இந்துத்துவ பாசிச மோடி அரசின் ஏகாதிபத்திய நலனுக்கான தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!! இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 14-08-2020

14 Aug 2020

நடுவண் ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவப் பாசிஸ்டுகள் பொதுமுடக்க காலத்தில் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வித் துறையிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் அடுத்த மாதம் தயாராகிவிடும் என்று கல்வியாளர்கள் மத்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மோடி தெரிவித்துள்ளார்

முந்தைய நடுவண் ஆட்சியாளர்களால், கல்வி என்பது அடிப்படையான அரசியல் சாசன உரிமை என அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள்(Directive Principles), இராதாகிருஷ்ணன் குழு, கோத்தாரி ஆணையம் ஆகியனவற்றின் வழியாக அங்கீகரித்ததையும் புதிய கல்விக் கொள்கையின் ஊடாக பறிக்க பார்க்கின்றனர்.

ஏற்கனவே பெரும் வணிகமயமாக்கலினால் அமல்படுத்தப்படாத தாய்மொழிவழிக் கல்வி பற்றிய சிக்கலை தீர்க்காமல் பெயரளவில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தாய்மொழிவழிக் கல்வி என்று கல்விக் கொள்கை ஆவணம் குறிப்பிடுகிறது.

ஏற்கனவே நிலவும் இடைநிற்றலானது மேலும் அதிகரிக்கும் வகையிலேயே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையில் பொதுத் தேர்வுகள் என்று அனைத்து மட்டங்களிலும் வடிகட்டுதல் முறையை கொண்டுவருகிறது.

இடைநிற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே அதிகரித்துவரும் கல்வி வணிகமயமாக்கலை நிறுவனமயமாக்கும் வகையிலேயே இக்கொள்கை ஆவணமானது அமைந்துள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவற்கு அனுமதிக்கும் இந்த ஆவணமானது  ஏற்கனவே உள்ள வணிகமயமாக்கலைத் தீவிரப்படுத்தி பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் உயர்கல்வியை ஒப்படைத்துவிடுகிறது.

உயர் கல்வியை ஏகாதிபத்திய மூலதனத்திடம் ஒப்படைக்கும் இக்கொள்கையின் மூலகர்த்தா என்பது வாஜ்பாய் ஆட்சியிலும் மன்மோகன் சிங் ஆட்சியிலும் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் இணைந்து கையொப்பமிட்டதே.

இந்தியாவானது ஏகாதிபத்திய நலனுக்கு ‘உலக வணிக அமைப்பில்'(WTO) இணைந்ததன் தொடர்ச்சியே ‘காட்ஸ்’ ஒப்பந்தக் கையொப்பம் ஆகும்.

இந்தியா நாற்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச செலாவணி நிதியம்(IMF) எனும் ஏகாதிபத்திய நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கும் போக்கைத் தொடங்கியது. அதற்கு நிபந்தனையாய் இலாபநோக்கு  இருக்கக்கூடாத ‘கல்வி’ போன்ற சேவையையும் தனியார்மயமாக்குதல் தொடங்கியது. அதன் அங்கமாய் இராஜீவ் காந்தியின் ஆட்சி 1986ல் ‘புதிய கல்வி கொள்கையை’ கொண்டுவந்தது.

இக்கல்வி கொள்கையின் அடுத்தக்கட்ட பண்புரீதியான பரிணாமமே மோடி கும்பலின் ‘தேசிய கல்வி கொள்கை’ ஆகும்.

மோடி இந்த ஆவணம் தொடர்பாய் சில தினங்களுக்குமுன்(07/08/2020) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியதுபோல் ஏகாதிபத்தியங்களுக்கு ‘உலகளவில் உழைப்பாளிகளை'(global workforce) சப்ளை செய்வதற்கே இக்கொள்கை ஆவணம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு மலிவான உழைப்பாளிகளை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாகவே மேலும் கல்வியை வணிகமயமாக்குதல், பாடத்திட்டம், கற்பித்தல் முறை உள்ளிட்டு ஒட்டுமொத்த கல்விமுறையையே  ஏகாதிபத்தியங்களிடம்  ஒப்படைத்துவிடுதல்,  தொடக்கக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை பொதுத் தேர்வுகளை நடத்துதல், நுழைவுத் தேர்வுகளை நடத்துதல், வேலை வாய்ப்புக்கு தயாராதல் எனும் பெயரில் தொழில்சார் கல்வியின் அங்கமாய் பள்ளிக் கல்வியிலேயே கற்பித்தல் முறையை வடிவமைத்து பாரம்பரியமான அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் திடப்படுத்துதல் என்பனவாக இக்கல்விக் கொள்கை ஆவணம் அமைந்துள்ளது.

இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்துக் கட்டுகிறது. இதுவரையில் சமூக ரீதியாக – கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்று அரசியல் சட்டம் கூறி வந்ததற்கு மாறாக பல இடங்களில் சமூக ரீதியாக – பொருளாதார ரீதியாக என்று கூறி இட ஒதுக்கீட்டிற்கு மூடு விழா நடத்தியுள்ளது.

அத்துடன் அனைத்து வகையிலும் ஒற்றை இந்தியா என்பதை கட்டியமைக்கும்விதமாகவே பாடத்திட்டமும் அதனைக் கற்பிக்கும் முறையும் இருப்பதற்கு கல்வி தொடர்பாய் தேசியஇன/மாநில உரிமைகளை பறித்து மேலும் மையப்படுத்தல் அம்சம் இக்கொள்கையில் திட்டவட்டமாகத் தெரிகிறது.

மேலும் மோடி  ஆற்றிய  மேற்காண் உரையில் “…… இதுவரையிலான கல்வியானது  ‘எதை சிந்திப்பது’ என்பதைக் கற்பித்தது. இப்புதிய கல்விக் கொள்கையானது  ‘எவ்வாறு சிந்திப்பது’ என்பதைக் கற்பிக்கும்…..” என்று குறிப்பிட்டார். ஒருவகையில் இதுதான் புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கமும் நோக்கமும் ஆகும்.

மோடி கும்பலின் இந்துத்துவ அரசியலுக்கு மாணவர்களையும் எதிர்கால தலைமுறையினரையும் தயார்படுத்துவதே அதன் சாறம் ஆகும்.

மொத்தத்தில் ஆட்சியாளர்களின் நோக்கமான ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை உருவாக்குவது, மலிவாய் உழைப்பை விற்பதற்கான ஒரு பெரிய உழைப்பாளி கூட்டத்தை உற்பத்தி செய்வது, இந்துத்துவப் பாசிச சக்திகளின் அரசியலுக்கு தயார்படுத்துவது என்பதை இலக்காய் உடையதே இப்புதிய கல்விக் கொள்கை ஆவணமாகும்.

இவ்வாறு மக்களுக்கு விரோதமான மோடி கும்பலின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, அறிவியல்ரீதியான, ஜனநாயகரீதியான, அனைத்து மட்டங்களிலும் இலவசக் கட்டாயத் தாய்மொழிக் கல்வியை அரசே வழங்கவும், வணிகமயத்தை கைவிடப் போராடுவதும்,  கல்வியை மாநிலப் பட்டியலுக்கு  மாற்றக்கோருவதுடன் இந்தியா  ‘காட்ஸ்’ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுமாறு போராடுவதும் மட்டுமே மக்கள் முன் நிற்கும் ஒரே வழியாகும்.

 

தோழமையுடன்,

 

பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

சாமிநாதன், கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு

துரை.சிங்கவேல், பொதுமையர் பரப்புரை மன்றம்

பொழிலன், தமிழக மக்கள் முன்னணி

சித்தானந்தம், சி.பி.ஐ.(எம் – எல்)

தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

குணாளன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)

செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி

டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி

மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்

மாயக்கண்ணன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), ரெட் ஸ்டார்

மணி, பாட்டாளிவர்க்க சமரன் அணி

மருதுபாண்டியன், சோசலிச மையம்

அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி

தமிழரசன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்

பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தங்க. குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

பிரபாகரன், தமிழ்த்தேசப் பாதுகாப்பு இயக்கம்

பாஸ்கர், இந்திய கெதர் கம்யூனிஸ்ட் கட்சி

பாரி, தமிழ்த்தேச இறையாண்மை

தொடர்பு எண்: 70100 84440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW