150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே! தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே!

09 Aug 2020

நாடு முழுவதிலும் கொரோனாவைக் காரணம் காட்டி  புகழ்மிக்க, பாரம்பரியமான காய்கறிச் சந்தைகள், கடைவீதிகள், பஜார்கள் என்பவற்றை மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், நெடுஞ்சாலை துறையினர் இடமாற்றம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பெருவணிக நிறுவனங்களின்  நலனுக்காக சாலையோர வியாபாரிகளை, தள்ளுவண்டி கடைகளை, சிறு கடைகளை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் என்று  சொல்லி வியாபாரிகளின் பொருட்களை அள்ளி வீசுவது, அடித்து நொறுக்குவது என நாடுமுழுவதிலும் ஒரே மாதிரியாக காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு மக்கள் போராட்டத்தின் விளைவாக  ”நடைபாதை வணிகர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2014”. (THE STREET VENDORS (PROTECTION OF LIVELIHOOD AND REGULATION OF STREET VENDING ACT, 2014) என்றா சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதை முழுமையாக நடைமுறைபடுத்தும்படி வியாபாரச் சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பின்னும் இச்சட்டத்தை  வியாபாரிகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தாமல் பழையபடியே அப்புறப்படுத்துவது, அள்ளி வீசுவது என்பதை அரசு நிர்வாகம் தொடர்ந்துவருகின்றது.

முதற் கட்டமாக, திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் கொரோனாவைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக வியாபாரிகளை வெளியேற்றியுள்ளனர். இவர்களை அப்புறப்படுத்த அரசு சொல்லும் காரணமோ, ”மக்கள் அதிகமாக கூடுகிறார்கள் போக்குவரத்து நெரிசல், எனவே வியாபாரம் செய்ய தடைவிதிக்கிறோம்” என்பதாகும்.

இதை தொடர்ந்து,   திருச்சி காந்தி மார்க்கெட்டையும் மாற்ற மாநகராட்சி முயன்று வருகிறது . திருச்சி காந்தி மார்க்கெட் 150 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. ஆயிரக்கணக்கான வியாபாரிகளின், தொழிலாளிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் தேவைக்கு எளிதாக வந்து வாங்கிச்செல்லும் நோக்கில் நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது

கொரோனா, மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் என காரணம் சொல்லி வியாபாரிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி துடித்துக் கொண்டுள்ளது. இதே காரணத்தை சொல்லி அதே பகுதியிலிருக்கும் சாரதாஸ், மங்கள்&மங்கள், ரத்னா ஸ்டோர்ஸ்  போன்ற பெரு வணிக முதலாளிகளின் கடைகளை ஏன் காலி செய்ய சொல்லவில்லை? ஏன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த வில்லை?  அங்கெல்லாம் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லையா?  தினம் உழைத்தால்தான் சோறு என்னும் நிலையில் இருக்கும் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அள்ளிவீசும் மாநகராட்சி நிர்வாகம் சென்னை சில்க்ஸ், அஹமது பிரதர்ஸ் துணிக்கடைகளையோ, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் லலிதா, கல்யான் ஜூவல்லரி போன்றவற்றின் பொருட்களை அள்ளி வீசத் துணிவர்களா? கடந்த காலங்களில் ஏதேனும் நடந்தது உண்டா?

நாடு முழுவதும் , கொரோனா காரணமாக சந்தைகளை இடமாற்றம் செய்து , தற்காலிக சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக,  தொலைதூரம் சென்று   மக்கள் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. அதனால், வியாபாரம்   குறைந்துள்ளது. வாங்குவோரின்றி சந்தைகளில் பழங்கள், காய்கறிகள் அழுகிய நிலையில் அள்ளி வீசப்படுகிறது.  விற்பனை இல்லாததால்  விளை சரிந்தும் கொள்முதல் செய்ய ஆளின்றியும் விவசாயிகள் அறுவடை செய்யாமல் வயலோடு அழிக்கும் நிலையை நாடு அறியும்.

மறுபுறம் சந்தைகளின் இடமாற்றம் காரணமாக உள்ளூர் கடைகளில் பொருட்களின் தட்டுப்பாடும், அதிக விலைக் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு நுகர்வோரான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இடமாற்றத்தின் காரணமாக உற்பத்தியாளர்களான விவசாயிகள் வியாபாரிகள்,  நுகர்வோரான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும்  கொரோனா ஏற்படுத்தியுள்ள  பொருளாதார நெருக்கடி பல்வேறு தொழில் பிரிவினரையும் சாலையோர வியாபாரம், தள்ளுவண்டி வியாபாரத்தில் ஈடுபட வைத்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதிலும் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கடும் நெருக்கடியில் உள்ளனர் என்பதை அரசு கணக்கில் கொள்ள வேண்டுகிறோம்.

இத்தகைய நிலைமையில் தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க கூடாது, பாரம்பரியமிக்க சந்தைகளை மூட முயற்சிக்கக் கூடாது .

திருச்சி மாநகராட்சி நிர்வாகமே!

* காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்தாதே!

* பெருவணிக நிறுவனங்களுக்கு மக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் கட்டிடம் எழுப்பிக் கொள்ள உரிமம் கொடுக்காதே!

* அரசு உத்தரவுகளை மீறி செயல்படும் பெருநிறுவனங்களை சீல் வைத்து இழுத்துப் பூட்டு!

* ஒழுங்கு நடவடிக்கையில் அப்புறப்படுத்தப்படும் பெரு நிறுவனங்களின் இடங்களை ஒழுங்குப்படுத்தி சிறு வியாபாரிகளுக்கு கடை அமைத்துக் கொடு!

* காந்தி மார்க்கெட் மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள், தரைக்கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக ”நடைபாதை வணிகர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2014” அமல்படுத்து

* மாநகரில் போக்குவரத்தை சரி செய்ய அதிக காவலர்களை நியமித்திடு!

* ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் சூழலில் காவல்துறை வாகனத்தை நிறுத்தி சந்தைக்கு வரும் சரக்கு வாகனத்தையும் நுகர்வோர்  வாகனத்தையும் சோதனை என்ற பெயரில் பணம் பறிக்காதே!

 

-இரகு,  சோசலிச சாலையோர வியாபாரிகள் சங்கம், திருச்சி

95854-17086

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW