நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 3

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி 1
நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 2
ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசின் செலவினங்களை எதிர்ப்பதற்கான உண்மையானக் காரணங்கள்
மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்காமல் அரசுகள் சிக்கனத்தை மேற்கொள்வதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பேரழிவை சந்தித்தாலும் அந்நாடுகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் லாபத்தையே ஈட்டுகின்றனர்.
1) அரசு போதுமான நிதியை செலவழித்து தேவையை ஊக்கப்படுத்த மறுக்கும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது முற்றிலும் தனியார் துறையின் முதலீடுகளை சார்ந்திருக்கவேண்டிய அவசியம் உருவாகிறது. இச்சூழலில் அரசாங்கம் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்கப்படுத்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மானியங்களையும் வழங்குகிறது. அரசுகள் நிதி நெருக்கடியை சந்திக்கும்போது தனியார் நிறுவனங்கள் இன்னும் அதிகப்படியான சலுகைகளையும் மானியங்களையும் அரசிடம் இருந்து கறந்துவிடுகின்றன. இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருங்கொடைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் சர்வதேச நிறுவனத்தின் இந்தியக்கிளை அல்லது இந்தியக்கூட்டு நிறுவனம் மூலமாகவோ அல்லது பங்குச் சந்தை முதலீட்டின் மூலமாகவோ அதன் பலன்களை பெரிதும் அனுபவிக்கின்றனர்.
2) அதேபோல அரசுகள் நிதிப்பற்றாக்குறையை குறைக்கவேண்டிய அழுத்தத்தில் இருக்கும்போது பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கின்றன. அவை, மக்கள் நலனை கருத்தில்கொள்ளாமல் தனியார் நிறுவனங்களின் லாபத்தையே முதன்மையாகக்கொண்டு அதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அரசாங்கம் உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க மறுக்கும்போது, தனியார் நிறுவனங்கள் இத்துறைகளில் ஊடுருவி பெரும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. சில ஆண்டுகளாக இத்தகைய தனியார் மற்றும் அரசு இணைந்த கூட்டமைப்புகளை நிறுவுவதில் உலக அளவில் இந்திய அரசு முதன்மை பெற்று விளங்கியது. இக்கூட்டு நிறுவனங்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை மற்றும் சிறுசேமிப்புகளை பெரியளவில் வீணடித்தபோதிலும் அரசு இன்றும் தன் செயல்திட்டங்களுக்கு அத்தகைய தனியார்-அரசு இணைந்த கூட்டமைப்புகளையே தேர்வுசெய்கின்றது.
3) மேலும் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதாகக் கூறி லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையோ அல்லது முழு நிறுவனத்தையோ அரசு விற்றுவிடுகின்றது. காலநெருக்கடி மற்றும் நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி பொதுத்துறை நிறுவனங்களை அவசரகதியில் அடிமட்ட விலைக்கு விற்க அரசு முனைவதால், பெரும் பணம் படைத்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரும் லாபத்தை ஈட்டித்தரும் அரும்பெரும் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.
4) கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை முன்னிட்டு நிதி அமைச்சர் வெளியிட்ட தொடர் அறிவிப்புகள் மேற்கூறிய மூன்று புள்ளிகளின் செயல்முறை விளக்கமாக அமைத்திருந்தது. அந்த நிதித் தொகுப்பில் அரசின் செலவானது உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 1% அளவிற்கு மட்டுமே இருந்தது. அதே நேரத்தில், நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்போவதாக அறிவித்தது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் பல்வேறு ஒழுங்குமுறைகளையும் நீக்கியது.
5) இறுதியாக, அரசு செலவழிக்க மறுக்கும்போது உள்நாட்டுத் தேவை குறைகிறது. அதனால் சொத்துக்களின் விலையும் தொழிலாளர்களின் ஊதியமும் குறைகிறது. மேலும் உள்நாட்டு நிறுவனங்கள் தாங்கள் வாங்கியக் கடனை செலுத்த முடியாமல் இழப்பை சந்திப்பதால் மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த முடியாத சூழல் உருவாகிறது. இந்த கையறுநிலையை பெரும் வாய்ப்பாக பயன்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்நிறுவனங்களை அடிமட்டவிலைக்கு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று போன்ற உலகளாவிய நெருக்கடியின்போது, வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகள் பெருமளவு செலவழிக்கின்றன. அதே நேரத்தில், இந்தியா போன்ற மூன்றாம் நிலை நாடுகள் மற்றும் கிரேக்கம் போன்ற பலவீனமடைந்த முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் செலவழிக்கத் தயங்குகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளின் பெருநிறுவனங்கள் தங்கள் அரசின் நிதி உதவியால் கிடைத்த பெரும்பணத்தைக் கொண்டு வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள நிறுவனங்களை அடிமட்ட விலைக்கு வாங்க முற்படுகின்றன.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகின்றது. தற்போதைய நிதி நெருக்கடியால் சர்வதேச முதலீடுகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வழக்கமான லாபம் குறைத்திருந்தாலும் அது வேறு பலவழியில் அளப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வளர்ச்சியடையாத அல்லது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளை ஆழமான நெருக்கடிக்குள் நீட்டி வைத்து அந்த நாடுகளின் அரசாங்க கொள்கைகளில் முழு ஆதிக்கம் செலுத்தி சர்வதேச முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து வழிகளையும் கட்டமைக்கிறது.
தொடரும்….
- Rupeindia வெளியீடு
தமிழில்: ராபின்சன்
robinson.rajansilva@gmail.com