சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்

28 Jul 2020

கற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று, அது அறிவித்திருக்கும் ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு 2020’.

Environmental impact assessment என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக் கொள்கை வரைவொன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் இயற்கையை அழிக்காமல் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான முக்கியமான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டிலும் அப்படியாகத்தான் சொல்லப்பட்டு வந்தது. வேடிக்கை, வேதனை என்னவென்றால் இந்த வரைவு வருவது சுற்றுச்சூழல் ‘பாதுகாப்பு’ச் சட்டத்தின் கீழ்.

பொதுவாக சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்குப்பிறகே நிலக்கரி மற்றும் இதர கனிம சுரங்க வேலைகள் நீர், அனல் மற்றும் அணு மின்சாரத் திட்டங்கள், சாலைகள், பாலங்கள், அணைகள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் போன்ற அனைத்துத்திட்டங்களும்  மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்தச் சட்டத்தின் முக்கியமான பணிகள்

  1. முறையான ஆய்வும் அக்கறையும் செலுத்தப்படாமல் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதைத் தடுப்பது
  2. திட்டங்களுக்கான பல்வேறு மாற்றுக்களை ஆராய்ந்து அவற்றில் சிறந்ததைக் கண்டறிவது
  3. பாதிப்புகளை முன்னுணர்ந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகளை ஆராய்ந்து, அவற்றின் பின்னரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பதை அறிவது.

சரியான முறையில் செய்யப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்பது, ஒரு திட்டத்தை, அது சார்ந்த துறையினர், அது நிறைவேற்றப்படும் இடத்தில் வசிக்கும் மக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய அனைவரது பங்களிப்பில் உருவாவது. இதைச் சரியாகச் செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பாதிப்பு ஏற்படுமுன்னரே அறிந்து சரியானவற்றைச் செய்வதால், பெரிய அளவு பணமும் காலமும், மக்களது உயிரும் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்ற சட்ட ரீதியிலான நடைமுறையின் தொடக்கம் 1970-களில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. இந்தியாவில் 1976-77 ஆண்டுகளில் திட்டக்குழுவின் கோரிக்கையின்பேரில், அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களை சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியது. ஆனாலும் 1980களில் சுற்றுச்சூழல் துறை என்ற ஒன்று தனியாக ஏற்படுத்தப்படும் வரை சுற்றுச்சூழல் குறித்த பெரிய கவலை ஏதுமின்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கி, லட்சக்கணக்கான மக்களை இன்று வரை பாதித்துக் கொண்டிருக்கின்ற போபால் விஷவாயுக்கசிவு விபத்துக்குப் பின்னர் தான்  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986 என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்து environmental clearance எனப்படும் சுற்றுச்சூழல் ரீதியிலான ஏற்பைப்  பெறுவதென்பது சட்டமாக்கப்படாமல் வெறும் நிர்வாக நடைமுறையாகவே தொடர்ந்தது. 1994இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது,  ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை’ அறிமுகப்படுத்தி அதைப் புதிய திட்டங்களுக்கும் பழைய திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதலுக்கும் கட்டாயம் என்று சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் பின்னணியில் உலகம் முழுவதும் உணரப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடட்டு விளைவுகளும், அதன் காரணமாக எழுந்த விழிப்புணர்வும், பன்னாட்டு அழுத்தங்களும் இருந்தன. அதன் பின்னர் இன்று வரை அந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக 2006ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் சுரங்கங்கள்,  மின் நிலையங்கள், அணைகள், துறைமுகம், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுடன்  பல சிறிய அளவிலான திட்டங்களுக்கும் தொழில்களுக்கும் கூட சுற்றுச்சூழல் ஏற்புப் பெறுவது என்பதைக் கட்டாயமாக்கியது. இவ்வாறு ஆயிரக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்து, படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, சற்றேனும் இயற்கை வளங்களையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக உருப்பெற்று வந்த சட்ட திட்டங்கள்தாம் இப்போது பாரதிய ஜனதா அரசின் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன.

பொதுவாகவே சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களும்,  சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடைமுறைகளும் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வேறு வேறு வகையாக உள்ளன. வளர்ந்த நாடுகளில் சட்டங்கள் கடுமையாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அதிகமான காலம், ஆராய்ச்சி மற்றும் உழைப்பைச் செலுத்துவதாகவும், மக்கள், அரசு, தொழில்நுட்ப வல்லுனர்களின் உண்மையான முழுமையான பங்களிப்பைக் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை அனைத்துமே மேம்போக்கான தன்மையில் நடத்தப்படுகின்றன. சிறிய எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை கூட பாதிக்கப்படும் இடத்தில் உள்ள மக்களின் மொழியில் வழங்கப்படுவதில்லை. கடுமையான சட்டங்கள் மூலம் தங்கள் நாட்டு வளங்களை, சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் சட்டங்களைப் பலவீனமாக்கும் அரசுகளின் நடைமுறைகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஊக்குவிக்கின்றன. நாட்டு எல்லைகளைக் கடந்து, உலகம் முழுதும் கால்பதித்து, மக்கள் சொத்தான இயற்கை வளங்களை உறிஞ்சிக் கொழுக்கின்ற பெருநிறுவனங்களும் இதன் பின்னணியில் உள்ளன.

இப்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவின் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.

  1. எந்தவித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், கருத்துக்களைக் கேட்காமல், பாதிப்புகளை அறியாமல் அறிவிக்காமல், திட்டத்தை நிறைவேற்றியபிறகு, அதற்கு ஏற்ப அளிக்க இது வகைசெய்கிறது. இதன்படி எந்தத் திட்டமும் முறையான சுற்றுச்சூழல் ஏற்பு இல்லாமலே தங்கள் பணிகளைத் தொடங்கி நடத்த இயலும்.
  1. ஒரு பெரிய பட்டியல் அளவிலான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு கருதும் எல்லா திட்டங்களுக்கும் இந்த விளக்கு பொருந்தும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் அதானி, அம்பானி, அகர்வால்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
  1. அதுமட்டுமல்லாமல் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு குறிக்கின்ற திட்டங்களைப் பற்றிய எந்தத் தகவல்களும், அவற்றால் விளையும் சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட எந்த தகவல்களும் பொதுவெளியில் வைக்கப்பட மாட்டா.
  1. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களும், ‘பொதுமக்கள் கருத்து கேட்பு’ என்ற விதிமுறையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. எட்டுவழிச்சாலை நினைவுக்கு வர வேண்டும் இப்பொழுது.
  1. 15 இலட்சம் சதுர அடி, அதாவது ஏறக்குறைய 34 ஏக்கர் பரப்பளவுக்குக் குறைவான கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் இந்த சுற்றுச்சூழல் சீர்கேடு மதிப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கின்றன.
  1. இது மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சட்ட விதிகளை மீறும்போது, பொதுமக்கள் யாரும் புகாரளிக்கக்கூட அனுமதி கிடையாது. அதாவது வலித்தாலும் அழக்கூடாது. அரசின் பிரதிநிதிகள் அல்லது திட்டத்தை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே அதைச் செய்ய இயலும். ஆட்டின் நலனை ஓநாயின் கையில் அல்ல, வாயில் ஒப்படைத்தாற்போல.
  1. விலக்கு அளித்தது போக மீதி இருக்கும் சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடந்தாலும், அதற்கான கால அளவு 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் திட்டங்களை, அவற்றின் சாதக பாதகங்களை புரிந்து எதிர்வினை ஆற்றுவதற்கான காலத்தையும் திறனையும் குறைக்கிறது.
  1. சுரங்கம் மற்றும் நதிப் பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் ஏற்பு அல்லது அனுமதியின் கால அளவை அதிகரித்து இருக்கிறது.

இந்தப் புதிய விரைவானது சுற்றுச்சூழல் கொள்கைகளை பொருத்தமட்டில் மிகவும் பின்னோக்கிச் செல்வதற்கான ஒரு திட்டமிட்ட ஏற்பாடு. அதற்கு மக்களாகிய நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பயங்கரமானதாக இருக்கும்.

விசாகப்பட்டினத்தில் நடந்த வாயுக் கசிவு, அசாமில் நடந்த எரிவாயுக் கசிவு  பிரச்சனைகளை நம் கண்முன் நாளும் கண்டு, சுற்றுச்சூழல் பாதிப்பையும் அதை முன்னுணர்ந்து தடுப்பதற்கான அவசியத்தையும் அறிந்து செயல்பட வேண்டிய இந்தச் சமயத்தில் மத்திய அரசுக்கு இப்படி ஒரு பிற்போக்கான வரைவை அறிமுகப்படுத்தும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது!?

– த. வித்யாசாகரன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW