சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் கொரோனா சிகிச்சை – நான் கண்டதென்ன?
(இதன் நோக்கம் கொரோனா உயிர்க்கொல்லி நோய் அல்ல., அச்சமும் தயக்கமுமின்றி மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும், தனியார் மருத்துவமனைக்கு சென்று தேவையின்றி செலவழிக்காமல், அரசு மருத்துவமனைகள், பராமரிப்பு மையங்களுக்கு சென்று சிகிச்சைப் பெற்று கொள்ள வேண்டும், சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவை ஆகும்)
அன்றாடம் ஊடகங்களில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர், கொரோனா சிகிச்சைமுறை, கொரோனாவின் அறிகுறிகள் எனப் படித்துக் கொண்டிருந்த நான் கொரோனாவின் அறிகுறிகளை ஜீன் 4ம் தேதி உணரத் தொடங்கினேன்.
ஜீன் 1 மற்றும் ஜுன் 2 ஆகிய நாட்களில் என் அண்ணனுக்கு காய்ச்சல் இருந்தது. அவருக்கு உதவியாக உடனிருந்து உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கி வந்தேன். அவரின் மருத்துவ நண்பரின் பரிந்துரையின்படி சில மருந்துகளை எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜீன் 3 அன்றே காய்ச்சல் இல்லாமல் ஆகிவிட்டது. ஆனால் காய்ச்சல் எனக்கு தொற்றி கொண்டுவிட்டது. அண்ணனுக்கு குணமடைந்துவிட்டதால் இது கொரோனா அல்ல, எனவே இரண்டு நாட்களுக்கு அதே மருந்தை நானும் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று மனக்கணக்கு போட்டு மருந்து சாப்பிட்டேன். இரண்டாவது நாள் (ஜூன் 5) அன்று காய்ச்சல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில். அருகாமையில் இருக்கும் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, காய்ச்சல் முகாமிற்கு செல்ல வழிகாட்டினர். அங்குசென்று முழுவிபரத்தையும் சொல்லி கொரோனா சோதனை செய்வதற்கானப் பரிந்துரை படிவத்தை பெற்று கொண்டு, மாதிரி சேகரிப்பு மையத்திற்கு சென்றோம். ”சோதனைக்கான மாதிரி கொடுத்தவுடன் சமுதாய நலக் கூடத்தில்தான் தங்க வேண்டும், 48 மணி நேரத்திற்குப்பின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்படுவீர்கள் இல்லையென்றால் வீட்டுக்கு செல்லலாம்” என்று அங்கிருந்த அரசு அலுவலர் சொன்னார். தனிக் கழிவறை, தனியறை இல்லாமல் தனிமைப்படுத்தினால்(quarantine) பொருத்தமாக இருக்காதே என்ற அச்சம் இருந்தது. இன்னொருபுறம், எனக்கு கொரோனாவாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு, அண்ணனுக்கு மூன்று நாட்களில் குணமாகிவிட்டதால் மேலும் ஒருநாள் மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினேன்.
ஆனால், 4 வது நாளாக காய்ச்சல் தொடர்ந்தது. அன்று (ஜூன் 7) ஞாயிற்று கிழமையாகையால் அரசு சுகாதார நிலையங்கள் இல்லை. திங்கட்கிழமை மாதிரி கொடுத்து இரண்டு நாட்களுக்குப்பின் முடிவைப் பெற்று சிக்ச்சைக்கு செல்ல வேண்டும். அப்போது எனக்கு நோயின் அறிகுறி தெரியத் தொடங்கி 7 நாட்கள் ஆகியிருக்கும். எனவே காய்ச்சல் தொடந்து கொண்டிருப்பதால் தாமதமின்றி ஞாயிற்றுக் கிழமையே தனியார் ஆய்வகத்தில் சென்று சோதனைக்காக சளி மாதிரியை கொடுத்தேன். 24 மணி நேரத்திற்குள் முடிவு வெளிவந்துவிடும் என்பதால் தனியார் ஆய்வகத்திற்கு செல்ல முடிவு செய்தோம் .திங்கள்கிழமை (ஜூன் 8) மதியம் எனக்கு கொரோனா என்பது உறுதியானது.
அலுவல் காரணமாக பல்வேறு ஊருக்கு பயணம் செய்வதும் அப்படி செல்லும் இடங்களில் பல நாட்கள் தனியாக தங்கியிருப்பது எனக்கு புதிதல்ல. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக செல்வது இதுவே முதல்முறை, மேலும் கொரோனாவின் அச்சம். உடனடியாக எங்கள் வீட்டிற்கு, எனது அலுவலகத்திற்கு தகவல் தந்துவிட்டு 14 நாட்களுக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ பராமரிப்பு மையத்திற்கு ( Dedicated Covid Care Centre) சிகிச்சைக்காக சென்றேன். பின்னர் எனது அண்ணனுக்கும் பரிசோதனை செய்து கொரோனா உறுதியானது, அவர் வெள்ளிக்கிழமை அன்று புளியந்தோப்பு அரசு பராமரிப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லை என்பதாலும் எனக்கு காய்ச்சல் தவிர்த்த மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இல்லை என்பதாலும் வீட்டுக்கு அருகாமையில் உள்ளது என்பதாலும் சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்திற்கு சென்றேன். எனது பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் கொரோனா முடிவு அறிக்கையைக் காண்பிக்க சொன்னார்கள். வேறு எந்த தகவலும் பெறவில்லை. அதேநேரத்தில், சளிமாதிரி கொடுக்க சென்ற தனியார் பரிசோதனை மையத்தில் இரண்டுபக்க படிவத்தைக் கொடுத்து அதில் நோயின் அறிகுறி தெரிய தொடங்கிய நாள், என்னென்ன அறிகுறிகள், வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா? எனப் பல விவரங்களைச் சேகரித்தனர்.
அன்றளவில் அந்த சித்த மருத்துவ பராமரிப்பு மையத்தில் சுமார் 70க்கு மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்தனார். அதில் அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பங்கள், நடுத்தர வசதி படைத்தவர்களும் மற்றும் சிலரும் தங்கியிருந்தனர். நோய் அறிகுறிகள் தீவரமாக உள்ள நபர்களைக் காண்பது மிக சொற்பமாக இருந்தது.
காலையில் 8 மணிக்கு கசாயம், 8.30க்கு தேனீர், 9.00 மணிக்கு காலை உணவு 3 இட்லி, 2 உள்ளங்கையளவிலான ஊத்தாப்பம், முட்டை மற்றும் மதியம் அளவு சாப்பாடு, அல்லது சாம்பார், தக்காளி சாதம், மதியம் கசாயம், மாலை தேனீர் உடன் சுண்டல் அல்லது பருப்பு வகைகள், மாலை கசாயம், இரவு 3 இட்லி, 2 சப்பாத்தி வழங்கப்படும். காலை மற்றும் இரவில் 2 சித்த மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். இந்த சிகிச்சைதான் சிறியவர் தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
ஏழு நாட்களாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 நோயாளிகளிடமிருந்து 11 ம் தேதி அன்று கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதன் முடிவு 13ம் தேதி அன்று வந்தது. சாலிகிராமத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சுகாதாரதுறைச் செயளாலர் திரு இராதகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார். அதில் 23 பேருக்கு கொரோனா ’பாசிட்டிவ்’ ஆக இருப்பதாகவும் மீதம் உள்ள 7 பேருக்கு கொரோனா ”நெகட்டிவ்’ என்றும் அறிவித்தார். அனைவரும் வீட்டுக்கு சென்று தன்னை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் விபரம் அனைத்தும் மறுநாள் பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபரிசோதனை செய்யாத காரணத்தால் தனக்கு முழுமையாக குணமடைந்துவிட்டதா? இல்லையா? என்ற அச்சம் நிலவுகிறது. சுற்றத்தாரும் அச்சம் உணர்வுடன்தான் உள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகள் என குடும்பங்களிலிருந்து நோயாளிகள் தன்னை தானே நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள நேர்கிறது. மேலும் காது வலித்தாலும், கால் வலித்தாலும் கொரோனா இன்னும் முழுமையாக குணமடையவில்லையோ என்று கலக்கமடைய செய்கிறது. அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்பை ஆதார் எண்ணுடன் தொடர்பு படுத்தியுள்ளதால் , விமானம் இரயில் பயணங்கள் என எல்லா இடங்களிலும் கொரோனா நோயாளி என்று தவறாக செயலிகள் காண்பிக்க வாய்ப்புள்ளது எனவே சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மறுபரிசோதனை செய்வது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.
சிகிச்சைக்கு சென்று 4 மற்றும் 5 வது நாட்களில் காய்ச்சல் குறைந்து இயல்புநிலைக்கு வந்தேன். 13 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினேன்.
நோயாளிகள் சென்று தனது குறைகளைக் கூறினால், 6 நாட்களுக்கு பின் தானாக சரியாகிவிடும் அதுவரை அனைத்து அறிகுறிகளும் தொடரும் என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். 6 நாட்கள் வரை பழைய அறிகுறிகள் தொடரும் என்றால் 7 வது நாளில் எப்படி திடீரென்று முழுக் குணமடைவார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
இரவு நேரத்தில் மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ அங்கு யாரும் இல்லை. இரவில் திடீரென்று தலைவலி ஏற்பட்டாலோ அல்லது காய்ச்சல் அடித்தாலோ மறுநாள் காலை வர காத்திருக்க வேண்டியிருக்கிறது.
பொதுவாக மருந்து, உணவு, தண்ணிர் கேன் என அனைத்தும் தன்னார்வலர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. நோயாளி தனது நிலையை சொல்லி மருந்தைப் பெற்று கொள்கின்றனர். நோயாளிகளின் உடலில் ஏற்படும் முன்னேற்றம், பின்னடைவு குறித்து கண்டறிந்து அதற்குரிய மருந்துகள் வழங்கப்படுவதில்லை.
நான் நோய் அறிகுறிகள் தெரிய தொடங்கி 5வது நாள் இந்த பராமரிப்பு மையத்திற்கு சென்றேன். எந்த அளவிற்கு நான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளேன் என்று பரிசோதனை செய்யவில்லை, ஏதேனும் பிற நோய்கள் ஆஸ்துமா, சர்க்கரை நோய், காசநோய் போன்றவை உள்ளதா? என கேட்டறியவுமில்லை. ஆனால் என் அண்ணன் சென்ற முதற்கட்ட பரிசோதனை நிலையத்தில் எக்ஸ்ரே எடுத்து நுரையீரலைப் பரிசோதித்தனர், இரத்தபரிசோதனை, வெப்பநிலை, இரத்த அழுத்தம் என சோதனை செய்து பின்னர் அதன் அடிப்படையில் பராமரிப்பு மையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆகவே, யாரும் சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தை தேர்வு செய்வதாயின் முதலில் முதற்கட்ட பரிசோதனை மையம் சென்று பராமரிப்பு மையத்தில் இருக்க வேண்டுமா? அல்லது மருத்துவமனை செல்ல வேண்டுமா? என்று முடிவு செய்ய வேண்டும். பின்னர், நோய் அறிகுறி இல்லையாகையால் பராமரிப்பு மையம் செல்லலாம் என்றால் மட்டுமே சித்த மருத்துவ பராமரிப்பு மையத்தை தெரிவு செய்வது சரியாக இருக்கும். என்னைப் போல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நேராடியாக சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்திற்கு செல்வது நல்லதல்ல. மேற்கண்ட முதற்கட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே அங்கே அனுமதிக்க வேண்டும்
நான் தங்கியிருந்த நாட்களில் ஒரே ஒருவருக்கு மட்டும் முச்சு தினறல் ஏற்பட்டு ஆம்ப்லைன்ஸ்காக 1 மணி நேரம் காத்திருந்து ஒமாந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டார். 300 படுக்கை வசதி கொண்ட ஒஉர் பராமரிப்பு மையத்திற்கென்று ஒரு ஆம்புலன்ஸாவது நிறுத்தி வைக்கப்பட வேண்டாமா?
ஒரு நோயாளி தன் 30 வயது மகனை பறிகொடுத்த மூன்றாம் நாள் கொரோனா சிகிச்சைக்காக அங்கு வந்திருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லவோ, அன்பு செலுத்தவோ, யாருமில்லாமல் மிக சோர்வாகவே இருந்தார். குடும்பத்துடன் சிகிச்சை பெற வந்த ஒருவர் தீடீர் என்று காணாமல் போய்விட்டார். போலீஸ் கல்லூரி முழுவதும் தேடிய பின்னர், சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள சிசிடி கேமராக்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் அன்று முழுவதும் மன அழுத்தம் காரணமாக கழிபறையிலேயே இருந்திருக்கிறார். ஒரு நோயாளி எல்லோரிடமும் கடுகடு என்று நடந்துகொண்டதோடு, தனக்கு வழங்கும் உணவைப் புறக்கணித்து வந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பொருளாதார சிக்கலில் இருந்தார் என்பதைப் பின்னர் தெரிந்துகொள்ள முடிந்தது.
மேலும் அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் பணிசெய்யும் சிறுவர்களிடம் அதிகாரம் செய்வது, ’மூன்று முட்டை கொடு, இரண்டு தண்ணீர் கேன் கொடு’ என்று கேட்பது, வெளியிலிருந்து உணவு வாங்கிவந்து சாப்பிடுவது என தான் ஒரு நோயாளி என்பதை மறந்து அதிகாரத் தோரணையுடன் திரிந்ததைப் பார்க்கமுடிந்தது.
நான் கற்றுக் கொண்ட படிப்பினைகள்
- காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, சுவை தெரியாமை, மணம் தெரியாமை என எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக குடும்பத்தினரிடமிருந்து தன்னையொரு ஒரு தனியறையில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரேயொரு கழிபறை இருக்கும் பட்சத்தில் கழிப்பறையைப் பயன்படுத்தியப் பின் சுத்தம் செய்ய வேண்டும்.
- 1075 மற்றும் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அருகாமையிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது மாநகராட்சி மண்டல அதிகாரிகளையோ அறிந்து கொள்ள முடியும்.
- ஒரு நாளுக்கு மேல் தாமதிக்காமல் கொரோனா பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.
- மேலே உள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்து, அது இரண்டு நாளில் குணமடைந்துவிட்டாலும் அடுத்த நோய் அறிகுறி ஏற்பட்டதிலிருந்து 17 நாட்களுக்கு உங்கள் அன்பு கொண்டவர்களின் நலனுக்காக தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்,
சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் நடைமுறைபடுத்த வேண்டிய கோரிக்கைகள்.
- சித்த மருத்துவ சிகிச்சைக்கு பின் குறைந்தது 100 நோயாளிகளுக்காவது மீண்டும் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் ஆகிவிட்டதா? என்று பார்த்து அதன் முடிவுகளை வெளியிட வேண்டும்.
- கொரோனா நோயாளிகளின் உடலில் கொரோனா எவ்வளவு தீவிர தன்மையுடன் உள்ளது என நுரையீரல், இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்த பின்னர் அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இப்பராமரிப்பு மையத்தில் அனுமதிக்க வேண்டும். நோயாளியிடம் இருந்து தனக்கு என்ன நோய் அறிகுறிகள் உள்ளன என்ற தகவலைக் கேட்டுப் பதிவுசெய்து அதன் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்
- நோயாளி வீட்டுக்கு செல்வதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும், 3 நாட்கள், 5 நாட்கள் என்று இல்லாமல் 17 நாட்கள் முழுமையாக தங்கவைக்கப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு இல்லை.
- கொடுக்கப்படுகிற கசாயம் செரிமானத்தை ஏற்படுத்தி பசியை தூண்டுகிறது அங்கு கொடுக்கும் உணவுப் போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில் அளவை அதிகரிக்க வேண்டும். குடிநீர், வெண்ணீர் ஆகியவை எப்போதும் தட்டுபாடின்றி கிடைக்க வழிசெய்ய வேண்டும். கழிப்பட வசதிகளை அதிகரிக்க வேண்டும், 24 மணி நேரமும் தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
- 24 மணி நேரமும் செவிலியர்கள் ஒரிருவரேனும் அங்கே இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஒன்று இந்த பராமரிப்பு மையத்திற்கு என்று ஒதுக்கப்பட வேண்டும். தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், இரத்த அழுத்தம் பார்க்கும் கருவி போன்றவற்றை இங்கே வைத்திருந்து இவை மூலமும் நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
- நோயாளி சொல்லும் அறிகுறியை மட்டும் கேட்டு மருந்து கொடுக்காமல் நாடிப் பிடித்துப் பார்த்து உண்மையான உடல்நிலையைக் கண்டறிய வேண்டும். கூடுமானவரை சித்த மருந்துகளை மட்டுமே வழங்கி காய்ச்சல், சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வப்போது ஆங்கில மருந்துகளைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- நாடு முழுவதிலும் நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்தியை காண முடிகிறது, எனவே மனநல மருத்துவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நோயாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சுகாதார பணியாளர்கள், செவிலியர்களைக் கொண்டு மட்டுமே மருந்து வழங்க வேண்டும். மற்றும் உணவு, தண்ணீர் தேனீர், கசாயம் விநியோக செய்யும் தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பாதுக்காப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களின் எண்ணிகையை உயர்த்தி இருப்பவர்களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும்.
- நோய் அறிகுறி இல்லாதவர்களை வைத்துக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் தீவிரமான பாதிப்புக்கு உள்ள நோயாளிகளை தேர்வு செய்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைச் செய்ய வேண்டும். அதுவே சித்த மருத்துவத்தில் இருக்கும் மருந்தைக் கொண்டு உயிரிழப்புகளைத் தடுக்க உதவும். இப்போது உடனடி அவசரத் தேவையும் அதுதான்.
அலோபதி மருத்துவத் துறையில் உள்ள சந்தை நலனுக்காக பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆய்வுகளும் வளர்ச்சியும் முடக்கப்பட்டுள்ளன. இப்போது தனியார் மருத்துவமனைகள் நோய் அறிகுறிகள் இல்லாத பணக்காரர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்ற பெயரில் இலட்சக்கணக்கில் கொள்ளை அடித்துக்கொண்டுள்ளனர்.
சாலிகிராமத்தில் இருக்கும் சித்த மருத்துவனையில் நோய் தீவிரமாக உள்ளவர்களை மட்டும் அனுமதித்து அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளித்து இந்தக் கட்டான தருணத்தில் சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய வேண்டும்.
சாலிகிராமத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் திரு வீரபாகு, உதவியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
-அமுது