங்களை தனியார் நிறுவனங்கள் எளிமையாக வாங்கவும்,இஷ்டம் போல சேமித்துவைத்துக் கொள்வதற்கும் வழிசெய்கிறது. இத்திருத்த சட்டம்  இந்திய உணவுக் கழகத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டதோடு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்க உள்ளது.

வரும்காலத்தில் வியாபாரிகளிடம் நேரடியாக தானியங்களை கொள்முதல் செய்து செயற்கையான உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி தேவைப்படும்போது பொருட்களை அதிக விலைக்கு பெருநிறுவனங்கள் விற்பதற்கான வாய்ப்பை இத்திருத்தம் சட்டபூர்வமாக்குகிறது.

இனி எதிர்காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாட்டையும்  ரேசன் விநியோக கட்டமைப்பையும் இந்த திருத்த மசோதா பலவீனப்படுத்தி ஒழிப்பதற்கு வகை செய்கிறது.

முன்னதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கையிலே பொது ரேசன் விநியோக அமைப்பிற்கு மாற்றாக வங்கி கணக்கில் பணம் போடவேண்டும் என ஆலோசனை கூறப்பட்ட  நிலையிலே இந்த திருத்த சட்டம்,பொது விநியோக கட்டமைப்பை ஒழிப்பதை முன்னறிவிப்பதாக உள்ளது.

விவசாய விளைபொருள் வியாபார சட்டத்தின்  மூலமாக விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருளை மண்டிகளுக்கு வெளியே நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் எனவும்,இடைத்தரகர்களை இச்சட்டத்தின் மூலமாக ஒழித்துவிட்டதாகவும் பிரதமர் கூறுகிறார்.ஆனால் நடைமுறையிலே வேளாண் விளைபொருள் சந்தைக் கழகத்தையும்(APMC) விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை  நடைமுறையையும் ஒழிப்பதன் மூலமாக விவசாயிகளையே மோடி ஒழிக்கிறார்.

விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்த சட்டம் விவசாயிகளுக்கும் கொள்முதலாளர்களுக்குமான நாடு தழுவிய ஓர் “ஒப்பந்த பண்ணையம்” முறையை அமலாக்குகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக மத்திய அரசு ,மாநில அரசுகளுக்கு “மாதிரி” ஒப்பந்த பண்ணைய  சட்டத்தை சுற்றுக்கு அனுப்பியிருந்தன.இந்த மாதிரி சட்டத்தின் அடிப்படையிலே  இந்தியாவிலே முதல் மாநிலமாக `தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019′ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. கரும்பு போன்ற பணப் பயிர்கள் மற்றும் இறைச்சிக் கோழி, ஈமுக் கோழி போன்ற கால்நடை விற்பனைகளை ஒப்பந்த அடிப்படையிலே வியாபாரிகளுக்கு பல சாதகங்களை இந்த சட்டம் வழங்கியது.  வேளாண் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது எனவும், விவசாயிகள் நேரடியாக உற்பத்திப் பொருள்களை விற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பேட்டியளித்தார்.

தற்போது ,இந்த சட்டத்திருத்தம் மூலமாக, நாடு தழுவிய அளவில் ஒரு ஒப்பந்த பண்ணையசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனடிப்படையில்

  • வியாபாரி/கொள்முதலாளா் /உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை,தரம்,காலக் கெடு உள்ளிட்ட அம்சங்களை எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
  • ஒப்பந்த காலம் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை
  • மாநில வேளாண் துறை அதிகார அமைப்பின் கண்காணிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும்

ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளதாக மத்திய மாநில அரசுகளால் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன.ஆனால் நடைமுறையில் இந்த ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதற்கு தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் நடந்துவரும் ஒப்பந்த விவசாயமே சாட்சி. சிறுகுறு உழவர்களைக் கிட்டத்தட்ட கார்ப்பரேட்களின் பண்ணையடிமைகளாக மாற்றிவிடும் இந்தச் சட்டம்.

உலக வர்த்தக கழகத்தின் அடிமையாக மாறிப்போன இந்திய நாடாளுமன்றம் இந்திய உழவர்களைப் பலிபீடத்தில் ஏற்றத் துணிந்ததை அறிவிக்கும் சட்டங்கள் இவை.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்ததன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவியை இல்லாதொழிப்பது, மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்திற்கு முடிவுகட்டுவது என உழவர்களை உழவுத் தொழிலைவிட்டு விரட்டியடித்து கார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவைத் திறந்துவிடுகிறார் மோடி.

இதனாலேயே, நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்திய உணவுக் கழகத்தை செயலற்றதாக்கி ரேசன் கடைகளை மூடி பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டக்கூடிய இச்சட்டங்கள் உழவர்களை மட்டுமின்றி பெரும்பாலான ஏழை,எளிய மக்களுக்கும் எதிரானதாகும். இவற்றை திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமின்றி பரந்துபட்ட உழைக்கும் மக்களும் பங்கேற்று காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகப் போராட முன்வருமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

 

தோழமையுடன்,

செந்தில்,

9941931499

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW