இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 2

25 Jul 2020

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1

1947 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மதமும் அரசும்

ஐரோப்பாவில் கல்வி பயின்ற நேருவிற்கு இயல்பாகவே ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற புரட்சிகர பொருள்முதல்வாத தத்துவத்தின் தாக்கம் இருந்தது. அதன் காரணமாக மத்திய கால கேடான மதக்கோட்பாடு, கருத்துமுதல்வாத சிந்தனைக்கு இரையாகாமல், சுதந்திர சிந்தனையாளராகவே நேரு இருந்தார்.

“நாம் ஒரு சுதந்திரமான மதச்சார்பற்ற நாட்டைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். இங்கே எல்லா மதங்களும் முழு உரிமையுடனும் சமமான மரியாதையுடனும் நடத்தப்படும். எல்லோருக்கும் சமமான உரிமையும் சமமான வாய்ப்புகளும் உண்டு” என்கிறார். இந்து மத அடிப்படைவாதிகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் நேருவின் சுதந்திர சிந்தனை செல்வாக்கு செலுத்தியது எனலாம்.  அதே நேரம் மதம் பற்றிய பிரச்சனையானது எப்போதுமே வெறும் தத்துவார்த்த பிரச்சனையாக அல்லாமல் நடைமுறைப் பிரச்சனையாகவே இருந்தது. மதத்தை நடைமுறையில் தீர்ப்பதென்பது, மதத்திற்கு அடிப்படைகளை தருகிற புற நிலைமைகளை புரட்சிகரமாக மாற்றி கட்டமைக்கவேண்டும். ஆனால், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தாலும் அதற்கு தலைமையளித்த காங்கிரசாலும் இதை செய்ய முடியவில்லை.

.இந்தியாவின் அரசியல் அதிகார சமூகத்தின் இந்த பிற்போக்குத்தன்மை அதன் தேச நிர்மாணத்திலும் தொடர்ந்தது.

 • இந்திய முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதால், நிலப்பிரபுத்துவத்தின் கேடான ஆணாதிக்க குடும்ப அமைப்பு, மத அதிகார அமைப்பு, பழைய மூடப் பழக்க வழக்கங்கள் யாவும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்படவில்லை. நவீன தேச நிர்மாணத்திற்கு அடிப்படையான கிராமப்புற நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்ளவில்லை. கிராமப்புற உபரி, மக்கள் தொகையை தொழில்மயத்திற்குள் ஈர்க்கவில்லை.
 • காங்கிரஸ் கட்சியில் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் போன்றோர்களின் வலதுசாரி சார்புடைய கொள்கைகளுக்கு முன்னாள் நேரு சிறுபான்மையாக இருந்தார். இந்திய அரசியல் சமூகம் தொடர்ந்து பிற்போக்கு சிந்தனையுடனேயே இருந்தது.
 • மதத்திலிருந்து அரசு விலக்கப்படவில்லை. மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம், மானியம் உள்ளிட்ட சலுகைகள் பறிக்கப்படவில்லை.கோயில்கள் மடங்கள் மற்றும் ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.
 • பார்ப்பனிய வைதீக மத நிறுவனத்தின் சாதிக் கட்டமைப்பை தகர்க்கிற வகையில் நிலச்சீர்திருத்தத்தையோ, மத மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கின்ற பிரச்சாரங்களையோ மேற்கொள்ளவில்லை.
 • இந்திய கிராமங்களில் சாதியக் கொடுமைகளும் மத வன்முறைகளும் தொடர்ந்தன. தேச நிர்மாணத்தில் தீர்க்கப்படாத நிலச்சீர்திருத்த பிரச்சனைகள் இந்திய கிராமங்களில் நக்சல்பாரி எழுச்சிகளாக வெடித்தன.

நவீன இந்தியாவின் தேச கட்டமைப்பில் ஏற்பட்ட மேற்கூறிய தோல்விகளும் பின்னடைவுகளும் சமுதாய முரண்பாடுகளை மென் மேலும் அதிகரிக்க வைத்தன.

தேசக் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்விகள், நாட்டை பொருளாதார சீர்குலைவிற்கு இட்டுச் சென்றன. நேருவின் மறைவிற்குப்பின் காங்கிரஸ் ஆட்சியை நடத்திய இந்திரா காந்தி, தனது  அரசைக் காப்பாற்ற அவசரநிலை பிரகடனத்தைக் கொண்டு வந்தார். இந்த அவசர நிலைக்கு எதிரான போராட்ட அலையில், இந்துத்துவ மத அடிப்படைவாத அமைப்புகள் தங்களை புதுப்பித்துக்கொள்ள உதவின.

இந்தியாவின் பொருளாதார சீரழிவுகளை தனது மத அடிப்படைவாத பிற்போக்கு பிரச்சாரத்திற்கும், போலி தேசியவாத பிரச்சாரத்திற்கும் பாஜக பயன்படுத்திக் கொண்டது. ஏகாதிபத்திய விசுவாசத்துடன் கூடிய ஆன்மீக வித்தையாலும் அதீத தேசியவாதத்தாலும் மக்களின் பின்தங்கிய அரசியல் உணர்வுநிலையை உசுப்பிவிட்டது.

நவீன நாடாளுமன்ற ஜனநாயகக் குடியரசு ஆட்சிக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்ட அரசியல் கட்சியாக ஜன சங்கம் எழுச்சி பெற்றது. 1977 தேர்தலில் வெற்றிபெற்று, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மத்திய ஜனதா அரசாங்கத்தின் காபினன்ட் அமைச்சரவையில்  இடம் பெற்றனர். 1989-92 இடையிலான கலவரங்கள், அத்வானியின் ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்புக்கு இட்டுச்சென்றது.

மதச்சார்பற்ற அரசு, சட்டத்தின் பெயரிலான ஆட்சி என வடிவத்தில் மட்டுமே நீடிக்கிற சுதந்திரக் குடியரசின், இந்துமத ஆதரவு பெரும்பான்மைவாத ஒடுக்குமுறையின் எதிர்விளைவாக இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகின. இந்துத்துவ அடிப்படைவாத அரசியலின் நெருக்கடியை இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்த்தாக்குதலால் முறியடிக்க முயற்சித்தன.

தாராளமய சகாப்தமும் பாசிசத்தின் மீள் எழுச்சியும்;

1980 களின் இறுதியில் கீனீசியக் கொள்கை அடிப்படையிலான மேற்குலக சேம நல அரசுகளும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய தேசிய அரசுகளும் (தொழில் உற்பத்தியில் அரசு முதலீடு செய்வது, சுங்கவரி விதிப்பு மூலமாக உள்நாட்டு சந்தையை பாதுகாப்பது, அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட திட்டமிட்ட அரசுத் தலையீடு) வீழ்ச்சியடைந்தன. இந்தியாவின் பொருளாதாரமும் சீர்குலைவின் எல்லைக்கு சென்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்கும் 80  களுக்கும் இடையிலான காலத்தில் “கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உலகமயக் கொள்கையானது” நெருக்கடிக்குப் பிறகு கட்டுப்படுத்தப்படாத உலகமயமாக்கலாக புதிய தாராளமய கட்டத்தில் நுழைந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் தனியார்மயம், அரசின் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கத் தொடங்கின.

இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் கீழ்வரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

 • புதிய சந்தை வாய்ப்புகள் ஏகபோகங்களைக் காப்பாற்றின, புதிய ஏகபோக சக்திகளும் உருவாகுவதற்கு அடித்தளமிட்டன
 • காலனிய காலத்திலும் தேச நிர்மாணக் காலக்கட்டத்திலும் முற்போக்கு பாத்திரத்தை வகித்திராத இந்திய முதலாளித்துவ சக்திகள், தாராளமய சகாப்தத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளுடனும் இந்திய அரசுடனும் ஒட்டுண்ணித்தனமான உறவைப் பராமரித்துக்கொண்டு தனது பழைய பாரம்பரியத்தையே தொடர்ந்தன. அதானி, அம்பானி போன்ற  உள்நாட்டு ஏகபோக சக்திகள் நாட்டின் முக்கிய துறைகளை கைப்பற்றி ஏகபோகமாக்கிக் கொண்டன.
 • அனைத்து பிராந்தியக் கட்சிகளும் உலகமயத்தை ஆதரித்தன. அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தின.
 • இந்திய ஆளும் கட்சிகள், கிராமப்புறத்தில் நிலச்சீர்திருத்த தோல்வியை பசுமைப் புரட்சியின் மூலமாக சாதிக்க நினைத்து, கிராமப்புற வேளாண் உற்பத்தி சக்திகளை முதலாளித்துவத்திற்கு அடிபணிய வைத்தது. விதை, உரம், விவசாயக் கருவிகள் என வேளாண் பொருளாதாரத்தில், முதலாளித்துவ மூலதனம் ஊடுருவியது.
 • புதிய நகர்ப்புற மூலதன முதலீடுகள், புதிய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை தோற்றுவித்தன.
 • இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் எனும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்தன.

மேற்கூறிய உலகமயப் போக்கில், இந்தியாவில் ஏற்பட்ட மேற்கூறிய மாற்றங்களை மூன்று வரலாற்றுக் கட்டங்களின் ஊடாக (காலனிய காலம்,தேச நிர்மாண காலம்/கீனிசிய சேம நல காலம் மற்றும் தாராளமய காலம்) பகுத்து சுட்டிக் காட்டுவதன் நோக்கமானது, இந்தியாவின் வர்க்க சமுதாயப் பிரிவுகளின் வரலாற்று வளர்ச்சி, வர்க்கக் குணாம்சம் ஆகியவற்றைக் குறித்து விளங்கிக் கொள்ள அவசியமாகிறது.

அதேநேரத்தில், இந்திய கிராமப்புற,  அரை-நகர்ப்புறங்களில் நீடிக்கிற தேங்கிய வளர்ச்சிப் போக்கு,கல்வியறிவற்ற, அரசியல் விழிப்புணர்வற்ற மக்கள் திரளினரின் (குறிப்பாக இடைநிலை சாதி மக்களை) உணர்வுநிலையை வகுப்புவாத வன்முறை நடவடிக்கைகளுக்கான வாய்ப்பாக ஆர்.எஸ்.எஸ் மாற்றிக்கொண்டது. பழைய நிலப்பிரபுத்துவ பிற்போக்கு பண்புகளை இன்னும் நீடிக்க வைக்கிற புறநிலை சமூக உற்பத்தி உறவுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூக அடித்தளத்திற்கு ஆதாரமாக உள்ளன. போலவே நகர்ப்புறத்தில் உருவான புதிய நடுத்தர வர்க்கத்தினரின் பெரும் பிரிவினர் சாதி மத பிற்போக்கு குறித்த பழமைவாத கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர்.

கிராமங்களில் நிலைமை இன்னும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. எந்தவொரு சமூகப் பொருளாதார பாதுகாப்பும் அற்ற சூழலில், ஆணாதிக்க குடும்ப அமைப்பும் சாதியும் மேலும் இறுக்கமடைந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு சாதிய உறவும் ஆணாதிக்கக் குடும்ப ரத்த உறவுகளும் ஆறுதலையும் அரவணைப்பையும் வழங்கியது. குடும்ப வன்முறையும் சாதியும் மதமும் பின்னிப்பிணைந்த தீமைகளாக உழைக்கும் மக்களை பற்றி பிடித்துக் கொண்டது. சாதி சங்கங்கள் பெருக்கமடைந்தன. பின்னர் இவை, சாதிக் கட்சிகளாக தன்னை புதுப்பித்துக் கொண்டு உழைக்கும் மக்களையே எதிரெதிராக நிறுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்திய கிராமங்களின் அடிப்படையாக திகழ்கின்ற சாதியை பாதுகாக்க முயற்சித்துவருகிறது.. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் பட்டியலின சாதிப் பிரிவினரையும்கூட தனக்குள் ஈர்த்துக்கொண்டது.

இந்தியாவில் எழுபது ஆண்டுகளாக நிலவிவருகிற தேங்கிய உற்பத்திசக்தியின்  வளர்ச்சிப் போக்குகள் மதத்தை தாங்கிப் பிடிக்கின்ற சமுதாய வேர்களாக உள்ளன.போலவே கிராம சமூகத்தின் தேங்கிய வளர்ச்சிப்போக்கில் சாதிய கட்டுமானமும் சிதையாமல் மத ஆதிக்கத்தை தாங்கிப் பிடிக்கின்ற வேர்களாக உள்ளன.

அதேநேரத்தில், வளர்ந்த மேலை நாடுகளில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பாக முதலாளித்துவ புரட்சியில் முறியடிக்கப்பட்ட மதப் பிற்போக்குத்தனமானது, முதலாளித்துவ சகாப்தத்தின் அழுகி தேங்கிய காலகட்டத்தில் மீண்டும் முன்னுக்கு வருகிறது. மேலை நாடுகளில் தற்போதைய முதலாளித்துவ சகாப்த வீழ்ச்சி காலகட்டத்தில் தனது கீழ்நிலை வர்க்கங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் தனக்கெதிரான வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பவும்  மதத்தை ஓர் அரசாங்க பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தற்போது மதவாத ஆட்சி நடப்பதால் தேசிய ஏகபோக சக்திகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சாதகமான சூழ்நிலைகளையே உருவாக்கிக் கொடுக்கின்றன. ஆகவே தலித்கள் ,சிறுபான்மையினர் மீதான ஆளும்கட்சியின் தாக்குதலை இந்திய முதலாளித்துவ வர்க்கம் மௌனமாக ஆமோதிக்கின்றன.

அதனால்தான் மோடியும் அமித்ஷாவும் இந்தியா குறித்து பெரிய தொலைநோக்குடன் சிந்திக்கின்றனர் என ரத்தன் டாட்டாவும் மோடி ஒரு சிறந்த தலைவர் என அம்பானியும் புகழ்பாடுகின்றனர்.

உழைக்கும் மக்களும் மதமும்

மேற்கூறிய விளக்கங்கள் யாவுமே, மத அடிப்படைவாத அமைப்புகளும் ஆளும் வர்க்கங்களும் மதத்தை எவ்வாறு கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை,  வரலாற்றின் அடிப்படையில் சுருக்கமாக பார்த்தோம். ஆனால் மதத்தின் உயிர்ப்பான இயக்கத்திற்கு உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் மற்றொரு விளக்கமும் அவசியப்படுகிறது. அப்போது மட்டுமே மதத்தை முற்றிலும் ஒழிப்பது நடைமுறை சாத்தியமாகும்..

மதத்தை ஒழிப்பது என்பதன் பொருள், மதத்திலிருந்து மனிதன் விடுதலையடைவதாகும். மதத்தில் இருந்து மனிதன் எப்போது விடுதலையடைய முடியும்? மதம் பற்றிய மாயைகளை விட்டொழிக்கின்றபோது, மதத்தில் இருந்து மனிதன் விடுதலையடைய முடியும். மதம் மீதான மாயைகளிலிருந்து விடுபட மதத்தின் தோற்றமும், மதத்தை மனிதன் இறுகப் பற்றிக்கொள்வதற்கான காரணத்தையும் அறியவேண்டும். அதாவது மதத்தின் சமூகத் தன்மையை அறியவேண்டும்.

“மனிதனே மதத்தை உண்டாக்குகிறான்; மதம் மனிதனை உண்டாக்குவதில்லை. இதனையே வேறு வார்த்தைகளில் சொன்னால், தன்னைத்தானே ஏற்கனவே இழந்துவிட்ட மனிதனின் சுயவுணர்ச்சியும் சுய மனோவுணர்வும்தான் மதம் ஆகும்.”

“மதத்தின் துயரம் என்பது அதே சமயத்தில் உண்மையான துயரத்தின் வெளியீடாகவும், உண்மையான துயரத்திற்கெதிரான ஆட்சேபனையாகவும் இருக்கிறது. மதம் என்பது எப்படி உணர்ச்சியற்ற நிலைமையின் உணர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோன்று இதயமற்ற உலகத்தின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு வாய்த்த அபினி”

மதம் ஓர் ஆகப்பெரும் கேடான நோய் என எடுத்த எடுப்பில் மதத்தை கடுமையாக விமர்சிக்காமல், மக்களுக்கு வாய்த்த அபின் மதம் என்றும் இதயமற்ற உலகின் இதயம் மதம் என்ற மேற்கூறிய மார்க்சின் விமர்சனமானது அதன் முதல் தோற்றத்தில் மதத்தை ஆமோதிப்பது போல காட்டலாம்.

சமுதாய உறவிலிருந்து மதத்தை அகற்றிவிட்டு பார்த்தால், மதத்திற்கு எந்த பொருளும் இல்லை. மதம் ஒரு வெற்று அகநிலைவாதம் எனவும், இந்த மூட மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்ற முடிவுக்கு உடனடியாக ஒருவர் வந்துவிடக் கூடும். அவ்வாறு விளங்கிக் கொண்டால் அருவமான மதத்திற்கு எதிரான அருவமான முடிவில்லாத நாத்திக பிரச்சாரமாக மதத்திற்கு எதிரான போராட்டம் அமைந்துவிடும்..

மதம் பற்றிய மார்க்சின் மேற்கூறிய விமர்சனமானது, மதத்தை சமுதாயத் தன்மையிலிருந்து விளக்குகிறது. மதத்தின் சமுதாயத் தன்மையை/சமூக வேர்களை விளக்குகிறது. மனிதனின் மெய்யான வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியுள்ள மதமானது, மனிதனின் சொந்த வாழ்க்கையில் அவனது செயலற்ற நிலைக்கு பற்றுகோளாகவும் உறைவிடமாகவும் ஆறுதலாகவும் மாறுகிறது.

ரோம சாம்ராஜியத்தில் ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாக கிறித்துவம் எழுந்தது. காலனிக்கு பிந்தைய இந்தியாவில் நுழைந்த கிறித்தவ நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட ஜீவனாக வாழ்ந்த தீண்டப்படாதவர்களின் பெருமூச்சாக எழுந்தது.

பழைய நிலப்பிரபுத்துவ காலத்தின் பண்ணையடிமை முறை, தீண்டாமை, குடிநீர் மறுப்பு, கல்வி மறுப்பு உள்ளிட்ட கொடூரமான பல இன்னல்களுக்கு உழைக்கும் மக்கள் உள்ளானார்கள். தற்போதைய நவீன உலகமய காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், குறைவான கூலி, வறுமை, சுகாதாரக் கேடு  என உழைக்கும் மக்கள் சமுதாய ரீதியிலான இன்னல்களோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த இன்னல்களுக்குக் காரணமாக உள்ள நிலவுடமை/முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாக போராட செயலற்ற நிலையில், அன்றாட வாழ்வின் இம்மக்கள் எதிர்கொள்கிற பயங்கரமான துன்ப துயரங்களானது, மதத்தின்மீது மக்களை சார்ந்திருக்கிற புற நிலைமையை உருவாக்குகிறது.

இப்போது சுரண்டப்படும் வர்க்கம் சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் தனது ஏலாத் தன்மையின் காரணத்தால் தவிர்க்க முடியாமல் வாழ்வில் சுகமில்லை இறப்பிற்கு பிறகு மறு உலகிலாவது சுகம் கிடைக்குமா என்னும் ஏக்கத்தில் மூட நம்பிக்கை தோன்றுவதற்கு இடமளித்து விடுகிறார்கள். உழைத்து விட்டுத் தங்கள் வாழ்வெல்லாம் இல்லாமையினால் அவதியுறும் மக்களுக்கு மதம் போதிப்பது, “பூமியில் உள்ள வரையில் அடக்கமாக இருந்து பொறுமையாக வாழ்ந்தவர்கள், சொர்க்கம் அடைந்து இதில் மோட்ச சுகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இருக்க வேண்டும் என்பதாகும். மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்களுக்கு மதம் கொடுக்கும் போதனை, “பூமியில் வாழும்போது தான தர்மங்களை செய்யவேண்டும். அதன் மூலம் மதம் அவர்கள் சுரண்டல்காரர்களாக எப்போதும் இருப்பதை நியாயப்படுத்துவதற்கு மிகவும் மலிவான ஒரு வழியை காட்டுகிறது. ”(மதம் பற்றி லெனின் தொகுப்பு நூலில் இருந்து)

மதம் குறித்த லெனினின் மேற்கூறிய மேற்கோளானது, மதத்தின் மீது மக்களுக்கு தவிர்க்க இயலாதபடி நம்பிக்கை தோன்றுவதற்கான புறக் காரணிகளை எளிமையாக விளக்குகிறது. போலவே மதமானது அதனது வரலாற்றுக் கட்டத்தில் ஆளும் வர்க்கத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து எப்படி காக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

மதமானது, மண்ணுலக இழி நிலைக்கு, சுரண்டுகின்ற நிலச்சுவாந்தாரோ, முதலாளித்துவ சக்திகளோ காரணம் அல்ல, மாறாக நீயேதான் அதற்கு காரணம் என்கிறது. ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாட்டை விண்ணுலக பிரச்சனையாக்கி கதி மோட்சத்திற்கு வழி காட்டுகிறது. இது ஆளும் வர்க்கத்தையும் அதன் அரசையும் உழைக்கும் மக்களிடம் இருந்து காக்கிற அரணாகின்றது.

இந்து வைதீக மதமாகட்டும் அல்லது கிறித்துவ மதமாகட்டும் மத நிறுவனங்களும் அரசும் தங்களது சந்தர்ப்பவாதத்திற்கு மதத்தை உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மாற்று மதத்தினர்தான் நமது வாழ்க்கையின்  துன்பத்திற்குக் காரணம் என்கிற மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரத்திற்கு பலியாகின்றனர்.

ஆக, மதத்திற்கு எதிரான போராட்டமானது வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் மக்களை விழிப்படையச் செய்வதை முன்நிபந்தனையாக கொண்டுள்ளது. மதக் கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம் இல்லாமையும் கல்லாமையுமாகும். ஆகவே இல்லாமையை நீக்குகின்ற சமுதாய புற நிலைமைகளை உருவாக்க வேண்டும் அதனுடன் அறிவியல் விழிப்புணர்வு  பிரச்சாரத்தை இணைக்கவேண்டும். உழைக்கும் மக்களின் இல்லாமைக்கு அடிப்படைக் காரணமாக உள் புறக்காரணிகள் களையப்பட வேண்டும். தற்போதைய உலகமய காலகட்டத்தில், முதலாளித்துவ உற்பத்தி முறையும் அது உருவாக்குகின்ற கேடான விளைவுகளும் உழைக்கும் மக்களின் இல்லாமைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளன. இந்த முரண்பாடுகள் சோஷலிச புரட்சியின் மூலமாக தீர்க்கப்படுகிறபோது இல்லாமையும் குறையும்.

ஒடுக்கப்பட்ட ஜீவனின் ஏக்கப் பெருமூச்சிற்கு அப்போது தேவையிருக்காது!.

 

-அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW