தமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா?

09 Sep 2020

நிகழ்வு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைப்பு: தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம்

நாள்: 08.09.2020, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3:30 மணி

இடம்: உதவி இயக்குநர் அலுவலகம் (மீன்வளத்துறை), காசிமேடு, சென்னை

 

சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23 அன்று கடலுக்குப் போன 10 மீனவர்கள் இன்றுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்பதற்கு தீவிரமாக தேட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வமணி தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் காசிமேடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து முழக்கமிட்டபடி அலுவலகம் நோக்கி பதாகைகள் ஏந்திய ஊர்வலம் நடந்தது. பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீர்ரும் கம்யூனிஸ்ட் தோழருமான ம.சிங்காரவேலு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் அலுவலக வளாகத்திற்குள் இருந்தபடி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதை தொடர்ந்து போராட்டக் குழுவின் சார்பாக அமைப்புகளின் பிரதிநிதிகள் உதவி இயக்குநர் திரு வேலன் அவர்களை சந்தித்து கோரிக்கை மடல் ஒன்றை கையளித்தனர். (மடல் இணைப்பில் கொடுக்கப்பட்டது) உதவி இயக்குநர் அலுவலகத்தின் வளாக வாயிலில் இருந்து கூட்டியக்கத்தின் பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி விசைப் படகு எண் IND-TN-02-MM 2029 இல் மீன்பிடிக்கச் சென்றவர்கள் 48 நாட்களாகியும் கரை திரும்பவும் இல்லை, எங்கிருக்கிறார்கள் என்ற தகவலும் இல்லை. காணாமல் போனவர்களில் 8 பேர் திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரைச் சேர்ந்தவர்கள், விசைப் படகின் ஓட்டுநர் இராயபுரத்தைச் சேர்ந்தவர்.

பத்து பேரின் விவரங்கள் – இராயபுரத்தை சேர்ந்த போட் டிரைவர் ரகு(42), திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த லட்சுமணன்(32), சிவக்குமார்(30), பாபு(42), பார்த்தி(55), திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த கண்ணன்(48 ), தேசப்பன்(18),

முருகன்(56), ரகு(30), லட்சுமிபுரத்தை சேர்ந்த தேசப்பன்(28).

ஜூலை 23 ஆம் தேதியில் இருந்தே மீனவர்களோடு அவர்களது குடும்பத்தாரால் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. எனினும் அவர்கள் பத்து நாட்கள் வரை பொறுத்திருந்துள்ளார்கள். பின்னர், கடலுக்குப் போன நாளில் இருந்து 13 ஆவது நாள் முறையான புகாருக்கு உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியதாக அறிகிறோம். அதிலிருந்து ஒவ்வொரு நாளும் உதவி இயக்குநர் அலுவலகம் நோக்கி காணாமற்போன மீனவர்களின் உறவுகள் கண்ணீரோடு நடந்த வண்ணம் உள்ளனர். வெறும் 10 நாட்களுக்கான உணவு, குடிதண்ணீரோடு கடலுக்குப் போயுள்ளவர்களை உயிருடன் மீட்க வேண்டுமாயின் போர்க்கால அடிப்படையில் தேடியிருக்க வேண்டும். ஆனால், பத்து பேரை மீட்கும் முயற்சியில் மிகுந்த மெத்தனத்தோடு நடந்து வந்ததாகவே தெரிகிறது. மேலும், எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பவை குறித்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது கேள்வி எழுப்பினால் அவர்களை அச்சுறுத்துவதும் அவர்களின் வாயடைப்பதும் நடந்துள்ளது. ஒரு குடியரசு என்றால் ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் அது பொறுப்பேற்க வேண்டும். மாறாக, அரசின் இந்த கடமை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருணையாகக் கருதப்பட்டு அவர் தயவை நம்பி கரைதிரும்பாத மீனவர்களின் உறவுகள் இருப்பதான தோற்றம் ஒன்று சித்திரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். பத்து மீனவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமையே அன்றி எளிய மக்கள் மீது அரசு காட்டும் கருணை அல்ல அது.

மீன் ஏற்றுமதியின் வழியாக மிகப் பெரிய அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரும் மீனவ மக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் மத்திய மாநில அரசுகள் மதிப்பளிப்பதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகவே காசிமேடு மீனவர்கள் 10 பேரை மீட்பதில் உள்ள மெத்தனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக மீனவரின் பாதுகாப்பும் உரிமைகளும் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும் படகு, வலை சேதப்படுத்தப்படுவதும் சுட்டுக் கொல்லப்படுவதும் நின்றபாடில்லை. ஒக்கிப் புயல், கியார் புயல், காசிமேடு என மீனவர்கள் கரை திரும்பாமல் போவதும் அரசுகள் கைவிரிப்பதும் ஒரு தொடர் கதையாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கடற்புறத்தே வாழும் விளிம்பு நிலை மக்கள், தமக்கென உரிய அரசியல் பிரநிதித்துவம் இல்லாத மக்கள் என்பதால் கேட்பாரில்லாதவர்களாக கையாளலாம் என்ற எண்ணத்தை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

இனியாவது, கடற்படை, செயற்கைகோள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். தூதரக உறவுகளைப் பயன்படுத்தி வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் கரையொதுங்கி உள்ளனரா? எனக் கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விசைப் படகு உரிமையாளருக்கும்  இந்நாள் வரை இடைக்கால நிவாரணம் வழங்காததைக் கண்டிக்கிறோம்.

இவ்வார்ப்பாட்டத்தில் தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த் கபடி பி.மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அன்புச்செழியன், தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆ.சதிஸ்குமார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த சதீஷ், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வெ.மு.மோகன், விடியல்களத்தைச் சேர்ந்த ஆனந்தன், தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஐ.சிவப்பிரகாசம், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தென்கணல், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செல்வமணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த யேசு, கோத்தாரி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ரமேசு, கோரமண்டல் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ரவி, வழக்கறிஞர் லிங்கன், வாழ்நாள் காப்பீட்டுக் கழக முற்போக்கு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தாமரை, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

தோழமையுடன்,

 

மா.சேகர், ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம்

94440 78265

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW