மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி! மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்!  

22 Sep 2020

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்க அறிக்கை

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் 13-9-2020 அன்றிரவு மீட்கப்பட்டனர் என்ற செய்தி 14-9-2020 அதிகாலை பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கப்பெற்றது. 53 நாட்கள் கடலில் தத்தளித்து இருந்த 9 பேரும் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியும் புகைப்படங்களும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், மீனவர்கள் மியான்மர் கடல் பகுதியில் மீட்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் நிறைவடைந்தும் அவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட வில்லை. அதனினும் துயரகரமானது அவர்கள் கடற்பகுதியில் படகிலேயே மியான்மர் கடற்படை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.

மியான்மர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கடலில் ஏதோவொரு வேலையைச் செய்வதற்காக படகு ஓட்டுநரையும் பாபுவையும் அழைத்துச் சென்றதாகவும் அதிலிருந்து பாபு திரும்பி வரவில்லை என்றும் அவரை மியான்மர் கடற்படை கடலில் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி வருகிறது. இது பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கும் எங்களுக்கும் பேரதிர்ச்சியைத் தருகிறது.

தங்களுடைய முயற்சியால்தான் மீனவர்கள் மீட்கப்பட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களை மியான்மரில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும்பொருட்டு எத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து இருந்த இந்தியாவின் குடிமக்கள் விமானம் மூலம் மீட்டுவரப்பட்டதை ஒரு சாதனை போல மார்தட்டிக் கொள்கிறது நடுவண் அரசு. ஆனால், மியான்மர் கடற்கரையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்கு ’வந்தே பாரத்’ திட்டத்தைப் பயன்படுத்துவதில் தடையென்ன? ஒரு சிறப்பு விமானத்தைப் பயன்படுத்தி இதுவரை அவர்களை சென்னைக்கு அழைத்து வராதது ஏன்? இது விசயத்தில் மாநில அரசு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகியவை ஒத்திசைவுடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்படத் தவறியதால்தான் மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

9 மீனவர்களில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படிருக்குமோ என்ற ஐயத்தை உடனடியாக தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். 9 மீனவர்களையும் பாதுகாப்பாக சென்னை மீட்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

 

தோழமையுடன்

ஆ.சதிஸ்குமார்

கெளரவத் தலைவர்,

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம்

9940963131

#fishermen#kasimedu#myanmar

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW