கொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா?

24 Jun 2020

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடையைத் திறந்து வைத்ததற்காக தந்தையும் (ஜெயராஜ் 58) மகனும் (பென்னிக்ஸ் 31) காவல்துறையால் அடித்து சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைக்கு இறந்து போக நேரிட்டது. வணிகர் சங்கம் தமிழகம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அப்பகுதி மக்கள் போராடியதன் காரணமாக ஆய்வாளர் ஸ்ரீதரைப் பணியிட மாற்றம் செய்வதாகவும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்வதாகவும் தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த முதியவர் அப்துல் ரஹீம்  காவல்துறையின் அத்துமீறலால் சாக நேரிட்டது. இதுபோல் இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறலுக்கு அடாவடித்தனங்களுக்கும் எத்தனையோ சம்பவங்களைச் சொல்ல முடியும்.

மாதக் கணக்கில் நீளும் ஊரடங்கால் கையிருப்பு காலியாகி இனியும் வீட்டில் இருந்தால் பட்டினி கொல்லும். வீட்டை விட்டு வெளியே வந்தால் போலீஸ் கொல்லும். பட்டினிக்கும் போலீசுக்கும் கொரோனாவுக்கும் அஞ்சி அஞ்சி வாழ்வதால் அன்றாடம் சிறுக சிறுக அச்சம் கொல்லும். இதில் ஓரளவுக்கு இரக்கம் உடையது கொரோனா மட்டும்தான். ஏனென்றால் கொரோனா ஒருவரைத் தொற்றாமல் விடலாம், அப்படி தொற்றினாலும் ஒருவரைக் கொல்லாமல் விடலாம். உயிர்பிழைக்க பலருக்கும் வாய்ப்பிருக்கிறது.

பொய் வழக்குப் போடுதல், சிறையில் தள்ளுதல், லத்தியை சுழற்றி நாயினும் கேவலமாக மக்களை நடத்துதல். மண் புழுவைப் போல் ஏழை, எளிய மக்களை ஏறி மிதித்தல், லாக்கப்பில் வைத்து கொலை செய்தல், சில இடங்களில் பாலியல் வன்புணர்வு என்று காக்கிச் சட்டைகளின் காலித்தனங்கள்  கொஞ்சம் நஞ்சமல்ல. நடைபாதை வியாபாரத்தில் நாளொன்றுக்கு நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய்வரை வருமானம் பார்க்கும் முதியவரிடம்கூட துளியளவு வெட்கமுமின்றி 5 க்கும் பத்துக்கும் கைநீட்டுபவர்களே காவல்துறையினர். இப்படி பொறுக்கித் தின்பது பற்றி எந்த கூச்சமுமின்றி இருப்பதை போலீஸ் கெளரவமாக நினைத்து வாழக்கூடியவர்கள். ஆற்றுமணலைக் கொள்ளையடிப்பதை தடுக்காதவர்கள். தூத்துக்குடியில் சுத்தமான காற்றுக்கும் குடிநீருக்கும் போராடியவர்களை சுட்டுக் கொல்பவர்கள். போராடியவர்கள் மீது பொய் வழக்குப் போடுபவர்கள். அணு உலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது தேச துரோக வழக்குப் போட்டு சிறையில் அடைத்தவர்கள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை என இயற்கையை அழிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடிய போதும் மக்களுக்கு எதிராக வழக்குப் போட்டவர்கள், தடியடி நடத்தியவர்கள்.

சிங்கள இராணுவம் ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்துக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டு தமிழர்கள் போரை நிறுத்தக் கோரி போராடினார்கள். அப்போது போராடியவர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள இராணுவத்தினர் பச்சிளங் குழந்தைகளைக் கொல்வதற்கும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பக்கபலமாக தமிழ்நாட்டில் வேலை பார்த்தவர்கள். ஆறு, கடல், நீர், நிலம், காற்று ஆகியவை அழிந்து நாசமாக போய் இந்த மண் வாழத் தகுதியற்றுப் போனாலென்ன தானும் தன் குடும்பமும் வயிறு வளர்த்து வாழ்ந்தால் போதும் என  தாய்நாட்டை அழிக்க துணை போகின்றவர்கள். ஓர் இனப்படுகொலையே நடந்தாலென்ன தான் வாங்கும் சம்பளத்திற்காக இராசபக்சேவுக்கும்கூட விசுவாசம் காட்டுபவர்கள்.  எவன் செத்தால் என்ன, எனக்கு என் அரைசாண் வயிறுதான் முக்கியம் என்று சொல்லி எல்லாவிதமான அநீதிக்கும்  காவல் நிற்பவர்கள்!

தன் தகப்பன் வயதில் இருக்கும் ஒருவரை(ஏழை என்றால்) ‘வாடா, போடா, வாயா, போயா’ என்று அழைப்பதற்கு வாய்கூசாதவர்கள். மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென்றால் ‘அ, அ’ என்று கேட்பார்கள். அவர்களுக்கு அந்த சொல்லே புதிதாக இருக்கும் . மரியாதையாக பேசுங்கள் என்றால் ”ஓ உங்களை சார் ன்னு சொல்லனுமோ” என்பார்கள். குடியரசு, சனநாயகம், குடிமக்களின் உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பதைப் பற்றியெல்லாம் எந்த அறிவும் இல்லாதவர்கள். சட்டப்படி தப்பு என்றால் எரிச்சல் அடைந்து  ’போலீசிடமே சட்டம் பேசுகிறாயா?’ என்பார்கள். சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதென்ற பெயரில் வேறெந்த நிறுவனத்தைவிடவும் சட்டத்தை அதிகமாக மீறும் ஒரு நிறுவனம்தான் தமிழக காவல்துறை. எள்முனையளவும் நம் நாடு, நம் மக்கள் என்ற பற்றோ, நேசமோ இல்லாதவர்கள், துளியளவு அறிவியல் கண்ணோட்டமும், மனிதப் பண்புகளும் இல்லாத துறைதான் காவல்துறை. சமூக விரோத தன்மை முழுக்க நிறுவனமயமாக்கப்பட்டு மக்கள் விரோதிகளின் கூடாரமாக இருப்பதுதான் தமிழக காவல்துறை!

கொரோனா என்ற பெருந்தொற்று மருத்துவப் பேரிடராக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. முதியவர்களையும் தொற்றா நோய் கொண்டவர்களையும் கொரோனா கொள்ளை கொண்டுவிடப் போய் விடக் கூடாது உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தெங்கும் மனித குலம் ஒரு வைரஸ் கிருமியிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் மரணக் குழி என்று தெரிந்தே உலகம் முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது ஒரு மாபெரும் மனிதாபின நடவடிக்கை. சாவைத் தடுத்து உயிரைக் காப்பதற்கு நடக்கும் போராட்டம். உயிரைக் காக்கும் தடுப்பு நடவடிக்கையில் தமிழக காவல்துறைக்கு என்ன வேலை?

நேற்றைக்கு கொல்லப்பட்ட பென்னிக்ஸ் ஆசனவாயில் லத்தியை சொருகியது போல் கொரோனாவின் ஆசன வாயில் லத்தியை சொருகிக் கொல்ல முடியுமா? முட்டிக்கு முட்டித் தட்டி கொரோனாவை உள்ளே தள்ள முடியுமா? ஊபா, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில்  மாதக் கணக்கில் கொரோனாவை சிறையில் அடைக்க முடியுமா? கொரோனா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என்னும் போது லாக் அப்பில் வைத்து பாலியல் வல்லுறவு செய்ய முடியுமா? கொரோனாவுக்கு எதிராக கல்லெறிய முடியுமா? துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா? கலவரம் செய்ய முடியுமா? இவை எதையும் கொரோனாவுக்கு எதிராக செய்ய முடியாது என்கிற போது தமிழக காவல்துறைக்கு கொரோனா தடுப்பில் என்ன வேலை இருக்க முடியும்?

கொரோனா நோய்த் தடுப்பை ஒரு மருத்துவப் பேரிடராக கையாளாமல் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக கையாண்ட கோமாளி ஆட்சியாளர்கள் எதற்கெல்லாம் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்கள் தெரியுமா?

ஊரடங்கை அமல்படுத்த ட்ரோனர் கேமிராவைப் பயன்படுத்தி ஒரு பகுதியைக் கண்காணிப்பாளர்கள். உங்கள் வீட்டருகில் யாருக்கேனும் காய்ச்சல், சளி இருந்தால் காவல்நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள் என்று ஆட்டோவில் ஒலிப்பெருக்கி வைத்துப் பிரச்சாரம் செய்யும். காய்ச்சல், சளி இருப்பவர்கள் என்ன குற்றவாளிகளா பிடித்துக் கொடுப்பதற்கு? கொரோனா கிருமித் தொற்றியவர்களை அப்பகுதி காவல் நிலையத்தில் இருந்து உளவுப்பிரிவு காவலர் அழைத்துப் பேசி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரிப்பார். கிருமித் தொற்றியவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்களை எடுத்து அவர்களுக்கு காவல் துறையில் இருந்து பேசி பரிசோதனைக்கு அழைப்பார்கள்.  Contact tracing என்று சொல்லப்படும் தொடர்பறிதலுக்கு காவல் துறையைப் பயன்படுத்தும் மகத்தான சிந்தனைக்கு சொந்தக்காரர் யார்  தெரியவில்லை? தமிழக காவல்துறையில் இருந்து ஒரு நோயாளியிடம் பேசினால் அவர் மிகுந்த தன்னம்பிக்கை அடைந்து நோயில் இருந்து மீண்டு வந்துவிடுவார் போல!

கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டால் மீண்டு வருவதற்கு மிக முக்கியமான தேவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். மனிதன் பயந்து போயிருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்; திடீரென்று சக்கரை அளவை அதிகமாக காட்டும்; உடம்பில் இரத்த அழுத்தம் அதிகமாகும். அரசின் பிரச்சார முறைகளும், விவஸ்தையின்றி நோயாளியுடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்பறிதலுக்கும் காவல்துறையை ஈடுபடுத்துவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதே ஒழிய, அரசின்பால் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, அது ஏற்படுத்தாததில் வியப்பொன்றுமில்லை.

தொடக்கம் முதலே கிருமித் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்களைக் குற்றவாளிகளாக சித்திரித்த தமிழக அரசு கூடவே காவல்துறையையும் தடுப்புப் பணியில் சேர்த்துக் கொள்ள, மக்கள் காய்ச்சலையும் சளியையும் மறைக்கத் தொடங்கினர். மக்களைக் குற்றவாளியாக்கியது. மக்களையே ஒருவருக்கு ஒருவர் மோதவிட்டது. நோய்த் தொற்றியவர்களை அவர்தம் சொந்த உறவினர்களே விலக்கி வைக்க வைத்தது. தெருக்காரர்களை அஞ்சி ஒதுங்கவும் கிருமித் தொற்றியவர்களை ஒதுக்கவும் வழிவகுத்தது என தமிழக அரசின் பிரச்சாரமெல்லாம் அபாரம் வகை! எனவே, வீடுதோறும் மாநகராட்சியில் இருந்து ஒருவர் வந்து காய்ச்சல், சளி இருக்கிறதா என விசாரிக்கிறார், மண்டலங்கள் தோறும் காய்ச்சல் முகாம்கள் ( சுமார் 450) உள்ளன, மண்டலங்கள் தோறும் பரிசோதனை சேகரிப்பு மையங்கள் உள்ளன, பரிசோதனை மையங்கள், பல்லாயிரம் படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் மருத்துவமனைகள் , மருத்துவர்கள், செவிலியர்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள மக்கள் முன்வருவதில்லையே. எங்கும் கூட்டம் அலை மோதவதில்லையே ஏன்? அந்த அளவுக்கு தமிழக அரசின் மீதும் அதன் அதிகாரிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!  இதைவிட அவமானம் இந்த அரசுக்கு வேறெதாவது உண்டா? தமிழக காவல்துறையை வைத்து தொடர்பு அறிதலையும் கண்காணிப்பையும் செய்தால் மக்கள் எப்படி முன்வருவார்கள், ஒத்துழைப்பார்கள்?

காய்ச்சல், சளியை மறைத்து அறிகுறி தோன்றியதில் இருந்து ஒரு வார காலத்தைக் கடத்தி  முதல் வாரத்தின் முடிவில்தான் மருத்துவமனை வந்து சேர்கின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் இறந்து போய்விடுகின்றனர். எவ்வளவு சீக்கிரமாக கிருமித் தொற்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு உயிரிழப்பைத் தடுக்க முடியும். அப்படி கிருமித் தொற்றை அடையாளங் கண்டு சிகிச்சை தொடங்குவதற்கு தடையாய் இருப்பது மக்களிடம் நிலவும் அச்சம். அந்த அச்சத்தை ஏற்படுத்தியதில் தமிழக அரசின் தவறான அணுகுமுறைகளும் தவறான நடைமுறைகளும் தவறான பிரச்சாரங்களும் காவல்துறையைப் போன்றவொரு மக்கள் விரோத துறையை இப்பணீயில் ஈடுபடுத்தியதும் முக்கிய காரணங்களாகும்.

காவல்துறையைக் கொரோனா தடுப்பில் ஈடுபடுத்துவதும் குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியை நிறுத்துவதும் ஒன்றாகும். குழந்தையைக் கழுதைப் புலியே தின்றுவிடும். காவல்துறை மக்களைக் மிரட்டி, உருட்டி கொல்லப் பார்க்கும்.

கொரொனா கொல்கிறது. பட்டினி  கொல்கிறது. வேலையிழப்பு, கடன் தொல்லை தற்கொலைக்கு தள்ளுகிறது. கொல்வதற்கு இத்தனை விசயங்கள் இருக்கும்போது தமிழக காவல்துறைக்கு சற்று ஓய்வுக் கொடுக்காலமே. நாங்கள் தொடக்கத்திலிருந்தெ சொல்லிவருகிறோம், அனைத்து  தரப்பும் பங்கேற்கக்கூடிய கொரோனா கண்காணிப்பு பொறிஅமைவை உருவாக்குங்கள் என்று அதையும் கேட்டபாடில்லை, இப்போதாவது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் போன்ற பல்வேறு சிவில் நிர்வாகத்தினரையும் தன்னார்வலர் குழுக்களையும் தமிழக அரசு ஈடுபடுத்தவேண்டும்.

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW