பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?

23 Jul 2020

கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் இழிவுப்படுத்திவிட்டார்கள் என்ற பெயரில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலில் இருந்த 500 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன. கறுப்பர் கூட்டத்தினரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பாசிச பாசகவின் அடிமைகள் கூச்சலிடுகின்றனர். இதில் வியப்பேதும் இல்லை.

கறுப்பர் கூட்டத்தாலும் அவர்களைப் போன்ற பெரியாரிய உணர்வாளர்களாலும் பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தின் ஈட்டிமுனையாக கருதப்படும் திமுகவும் அதன் தேர்தல் அரசியல் முகாமும்கூட கறுப்பர் கூட்டத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கண்டிக்கத் தவறியுள்ளன.

இயக்கத்திற்கு நேரிடையாக தொடர்பு இல்லாத இளைஞர்கள் அதேமொழியில் பதிலடி கொடுத்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல, அவற்றை ஊக்கப்படுத்துவதும் நம் வேலையல்ல, அதேநேரத்தில் புராணங்களில் உள்ளதை உள்ளபடி வெளியிடுவது எவ்வகையில் குற்றம் என்பது மிக முக்கியமான கேள்வி” என்று திராவிடர் கழகத்தின்  தலைவர் ஆசிரியர் வீரமணி சொல்லியுள்ளார். ஆக, பொறுப்பேற்கவோ அல்லது பொறுப்புள்ள தலைவராக வழிகாட்டவோ, திருத்தவோ முன்வரவில்லை என்பதைவிட கைது செய்வதைக் கண்டிக்காமல் இருப்பது திகவுக்கு அழகல்ல.

திமுகவின் ஆர்.எஸ். பாரதி ஊடக சந்திப்பொன்றின்மூலம் கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டித்ததுடன்விடாமல் ‘பிள்ளையார் சிலையை உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்று முன்வைத்த நடுப்பாதையை மகாமகக் குளத்தில் கரைத்துவிட்டு கொள்கைகளைத் தலைமுழுகி நிர்வாணக் காட்சி தந்தார். பகுத்தறிவுப் பரப்புரை, கடவுள் மறுப்பு, கருத்துரிமை என்று எந்த சொற்களையும் உதிர்க்காமல், கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துவிட்டு நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல, எதிரியல்ல என்று கோயிலில் சத்தியம் செய்யாத குறையாக மன்றாடிவிட்டார். ஆக, கறுப்பர் கூட்டத்தைக் கைகழுவத் தயங்கவில்லை திமுக!  பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகத்தின் நாத்திகப் பிரச்சாரத்தையும் தனித்தமிழ்நாடு கோரிக்கையையும் பார்ப்பன எதிர்ப்பையும் திமுகவுடன் இணைத்துப் பேசினால் தாமே முன்வந்து தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று விலகிநிற்கும் போக்கு திமுகவிடம் இருந்து வந்துள்ளது. திமுகவைப் பொறுத்தவரை ஆளும்வர்க்க நலனே பாசிச எதிர்ப்பில் அதன் எல்லையைத் தீர்மானித்து கொண்டிருக்கிறது.

தேர்தலைக் காரணம் சொல்லி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக கைகொள்ளப்படும் செயலுத்தி  இது என்று சிலர் விளக்கப்படுத்துகிறார்கள். உண்மையில் திமுக ஆட்சியாக இருந்திருந்தால் கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைப்பது எப்போதோ நடந்திருக்கும் என்பதே என் மதிப்பீடு!

திமுக கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தது போதாதென்று சிபிஐ(எம்) இன் தமிழ் மாநிலக் குழுவின் சார்பாக தோழர் கே.பாலகிருஷ்ணனும்கூட கருத்துரிமைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துவிட்டார். இறையுணர்வு கொண்டோரை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலின் வீடியோ அமைந்துள்ளதற்குத்தான் இந்த கண்டனமாம்! சிபிஐ(எம்) திமுகவைப் போல் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று சொல்லும் கட்சி அல்லவே, பிறகெப்படி கைதைக் கண்டிக்காமல் இருக்கலாம்?

பின்வரும் கருத்துகள் மார்க்சிய ஆசான் லெனினுடையது. மதத்தைப் பற்றி என்ற தலைப்பில் வி.இ.லெனினின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆ.சீனிவாசனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அலைகள் பதிப்பகம் வெளியிட்ட சிறுநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

  1. “மார்க்சியப் பொருண்மியம் தெளிவான நாத்திகத் தன்மைக் கொண்டதாகும். சகலவகை மதத்திற்கும் உறுதியான எதிரியாகும்.”
  2. சமூக ஜனநாயகத்தின் நாத்திகப் பரப்புரை அதன் அடிப்படைக் கடமைக்கு அதாவது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகச் சுரண்டப்படும் மக்கள் திரளின் வர்க்கம், போராட்டத்தை வளர்க்கும் கடமைக்கு உட்பட்டதாகும்.
  3. “பயம்தான் கடவுள்களை உண்டாக்கியது.” முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்தியைக் கண்டு பயம் – குருட்டுத்தனமானது ஏன் என்றால் அதை மக்களால் முன்கூட்டிக் காண முடியவில்லை. இந்த முதலாளித்துவ சக்தி பாட்டாளிகளின் வாழ்க்கையின் சிறு உடைமையாளர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் “திடீரென்று”, “எதிர்பாராத வகையில்”, “தற்செயலாகவும்” அழிவையும் நாசத்தையும் ஓட்டாண்டி நிலையையும் விபச்சாரத்தையும் பட்டினிச்சாவையும் சுமத்துவதாகப் பயமுறுத்துகிறது. சுமத்தவும் செய்கிறது – இது நவீன கால மதத்தின் மூலவேராகும். இதை ஒரு பொருண்மியவாதி அவர் ஒரு பள்ளிக் குழந்தைப் பொருண்மியவாதியாகத் தொடர்ந்து இருக்க விரும்பாமல் இருந்தால், முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இதைக் கட்டாயம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  4. ஒரு மார்க்சியருக்கு கண்கூடான நிலைமை முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடிய வேண்டும். அராஜவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையில் எல்லையைக் காண்பதற்கு எப்போதும் சாத்தியப்பட வேண்டும். ( இந்த எல்லைக்கோடு சார்புடைத்தது, நிலைமாறக் கூடியது, மாற்ற மடையக் கூடியது. ஆயினும் அது இருக்கிறது.) அராஜவாதிகளின் வரட்டுத்தனமான, அருவமான, பேச்சளவிலான, ஆனால் உண்மையில் வெத்து வேட்டுப் “புரட்சிக்” கூச்சல்களுக்கோ, குட்டி முதலாளித்துவ ஆற்றல்கள் அல்லது மிதவாதப் படிப்பாளிகளின் பண்பற்ற வாதத்திற்கோ சந்தர்ப்பவாதத்திற்கோ ஒரு மார்க்சியர் பணிந்துவிடக் கூடாது. இந்தக் குட்டி முதலாளித்துவ ஆற்றல்கள் அல்லது மிதவாதப் படிப்பாளிகள் மதத்திற்கெதிரான போராட்டத்தைக் கண்டு பயந்து சாகிறார்கள். இது தன்னுடைய கடமை என்பதை மறந்து விடுகிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தின் நலவுரிமைகளை வழிகாட்டியாகக் கொள்ளவில்லை. ஆனால், யார் நெஞ்சும் புண்பட்டுவிடக் கூடாது, யாரையும் வெறுத்து ஒதுக்கக்கூடாது. யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது “வாழு, வாழவிடு” என்னும் சாமியார்களின் மந்திரத்தைக் கூறுவது போன்ற மிகக் குறுகியன் மனப்போக்குடன் நடந்துகொள்ளும் இந்த நபர்களுக்கும் மார்க்சியர்கள் இடமளித்துவிடக் கூடாது.
  5. லெனின் மேலும் எப்போது நாத்திகப் பரப்புரையைப் பிற்போட வேண்டும் என்று எடுத்துக்காட்டோடு விளக்குகிறார். ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில் நாத்திகப் பரப்புரை தேவையற்றதாக இருக்கலாம் என்கிறார். ‘ இந்தச் சந்தர்ப்பத்தில் நாத்திகப் பிரச்சாரம் தேவையற்றதாகலாம். அத்துடன் கேடு விளைவிக்கவும் கூடும். நாம் இவ்வாறு கூறுவது பின் தங்கிய பகுதியினர் பயந்து ஓடி விடுவார்கள் என்றோ, தேர்தல்களில் ஒரு ஸ்தானம் இழந்துவிடுவோம் என்றோ பண்பற்ற முறையிலான பயத்தினால் அல்ல, அதற்கு மாறாக, வர்க்கப் போராட்டத்தில் மெய்யான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்னும் கருத்தில்தான் இவ்வாறு கூறுகிறோம். வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதினடிப்படையில் தொழிலாளர்களிடம் பிரிவு வருவதைக் காட்டிலும் கடவுள் நம்பிக்கையனடிப்படையில் தொழிலாளர்கள் பிளவுபடுவதையே விரும்பும் பாதிரிமார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதேயாகும். எந்த நிலைமையிலும் கடவுளை எதிர்த்துப் போரிட்டேயாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அராஜவாதிகள் உண்மையில் அந்த பாதிரிமார்களுக்கும் பூர்ஷ்வா வர்க்கத்தினருக்கும்தான் உதவி செய்கிறார்கள். ( அராஜகவாதிகள் நடைமுறையில் எப்போதும் பூர்ஷுவா வர்க்கத்திற்குத்தான் உதவி செய்கிறார்கள்.)

லெனினின் கூற்றுகளைக் வைத்து நம்முடைய சூழமைவைப் பகுத்தாய்வோம். 

  1. தமிழ்நாடின் புதுமக் கால வரலாற்றில் சுயமரியாதை இயக்கத்தின் ஒருகூறாகவே நாத்திகப் பரப்புரை இருந்துவந்திருக்கிறது. கறுப்பர் கூட்டத்தார் பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மாநில உரிமைகள், இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு, மதச் சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றை தங்கள் சானல் மூலமாக பரப்பி வந்தவர்கள். வெறுமனே நாத்திகப் பரப்புரையை மட்டும் முன்னெடுக்கும் யூடியூப் சானல் அல்ல அது.
  2. எல்லா நேரத்திலும் நாத்திகப் பரப்புரையை முதன்மைப்படுத்தும் அராஜகவாதப் போக்கு பெரியாரிடம் இருந்ததில்லை. தேர்தல் நேரத்தில் அதை முதன்மைப்படுத்தாதப் போக்கு அவரிடம் காணப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியூப்  சானல் நடத்துவோரும்கூட சுமார் 7 மாதத்திற்கு முன்பு வெளியிட்ட காணொளி இது. இந்த நாளில் இருந்து பார்த்தால்கூட தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.              காவிக்கூட்டம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதை தோண்டி எடுத்துவந்து காட்சி ஊடகங்களையும் இணைய ஊடகங்களையும் கட்டுப்படுத்திக் கைப்பற்றும் நோக்கில் ஊளையிட்டுக்கொண்டுள்ளன. பாசக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது என்ற காரணத்திற்காக அதன் ஆட்சிக் காலம் முழுவதும் நாத்திகப் பரப்புரை செய்யக்கூடாது என்ற செயலுத்தி சரியாக இருக்குமா? அத்தகைய ஒரு செயலுத்தியைத்தான் பொதுவில் காங்கிரசு, சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் கடைபிடித்தன. கடைசியில் பாபர் மசூதி தீர்ப்பை வரவேற்பதில் போய் நிற்கிறது அவர்களது செயலுத்தி.
  3. அப்படியாயின், கந்தசஷ்டிக் கவசம் பற்றிய கறுப்பர் கூட்டத்தின் நிகழ்ச்சியில் குறையோ குற்றமோ இல்லையா? என்ற கேள்விஎழும். அது பெரியார் காலந்தொட்டே இருந்துவரும் விமர்சனம்தான். புராணங்கள், சமய இலக்கியங்களைக் விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது கொச்சையான பொருண்மியத்தைக்(vulgar materialism)  கைகொள்வது மக்களின் சிந்தனையைத் தூண்டி கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கத் தவறிவிடுகிறது. மாறாக, இயங்கியல் பொண்மியத்தைக் கைக்கொண்டு சமய நம்பிக்கையின் பெயரால் நிகழ்ந்துவரும் சாதி ஆதிக்கத்தை மட்டுமல்ல, முதலாளித்துவ சுரண்டலையும்கூட தோலுரிக்க வேண்டும் என்பதே மார்க்சியர்கள் கருத்து. கடவுள்மறுப்பு இயக்கத்தில் முன்னேறிச் செல்வதற்கு உதவக் கூடியது கொச்சைப் பொருண்மியமா? அல்லது இயங்கியல் பொருண்மியமா? என்பதே இருதரப்பாருக்கும் உள்ள முரண்பாடு. மெய்யியல் நோக்கில் கொச்சைப் பொருண்மியமும் இயங்கியல் பொருண்மியமும் ஒன்றுக்கொன்று பகையானதே. நடைமுறைத் தளத்தில்  இவை பகைத்தன்மை கொண்டதல்ல. ஆனால், கொச்சைப் பொருண்மியம் முதலாளிய வர்க்க சார்புக்கு இலகுவில் இட்டுச் சென்றுவிடும். இதற்கு நம்முடைய சொந்த வரலாற்றிலும் ஐரோப்பிய வரலாற்றிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

கந்தசஷ்டி கவச விசயத்தில் கறுப்பர் கூட்டத்தின் மீதான விமர்சனம் என்பது அவர்கள் முன்வைக்கும் ஏரணம்(தர்க்கம்) கடவுள் நம்பிக்கையை வலுவாக கேள்விக்குள்ளாக்கவில்லை, சொத்தையாக இருக்கிறது என்பதாகும். அத்துடன் எதிரி ஆபாசமென்று கூச்சல் போடுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

பகுத்தறிவுப் பரப்புரை வலுவான அறிவியல் ஏரணங்களைக் (தர்க்கங்களைக்) கொண்டிருப்பின் நம்முடைய எதிரி சுட்டுக்கொல்லவும் தயங்குவதில்லை.  கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்றோருக்கு ஏற்பட்டது அதுதான். ஆனால், மாறாக கந்த சஷ்டிக் கவச விசயத்தில் எதிரி இதைப் பயன்படுத்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க முயல்கிறான், போராட்டம் நடத்துகிறான், மீண்டும்மீண்டும் அந்த நிகழ்ச்சியை இணையத்தில் சுழலவிடுகிறான். மக்களின் சிந்தனையைத் தூண்டும் வலுவான ஏரணத்தை அது கொண்டிருப்பின் அவனே அந்த காணொளியை எடுத்துப் பரப்புரை செய்வானா? செய்திருக்க மாட்டான். இன்றைக்கு இந்த ஒரே ஒரு காணொளியை மக்களுக்கு காண்பித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலில் இருந்த 500 காணொளிகளையும் பெரிய எதிர்ப்பு இன்றி எதிரியால் நீக்க முடிந்திருக்கிறதே. எதிரிக்கு இயக்கம் நடத்துவதற்கும் மக்களை தம் பக்கம் இழுப்பதற்கும் வாய்ப்பை நல்கிவிட்டது என்பதுதான் நம் கவலை. ஆயினும் இவ்விவகாரம், இதில் வாதிடும்முறை தவறு என்ற அளவில் தோழமையுடன் சுட்டிக்காட்டுவதற்குரியதே ஒழிய குற்றமென்று முத்திரையிட்டு கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் உரியதல்ல என்ற எல்லைக்கோடு இருக்கிறது.

இந்த இடத்தில் திமுக, சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டன. இந்திய மற்றும் தமிழகத்தின் குறிப்பான சூழலில், நாத்திகப் பரப்புரைக்குப் பல்பரிமாணங்கள் உண்டு. நாத்திகம் இந்து மதத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்துதேசியம், இந்திய தேசியம் ஆகியவற்றிற்கு எதிரானதாக பாசகவினரால் பார்க்கப்படுகிறது. அதனால்தான், ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்த குருமூர்த்தி போன்றோர் பெரியாரின் நாத்திகப் பரப்புரையை தேசத்துரோகம் என்று சாடுகின்றார். நாத்திகப் பரப்புரையால் அன்றி தமிழர் இன உணர்வால்தான் இங்கே இந்துத்தேசியம் வளர்ச்சியடையவில்லை  என்பதே உண்மை என்றாலும் நாத்திகப் பரப்புரைதான் இந்துதேசியத்திற்கு எதிராய் இருப்பதாய் எதிரி நம்புகிறான். மேலும் நாத்திக பரப்புரை இந்துதேசிய எதிர்ப்பு, பார்ப்பனிய மேலாதிக்க எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றோடும்கூட இணைக்கப்பட்டிருப்பதால் பிற்போக்காளர்களுக்கு அது வேப்பங்காயாய் கசக்கின்றது.

எதுஎப்படியோ எதிரி கடவுள் முருகனை விமர்சிப்பதை மட்டும் எதிர்ப்பவன் அல்ல மோடியையும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை விமர்சிப்பதையும் எதிர்ப்பவன்.  பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமைப் போன்ற ஐரோப்பாவின் அறிவொளி இயக்க விழுமியங்களை வெறுப்பவன். அவனைப் பொருத்தவரை கடவுள்மறுப்பு இயக்கத்தையைத் தடை செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவன்.  எதிரிக்கு ஊக்கமளிக்கும் வகையில் திமுக, சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் கறுப்பர் கூட்டத்தைக் கைகழுவிவிட்டன. பாசிஸ்ட்கள் தங்கள் கால்களை ஊன்றிக் கொண்டு தாக்கத் தொடங்கும்போது யார் சிதறி ஓடுவார்கள் என்பதையும் இந்த நிகழ்வில் இருந்து அடையாளங் காண வேண்டும்.

இந்த சந்தர்ப்பவாதம்தான், உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டின் போது சிபிஐ(எம்) இடமும்  ஊபா சட்டத் திருத்தத்தின்போது திமுகவிடமும் காஷ்மீரில் பிரிவு 370 நீக்கத்தின் போதும், பாபர் மசூதி தீர்ப்பின் போதும் திமுகவிடமும் சிபிஐ(எம்) இடமும் எனப் பல்வேறு உயிராதாரமானப் பிரச்சனைகளில் வெளிப்பட்டன என்பதை கந்த சஷ்டி கவசப் பிரச்சனையோடு இணைத்துப் பார்க்கவும்.

பாசிச எதிர்ப்பில் உறுதியாக நின்று நீண்ட காலப் போராட்டத்திற்கு அணியமாய் இருக்கும் இளைஞர்கள் சமரசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கு இடங்கொடாத, முரணற்ற சனநாயக முகாமைக் கட்டியெழுப்புவதன் இன்றியமையாமையை இதிலிருந்து உணர வேண்டும். அப்படி உணர மறுப்பவர்கள் எதிரியின் அடுத்தஅடுத்த அதிரடிகளில் இருந்து உணரக்கூடும். ஏனென்றால், இவ்விசயத்தில் நம் கண்ணைத் திறக்க வைக்கும் நிலைமைகளை எதிரியே உருவாக்கிக் கொண்டிருக்கிறான். எதிரி ஏற்படுத்தும் தீமைக்குள் பொதிந்திருக்கும் நன்மை அது.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW