இந்திய சீன எல்லை தகராறு – மோடி-ஜின்பிங் தேனிலவு முடிவுக்கு வந்த கதை
லடாக் கல்வான் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடைபெற்றது போர் நடவடிக்கை அல்ல, உத்தேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (LAC) பகுதியில் நடைபெற்ற சிறு கைகலப்பு அல்லது சண்டை (skirmish) என கூறலாம். இருதரப்பு ரோந்து படை குழுக்களுக்கு இடையே, மே மாதம் தொடங்கிய கோடைக்கால முட்டல்-மோதல்கள், ஜூன் 15 அன்று நடைபெற்ற கடுமையான தகராறு மற்றும் இருதரப்பு உயிர் சேதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்ததுள்ளது.
வெளியுறவு அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் பிரதேச ராணுவ தளபதிகள் மட்ட அளவிலான, பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, படை துருப்புகளுக்கிடையே கைகலப்பு நிகழாவண்ணம் நிலைகொள்ள வைக்கப்பட்டு, இறுதி சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்கியீ இடையே நடைபெற்று, மோதல் போக்கை தவிர்ப்பது என்ற உடன்பாட்டின் அடிப்படையில், இருதரப்பு படைகளும் மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கின் ஹாட் ஸ்பிரிங் மற்றும் கோக்ரா PP- (patroling point) 14,15 பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக பின் வாங்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் PP-8,17 பகுதியில் படை துருப்புக்கள் பின்வாங்கப் படாமல் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கின்றன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக நீடித்த இந்த முறுகல் நிலையில், அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகளாக, இந்திய அரசின் தரப்பில் சீனா ஒரு தரப்பாக உத்தேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றியமைக்க பூசலில் ஈடுபடுகிறது எனவும், சீன அரசு தரப்பில் இந்திய துருப்புகள் அத்துமீறலில் ஈடுபடுவதாக மோதல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது, முதல் மோதல் நடைபெற்றவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையில் சமரச முயற்சியில் தான் ஈடுபட போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தவுடன், சீனா முதலில் அதை நிராகரித்து பிறகு இந்தியாவும் அந்த சமரச முயற்சியை நிராகரிப்பதாக அறிவித்தவுடன், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட்டு பதட்டம் தணிந்தது என அறிவிக்கப்பட்டன, ரஷ்யா மூன்றாம் தரப்பு சமரச முயற்சி தேவையற்றது, இருதரப்பும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார்கள் என அறிவித்தது. இதன் பிறகுதான் ஜூன் 15 அன்று தீவிர கைகலப்பு நடந்து, உயிர் சேதங்கள் நிகழ்ந்து, இன்றைய மோதல் தவிர்ப்பு உடன்பாடு ஏற்பட்டு, ஆளற்ற பிரதேசம் (buffer zone) உருவாக்கப்பட்டு, படை பின்வாங்கல் நிலை எட்டபட்டுள்ளது. கோடைக்காலம் விரைவாக முடிவடைய உள்ள சூழலில், குளிர் உச்சத்தை தொடும் அந்த பகுதியில் இனி இந்த நிலை தற்காலிக ஏற்பாடாக தொடரும் என நம்பலாம்.
1962 இந்திய-சீன போருக்குப் பிறகு, 1975இல் நடைபெற்ற இதேபோன்ற எல்லைத் தகராறில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, ராஜீவ்காந்தி பிரதமரான பிறகு சீனாவுடனான உறவுகள் முந்தைய நிலையிலிருந்து மாற்றம் ஏற்பட்டு மேம்பாடு அடைந்து, 1993 நரசிம்மராவ் காலத்தில் எல்லைத் தகராறு சம்பந்தமாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான உடன்பாடு ஏற்பட்டு, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி எல்லைகளை வரைவதற்காக இருதரப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமும் எல்லையில் மோதல் அற்ற நிலையும் நிலவி வந்தது.
2014 ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மோடியும் சங்பரிவாரக் கும்பலும் வர்த்தக பற்றாக்குறையை காட்டி தீவிரமாக சீன எதிர்ப்பு பேசி வந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டு, 2017 டோக்லாம் முறுகலுக்கு முன்பும் பின்பும் கூட ,சீன அதிபர் ஜின்பிங் உடன் மோடிக்கு ஏற்பட்டு உள்ள உறவு தனிச் சிறப்பானது எனவும் ,மோடியின் ராஜதந்திரம் எனவும், ஊகான் அகமதாபாத் மகாபலிபுர சந்திப்புகள் வரலாற்றில் நிகழாத அதிசயம் எனவும், மோடி பிம்ப பிரச்சாரங்களை நிகழ்த்தி வந்தன. இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் பேசியதையே மறந்துவிட்டு, இப்பொழுது எல்லையில் ஏற்பட்டுள்ள மோதலையும், பதற்றத்தையும், ராணுவ வீரர்களின் உயிர் இழப்பையும் முன்வைத்து, சீன எதிர்ப்பு தேசியவாதத்தை பேசி, இந்துத்துவ பாசிச அரசியலையும் மோடி பிம்ப அரசியலையும் வலுப்படுத்திக்கொள்ள, கிருஷ்ண சக்கர வியூக கதைகளை , எல்லையில் நிற்கின்ற ஏழை விவசாயக் குடிமகனான ராணுவ வீரர்களிடம் கர்ஜிக்கின்றனர்.
ஏன் இந்த திடீர் மாற்றம்? மோடி-ஜின்பிங் தேனிலவு காலகட்டம் ஏன் விரைவாக முடிவுக்கு வந்தது, வெறுமனே ரோந்து குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, எப்படி எல்லைத் தகராறாக, படை குவிப்பு நடவடிக்கையாக, சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக மாறியது ? இதுபோன்ற ஆயிரக்கணக்கான தகராறுகளும் அத்துமீறல்களும், அரசே கொடுக்கின்ற புள்ளிவிவரப்படி, எல்லா நாட்களிலும் எல்லைப்புற பகுதிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆக தனித்த இந்த ஒரு சம்பவம், இரு தரப்பாலும், எதற்காக சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக பயன்படுத்தப்பட்டது என்பதும், இதற்குப் பின் உள்ள அரசியல் பொருளாதார காரணிகளை அறிவதும் தான் அவசியமானதாகும்.
மோடி சங்பரிவாரக் கும்பலை பொருத்தவரை, தீவிரமடைந்து வரும் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி, மற்றும் மாறிவரும் சர்வதேச சூழலில், இந்திய-சீன இருதரப்பு உறவுகளுக்கு இடையில், மாற்றங்களை கொண்டுவர இந்த மோதலை பயன்படுத்த விரும்புகின்றனர். அதில் தங்களின் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ளவும், சில வாய்ப்புகளை கைப்பற்றிக் கொள்ளவும் முடியும் என நினைக்கின்றனர். மோடியின் பொருளாதாரக் கொள்கை, கடந்த மூன்று ஆண்டுகாலமாக, இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் தள்ளியிருக்கிறது, அதிலிருந்து மீள வழி தெரியாமல் இருந்த சூழலில், கொரனோ கொள்ளைநோய் நெருக்கடியும் ,சீன எதிர்ப்பு பொருளாதார தேசியவாதமும், நெருக்கடியை மடை மாற்றுவதற்கு மிகவும் பயனுள்ள கருவிகளாக பயன்படும் என நினைக்கின்றனர் .
கொரனாவிற்கு முன்பு, பாகிஸ்தான் பாலா மோட் தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்ட திருத்தம் என, பொருளாதார வீழ்ச்சி காலத்தில், தேசியவாதத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது பொருளாதாரம் முழுவதுமாக படுத்து விட்ட பிறகு, தொற்று நோய்க்கு பிந்தைய சூழலில் ,சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது, இறக்குமதியை குறைப்பது, எல்லைப்புற நாடுகளின் அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்தும் வரம்புக்குள் சீனாவையும் உட்படுத்துவது, சீன தகவல் தொடர்பு சாதனங்களையும் மென்பொருட்களையும் தேசப் பாதுகாப்பு அடிப்படையில் தடை செய்வது என, சீன எதிர்ப்பு பொருளாதார தேசியவாதம் பேசி, எதிர்வரும் நெருக்கடியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர். பேரழிவுக்கு தள்ளிய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல், சொந்தத் தொழில் துறையை, மூலதனத்தை தொழில்நுட்பத்தை வளர்க்க திறன் இல்லாமல் ,உலக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நீடித்துக்கொண்டே ,வெற்று வாய்ப்பந்தல் பொருளாதார தேசியவாதம் சுயசார்பு என கூச்சலிடுகின்றனர் .இந்த வர்த்தக தடைகள் அனைத்தும் சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரத்தை தான் அதிகமாக பாதிக்கப் போகிறது, உலக அளவிலான சீனாவின் ஏற்றுமதியில் இந்தியாவிற்கான பங்கு 3% மட்டுமே, ஆனால் இந்தியா தனது இறக்குமதியில் 6 சதவீதத்தை சீனாவை சார்ந்து இருக்கிறது, மேலும் நோயெதிர்ப்பு மருந்துகளுக்கான கச்சாப் பொருட்கள், மின்சார துறை மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கான தளவாட சாதனங்கள், சூரிய மின்னாற்றல் தகடுகள் மற்றும் கருவிகள் என, இன்னும் பலவற்றில் சீனாவின் இறக்குமதியை சார்ந்து தான் இந்திய நிறுவனங்கள் இயங்குகின்றன.
இதை உடனடியாக மாற்றீடு செய்வதற்கு, இந்தியாவிற்கு சொந்த தொழில்நுட்ப பலமோ, உலக சந்தையில் மலிவாக பொருட்களை கொடுக்கக் கூடிய வேறு நாடுகளோ கிடையாது, எனவே எவ்வித முன் தயாரிப்பும் அற்ற இந்த பொருளாதார தடை நடவடிக்கை, சீனாவை தாக்குவதை விட, ஜிஎஸ்டி போல செல்லா பண நடவடிக்கை போல மீண்டும் திரும்பி வந்து, இந்திய மக்களை தான் பூமராங் போல தாக்கப் போகிறது. மோடி-ஜின்பிங் மகாபலிபுர தேனிலவு சந்திப்பின் ,நினைவுகள் மறைவதற்குள் ,வர்த்தக அரசியல் உறவுகளில் ஏனிந்த விரைவான மாற்றம் என வினவினால், ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும், மோடியின் உள்நாட்டுப் பொருளாதார கொள்கைகள் எப்படி நள்ளிரவு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் போல நிகழுமோ, அதை ஒத்த சாயலைக்தான் அவருடைய வெளிவிவகார வர்த்தக கொள்கைகளும் பிரதிபலிக்கின்றன, எனவே முதலாவது அர்த்தத்தில் எல்லைத் தகராறு பயன்படுத்தப்பட்டது, ஆழம் அடைந்துவரும் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியை மடை மாற்றுவதற்கு பயன்படுவதை தவிர, வேறு எந்தப் பொருளும் அதற்கு கிடையாது .
இரண்டாவதாக படை வழு சமநிலையில், பாகிஸ்தானிடம் காட்டிய எல்லை தாண்டிய சர்ஜிகல் ஸ்ட்ரைக் வீரத்தை சீனாவிடம் காட்டமுடியாது, ஏனென்றால் சண்டை நடந்த அடுத்த நாள் அவர்கள்தான் 10 இந்திய வீரர்களை ஒப்படைத்தார்கள், எனவேதான் மோடி கும்பல் பொருளாதார சூரப்புலியாக மாறி, எல்லை சண்டையிலிருந்து உடனடியாக மக்களின் கவனத்தை வர்த்தக சண்டையில் திருப்பி இருக்கின்றது. இதுவும்கூட சொந்த சரக்கு கிடையாது, பெரியண்ணன் அமெரிக்காவை பின்தொடர்ந்து எடுத்த முடிவுதான் ,இன்று விரைவாக மாறி வருகிற சர்வதேச சூழலில், அமெரிக்க சீன வர்த்தக போரில் முதலாவது சீனா எதிர்ப்பு வீரனாக, மோடி கும்பல் களத்தில் குதித்து இருக்கிறது .இதை அமெரிக்காவும் மேற்குலகமும் ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்தது ,சீனாவிற்கு எதிராக ஜி7 நாடுகளின் கூட்டணியை விரிவாக்கி, ஜி 10 ஆக இந்தியா தென்கொரியா ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர், சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை, 5ஜி தொழில்நுட்ப ஆதிக்க விரிவாக்கத்தை கட்டுப்படுத்த ,அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தனர், இந்த சூழலில்தான் சீனாவின் பிரதான சர்வதேச வர்த்தக நகரம் ஊகானிலிருந்து ,கொரானா பெரும் தொற்று உலக அளவில் பரவ தொடங்கிய உடன், அமெரிக்க சீன முரண்பாட்டை மையப்படுத்திய கொரானாவிற்கு பிந்தைய உலகம் என்ற, சர்வதேச சூழல் தோற்றம் பெற்று உள்ளது, இது உலக அளவில் புதிய அணி சேர்க்கையையும், அரசியல் உறவுகளில் மாற்றத்தையும் நிகழ்த்தி வருகிறது, இந்த சூழலில்தான் வரலாற்றுரீதியாக அமெரிக்க சார்பு கொண்ட சங்பரிவார் மோடி கும்பல், சீனாவுடன் காங்கிரஸ் மேம்படுத்திய உறவையும், தாங்கள் ஏற்படுத்திய தற்காலிக நல்லிணக்க உறவையும், கைவிட்டுவிட்டு தேனிலவை முறித்துக்கொண்டு, எல்லையில் மே மாதம் மோதல் நடப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பாகவே, மார்ச் மாதமே, கொரானா தொடங்கிய உடனே, சீனாவிலிருந்து வெளியேறக்கூடிய, 1000 தொழில் நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென பேச தொடங்கி, சீனாவுடனான மோதலுக்கான தூண்டுதல் நடவடிக்கையை தொடங்கிவைத்தது, மேலும் பாகிஸ்தானுக்கு மட்டும் இருந்த அந்நிய முதலீட்டு கட்டுப்பாடு , எல்லைப்புற நாடுகளுக்கும் என விரிவாக்கி, சீனாவின் முதலீடுகளையும் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தது, ஹாங்காங் விவகாரத்தில் மறைமுகமாக தலையிட்டு கருத்து சொன்னது என, அமெரிக்கா முன்னெடுத்துவரும் சீன எதிர்ப்பு நடவடிக்கைக்கு, வலு சேர்ப்பதாகவும் தனக்கு அதை பயன்படுத்தி கொள்ளவும முடியும் என மோடி கும்பலின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன, ஆனால் உண்மையில் இந்தியாவுக்கு இதில் ஏதாவது கடந்த நான்கு மாதங்களில் பயன் கிடைத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, இவர்கள் குறிப்பிட்ட 1000 நிறுவனங்களில் ஒன்றுகூட இந்தியாவிற்கு வரவில்லை, மாறாக மலிவு உழைப்பை தேடி வியட்னாமிற்கும் தாய்லாந்திற்கும்தான் பன்னாட்டு நிறுவனங்கள் சென்றிருக்கின்றன, மாறாக சீனாவின் ஆத்திரத்தை தூண்டி எல்லைத் தகராறு தான் நடைபெற்றது, மேற்கண்ட நடவடிக்கைகளை எல்லாம் மௌனமாக ஆத்திரத்துடன் வேடிக்கை பார்த்து வந்த சீனா, ராஜிய வட்டாரங்களில் இந்தியாவை அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்டு இருதரப்பு உறவை சீர்குலைக்க வேண்டாம் என சுட்டிக்காட்டி வந்தது, ஆனால் மோடி கும்பல் அதன் ராஜதந்திர ஆலோசகர்கள் ,சீனா சர்வதேச அளவில் நெருக்கடிக்கும் தனிமைப்படுத்த லுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக கருதி, சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர், இது ஒரு கட்டத்திற்கு மேல் தவிர்க்கமுடியாமல் எல்லை மோதலாக வெடித்திருக்கிறது.
சீனாவை பொறுத்தவரை இந்தியாவைப் போல தனது உள்நாட்டு விவகாரத்தில் இந்த எல்லை தகராறை முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக மாற்ற தயாராக இல்லை. தனது வீரர்கள் கொல்லப்பட்டது பற்றி எந்த எந்தச் செய்தியையும் உணர்ச்சிபூர்வமாக வெளியிடாததோடு, நாட்டின் உயர் தலைவர்கள் யாரும் எல்லைத் தகராறு பற்றியோ இந்தியாவைப் பற்றியோ சூளுரைகளை அல்ல செய்திக் குறிப்புகளை கூட வெளியிடவில்லை, ஆனால் இந்தியாவை ஒரு தட்டு தட்டி கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கோடு எல்லைத் தகராறை பயன்படுத்தி இருக்கிறது. தெற்காசிய மற்றும் இந்தியப்பெருங்கடல் நாடுகளில், சீனாவின் செல்வாக்கு மண்டலம் விரிவடைவதில் ஏற்படும் முரண்பாடுகள் ,மற்றும் எல்லை பிணக்குகளை தாண்டி, சீனா தன்னை அமெரிக்காவோடு போட்டியிடும் உலக ஏகபோக போட்டியாளன் என்ற நிலையில் இருந்துதான் இந்தியாவுடனான உறவை அணுக விரும்புகிறது ,இந்தியாவை சம தகுதி வாய்ந்த போட்டியாளராக அது கருதவில்லை, எல்லை மோதலை ஒட்டி சீன அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துகளில், இந்தியா கண்மூடித்தனமான தேசிய வாதத்திற்கு ஆட்படக்கூடாது என்று சொன்னதை விட, அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் செல்வாக்குக்கு உட்பட்டு சீண்டலில் ஈடுபடக் கூடாது என்பதைத்தான் அதிகமாக வலியுறுத்துகிறது .அமெரிக்காவின் வர்த்தக போர் ,ஹாங்காங் விவகாரம், கொரானா பரவலைத் தொடக்கத்தில் மறைத்தது, தென் சீனக் கடல் பதற்றம் என பல்வேறு பிரச்சினைகள் சீனாவை சூழ்ந்து இருந்தபோதிலும், சீனா எல்லை தகராறை நீடிப்பதற்கான காரணம் ,இந்தியாவின் சீண்டல் அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு ,எனவே அதை கட்டுப்படுத்த இந்தியாவைத் தட்டி வைக்க வேண்டும் என விரும்புகிறது .
மேலே குறிப்பிட்டது எல்லாம் எல்லைத் தகராறு வெடித்ததற்கும் நீடிப்பதற்குமான காரணங்களை பார்த்தோம் , ஆனால் நடைமுறை விளைவு என்ன, மோடி கும்பலால் சீண்டலில் ஈடுபடவும் வம்பளக்கவும் மட்டும்தான் முடிந்தது ,ஆனால் சீனா இதை இதை வாய்ப்பாக பயன்படுத்தி ,இந்தியாவைத் தட்டி வைத்ததோடு ,ஈரடி முன்னே ஓரடி பின்னே என்ற உத்தியின் அடிப்படையில், 1962 ற்கு பிறகு பெரும்பகுதி நிலப்பரப்பை தற்போது கைப்பற்றியதோடு ,பேச்சுவார்த்தைக்கு பிறகும் இரண்டு பகுதியில் மட்டுமே பின் வாங்கி, வழக்கமாக இந்தியப்படை துருப்புக்கள் ரோந்து செல்கிற மற்ற இரண்டு பகுதிகளில் 10 கிலோ மீட்டருக்கு மேல் ஆழ ஊடுருவி நிற்கிறது, அதேபோல பொருளாதாரத்திலும் முன் தயாரிப்பு அற்ற, வர்த்தக தடையால் இந்திய தொழில் நிறுவனங்கள் தான், அதிக இழப்புகளை நிதி சுமைகளை சந்திக்கப் போகின்றன, சீனாவில் இருந்து கொரானா பாதிப்பால் வரும் என எதிர்பார்த்த எந்த ஒரு நிறுவனமும் இதுவரை வரவில்லை, ஆக மோடியின் மூடர் கூட்டம் பொருளாதாரத்தில் மட்டும் இந்தியாவை பேரழிவுக்கு தள்ளவில்லை, எல்லைத் தகராறு ,வர்த்தகம், வெளிவிவகாரம் என அனைத்திலும் பேரழிவுக்கு தள்ளப் போகிறது என்பதை மட்டும் இந்த நடைமுறை உண்மைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த விவகாரங்களை கவனித்து வருகிற சில ஆய்வாளர்கள், இந்தியா சீனா குறித்து இரண்டு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள், ஒன்று சீனா சண்டையில் இறங்காமலே யுத்தத்தில் வெல்வது என்ற உத்தியை கடைபிடிக்கிறது ,இரண்டு மோடி கும்பல் வாய்ப்பை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பார்களே தவிர நீண்டகால கொள்கை உத்தி வகுப்பாளர்கள் (opportunist not strategist) கிடையாது என்பதாகும், மிகவும் பொருத்தமான கருத்து என்பதை சுட்டி நிறைவு செய்கிறேன்.
(சீனா ஏகாதிபத்தியமா?, கொரானாவுக்கு பிந்திய உலகில் சர்வதேச ஒழுங்கை தீர்மானிக்கும் அமெரிக்க சீன முரண்பாடுகளின் வளர்ச்சி -அடுத்த பத்தியில்)
– பாலன்