இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1

24 Jul 2020

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாம் மதவாதத்திற்கு  எதிரான ஜனநாயகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பெரும்பான்மை மதத்தை பின்பற்றுவோர்களது பிரதிநிதியாக அடையாளப்படுத்திக்கொண்டு உருவான மத நிறுவனங்கள், அமைப்புக்கள் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்துப் பரிட்சத் உள்ளிட்ட) மற்றும் கட்சியால் (பாஜக) சிறுபான்மை மக்கள் நாள்தோறும் தாக்கப்பட்டு வருகிறார்கள். “கோலிமாரோ” (சுட்டுக்கொல்) எனும் முழக்கமும் தேசத்துரோக பட்டமும் சுதந்திரம், சமத்துவம் எனும் முழக்கத்தைப் பின்னுக்கு தள்ளியுள்ளன. மத வேற்றுமையின் அடிப்படையிலே அவர்கள் Vs  நாம் என சமூகத்தை செங்குத்தாக பிளக்கிறார்கள். ஆதலால்தான் மத அடிப்படைவாத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான செயல்பாட்டாளர்களான தபோல்கர், கெளரி லங்கேஷ் போன்றோர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தமிழகத்திலே நாத்திக பிரச்சாரம் செய்வோர்மீது போலீஸ் அடக்குமுறையை ஏவி அவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கிறார்கள். கருத்து சுதந்திரம் என்றால், கிலோ என்ன விலை? என கேட்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதுவரையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பசுப்பாதுகாப்பு குண்டர்களால் நடத்தப்பட்டு வந்த வன்முறைகள் தற்போது பிரம்மாண்ட வன்முறையாக (பெரும் ஆபத்தானதாக) பரிணமிக்கத் தொடங்கியுள்ளது. இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளால் இஸ்லாமியர்கள்மீது தொடுக்கப்பட்ட தில்லி வன்முறையானது நாட்டின் எதிர்காலத்தை மத்திய கால கொடுங்கோன்மைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. டில்லி வன்முறைக்குக் காரணமான ஆளும் பாஜக கட்சியினர்மீது இதுவரை வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. இன, மத ஆதிக்கவாதிகளின் அமைப்பாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசு இயந்திரத்தை கைப்பற்றுகிறபோது, இந்த வன்முறை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சட்டப்பூர்வ வன்முறையாக வடிவமெடுத்துள்ளது).

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “மதச்சார்பின்மை” என்ற சொல்லை நீக்குவதற்கான தேசிய அளவிலான விவாதம் தேவை என பாஜக வின் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் நாட்டின் சிறுபான்மை மக்களின் குடியுரிமையை சட்டப்பூர்வமாக பெரும்பான்மை பலத்தை வைத்து பறிப்பதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக கொரோனா நோய்த் தொற்று பேரிடரால், இந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், பாஜகவை பொறுத்தவரை காலனியாதிக்க ஆட்சியாளர்களும்  முகலாயர்களும் இந்து நாடாக இருந்த இந்தியாவை கெடுத்துவிட்டார்கள். இந்தியா இழந்த பாரம்பரியத்தை மீட்கவேண்டும். அதற்கு நாட்டை இந்துநாடாக  மாற்ற வேண்டும் என்கிறது. ஆர்.எஸ்.எஸ்சின் இந்த ஆரிய இந்து ராஷ்ட்ர புத்துயிர்ப்பு முழக்கத்தை சமூக ஜனநாயக இயக்கங்களும் சிவில் சமூகமும் ஒரே அடியில் அடித்து வீழ்த்த முடியாததற்குக் காரணம் என்ன?

மதச் சார்பின்மை என்பது, அரசிடம் இருந்து மதத்தை விலக்குவதுதான், எந்தவொரு மதத்திற்கும் ஜனநாயக குடியரசு ஆட்சியில் சலுகைகள் கிடையாது. நாட்டின் அனைத்து மக்களும் சாதி, மத, இன, மொழி வேறுபாடில்லாமல் குடிமக்களாக நடத்தப்படவேண்டும் போன்ற முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களை, முதலாளித்துவ ஜனநாயகம் தோற்றம் பெற்று இருநூறு ஆண்டுகளுக்கு பின்பும் ஏன் பேசிக்கொண்டிருக்கின்றோம்?

ஆதிக்க உணர்வு, வன்முறை, மதவெறி, ஒடுக்குமுறை போன்ற கேடான பண்புகளை ஆர்.எஸ்.எஸ்-பாஜக எவ்வாறு மக்களிடம் நியாயப்படுத்த முடிகிறது? எவ்வாறு சமூகத்தின் ஒரு பிரிவினரை தனது அடித்தளமாக மாற்ற முடிந்தது?

இந்தியாவில் அரசுக்கும் மதத்திற்குமான உறவையும் சமுதாயத்திற்கும் மதத்திற்குமான உறவையும், இந்தியாவின் எழுபதாண்டுகால வரலாற்றுப் போக்கில் வைத்து ஆய்வு செய்யாதவரை இக்கேள்விகள் புரியாத புதிராகவே இருக்கும்.

முடியாட்சியில் அரசும் மதமும்

முடியாட்சி சகாப்தத்தில் மதமும் மத குருமார்களும், நிலப்பிரபுக்களும் சமூகத்தின் அரசியல் பொருளாதார இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். மன்னர் தலைமையிலான ஆளும் வர்க்கம், சமூகத்தை மேலாண்மை செய்தது. முடியாட்சியில் “மதம்” சர்வ அதிகாரம் பெற்ற நிறுவனமாக திகழ்ந்தது. மௌரியப் பேரரசு காலத்தில் பௌத்தமும் சேர,சோழ,பாண்டியர் காலத்தில் வைதீகமும் (இந்துமதம்), பிற்காலத்தின் இஸ்லாமும் அரச மதமாக செல்வாக்கு செலுத்தியது. இந்த மத்தியக் காலத்தில், மதமே எல்லாமுமாக இருந்தது.

மத்திய காலம், தத்துவம், அரசியல், சட்டவியல் ஆகிய பிற சித்தாந்த வடிவங்கள் அனைத்தும் இறையியலுடன் ஒட்டவைத்தது. அவற்றை இறையியலின் உட்பிரிவுகளாக ஆக்கிவிட்டது. இதன்மூலம், ஒவ்வொரு சமுதாய மற்றும் அரசியல் இயக்கத்தையும் இறையியல் வடிவம் எடுத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது. மக்கள் திரளின் உணர்வுப் பசிக்கு மதத் தீனி மட்டுமே போடப்பட்டது. மற்றவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.” (லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்)

நாடாளுமன்ற குடியரசு ஆட்சியில் அரசும் மதமும்

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயமானது புதிய வரலாற்று சகாப்தத்தை தோற்றுவித்தது. ஐரோப்பிய நாடுகளில் (18 ஆம் நூற்றாண்டில்) பழைய முடியாட்சிக்கு எதிராக எழுந்த முதலாளித்துவ புரட்சியானது, மன்னராட்சியையும் அது காப்பாற்றிய மதம் போன்ற நிலப்பிரபுத்துவ பாரம்பரியங்களை ஒழித்தது.

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது. எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற பணப் பட்டுவாடாதவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது” (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை-கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

மேற்கூறியவாறு, நிலப்பிரபுத்துவத்தின் பிற்போக்குகளை ஈவிரக்கமின்றி அழித்த பாரம்பரியம் பிரான்சு மற்றும் ஜெர்மனி நாட்டு முதலாளித்துவ வர்க்கத்திற்கு உண்டு. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற முதலாளித்துவ புரட்சியானது (அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அர்த்தத்தில்) ஐரோப்பாவில் நடைபெற்றதுபோல அல்லாமல் வேறு புற நிலைமைகளில் நடந்தது.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கு பாரம்பரியத்தை இந்திய முதலாளித்துவ வர்க்கம் தொடரவே இல்லை. முன்னாள் முதலாளித்துவ நாடுகள், ஏகாதிபத்தியமாக வளர்ந்ததால், புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதும் அதற்கொரு முக்கிய காரணமாகியது எனலாம்.

இந்தியாவில் காலனியாதிக்க காலகட்டத்தில் மதமும் அரசும்

முதலாவதாக, நாம் மேற்கூறியவாறு, இந்தியாவில் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போதும், 1947 அரசியல் விடுதலையின்போதும், பழைய மத்திய கால நிலப்பிரபுத்துவத்தின் தொடர்ச்சியையும் அதன் பாரம்பரியத்தையும் (மதம்,சாதி,தந்தை வழி உறவு உள்ளிட்ட) எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் போராடவே இல்லை. ஐரோப்பாவில் நடைபெற்றதுபோல இங்கே எதுவுமே நடக்கவில்லை.

இரண்டாவது, அப்போதைய முதலாளித்துவ வர்க்கத்திற்கு தலைமையளித்துவந்த  காங்கிரஸ் கட்சியும் மதத்தை பற்றிய பழைய மத்திய கால கருத்துக்களையே ஆதர்சமாக கொண்டிருந்தது. திலகர், மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதிராய், ரானடே போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இந்து மத செல்வாக்கில் இருந்தார்கள். பின்னாளில் மாளவியாவும் லாலா லஜபதிராயும் ‘இந்து மகா சபை’ எனும் மத அடிப்படைவாத அமைப்பை நிறுவினார்கள். இவர்கள் இந்திய தேசியத்தை இந்து மதத்தின் புத்துயிர்ப்பு யுகமாக பிரச்சாரம் செய்தார்கள். ஆரிய வேதங்கள்,வட மொழி வழிபாடு போன்ற கருத்தியல்களால் இந்திய தேசியம் இந்து தேசியமாக இந்துத்துவ தேசியமாக சிதைக்கப்பட்டது.

இந்திய தேசியத்தை இந்து தேசியமாக கட்டமைக்கின்ற முயற்சியை 1880 இல் தமிழ்நாட்டில் மெட்ராஸ் மகாஜன சபா தொடங்கிவைத்தது. மக்களை மொழி நில எல்லைகளைக் கடந்து இந்து தேசியத்திற்குள் ஈர்ப்பதற்கு பிரம்மஞான சபை நிறுவப்பட்டது. ”மலைமீது கட்டப்பட்ட கோட்டைபோல இந்திய நாகரிகம் என்பது வேதங்களின்மீதும் புனித நூல்களின்மீதும் கால் கொண்டு நிற்கின்றது” என பிரம்மஞானசபை நிறுவனர்களுள் ஒருவரான ஆல்காட் பகிரங்கமாக பிரசங்கம் நடத்துகிறார். இதேபோன்ற பிரச்சாரத்தை அன்னிபெசன்ட் அம்மையாரும் மேற்கொண்டார். இவ்வாறு, நவீன தேசியத்தின் மூன்று முழக்கங்களான  சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பது ஆரியம் இந்து வடமொழி என வியாக்கியானப்படுத்தப்பட்டது. இதனாலேயே காங்கிரஸ் கட்சியை பார்ப்பன காங்கிரஸ் கட்சி என 1908  ஆம் ஆன்டில், தமிழன் பத்திரிகையில் அயோத்திதாச பண்டிதர் கடுமையாக விமர்சிக்கிறார்.

இப்படியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் காந்தி வந்து சேர்ந்தார். ஆனால் காந்தியோ, ”டால்ஸ்டாயிசம்” எனும் வரலாற்று பாவக் குட்டையில் விழுந்தார். ஒருபக்கம் காலனிய எதிர்ப்பு போராட்டத்தை தீரமாக வழி நடத்தினார், காலனியக் கொடுமைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினார், மக்களால் மகாத்மா எனப் போற்றி புகழப்பட்டார். அதேநேரம் உலகின் அருவெறுப்புகளில் ஒன்றான மதத்தை ஆராதித்தார். சதுர்வர்ணத்தை ஆதரித்தார். மத சகிப்புத்தன்மையே  மதச்சார்பின்மையாக வியாக்கியானம் செய்த காந்தி, நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தின் ஆயிரமாயிரம் ஆண்டு கேடு மதம் என்றோ, மதத்தின் பேரால் மக்கள் மீது நடத்தப்படும் சுரண்டல் குறித்தோ, மதத்தின் சமுதாய வேர்கள் குறித்தோ, மதத்தை ஒழிப்பதன் அவசியம் குறித்தெல்லாம் கருத்தோட்டங்கள் கொள்ளவில்லை. நில உடமையின் ஒடுக்குமுறையும் அது மக்களிடம் உருவாக்கியுள்ள வெறுப்பையும் துயரையும் ஒழித்து சுதந்திரமான சமத்துவமான அரசை படைப்பது குறித்தும் கண்ணோட்டம் ஏதுமில்லை.

அதனால்தான், காலனியத்திற்கு எதிரான போராட்டமானது (அதற்கும் பின்பும்தான்) மத்திய கால கேடான மதத்திற்கு எதிரான போராட்டத்துடனோ, மத,சாதி  இருப்பிற்கான புற நிலைமைகளை (நிலச் சீர்திருத்தம்,பிரச்சாரம்,அரசிடம் இருந்து மதத்தை விலக்குவது உள்ளிட்ட) ஒழிக்கிற திட்டத்தோடு இணைக்கப்படவில்லை.

மதம், சாதி அடிப்படைவாதம் அதன் விளைபொருளான தீண்டாமை குறித்த காங்கிரஸ் தலைவர்களின் பிற்போக்கான கருத்தை பல இடங்களில் கடுமையாக விமர்சித்து வந்த அம்பேத்கர் ‘காங்கிரசை ஆதரிப்பது என்பது மற்றவர்களை அடிமைப்படுத்த கொடுங்கோன்மைக்கு சுதந்திரமளிப்பதையே குறிக்கும்’  என்றும் “சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறதா? என்ற கேள்வி யாருடைய சுதந்திரத்திற்காக, காங்கிரஸ் போராடி வருகிறது என்னும் கேள்வியுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகிறது’ என்றும் காங்கிரசை சாடினார்.

இந்த காலகட்டத்தில் 1925 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு நிறுவப்பட்டது.இந்த அமைப்பை நிறுவியவர்களான மூஞ்சே, ஹெட்கேவர், பரஞ்சிபே, தால்கர், பாபராவ் சாவர்க்கர் (சாவர்க்கரின் அண்ணன்) ஆகிய ஐவரும் சித்பவன பார்ப்பனர்கள். இந்துமகா சபை, இந்து ராஷ்ட்ர தளம், ஆர்.எஸ்.எஸ் ஆகிய இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்குமான சித்தாந்த கருத்துநிலையை சாவர்க்கர் வழங்கினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு முன்பாகவே சுமார் அரை டஜன் இந்துமத அடிப்படைவாத அமைப்புகள் தோன்றியதையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களே அதை நிறுவியதையும் நாம் இங்கு மறந்துவிடக் கூடாது.

காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற  அமைப்பின் எழுச்சியும்,இந்தியாவின் சுதந்திர சிந்தனையாளர்களின் செல்வாக்கின்மையும் நவீன குடியரசு உருவாக்கத்தில் மதச் சார்பின்மையை பொருளற்றதாக்கிவிட்டது. இப்போக்கு பல கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த சிக்கலான வரலாற்று நிலைமையை கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

  • நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தைப் போல இந்திய முதலாளித்துவ வர்க்கம் நடத்தவே இல்லை.
  • காங்கிரஸ் கட்சியே முதலாளித்துவ பிரதிநிதியாகவும் அதே சமயம் நிலப்பிரபுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. பல பெரிய நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்தார்கள்.
  • தற்போதைய பாஜகவின் தாய் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகா சபையை நிறுவிய மாளவியா போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நவீன இந்தியாவை மதப் பிற்போக்குக்கு இழுத்துச் செல்வதில் தீவிரமுடன் செயலாற்றினார்கள்.
  • இந்தியை மாகாண மொழியாக்கியது, பசுவதையை எதிர்த்து சட்டங்கள் இயற்றியது போன்ற காங்கிரசின் செயல்பாடுகள் முஸ்லீம் லீக் அமைப்பின் தலைவர் ஜின்னாவை வேறு முடிவுகளுக்கு இட்டுச் சென்றது. அல்லது ஜின்னா காங்கிரசின் செயல்பாட்டை பயன்படுத்திக் கொண்டார். லாகூர் மாநாட்டில். பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கை எழுந்தது.

மேற்கூறிய இந்திய முதலாளித்துவ அரசியல் சமூகத்தின் (Political Society) பிற்போக்கு குணாம்சமானது நாட்டை மத ரீதியாக துண்டாடுவதற்கான எதிர் விளைவை ஏற்படுத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் மதரீதியாக பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையின் கோர விளைவை இரு நாடுகளின் சிவில் சமூகத்தின்மீது சுமத்தப்பட்டது. இப்பிரிவினையால் லட்சக்கணக்கான மக்கள் உடமையும் உயிரையும் இழந்தார்கள். தங்களது சொந்த வேர்களை இழந்தார்கள். காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஓரணியில் போராடிய மக்களை, காலனியத்திலிருந்து பெறப்பட்ட அரசியல் விடுதலை, இரு கூறாகப் பிரித்தது. உலகின் மிக மோசமான தேசப் பிரிவினையும் வகுப்புவாத படுகொலைகளையும் இந்தியா எதிர்கொண்டிருந்த நேரத்தில், இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளால் ஒப்பீட்டளவில் சிறுபான்மை மத ஆதாரவாளராக இருந்த காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடரும் …

-அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW