உடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது?

24 Jun 2020

13 மார்ச் 2016 அன்று பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்.கௌசல்யா படு காயத்துடன் உயிர் தப்புகிறார். இருசக்கர வாகனங்களில் வந்த கும்பலொன்று சங்கர் கௌசல்யாவை  சரமாரியாக அருவாளால் வெட்டுகிற சிசிடிவி காட்சிப் பதிவானது, காண்போரை அதிரச் செய்தது. இத்தகைய கொடூரக் கொலைக்கு காரணமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி(A1)  தற்போது உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான (குற்றவாளிகள் தரப்பு மற்றும் அரசு தரப்பின்) மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 22.06.2020 அன்று வழங்கப்பட்டது.இவ்வழக்கில், அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சின்னச்சாமி மீதான சந்தேகத்தை தாண்டி அவர் சதியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டை போதிய ஆதரங்களுடன் நிரூபணம் செய்யப்படவில்லை என  தீர்ப்பில் கூறப்படுகிறது. முதல் குற்றவாளியென குற்றம் சாட்டப்பட்ட சின்னச்சாமி விடுவிக்கப்பட்டதற்கான காரணங்களாக தீர்ப்பில் கூறப்பட்டவைகளை சுருக்கமாக பார்ப்போம். முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவரங்கள் வருமாறு

இந்தப் படுகொலை தொடர்பாக A1- கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, A2- தாயார் அன்னலட்சுமி,                            A3-பாண்டித்துரை, A4 –, பி.ஜெகதீசன், A5- மணிகண்டன், A6- பி.செல்வக்குமார், A7- கலைதமிழ்வாணன், A8- எம்.மைக்கேல் (எ) மதன், A9- தன்ராஜ் A10- பிரசன்ன குமார், A11 – பட்டிவீரன்பட்டி மா. மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை, கூலிப்படை வைத்து கொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி(A2) , தாய்மாமன் பாண்டித்துரை (A3), கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் (A10) ஆகிய மூவரையும்  திருப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

பட்டியலின பள்ளர் சமூகத்தை சேர்ந்த சங்கர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவை மணமுடித்ததை கௌசல்யாவின் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற அடிப்படையிலிருந்து வழக்கின் விசாரணை நடைபெற்றதாக  தீர்ப்பு விவரம் தொடங்குகிறது (பக்கம் 41).

தனியார் பொறியில் கல்லூரியில் படித்த கௌசல்யாவும் அதே கல்லூரியில் படித்த சங்கரும் ஒரவரை ஒருவர்  காதலிக்கின்றனர். சங்கரை கௌசல்யா விரும்புவதை அவரது பெற்றோர்களுக்கு தெரியவருகிறது. பிறகு  கௌசல்யாவின் கல்லூரி படிப்பை நிறுத்துகின்றனர். இதையடுத்து 11.05.2015 அன்று தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறுகிற கௌசல்யா 12.05.2015 அன்று பழனி கோயிலில் சங்கரை திருமணம் செய்து கொள்கிறார். சாதி மாறி திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அதே நாளில் உடுமலைப் பேட்டை பெண்கள் காவல் நிலையத்தில் கௌசல்யா புகார் அளிக்கிறார். இதையடுத்து கௌசல்யாவின் பெற்றோரும் சங்கரின் பெற்றோர் மற்றும் உறவினரும் காவல் நிலையம் வருகின்றனர். தனது மனைவியான கௌசல்யாவை தான் பார்த்துக் கொள்வதாக சங்கர் உத்தரவாதம் அளிக்கிறார். அதே நாளில் தனது பெற்றோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கிறார். இதற்கு அடுத்த எட்டு மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர்.

பிறகு கௌசல்யாவின்  உறவினர்கள் அவரிடம் சமாதனம் பேசுகின்றனர். பிறகு கௌசல்யாவை அவரது பெற்றோர்கள் கடத்தி சென்றதாக கௌசல்யா கூறுகிறார், அதாவது A1 மற்றும் A2   ஆகிய இருவரும் தன்னை பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், தாலி மெட்டி உள்ளிட்டவைகளை பலவந்தமாக கழட்டியதாகவும் கௌசல்யா(PW1) புகார் அளித்திருந்தார்.

ஆனால் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் தனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் முன்பு கௌசல்யா கூறியிருந்தார். இதனால்  தனது மனைவியைக் காணவில்லை என சங்கர் அளித்த புகார்(Crl.No.320/2015) மீதான விசாரணை கைவிடப்படுகிறது. அதேநேரம்  கௌசல்யாவின் தந்தையும் தனது  மகளைக் காணவில்லை எனப் புகார்(Crl.No.647/2015) கொடுத்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது சங்கரை தான் திருமணம் செய்து கொண்டதாகாவும் அதேநேரம் தனது பெற்றோர் வீட்டில் வசிப்பதாகவும் போலீசாரிடம் கௌசல்யா கூறியுள்ளார். அப்படியிருக்கையில் தன்னைக் கடத்தியாக புகார் கொடுத்த கௌசல்யாவே தன்னை யாரும் கடத்தவில்லை என முன்பு கூறியதையடுத்து, பெற்றோர்கள் மீதான கௌசல்யாவின் வாக்குமூலம்  நிரூபணம் செய்யப்படவில்லை(.பக்கம் 42)

  1. 30.03.2016 அன்று பழனி வங்கிக் கிளையில் A1,A2 ஆகிய இரவும் தங்களது  ஜாயின்ட் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தது உறுதியாகிறது.ஆனால் அப்பணத்தை A2 ஆனவர்  A4 இடம் வழங்கியதாக கூறுகிற கௌசல்யாவின் குற்றச்சாட்டுக்கு  போதிய  ஆதாரமில்லை.(பக்கம் 42)
  2. அதேபோல A1 ஆனவர் 26.02.2016 மற்றும் 28.02.2016  தேதிகளில் ஏடிஎம் இல்லிருந்து 50,000 எடுத்து  A4  மற்றும் A6 இடம் வழங்கியதற்கான ஆதாரம் இல்லை. ஆகவே A1 இடம்  A4 வாங்கியதாக கூறப்படுகிற  24,000 ரூபாய்க்கும்  A6 வாங்கியதாக கூறப்படுகிற  26,000 ரூபாய்க்கும் போதிய ஆதரம் இல்லை..
  3. கௌசல்யாவின் தந்தை A1 ஆனவர் 13.03.2016 அன்று A4, A6, A8ஆகியோருடன் மேற்கொண்ட  தொலைபேசி உரையாடல் நிரூபணம் செய்யப்படவில்லை. (பக்கம் 43)
  4. கௌசல்யாவின் தந்தை A1 ஆனவர் A4,A5 மற்றும் A8 ஆகிய மூவருக்கும் லாட்ஜில்  அறை வசதி செய்து கொடுத்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை.இந்த மூவரின் அடையாள அட்டையோ,முகவரியோ எதுவும் லாட்ஜில் வாங்கப்படவில்லை. இம்மூவரிடமிருந்தும் அறைவாடகை பெற்றதற்கான  ரசீதும்  காவல் துறையால் பறிமுதல் செய்யப்படவில்லை.மேலும் லாட்ஜ் உரிமையாளர்களிடம் நேரடி அடையாள அணிவகுப்பு நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதி செய்யப்படாமல்,நேரடியாக நீதிமன்றத்தில் அடையாளம் கூறுவதை ஏற்கமுடியாது. (பக்கம் 43)
  5. கௌசல்யாவின் தந்தை A1 ஆனவர் சிறார் பூங்காவில் நான்கு இளைஞர்களிடம் பேசியதைக் கேட்டதாக வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சியானவர், A1 தன்னிடம் இருந்து 70 மீட்டர் தொலைவில் இருந்ததாக கூறியுள்ளார்.இவ்வளவு தொலைவில் இருந்து A1 பேசியதை கேட்டதாக கூறுகிற நேரடி சாட்சியின் வாக்குமூலம் செயற்கையாக உள்ளது. (பக்கம் 44)

 

மேற்கூறிய விவரங்கள் கூடவே இன்னும் பல நேரடி சாட்சிகள்  யாவும் நீதிமன்ற தீர்ப்பில் விரிவாக உள்ளன. இவை யாவுமே A1 குற்றவாளி என நிருபணம் செய்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதாகவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே A1 குற்றவாளியான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சாதிய ஆணவப்  படுகொலை செய்த குற்றவாளிகளை துப்பறிந்து ஆதாரங்களை கண்டறிந்தால் மட்டுமே கொலையாளிகளுக்கான சட்டப்பூர்வ  தண்டனையைப்  பெற்றுத் தரவியலும் என்ற அடிப்படையில் இவ்வழக்கை புலன் விசாரணை செய்த தமிழக போலீஸ் துறையின் பங்களிப்பு முக்கியமானதாகிறது.சங்கர் கொலை வழக்கின் சூத்ராதாரிகள் என  கௌசல்யாவால் குற்றம் சாட்டப்பட்ட  கௌசல்யாவின்  பெற்றோர்கள் உள்ளிட்ட ரத்த உறவுகள் விடுவிக்கப்பட்டுள்ளது தமிழக போலீஸ் துறையின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஸ்காட்லாந்துயார்ட்  போலீசுக்கு இணையாக ஒப்புமைப்படுத்தப்படுகிற  தமிழக போலீசின் குற்றவியல் விசாரணை நடைமுறையானது இவ்வழக்கைப் பொறுத்தவரை கேலிக்குரியதாக மாறிவிட்டது.இக்கொலைக்  குற்றத்தில் இருந்து இரத்த உறவுகள் நீக்ப்பட்டுவிட்டதால், இக்கொலை சாதி ஆணவப் படுகொலையே இல்லை என்பதாகிறது.அப்படியானால் பட்டப் பகலில் சங்கரை கொலை செய்கிற கூலிப்படையின் நோக்கமென்ன?இதைக் கூட துப்பறிந்து நிருபணம் செய்ய இயலாத பலவீன கட்டமைப்பு கொண்டதா தமிழக போலீஸ் துறை?

சாதி ஆணவப் படுகொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, திட்டத்தை செயல்படுத்தியவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டால் சாதி ஆணவப் படுகொலைக்கான முழுமையான நீதி எப்போதுமே கிடைக்கப்பெறாது என்கிற எண்ணத்தை விதைக்கிறது.மேலும் சாதி ஆணவப் படுகொலைக்கு துணிவோர்கள் எவருமே சாமர்த்தியமாக ஆதாரமற்ற முறையில்  கூலிப்படையை அமர்த்தி கொலை செய்துவிட்டு  தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளளலாம் என்பதற்கு  தவறான முன்னுதாரணம் ஆகிறது.

இறுதியின் இறுதியாக தமிழக போலீசை கட்டுப்படுத்துகிற தமிழக அரசானது, இக்கொலைக்கான போலீஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்காடுதலில் எந்தவித சார்பின்றி செயல்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது.கொலை வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோதும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதும் அரசு தரப்புடன்  தொடர்பில் இருந்த கௌசல்யா,இந்த இரண்டு வெவ்வேறு காலங்களில் அரசிடம் பெருத்த வேறுப்பாட்டைஉணர்ந்ததாக கூறியுள்ளது கவனிக்கவேண்டிய செய்தியாகும்..பட்டப் பகலில் சாதி ஆணவப் படுகொலை செய்த முதல் குற்றவாளிகள் என குற்றம் சாற்றப்பட்டவர்கள் நிரபராதியாக உலா வருவதும் கூலிப் படைகள் குற்றத்தை அனுபவிப்பதும் ,தமிழக அரசு மற்றும் தமிழக போலீசுக்கு மட்டும் தோல்வியல்ல, ,மாறாக ஜனநாயகத்திற்கே  பெரும் தோல்வியாகும்.

இந்திய சமூகத்தின் அரசியல் பொருளாதாரம் சட்ட ஒழுங்கு நீதி பண்பாடு ஆகியவற்றில் சாதிய மேலாதிக்கம் மிகவும் இறுக்கமாக பேணப்படுகிறது.பெரும்பான்மை சாதிகளின் வாக்கு வங்கி அரசியல் முதலாக சாதி பெருமிதத்தை தக்க வைப்பது வரையிலான நோக்கத்திற்காக  சிறுபான்மை சமூகத்தின் நீதி அனைத்து வகையிலும் மறுக்கப்படுவது தொடர் கதையாகிறது.அவ்வகையில் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையில் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தாலும் எதார்த்தத்தில் பெரும்பான்மை/ஆதிக்க சாதிகளின்  அரசியல் பொருளாதார பண்பாட்டு மேலாண்மை சமூகத்தின் அனைத்து வடிவங்களிலும் நீடிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட பட்டியலின பள்ளர்  சமூகத்தை சேர்ந்த சங்கர், பிற்படுத்தப்பட்ட கள்ளர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவை காதலித்து மணமுடித்தை ஏற்றுக்கொள்ளாத “சாதிப் பெருமை” சங்கரின் உயிரைக் குடித்துள்ளது. சுமார் 164 பேர் சாட்சியாக இருக்கும் ஒரு குற்ற வழக்கில், அக்யூஸ்ட் நம்பர் 1 விடுவிக்கப்படுவார் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் கௌசல்யா.மேலும் “எந்த வித சம்மந்தமும் இல்லாத ஒருத்தவங்க எங்களை எதுக்கு வெட்டணும்?.”என்கிற கௌசல்யாவின் கேள்விக்கான விடை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.குற்றம் வெளிப்படை ஆனால் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை,ஆகவே தண்டனையும் இல்லை!

– அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.livelaw.in/top-stories/tn-caste-killing-case-lapses-in-investigation-helped-acquittal-of-prime-accused-chinnasamy-158767?infinitescroll=1

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW